மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை என்பதை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளது.
ஆனால் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொல்லிக் கொண்டே தமிழகத்தைத் திறந்த மடமாக்கிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
ஏற்கனவே தொடர்வண்டி, அஞ்சலகம் உள்ளிட்ட மத்திய அரசுப் பணியிடங்களில் வடநாட்டவர் தமிழர்களைவிட அதிகமாக நியமிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு தமிழக அரசும், அரசு மருத்துவமனைப் பணிகளில் வடநாட்டவர்களைப் பெருமளவு நிரப்பிக் கொண்டிருக்கிறது.
தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம் மூலம் தேர்வு முறையில் பொறியாளர்களைத் தேர்வு செய்தது. அதில் மொத்தப் பணியிடங்களில் 12.5% ஆந்திரம், கேரளம், கர்நாடகம், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏறத்தாழ 90 லட்சம் பேர்கள் பதிவு செய்து, காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இயந்திரப் பொறியாளர் துறைக்கு 219 பேர் தேவை என்ற நிலையில், 67 பேர் பொதுப்பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 47 பேர் வெளிமாநிலத்தவர்கள். அதாவது, 68 விழுக்காடு.
தொழில் துறையில் தமிழ்நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று வாய் கூசாமல் தமிழக அதிமுக அமைச்சர்கள் என்னதான் சொல்லிக்கொண்டிருந்தாலும் உண்மை வேறாக இருக்கிறது.
தொழில்துறையில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதோடு, வேலைவாய்ப்புகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்து, தன்வயப்படுத்திப் பின்னர் பாலஸ்தீனியர்களை அப்புறப்படுத்தியது வரலாறு.
நாளை தமிழகமும் வடவர்கள் கையில் போய்விடாது என்பதற்கு என்ன உத்திரவாதம்.