‘ஏதிலியைத் தொடர்ந்துவரும் நிலா' என்ற கவிதைத் தொகுப்பு  சமூக விடுதலைக்கான விவாதத்தை நடத்த, அரசியல் விடுதலையைப் பெற, அதிகாரப் பீடங்களைக் கேள்வி கேட்க, ஒழுக்கத்திற்குள் இருக்கும் ஒழுங்கற்ற தன்மையை ஒழித்துக்கட்ட, கெட்டித் தட்டிப்போன ஜாதியின், ஜாதிமான்களின் அம்மணத்தை பழஞ்செருப்பு மாலை இட்டு ஊர் சுற்றச் செய்ய – என மதிவண்ணனின் நூல் முழுவதும் சொல்வல்லமை கொண்ட கவிதைகளாக உலவுகின்றன. அந்த வகையில் வாசகரின் மனதையும் கவ்விக் கொள்கின்றன!

mathivannan 244காதலும் வீரமும் சொட்டும் மதுரைவீரனின் வாள் முனைதான் அருந்ததிய மக்களின் விடுதலைக்கான தீர்வு என்பதை கவிதைக்குள் வைக்கும் மதிவண்ணன் வெள்ளையம்மா, பொம்மியம்மா என தன் சகபயணிகளைச் சேர்த்துக்கொண்டு தீவிர சாதி எதிர்ப்புப் போரில் ஈடுபடுகிறார். மதிவண்ணனின் கவிதைகளில் பல இடங்களில் பிரம்மராக்கி கிழவி நய்யாண்டிக்கு துணை நிற்கிறார். மதியின் முந்தைய இரு கவிதைத் தொகுதிகளிலும் வருவது போன்றே இத்தொகுப்பிலும் வந்து கலாய்த்துவிட்டுச் செல்கிறார் பிரம்மராக்கிக் கிழவி!

பெரியார் – அம்பேத்கர் வழிகளை தனதாக்கிக் கொண்டவர்களிடம் கடவுள் என்ன பாடுபடுவார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தலித் மக்களின் கடவுளை ஏமாளிக் கடவுளாகவும்; ஜாதி – வர்ணாசிரமத்தைக் காக்கும் கடவுளை எச்சக்கலை எரப்பாளி கடவுளாகவும் சொல்லும் கவிதைகளைத் தாண்டி பராபரத்தை ஊட்டியில் மிதித்தே கொல்லும் கவிதையும் உண்டு. காக்கைக்குத் தெரியாமல் / அதன் பசும்நிற முட்டையெடுத்து / சாணியில் பொதிந்துச் / சுட்டுத்தின்றதைத் தவிர / தப்பிதமாய் ஏதும் செய்தறியா / எம்மை முன்வினை, தன்வினை என மொழிந்து / முன்னிருகையும் காலாய் ஊன்றி / நாலு காலில் நடப்பித்து காட்டையும் ஆற்றையும் கூட / களவாண்டு காரை வீடாய் / அவ்வில் முன்னில் / பன்னிற மகிழுந்துகளாய் / நிறுத்தியிருக்கும் நாறப்பிறப்பாளர் / புழக்கடைத் தொழுவத்தில் / அடைக்க / திருவாய் மலரும் பராபரத்தை / ஊட்டியில் மிதித்துப் / பிதுக்குவதேயில்லாமல் / வேறொன்றும் வேண்டேன் / பராபரமே.

மதியின் உரைநடையில் கொப்பளிக்கும் கோபம் அவருடைய கவிதைகளிலும் எதிரொலிக்கிறது என்றாலும் அவரின் கோபத்தோடு சொற்கள் வலுப்பெற்று கவித்துவம் அடைந்து நம் வாசிப்பின் பெருமூச்சை கையறுநிலையாக நமக்கு அளித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன. இவை தவிர இன்னும் இந்தக் கவிதைக் கூட்டின் கலை ஓவியங்கள் ஏராளம். அதனை அதன் இருப்போடும் அழகியலோடும் நம் கண் முன் அலையாட வைத்திருக்கிறது இந்நூல். பயணக்குறிப்பில் வரும் பார்வையற்றவரின் சிரிப்பு, கூட்டத்தில் பிதுங்கிச் செல்லும் பழக்காரி, பொதுவின் பொருள் விளக்கும் காகம், நத்தையின் பயணப் பாதை, சாவு வரும் வரையில் வாழ்ந்துவிட வேண்டுமென்று தங்க நாற்கரச்சாலையில் சிக்காமல் தப்பித்து வாழும் நாய்கள், தடயமில்லாமல் வீட்டிற்குள் வந்து போகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளி, ஆளில்லா வீட்டில் அடித்துக் கொண்டிருக்கும் தொலைபேசி– என கவித்துவத்தின் உணர்விதயங்கள் விரிந்து கிளைபரப்பி நம்மை அதற்குள் இறுகப் பற்றிக் கொள்கின்றன.

மதியின் சாதியொழிப்பு மற்றும் சமூக – அரசியல் விடுதலைக்கான கவிதைகள் நம்மின் உணர்வுகளாய் உறவுகளாய் எப்போதும் இருப்பதால் நாம் மற்ற கவிதைகளைப் பார்க்கவில்லையோ என்ற உணர்வை இத்தொகுப்பு ஏற்படுத்துகிறது. தலைப்புகளின்றி முன் முடிவுகளற்ற தன்மையோடு வாசகரை கவிதைக்குள் இட்டுச் செல்லும் வகையில் இத்தொகுப்பில் வியப்புக்குறிகளையே தலைப்புகளாகக் கொண்ட 33 கவிதைகளில் ஒன்று இது: ஒளிந்தும் ஒளித்தும் / தின்ற கறிகளெல்லாம் / காணாமல் / பிறப்பிலும் சிறப்பிலும்/ மேன்மக்கள் என்றே / நாட்டிப் பசப்புவோர் / கூறுபோட்டு/ அள்ளியெடுத்துச் செல்லும் / மஞ்சள் வண்ணப் பொட்டலங்களிலிருந்து / நிறமற்ற நிறத்தில் / பச்சை ரத்தம் நெடுகச் சொட்டிப் / பிசுபிசுக்க / கேட்க நாதியற்றவனின் / தாய்க்கறி போலும் / அம்பாரம் அம்பாரமாய் / போகிறது நதிக்கறி.                       

ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா ம.மதிவண்ணன் பக் : 64 விலை : ரூ.40கருப்புப்பிரதிகள், சென்னை–5 பேசி: 94442 72500

Pin It