womenஅதிகாலை 4 மணி. எல்லாரும் தூங்கிட்டிருந்தாங்க. நா அலாரம் வைக்காம எழுந்து, லைட் போடாம, யாருக்கும் தொந்தரவு இல்லாம போயி குளிச்சிட்டு வந்து ரெடி ஆனேன். ஒரு பொருளை எடுக்கும்போது சத்தம். யாரோ ஒருவரின் எரிச்சலான முனகல். நா கதவை சாத்திட்டு வார்டன்கிட்ட சாவி வாங்கி கேட் ஓபன் பண்ணிட்டு கெளம்பிட்டேன்.

அன்னைக்கி காலேஜ் காம்ப்படிஷன். நான் மட்டும்தான் பெண் அந்த ட்ராமா குரூப்ல. எனக்கு அதுல பெருமையா இருந்தது, அதே சமயத்துல கொஞ்சம் தயக்கமும் இருந்ததுன்னு சொல்ல இடமில்லாத அளவுக்கு எந்த பாலின பாகுபாடும் இல்லாத ஒரு இடமா இருந்தது.

அன்னைக்கி போட்டியில எங்க காலேஜ் தான் ட்ராமால ஃபர்ஸ்ட் பிரைஸ். ட்ராமா ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சீப் கெஸ்ட்டா வந்திருந்த சீமான் பாராட்டினாங்க. ட்ராமால நடிச்ச எல்லாருக்கும் அந்த காலேஜில முதுகலை படிக்க இலவசமா இடம் தர்றதா சொல்லி பாராட்டுனாங்க. எல்லா ஆராவாரமும் முடிஞ்சு விடுதிக்கு 12 மணிக்கு வந்தேன்.

எல்லாரும் தூங்கிட்டாங்க. ப்ரைஸ் எல்லாம் சத்தமே போடாம வச்சிட்டு, ப்ரஷ் ஆகிட்டு தூங்க போனேன். தூக்கமே வரல. எல்லருகிட்டயும் சொல்லனும்போல இருந்தது. எல்லாருக்கும் தெரியும். ஆனா யாருமே எந்த கேள்வியும் கேக்கல. ஒருத்தர்கூட பேசவே இல்ல. தூங்கிட்டாங்க.

இதே மாதிரிதான் நா எந்த காம்படிஷன் போனாலும், யாரும் எந்த ரியாக்‌ஷனும் இல்லாமதான் இருந்தாங்க. எனக்கு ஆசையா இருக்கும். “ஏய் நல்லா பண்ணுடி!”, “ஆல் த பெஸ்ட்!”, “சூப்பரா பண்ணு!”, “ஹேய்… கங்ராசுலேஷன் டி…!” –னு யாரும் சொல்ல மாட்டாங்களான்னு. மூனு வருஷம் முடிச்சுட்டேன் யாரும் சொல்லல. பி.ஜி. படிக்குறேன், இப்பவரைக்கும் அப்படித்தான். என்னைய கிளாஸ்ல எழுந்து பேச சொல்லுவாங்க, அப்ப நா பேசுற ஒரு வார்த்தை, என்கரேஜ் பண்ணுங்க, என்கரேஜ் பண்ணுங்க, என்கரேஜ்… என்கரேஜ்… என்கரேஜ்…

கடைசிவரைக்கும் ஒரு பொண்ணுகிட்டருந்துகூட எனக்கு வரவே வராத வார்த்தை, “ஆல் த பெஸ்ட்!”. என்கிட்ட யாராவது நல்லா பேசுனா, நா அவங்ககிட்ட கேக்குற முதல் கேள்வி… “ ஏன் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஒத்தே வர மாட்டுது? ஒரு பெண்ணுக்கு எதிரி இன்னொரு பெண். ஏன்?” அப்படின்னு கேட்டுக்கிட்டே இருப்பேன்.

ஆனா, என்னோட மனசு ஒத்துக்குற மாதுரி எந்த பதிலும் வரல… நானும் அத கேக்குறதையே விட்டுட்டேன். ரொம்ப நாளுக்கு அப்பறம் இந்த கேள்வியை எழுத்தாளர் மணிமாறன்கிட்ட கேட்டேன். அவரு அந்த கேள்விய என்கிட்டயே திரும்பி கேட்டாரு. நானும் பல காரணங்கள சொன்னேன். அத என்னாலயே ஏத்துக்க முடியல. ஆனாலும் இதுவா இருக்குமோ… அதுவா இருக்குமோ…னு சொல்லிக்கிட்டே இருந்தேன்.

ஒரு கட்டத்துல தெரியலனு சொல்லிடேன். ஏன்னா அடிமையா இருக்குற பெண்ணா இருந்தா சரி. இது அந்தக் காலம் இல்லை. எல்லாரும் சேந்துதான் படிக்கிறோம். அப்பறம் ஏன்?. ஒரு பெண் நல்லா படிக்கிறாள், எல்லாத்துலயும் முதல் மதிப்பெண். இன்னொரு பெண் சுமாரா படிக்கிறாள். எனக்கு தெரிந்தவரை இந்த விசயத்தில் ரெண்டு பேரும் ஒன்னாதான் தெரிஞ்சாங்க, ஏன்?

அவரின் பதில், வாழ்க்கை என்பது ஒரு வட்டம். எவ்வளவு படித்தாலும், குடும்ப சூழ்நிலையில் ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது குறுகுன வட்டமாக இருக்கிறது. இத எப்படி ஒரு குறையா சொல்ல முடியும்? நீங்க ஓரளவுக்கு கலைத்துறையில அந்த வட்டத்தவிட்டு வெளிய வர்றிங்க… அதுவே அவங்களுக்கு ஆச்சரியம்தான். அத ஒத்துக்கவே அவங்களால முடியாது. இதுல அவங்க என்கரேஜ் பண்ணுவாங்கனு எதிர்பார்க்குறது நம்ம தப்புனு சொல்லிட்டாரு.

இது என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்த, முடியாத பதில்தான். ஆனால்… இந்த ஆனால்தான் எனக்கு மிகப்பெரியதாக தெரிகிறது. ஆம், இந்த ஆனால்தான் என்னை இன்றுவரை துரத்திக் கொண்டிருக்கிறது.

நீ நல்லாதான் படிக்கிற… ஆனால்... நீ நல்லாதான் பேசுற… ஆனால்… நீ நல்லாதான் நடிக்கிற... ஆனால்... இப்படி எத்தனையோ ஆனால்கள் என்னைப் போன்ற எத்தனை எத்தனையோ பெண்களின் வாழ்வில் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

நாம் சார்ந்திருக்கும் இந்த கலாச்சார சூழலில், ஒரு பெண் தான் அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பதை உணராமலேயே அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திக் கொண்டிருக்கிறாள். அவள், வருங்காலத் தலைமுறைகளின் சமத்துவத்தைத் தீர்மாணிக்க வேண்டியவள், நிகழ்கால ஆணாதிக்க வெறியிடமிருந்து மீட்கப்பட வேண்டியவள்.

என்னைத் துரத்திய ஒன்று இனி உங்களையும் துரத்தட்டும். பெண்கள் முன்னேறிவிட்டார்கள்… பெண்கள் படிக்கத் தொடங்கிவிட்டார்கள்…

ஆனால்…

- அன்பரசி

Pin It