farmar actநடிகைகளை உடனே பார்க்கும் பிரதமருக்கு, ஆறு மாதமாக வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் கடும் குளிரும், மழையிலும், வெயிலிலும் போராடும் விவசாயிகளை கண்டு கொள்ள நேரமில்லாததால் மோடி பிரதமராகப் பதவியேற்ற இன்றைய நாளை (26, மே 2014) நாடு முழுவதும் இன்று கருப்பு தினமாக அனுசரிக்கிறார்கள்.
 
மோடி பதவியேற்று இன்றோடு 7 வருடங்கள் முடிந்து 8 ம் ஆண்டு துவங்கவுள்ளது. ஆனால் இந்த கேடுகெட்டவர்கள் (பாஜக) ஆட்சியில் நாடு அதள பாதாளத்திற்குச் சென்று விட்டது. இந்தியாவில் போராட்டம் நடக்காத நிமிடமே இல்லை என்று சொல்லும் வகையில் பார்ப்பனர்களுக்கும், பனியாக்களுக்கும் ஆதரவாகவும் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானதாகவும் பாஜக ஆட்சி அமைந்துள்ளது.
 
எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்றை கூட அறிவியல் துணைக் கொண்டும், இரக்க மனத்தோடும், பொறுப்புணர்வோடு சரிவரக் கையாளாமல், நாள் ஒன்றுக்கு இறப்பு 4 இலட்சத்தை தாண்டினாலும் கூட அதற்கான நிதியை ஒதுக்காமல், ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதியை அதிகரிக்காமல், நிவாரணம் கொடுக்காமல், தடுப்பூசியில் கூட தனியார் நிறுவனம் கொள்ளை இலாபம் கொழிக்க வழிவகை செய்வதோடு கொடூரமாக பிணத்தை எரிக்கக் கூட வழியில்லாமல் செய்துவிட்டு கோமியத்தை குடிங்க எல்லாம் சரியாகிவிடும் எனும் சொல்லும் கூட்டத்தை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றியே தீர வேண்டும். அதற்கான வேலைகளை இப்போதே துவங்க வேண்டும். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் இந்தியாவிற்கு விடிவு காலம் பிறக்கும்.
 
ஆனால் கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளே இல்லை எனுமளவுக்கு பலமாக இருந்த காங்கிரஸ், இரண்டு முறை ஆட்சியை இழந்த பிறகும் கட்டமைப்பை வலுப்படுத்தத் தவறிவிட்டது. வருகின்ற தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்குமா என்பது சந்தேகமே. ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு இன்னும் தலைவரைக் கூட தேர்ந்தெடுக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
 
ஆக எப்படியாவது பாஜக-வை வருகின்ற தேர்தலில் வீழ்த்தி மக்களைக் காக்க 1991 தேர்தலில் காங்கிரஸ்க்கு எதிராக ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களை தேசிய முன்னணி என்று அணிதிரட்டி ஒன்றுபட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது போல, இத்தேர்தலிலும் தேசிய அளவில் பாஜக-விற்கு எதிராக வலுவான அணியை, ஜனநாயக சிந்தனை கொண்ட அனைவரையும் காங்கிரஸ் தலைமையில் கட்டமைத்து பெருவெற்றி பெறுவதோடு பாஜக-வை படுதோல்வியடையச் செய்து மீண்டும் முகவரி இல்லாமல் ஆக்குவதே ஜனநாயக சிந்தனை கொண்ட தலைவர்களின் தற்போதைய தலையாய கடமை.
 
அதற்கான முயற்சிகளை தகுதியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மம்தா பானர்ஜி (மேற்குவங்காளம்), ராகுல்காந்தி (காங்கிரஸ்), இடதுசாரிகள், ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட்) , தேஜஸ்வி யாதவ் (பீகார்), அகிலேஷ் யாதவ் (உத்திரப்பிரதேசம்), நவீன் பட்நாயக் (ஒடிஷா), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), உமர் அப்துல்லா (காஷ்மீர்) என அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் இந்திய மக்களைக் காக்க முடியும்.
 
அதே நேரம் 1991ல் பெரும்பான்மை கிடைக்காமல் பாஜக உதவியோடு ஆட்சி அமைத்ததால் குறுகிய காலத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த அவலமும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
 
பல மாநிலக் கட்சி தலைவர்களின் பிரதமர் பதவிப் பேராசையே இப்போது மோடியைப் பிரதமராக்க வழிவகை செய்துள்ளது. ஆக மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக களத்தில் இறங்கி, இந்த மூன்றாண்டு வேலை செய்தால் தான் பாஜக-வை ஒழிக்க முடியும். இல்லாவிட்டால் மறுபடியும் பாஜக எனும் பேராபத்து வருவதையும், நாடு நாசமாய் போவதையும் யாராலும் தடுக்கவே முடியாது.
 
அதை முறியடிக்கும் வகையிலான சிந்தனையோடு இந்த கருப்பு தினத்தை அனுசரிப்போம்.
 
- பெரியார் யுவராஜ்
Pin It