உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் சில செய்திகளையும்,சில பாடங்களையும் கொண்டு வந்துள்ளன.
உ.பி.யிலும், உத்தரகாண்டிலும் பா.ஜ.க பெற்றுள்ள பெரும் வெற்றியைக் குறைத்து மதிப்பிட்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. வாக்கு இயந்திரத்தில் ஏதோ செய்து விட்டார்கள் என்று மாயாவதி சொல்வதெல்லாம் நம்பக் கூடியதன்று. அவ்வாறெனில், பஞ்சாபில் மட்டும் இயந்திரங்களைத் தங்கள் விருப்பத்திற்கு மாற்ற முடியாமல் போய்விடுமா என்ன?
குடும்பத் சண்டையும், கூட்டணிச் சண்டையும்தான் தோல்விக்குக் காரணம் என்கிறார் பிஹார் முதலமைச்சர் நித்திஷ் குமார். அதில் ஒரு உண்மை இருக்கவே செய்கிறது. தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் உ.பி.யில் அப்பா, பிள்ளை, சித்தப்பா இடையே நடந்த குடுமிபிடிச் சண்டையின் நெடி இந்தியா முழுவதும் வீசியது.
அரசியல்வாதிகளின் மீதே ஓர் அருவருப்பை அது கொண்டுவந்தது. இவர் அவரை நீக்குவதும், அவர் இவரை நீக்குவதுமாகச் சிறுபிள்ளை விளையாட்டு அங்கு நடைபெற்றது. அக்கட்சியின் ஆதரவாளர்களே முகம் சுழிக்கும் அளவுக்கு அந்தக் கலவரங்கள் அங்கு நடைபெற்றன. சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு அது ஒரு முதன்மையான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
நிதிஷ் குமார் சொல்வதை போல, பெரும் கூட்டணி உருவாகாமல் போனதும் இன்னொரு காரணம்தான். பிஹாரில் நிதிஷ், லாலு, காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டதால்தான் வெற்றி கிடைத்தது. ஆனால், உ.பி.யில், முலாயம், மாயாவதி இருவரும் ஒன்று சேரவே இல்லை. அதனால் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் பிரிந்தன. அது பா.ஜ.க. விற்கு நல்லதாகப் போய்விட்டது.
மேலே சொல்லப்பட்டுள்ளவை உண்மையான காரணங்கள்தான் என்றாலும், இவை சில இடங்களில் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு உதவியிருக்கலாம். அல்லது, வாக்குகள் வித்தியாசத்தைக் கூட்டுவதற்குப் பயன்பட்டிருக்கலாம். அவ்வளவுதானே தவிர, இத்தனை பெரிய வெற்றிக்கு அவை மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது. நான்கில் மூன்று பங்கு வெற்றியை ஒரு கட்சி பெற வேண்டும் என்றால் அது ஒரு அலை, சுனாமி அலை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு பெரிய அலை வீசுவதற்கு என்ன காரணம்?
உத்தரகாண்ட் மாநிலம் தனிப் போக்குடையது. உ.பி.யிலிருந்து பிரிக்கப்பட்டு, இந்தியாவின் 27ஆவது மாநிலமாக, 2000 நவம்பரில் அது உருவெடுத்தது. அங்கு பார்ப்பனர்களும், ராஜ் புத்திரர்களும் எண்ணிக்கையில் மிகுதி. வருண அதர்மம் அங்கு பெரும்பான்மையோரால் ஏற்கப்பட்ட ஒன்று. ஒரு கோடியே ஒரு லட்சம் மக்களை மட்டுமே கொண்டுள்ள சிறிய மாநிலமான உத்தர்காண்டில் இந்தி ஆட்சி மொழி, சமற்கிருதம் இணை ஆட்சிமொழி. பார்ப்பனர்களால் ‘தேவபூமி’ என்று அழைக்கப்படும் மாநிலமும் உத்த்ரகாண்ட்தான். எனவே அங்கு பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றியைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், அவ்வளவு பெரிய வெற்றிக்கு என்ன காரணம் என்று சிந்தித்தல் நல்லது.
