திருச்சியில் 25-10-2023 அன்று நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி “தமிழகத்தின் உண்மையான வரலாற்றை அழிப்பதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. திராவிடம், ஆரியம் எனஇருவேறு இனங்கள் இங்கு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். ஆனால், உண்மையில் ஆரியம், திராவிடம் ஆகிய இனங்களே கிடையாது” என்று குறிப்பிட்டார்.

சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்தக் கேள்விக்குப் பதில் அளித்த அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “இதுக்கெல்லாம் புராணம் படிக்க வேண்டும். நான் அந்த அளவுக்கு படிச்சவன் இல்லை. திராவிடம், ஆரியம் உண்மையா பொய்யா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு நான் சரியான நபர் அல்ல. தவறான பதில் கொடுத்து விடக்கூடாது. அறிஞர்களைப் பார்த்துத்தான் இதனை கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.eps 381தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள நாள் தொடக்கம் உண்மைக்குப் புறம்பானச் செய்திகளைப் பேசி மாநிலத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் ஆர்.என்.ரவி. தற்போது அவரது கருத்து குறித்துப் பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி அவரையும் மிஞ்சி விட்டார்.

பெயரில் திராவிடத்தையும், கொடியிலும் பெயரிலும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவையும் தாங்கி இருக்கக் கூடிய ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள ஒருவர், திராவிடம் குறித்த ஆளுநரின் கருத்துக்குத் தக்க எதிர்வினை ஆற்றாமல் இப்படி நழுவிச் சென்றது அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குக் கோப்புகள் ஆளுநர் மாளிகையில் அனுமதிக்காக காத்திருப்பது குறித்த அச்சத்தின் வெளிப்பாடு என்பது தெளிவாகத் தெரிகிறது.

“நான் ஒரு திராவிடன். என்னைத் திராவிடன் என அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். என்னைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று அழைத்துக் கொள்ளும் போது திராவிடனிடம் இந்த உலகத்துக்கு வழங்க திட்டவட்டமான, தெளிவான மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட சில திடமான வித்தியாசமான கருத்து உள்ளது என நம்புகிறேன்” என்று நாடாளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சில் பேரறிஞர் அண்ணா முழங்கினார். ஆனால் அவர் பெயரில் இயங்கும் கட்சியின் பொதுச் செயலாளர் திராவிடம் இருக்கிறதா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்கிறார். இப்படி இருக்கும் சூழலில் பேரறிஞர் அண்ணாவைப் பற்றிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி பா.ஜ.க உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் என்பதை எப்படி நம்ப முடியும்.

‘சேக்கிழார்’ எழுதிய கம்பராமாயணத்தைப் படித்த எடப்பாடிப் பழனிச்சாமிக்கு “நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெல்லாம். வான்தான் என் புகழ்” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் எப்படித் தெரியும்?

சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வதற்காக பா.ஜ.கவை விட்டு விலகி விட்டது போல் நாடகமாடும் அ.இ.அ.தி.மு.கவை இனியும் திராவிட இயக்கங்களில் ஒன்றாகக் கருதி ஏற்றுக் கொள்ள முடியாது. தலைவர் கலைஞர் அடிக்கடி “நீதி X அநீதி, தர்மம் X அதர்மம், சுத்தம் X அசுத்தம், தி.மு.க X அ.தி.மு.க” என்று குறிப்பிடுவது போல் அ.இ.அ.தி.மு.க என்பது தி.மு.கவிற்கான எதிர்ச்சொல் மட்டுமே.

அ.இ.அ.தி.மு.கவுக்கும், திராவிடம் மற்றும் பேரறிஞர் அண்ணாவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதையே எடப்பாடி பழனிச்சாமியின் இந்த நடவடிக்கை உணர்த்துகிறது. தந்தை பெரியார் மண்ணில் பா.ஜ.கவைக் காலூன்ற விடாமல் செய்ய வேண்டுமெனில் அ.இ.அ.தி.மு.கவின் உண்மை முகத்தை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It