தமிழ்நாட்டில் புரட்சிக்கு பஞ்சம் இல்லை. இப்போது புரட்சி தமிழர் ஒருவர் மதுரையில் உதயமாகி இருக்கிறார். நீட் தேர்வில் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி விட்டார் என்று பேசுவார். அவர் முதல்வராக இருந்த காலத்தில் நீட் தேர்வுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தர மறுத்து கடிதம் எழுதியதை ஒரு வருடம் வரை வெளியிடாமல் மக்களை ஏமாற்றியது. அதுதான் புரட்சி.

முத்தலாக் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் வந்தால் அதை ஆதரித்து தனது கட்சி உறுப்பினர்களை வாக்களிக்க சொல்வார். ஆனால் மதுரை மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக தீர்மானம் போடுவார். இதுதான் புரட்சி.

மோடி கொண்டுவந்த விவசாய சட்டத்தை ஆதரித்து அதன் நன்மைகளை விலாவாரியாக விளக்கி பேட்டியளிப்பார். பிறகு மோடியே விவசாயிகள் போராட்டத்திற்கு பணிந்து சட்டத்தை கிடப்பில் போடும் போது வாய் மூடி மவுனம் காப்பார். இதுதான் புரட்சி.

புதுவை யூனியன் பிரதேசத்திற்கு மாநில உரிமைக் கோரி மதுரையில் தீர்மானம் போடுவார். ஆனால் டெல்லி யூனியன் பிரதேசத்தில் அதிகாரத்தை பறித்து ஒன்றிய ஆட்சி சட்டம் போட்டால் ஆதரிப்பார். இதுதான் புரட்சி.

நீட் தேர்வு விலக்கு கேட்டு நாங்கள் தான் சட்டசபையில் தீர்மானம் போட்டோம் என்பார். இப்போது நீட் விலக்கு கோர வாய்ப்பே இல்லை என்று அந்தர் பல்டி அடிப்பார். இதுதான் புரட்சி.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தது எங்கள் ஆட்சி தான் என்பார். அதே அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு பல லட்சம் செலவிட வேண்டியிருப்பது குறித்து வாய் திறக்க மாட்டார். இதுதான் புரட்சி.

இவரது கட்சி பெயரில் இருக்கும் திராவிடம் என்பதே ஒரு கற்பனை என்று ஆளுநர் ரவி பேசினால் வாயை மூடிக் கொள்வார். இதுதான் புரட்சி.

கலைஞர் ஆட்சியில் மதுக்கடைகள் மூடப்பட்டன. எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்ப ட்டன. ஆனால் கலைஞர் தான் மதுக்கடைகள் திறந்து இளைஞர்களை கெடுத்தார் என்று வாய் கூசாமல் பேசுவார். இதுதான் புரட்சி.

முதலமைச்சர் பதவிவை லாட்டரி பரிசாக சசிகலாவிடம் இருந்து பெற்ற போது அவர் காலில் விழுந்து வணங்கியவர், பிறகு சசிகலாவை தனது கட்சியில் சேர்க்கமாட்டேன் என்று வீர வசனம் பேசுவார். இவர் முதல்வராக இருந்த போது உறவினர்களுக்கு காண்ட்ராக்ட் வழங்கியதில் ரூ.5000 கோடி ஊழல் நடந்ததை சி.பி.அய் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போது அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கி தன்னை காப்பாற்றிக் கொண்டிருப்பவர். இதுதான் புரட்சி.

இப்படி எத்தனையோ புரட்சிகளை பட்டியலிடலாம். தமிழ்நாடு இதையெல்லாம் சகித்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

விடுதலை இராசேந்திரன்

Pin It