பாரதிய ஜனதாவின் கயிறுகள் அ.இ.அ.தி.மு.க.வின் அணிகள் என்ற பொம்மையை ஆட்டுவித்து பொம்மலாட்டம் நடத்துவதை இனியும் மறைக்க முடியாது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் இது வெளிச்சமாகிவிட்டது.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முதலில் தனது கட்சியே வேட்பாளரை நிறுத்தும் என்றார். தேர்தல் பணிக் குழுவையும் நியமித்தார். எடப்பாடி பழனிச்சாமி, கட்சிக்கு நான் தான் தற்காலிக பொதுச் செயலாளர்; நானே அ.இ.அ.தி.மு.க. - எனவே நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என்றார். பா.ஜ.க.விடம் நேரில் சென்று ஆதரவு கேட்டார். நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒரு வேட்பாளரை அறிவித்தார். மற்றொரு அணியான ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் தாமே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றார். தனது கட்சி, பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தினால், ஆதரிக்கும்; நிறுத்தவில்லை என்றால், தங்கள் கட்சியே வேட்பாளரை நிறுத்தும் என்றார். இரண்டு கட்சிகளும் பா.ஜ.க.வின் முடிவுக்காக விடிய விடிய நாள்கணக்கில் காத்திருந்ததுதான் மிச்சம்.
பிறகு, ஓ. பன்னீர்செல்வமும் ஒரு வேட்பாளரை நிறுத்தி அவரை வேட்பு மனுவையும் தாக்கல் செய்ய வைத்தார். பா.ஜ.க. மேலிடம் இரண்டு அணிகளையும் குழப்பத்தில் தவிக்க விட்டு வேடிக்கைப் பார்த்தது. வேட்பு மனு தாக்கலுக்கு இறுதிக் கட்டம் நெருங்க பா.ஜ.க. தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தது. எடப்பாடி பழனிச்சாமிக்குத் தான் ஆதரவு என்றும் அறிவித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி அணியின் ஆதரவுக்காக இப்படி ஒரு முடிவை எடுத்ததோடு ஓ. பன்னீர்செல்வம் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்று எடப்பாடி அணியை ஆதரிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஓ.பி.எஸ். அணி பச்சைக் கொடி காட்டியது. பிறகு இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி அணிக்கு வழங்க எதிர்ப்பு தெரிவிக்காமல் ஓ.பி.எஸ். அணி பின் வாங்கியது. இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என்றது. இதே அணி தான் தாமரை சின்னம் நின்றால் மட்டும் ஆதரிப்போம் என்று முதலில் கூறியது. தாமரை போய் இரட்டை இலை வந்தது.
இடையில் இரண்டு அணியிலும் இரண்டாவது கட்டத் தலைவர்கள் ‘காது கூசும்’ அளவுக்கு சேறு வாரி ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டனர். ஆனால் பா.ஜ.க.வின் சித்து விளையாட்டுகளைக் கண்டிக்கும் முதுகெலும்பு இரு அணிக்கும் இல்லாமல் போய் விட்டது. பல நாட்கள் தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் இரண்டு அணிகளும் மோதிக் கொண்டு வசைமாறி பொழிந்ததையும் நாடு பார்த்தது. இப்போது கைகோர்த்துக் கொண்டு ஓட்டு கேட்டு வாக்காளர்களிடம் வரப் போகிறார்களாம். அம்மாவின் பெயரில் கட்சி நடத்துகிறவர்கள் பா.ஜ.க.வுக்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டார்கள்.
1967இல் அண்ணா அமைத்த கூட்டணியில் திராவிட இயக்கக் கொள்கை எதிரியான இராஜகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சி இடம் பெற்றிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இராஜாஜி என்ற ஆச்சாரியாரை கழற்றி விட்டு, பெரியாரிடம் வந்து சேர்ந்தார் அண்ணா. இந்த ஆட்சியே பெரியாருக்கு காணிக்கை என்றார்.
அவசர நிலையை அமுல்படுத்தி தி.மு.க.வினரை ‘மிசா’ சட்டத்தில் கைது செய்த காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி மீண்டும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பியபோது கடற்கரைக் கூட்டத்தில் அவசர நிலைப் பிரகடனம் செய்தமைக்காக தி.மு.க.விடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுதான் தனது உரையைத் தொடங்கினார்.
தி.மு.க.வை விட்டு வெளியேறிய எம்.ஜி.ஆர்., அவசர நிலை காலத்தில் காங்கிரசை ஆதரித்தார். ராஜிவ் பிரதமராக இருந்த காலத்தில் அவர் ஈழத் தமிழர்களுக்கு குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலை எடுத்தபோது எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளுக்கு கோடி கோடியாக நிதி உதவி செய்து அவர்களின் தாய்நாடு விடுதலைப் போராட்டத்துக்கு உதவினார். தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய அரிசியை காங்கிரஸ் ஆட்சி அனுப்ப மறுத்தபோது, ஒன்றிய ஆட்சியை எதிர்த்து, கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் எம்.ஜி.ஆர்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது கூட்டணியில் தனது கட்சி சார்பில் அமைச்சர் பட்டியலை அனுப்பிய ஜெயலலிதா, அதை ஏற்க வாஜ்பாய் காலதாமதம் செய்தபோது, கூட்டணி அமைச்சரவைக்கு ஒப்புதல் கடிதம் வழங்க மறுத்து வாஜ்பாயை திக்குமுக்காடச் செய்தார். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம்; பா.ஜ.க. கூட்டணியும் வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் தனது கட்சியை தனியாகக் களமிறக்கி வெற்றி வாகை சூடச் செய்தார்.
இப்படி முதுகெலும்புடன் கட்சிகளை நடத்திய தமிழ்நாட்டில், ‘சரணாகதிப் படலம்’ நடத்தி தமிழ்நாட்டையே பதவி வெறிக்கு அடமானம் வைக்கத் துடிக்கின்றன அ.இ.அ.தி.மு.க. அணிகள். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி என்றெல்லாம் உதட்டளவில் பேசிக் கொண்டு அவர்களின் ‘சுயமரியாதைப்’ பாதையை விலை பேசிக் கொண்டிருப்பது தமிழ்நாட்டுக்கே அவமானம்!
- விடுதலை இராசேந்திரன்