அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா?

எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான ஆயுதமாக அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு புதிதல்ல. சமீபத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் நெறியாளர் இதை கேள்வியாக வைத்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, அமலாக்கத்துறையை நாங்களா உருவாக்கினோம்? பணமோசடி தடுப்புச் சட்டத்தை (PMLA) நாங்களா கொண்டு வந்தோம்? அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. சுதந்திரமாக அவர்களுடைய பணிகளை மேற்கொள்கிறார்கள். நாங்கள் அமலாக்கத்துறையை நிறுத்தவும் இல்லை, அனுப்பவும் இல்லை. அமலாக்கத்துறை சுமார் 7,000 வழக்குகள் பதிவு செய்திருக்கிறது. அதில் அரசியல் சார்பான வழக்குகள் 3 விழுக்காட்டுக்கும் குறைவுதான். காங்கிரஸ் ஆட்சியில் 35 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் 2,200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.modi interview in thanthi tvஅமலாக்கத் துறையின் தரவுகள் அடிப்படையில் மோடியின் பேச்சு குறித்து சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த PMLA சட்டமானது 2002ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில்தான் இயற்றப்பட்டது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மூலம் உருவான கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இச்சட்டம் என்று அப்போது கூறினர். 2012ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசாங்கம் அதில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. பின்னர், 2019ஆம் ஆண்டில் பாஜக அரசு சில திருத்தங்களை செய்து இச்சட்டத்தை கொடூரமானதாக மாற்றியது. முதன்முதலில் 40 குற்றங்களுக்கான 6 சட்டங்கள் மட்டுமே இருந்தது. இப்போது 140 குற்றங்களுக்கான 30 சட்டங்கள் இதில் இணைக்கப்பட்டு விட்டன.

காவல்துறை மற்றும் பிற விசாரணை அமைப்புகளால் வழக்குப் பதியப்பட்டிருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை அதை கையிலெடுக்கும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் PMLA சட்டப்படி அமலாக்கத்துறை தன்னிச்சையாக செயல்படுகிறது. அமலாக்கத்துறை விசாரிக்கும் முன் பிற விசாரணை அமைப்புகளால் முதல் தகவல் அறிக்கை அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்ற விதிமுறையும் தளர்த்தப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமின் பெறுவதை கடுமையாக்கியது. ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டாலே போதும், அதற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை தருகிறதோ இல்லையோ, நிரபராதி என்று நிரூபிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட நபருடைய பொறுப்பு என்ற அளவுக்கு மோசமான தீர்ப்பை வழங்கியது. அமலாக்கத்துறையின் அதிகாரப் பரவலை மேலும் விரிவுபடுத்துவதாக இத்தீர்ப்பு அமைந்தது. கான்வில்கர் ஓய்வு பெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு வழங்கியது இத்தீர்ப்பு.

அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப, கைது செய்ய, வாக்குமூலங்களை பதிவு செய்ய, சோதனையிட, சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரங்களை நீட்டித்து தீர்ப்பை எழுதினார் கான்வில்கர். இத்தீர்ப்பின் அடிப்படையில் இப்போதெல்லாம் சந்தேகத்தின் பேரிலேயே அமலாக்கத்துறை கைது செய்ய முடிகிறது. கைதுக்கான காரணங்களை தெரிவிப்பதில் கூட வெளிப்படைத்தன்மை இல்லை.

அமலாக்கத்துறையின் தரவுகளின்படி 2005 முதல் 2023 மார்ச் வரை 5,906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மோடி இப்போது 7,000 வழக்குகள் என்று சொல்கிறார். அப்படியானால் கடந்த ஓராண்டில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. அதில் 25 வழக்குகள் மட்டுமே இதுவரை முடிவை எட்டியுள்ளன. மற்ற வழக்குகள் அனைத்தும் இன்னும் நிலுவையில்தான் இருக்கின்றன.

அரசியல்வாதிகள் மீது வழக்குப் பதிவது முந்தைய காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் பாஜக ஆட்சியில் 4 மடங்கு அதிகரித்து விட்டது. ஒட்டுமொத்தமாக 176 இந்நாள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.-க்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிந்திருகிறது. அதில் 121 அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் 2014-க்குப் பிறகு பதியப்பட்டது. இந்த 121 பேரில் சோதனைக்குள்ளானவர்கள், வழக்குப் பதியப்பட்டவர்கள், சிறைபடுத்தப்பட்டவர்களில் 115 பேர் எதிர்க்கட்சியினர். அதாவது 95% எதிர்க்கட்சியினர் மட்டுமே குறிவைக்கப்பட்டிருக்கின்றனர். ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரென். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர ராவின் மகள் கவிதா போன்றோர் இந்த ஆண்டில் கைது செய்யப்பட்டவர்கள். கடந்த ஆண்டில் மணீஷ் சிசோடியா, செந்தில்பாலாஜி போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒன்றிய இணையமைச்சர் பங்கஜ் சவுதரி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவல்படி, 2004 - 2014 வரையில் பணமோசடி தொடர்பாக 112 இடங்களில் சோதனை நடத்தியிருந்தது. ஆனால் 2014- 2022 வரையில் 2,974 அமலாக்கத்துறை சோதனை நடந்திருக்கிறது. இது 26 மடங்கு அதிகமாகும். சோதனைக்குள்ளான பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பல கோடி ரூபாய்களை நன்கொடையாக வாரி இறைத்தது சமீபத்தில் அம்பலமானது. அதையும் இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

அமலாக்கத்துறையின் விசாரணைப் பிடியில் இருந்தவர்கள் பாஜகவில் இணைந்து விட்டாலோ அல்லது பாஜகவுக்கு ஆதரவளித்து விட்டாலோ மட்டும் புனிதர்களாகி விடுவார்கள். பாஜகவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் அல்லது பாஜகவில் இணைபவர்கள் மிரட்டலுக்கு அஞ்சியே இம்முடிவை எடுக்கிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான 25 எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கடந்த 10 வருடங்களில் பாஜகவுக்கு சென்று விட்டார்கள். அதில் 3 பேருடைய வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு விட்டது. 23 பேரின் வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி அமைச்சர் அதிஷி, தன்னை பாஜகவில் இணையச் சொல்லி வற்புறுத்துவதாக கூறியிருக்கிறார். இல்லாவிட்டால், அமலாக்கத் துறை கைது செய்யும் என்று சிலர் மிரட்டுவதாக அவர் கூறியிருக்கிறார். கைது செய்யப்படுபவர்கள் மீது குற்றச்சாட்டை நிரூபிக்கவும், ஆதாரங்களை சமர்பிக்க முடியாமலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தடுமாறுகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிற மதுபானக் கொள்கை வழக்கில், 6 மாதங்களுக்கு முன்பே கைது செய்யப்பட்ட சஞ்சய் சிங்கிற்கு இப்போது உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஆதாரங்களை சமர்பிக்க முடியாவிட்டால் ஏன் மாதக்கணக்கில் சிறையிலேயே வைத்திருக்க வேண்டும்? ஏன் நீங்களும் ஜாமின் வழங்க எதிர்க்கிறீர்கள் என உச்சநீதிமன்றம் வேறொரு வழக்கில் சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறது. உண்மையிலேயே அமலாக்கத்துறை சுதந்திரமாகத்தான் செயல்படுகிறது என்றால், விசாரணை வளையத்தில் இருக்கிற 14 நிறுவனங்கள் எப்படி பல கோடி ரூபாயை பாஜகவை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்திருக்கின்றன என்பதையும் மோடி விளக்க வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It