எம்பி பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புடன் நாடாளுமன்றத்துக்குள் மீண்டும் கம்பீரமாக அடியெடுத்து வைத்துள்ளார். நாடளுமன்ற அலுவலகத்தில் உள்ள கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து சென்றது கூடுதல் சிறப்பு. நாடாளுமன்ற செயலவை அவர் பதவி பறிப்பை நீக்கம் செய்து அறிவித்திருக்கிறது. தொடர்ந்து சந்தித்து வரும் மக்கள் சக்தியின் எதிர்ப்புகளால், ஒன்றிய ஆட்சி தனது பழிவாங்கும் ஆணவ அடக்குமுறைகளை தளர்த்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு ராகுல் காந்திக்கு அதிகபட்சமான இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிப்பதற்கான காரணம் எதையும் குஜராத் நீதிமன்றம் ஏன் கூறவில்லை என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டு தண்டனைகளால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதோடு அடுத்த ஆறு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாமலும் தடுக்கப்பட்டார் , இரண்டு ஆண்டுகளில் ஒரு நாள் குறைத்து தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் பதவி பறிப்பும் போட்டியிடும் தடையும் உருவாகியிருக்காது.

ராகுல் காந்தி மோடியை பற்றி தான் கூறிய கருத்து அனைத்து மோடிகளுக்குமானது அல்ல என்ற நிலையில் உறுதியோடு இருந்தார், அதற்காக வருத்தம் தெரிவிக்கவும் அவர் மறுத்துவிட்டார். அவர் வருத்தம் தெரிவித்திருந்தால் இந்த தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய தேவையே இருந்திருக்காது.

ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி பார்ப்பனர்களின் பிடியில் சிக்கி தவித்தது. இந்து மகாசபையில் உறுப்பினராக இருந்து கொண்டே காங்கிரஸ் உறுப்பினராகவும் இருந்தார்கள், காங்கிரஸ் மாநாடுகளில் ஒரே மேடையில் இந்து மகாசபை மாநாடும் நடக்கும், காங்கிரஸ் மாநாடும் நடக்கும், காங்கிரஸ் மாநாடுகளில் பிராமணர்களுக்காக தனி கூடாரங்கள், தனியாக பிற சாதியினர் கண்படாமல் சாப்பாடுகள்,  அவர்கள் வேத சடங்குகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காந்தியே இந்த பாகுபாட்டை கண்டித்து எழுதியிருக்கிறார் . பெரியார் காங்கிரஸ் கட்சியிலே கொண்டுவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை கோரும் தீர்மானங்களை காங்கிரஸ் பார்ப்பனர்கள் திட்டமிட்டு சதி செய்து புறக்கணித்தனர், அதற்கு பிறகு தான் பெரியார் காங்கிரஸிலிருந்து விலகினார்.

அதே காங்கிரஸ் சோனியாவின் தலைமையில் செயல்பட தொடங்கியபோது காங்கிரஸில்  50 சதவீத பதவிகள் வகுப்புவாரி உரிமை அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் என்ற முடிவை சோனியா எடுத்தார். மண்டல் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்திய போது ராஜீவ் காந்தி அதை எதிர்த்து பேசினார், அதே காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தபோது மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அவசர நிலைக் காலத்தில் கல்வியை மாநில உரிமைப் பட்டியலில் இருந்து பிரித்து ஒத்திசைவு பட்டியலுக்கு கொண்டு சென்றார் இந்திராகாந்தி. இப்போது ராகுல் காந்தி மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் குரல் கொடுக்கிறார் . சித்தாந்த எதிரி ஆர்.எஸ்.எஸ் என்று வெளிப்படையாகவே ராகுல் காந்தி பேசுகிறார்.

26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி இந்தியா என்பது ஒற்றை ஆட்சி அல்ல அது மாநில உரிமை சமூக நீதி மதச்சார்பின்மையை உள்ளடக்கியது. அனைத்து பிரிவுகளையும் அங்கீகரித்து ஏற்கும் பன்முகத் தன்மை கொண்டது, (Inclusive  Development) என்று இந்தியாவிற்காக காங்கிரஸ் ஏற்கனவே கொண்டிருந்த கொள்கைகளை மாற்றிக் கொண்டு மறு வரையறை செய்து இருக்கிறது.

மாநிலங்களில் செல்வாக்கோடு உள்ள மாநிலக் கட்சிகளின் தலைமையிலே தான் தேர்தல் கூட்டணி உருவாகும் என்ற நிலைப்பாட்டிற்கும் அந்த கட்சி வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், காங்கிரஸ் கட்சி தலைவராகவும் தலித் சமூகத்தைச் சார்ந்த அம்பேத்கரிஸ்டான மல்லிகார்ஜூன கார்கேவை தேர்வு செய்துள்ளது காலத்தின் மாற்றத்தை சமூகநீதிப்  பார்வையில் அணுகி, கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டு சமூக நீதி கண்ணோட்டத்தோடும், இந்துத்துவா எதிர்ப்போடும் காங்கிரஸ் தன்னை வளர்த்து எடுத்து வருகிறது. அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் இந்த மாற்றத்திற்கு தயாராகி வரும் போது. மாற்றமே கூடாது என்பதுதான் சனாதன தர்மம் என்று செயல்பட்டு வரும் ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்சும் அதன் அரசியல் வடிவமான பாஜகவும். காலாவதியான மருந்துகளை பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தாகி விடும் என்பதை அவர்கள் உணரவில்லை, உலகம் முழுதும் மக்கள் உரிமை, மதம் கடந்த வாழ்க்கை, அனைவருக்குமான வளர்ச்சி என்ற பாதையில் நடை போட தொடங்கியுள்ள சூழலில் சங் பரிவாரங்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இதை புரிந்து கொள்ள முடியும்.

பாஜக ஆட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் உடனே காங்கிரஸ் ஆட்சியில் இது நடக்கவில்லையா என்று எதிர் கேள்வி கேட்பதே சங்பரிவாரங்களின் வழக்கமாகிவிட்டது. அன்றைய காங்கிரஸ் வேறு இன்றைய காங்கிரஸ் வேறு. ஆனால் அன்றைய ஆர்.எஸ்.எஸ்-ம் இன்றைய ஆர்.எஸ்.எஸ்-ம் மாற்றத்திற்கு தயாராக மறுக்கும் அமைப்பாகவே உள்ளன என்பதுதான் நாம் அதற்கு தரும் விளக்கம்.

புதிய சமூக பார்வையோடு காங்கிரசை புதிய பாதையில் வழிநடத்த தொடர்ந்து முயற்சித்து வரும் ராகுல் காந்தி இந்த பதவி பறிப்பு அடக்குமுறைகளை சட்ட ரீதியாக எதிர்கொண்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைகிறார். இது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றியும் கூட.

விடுதலை இராசேந்திரன்

Pin It