எந்தத் துறையையும் மோ(ச)டி அரசு விட்டு வைக்கவில்லை. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் மெகா மோசடி நடைபெற்றிருப்பதை ஒன்றிய தலைமை தணிக்கை அலுவலர் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. கிராமப்புற குடும்பங்களில் 85.9 சதவீதம் பேரும் நகர்ப்புற குடும்பங்களில் 82 சதவீதத் தினரும் மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிக்கல்களைச் சந்திக்கின்றனர்; மக்கள் தொகையில் 17 சதவீதத்திற்கும் அதிகமானோர் குடும்ப பட்ஜெட்டில் குறைந்தது 10 சதவீதத்தை மருத்துவத் தேவைகளுக்காக செலவிடுகின்றனர் என்று தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (NSSO) ஆய்வு கூறுகிறது.

மருத்துவச் செலவுகளே பல குடும்பங்களை கடனில் தள்ளுகிறது, கிராமப்புற இந்தியாவில் 24 சதவீதம் குடும்பங்களும் நகர்ப் புறத்தில் 18 சதவீத மக்களும் தங்களது மருத்துவத் தேவைகளை கடன் வாங்கியே பூர்த்தி செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB-PMJAY) 2018-செப்டம்பர், 23 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் 50 கோடிக்கும் அதிக மான பயனாளிகளை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டது. “உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி சுகாதாரத் திட்டம்” இது என்றும் கூறப்பட்டது. ஆயுஷ்மான் பாரத்- பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவச் செலவினங்களை நேரடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையிலேயே செலுத்திவிடும் என்றார் பிரதமர் மோடி.

தணிக்கைத் துறை அம்பலம் :

ஆனால் தற்போது இந்தத் திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இறந்து போனவர்களும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள இந்த மோசடியை, ஒன்றிய அரசு “ இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது செல்போன் எண் கட்டாயமாக்கப்படவில்லை. வெறும் ஆதாரை மட்டுமே கவனத்தில் கொண்டோம்” எனக் கூறி மோசடியிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது. திட்டத்தின் பயனாளிகள் தரவு தளத்தில் கிட்டத்தட்ட 7.5 லட்சம் பேர் ஒரே செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளனர்: 9999999999. கிட்டத்தட்ட 1.4 லட்சம் பேர் 8888888888 என்ற எண்ணுடன் இணைக்கப் பட்டுள்ளனர், மேலும் 96,000 பேர் மற்றொரு போலி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளனர். ஒரே ஆதார் எண்ணுடன் பல பயனாளி கள் இணைக்கப்பட்டுள்ளது அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் 4,761 பதிவுகள் வெறும் ஏழு ஆதார் எண்களுடன் இணைக்கப் பட்டுள்ளன. இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கை பிரிவு மோசடியை அம்பலப்படுத்தியதால் ஒன்றிய சுகாதார அமைச்சகம் இந்தத் திட்டத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறது. கிட்டத்தட்ட 7.5 லட்சம் பயனாளிகள் ஒற்றை மொபைல் எண்ணுடன் இணைக்கப் பட்டுள்ளனர் என்று தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், ஒன்றிய அரசோ பயனாளிகளின் சரிபார்ப்பில் மொபைல் எண்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்கிறது ஒன்றிய சுகாதார அமைச்சகம்.

இறந்த நோயாளிகளுக்கு சிகிச்சை :

2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜியின் தணிக்கை அறிக்கை, ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் “இறந்துவிட்டார்கள்” எனக் குறிப்பிடப்படப்பட்டவர்களும் இத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்கிறது சிஏஜி அறிக்கை. சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், கேரளம் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் இந்த முறைகேடுகள் அதிகளவில் நடைபெற்றுள்ளன. போதுமான சரிபார்ப்பு இல்லாததால், பயனாளிகளின் தரவுத்தளங்களில் தவறான பெயர்கள், பிறந்த தேதி தவறாக பயன்படுத் தப்படுவது, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையிலும் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.

ஆதாரோடு - செல்போன் எண்ணை சரிபார்க்கவில்லை :

பயனாளி கொடுத்துள்ள தகவல்கள் சரி தானா என்பதைக் கண்டறிய, அவர்கள் அளித்துள்ள செல்போன் எண் கவனத்தில் கொள்ளப்படவில்லை. தேவை ஏற்பட்டால் பயனாளிகளைத் தொடர்பு கொள்ளவும், சிகிச்சை குறித்த கருத்துக்களை சேகரிக்கவும் மட்டுமே மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆதார் மட்டுமே அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் 100 சதவீதம் ஆயுஷ் மான் பாரத் அட்டை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளையும் மற்றும் யூனியன் பிரதேசங்களை மோடி அரசு வலியுறுத்துகிறது. ஆதார் தரவுகள் சரியாக இருந்தால் போதுமானது. அவர்கள் திட்டத்தில் இணைக்கப்படுவர். பயனாளிகள் தங்களது செல்போன் எண்ணை கொண்டு செல்லவில்லை என்ற காரணத்திற்காகவோ அல்லது அவர்கள் கொடுத்த மொபைல் எண் மாறி விட்டது என்ற காரணத்திற்காகவோ பயனாளிகளுக்கு சிகிச்சையை நிறுத்த முடியாது.

செல்போன் எண் கட்டாயமில்லையாம் :

முதலில் இந்தத் திட்டத்திற்கு செல்போன் எண் கட்டாயம் எனக் கூறவில்லை. எனவே கீழ் மட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரே எண்ணை பலருக்கு வழங்கியுள்ளனர் என்று முறைகேட்டை நியாயப்படுத்த முயல்கிறது. ஒன்றிய அமைச்சகம். ஆனால், தற்போது தேசிய சுகாதார ஆணையம் பயன்படுத்தும் தற்போதைய தரவுதளத்தில் சரியான மொபைல் எண்களை மட்டுமே பெறுவதற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என விளக்கமளிக்கிறது ஒன்றிய அமைச்சகம். ஆதார் அட்டைக்கு கைரேகை, கருவிழி ஸ்கேன் மற்றும் முகம்- ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டாலும் பயனாளிகளுக்கு வழங்கும் ஒடிபி (ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் செல்) கைரேகையின் அடிப்படை யில் வழங்கப்படுகிறது எனக் கூறி தப்பிக்கப் பார்க்கிறது ஒன்றிய அமைச்சகம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It