சென்ற தேர்தலில் (2012), அங்கு காங்கிரஸ், பா.ஜ.க.இரண்டு கட்சிகளும் சமமான இடங்களை பெற்றிருந்தன. காங்கிரஸ் 32 இடங்களிலும், பா.ஜ.க. 31 இடங்களிலும் வென்றன.யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இறுதியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 2016 மார்ச்சில் காங்கிரசின் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த்தினர். பிறகு ஆட்சி கலைக்கப்பட்டதும், உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் என்று வழக்குகள் நடந்ததும் நாம் அறிந்தவையே. இந்தக் குழப்பங்களும், காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்ததற்குக் காரணங்களாக இருக்கலாம்.
உத்தர்காண்டில் இஸ்லாமியர்களின் வாக்குகள் குறைவு. ஆனால் உ.பி.யில் ஏறத்தாழ 21 விழுக்காடு இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளன. பிறகு ஏன் சமாஜ்வாதி, கங்கிரசுக்கு உ.பி.யில் இவ்வளவு பெரிய வீழ்ச்சி? முத்தலாக் விவகாரத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஏமாந்து, பா.ஜ.க வை நம்பியிருக்கக் கூடும் என்று ஒரு கருத்து சொல்லப்படுகிறது. அதனால் இஸ்லாமியப் பெண்களின் வாக்குகளில் ஒரு பகுதி அங்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. அது குறித்த ஆய்வும் தேவைப்படுகின்றது..
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை ஏழை, எளிய மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அது நடுத்தட்டு மக்களைத்தான் பெரிதும் பாதித்தது. ஆனால் நடுத்தட்டில் உள்ள இளைஞர்கள் பலர் இன்னும் மோடி மயக்கத்திலிருந்து விடுபடாமல் உள்ளனர் என்ற உண்மையையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.
அதே நேரத்தில் பஞ்சாபில் காங்கிரஸ் பெற்றுள்ள மகத்தான வெற்றியையும், பா.ஜ.க அடைந்துள்ள மகத்தான தோல்வியையும் அலட்சியப்படுத்த வேண்டியதில்லை.சென்ற முறை ஆளும் கட்சியாய் இருந்த பா.ஜ.க இப்போது அங்கு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அகாலிதளக் கூட்டணிக்கு 18 இடங்கள் கிடைத்துள்ளன என்ற போதிலும், பா.ஜ.க பெற்றுள்ள இடங்கள் வெறும் மூன்று மட்டும்தான். கோவாவில் அக்கட்சி முதல் இடத்தை இழந்துள்ளது. எனவே, பா.ஜ.க. வின் வெற்றியினால் நாம் விரக்தி அடைந்து விடும் எல்லைக்கும் செல்ல வேண்டியதில்லை.
எனினும் சில பாடங்களைப் பல கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. முதலில் காங்கிரஸ், தன் உட்கட்சி சண்டையை ஓரளவுக்கேனும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தங்களைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளையும் ‘சம தூரத்தில்’ வைத்துப் பார்க்கும் ‘தனிப்பெரும் சித்தாந்தத்தை’ச் சற்று ஒதுக்கி வைத்து, பொதுவுடமைக் கட்சிகள், பொது எதிரியை வீழ்த்தும் குறிக்கோளை முன்னெடுக்க வேண்டும். பொது மக்களை மோடி மாயையிலிருந்து முற்றுமாக வெளிக்கொண்டு வர வேண்டும்.
இந்த உறுதிகளை எடுத்துக்கொண்டு அனைவரும் பணியாற்றவில்லை என்றால், காவிப்படையினர் நாட்டை மலிவு விலைக்கு, ‘கார்ப்பொரேட்’ முதலாளிகளிடம் விற்று விடுவார்கள். அம்பேத்கார் சொன்ன, ‘பார்ப்பனியம், முதலாளித்துவம்‘ ஆகிய இரு சமூகத் தீமைகளும் இங்கு சலங்கை கட்டி ஆடுவதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு வழியிருக்காது!