நாட்டு மக்களுக்கு 2014இல் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக்கு வந்தது மோடி தலைமையிலான பா.ச.க. அரசு. நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவிற்குக் கொண்டுவந்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலக்கம் ரூபாய் செலுத்துவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தார் மோடி. ஆனால் இதுநாள் வரையில் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக, மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான், பனாமா பேப்பரஸ், பண்டோரா பேப்பர்ஸ், ஹின்டென்ட்பர்க் அறிக்கை ஆகியவற்றால் அம்பலமான இந்திய பெருமுதலாளிகள் செய்த பணமோசடிகள், கருப்புப் பணம், வெளிநாட்டில் சொத்துகள் சேர்த்தல் என்கிற மோசடிகள் அதிகரித்தன.

2014இல் மோடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுப்பதுடன் வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு விலையில் கொள்முதல் செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். மோடி அரசு சொன்னபடி எதையும் செய்யவில்லை. அதற்கு மாறாக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்தார். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். இதை எதிர்த்து தில்லியில் உழவர்கள் 379 நாள்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் 670 பேர் உயிர் இழந்தனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உழவர்கள் போராட்டம் குறித்து மோடி ஆட்சிக்குக் கடும் கண்டனம் எழுந்ததால் ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட ஏற்பு அளிக்க வேண்டும் என்று கோரி மீண்டும் உழவர்கள் போராடி வருகின்றனர். அவர்களை மோடி அரசு தில்லிக்குள் நுழையாத வாறு தடுத்து நிறுத்தி அடக்குமுறை செய்து வருகின்றது.

உழவர்களுக்கும் வேளாண் தொழிலாளர்களுக்கும் போதுமான வருமானம் இன்றி 2014 முதல் 2023 வரையில் மோடி ஆட்சியில் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 1,01,562 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2014இல் மோடி நான் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். அப்படியானால் இந்தப் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் இருபது கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலை என்னவென்றால், இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் திசம்பர் 2023 தரவுகளின்படி கடந்த அய்ம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் 8.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மோடி ஆட்சியின் பத்தாண்டு கால ஆட்சியில் பல கோடி பேர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.

2014இல் பா.ச.க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகியவற்றின் விலையைக் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்தது அப்போது கச்சா எண்ணெய் பீப்பாய் 105 டாலருக்கு விற்கப்பட்டது. ஆயினும் மன்மோகன் சிங் ஆட்சியில் சமையல் எரிவாயு உருளை ரூ.410க்கும் பெட்ரோல் ரூ.71க்கும் டீசல் ரூ.57க்கும் விற்கப்பட்டன. மோடி ஆட்சிக்கு வந்தபின் கச்சா எண்ணெய் விலை 47 டாலராகக் குறைந்த நிலையிலும் எரிபொருள்களின் விலை குறைக்கப்படவில்லை ஆயினும் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1000/­த்திற்கும் பெட்ரோல் ரூ.103/-க்கும் டீசல் ரூ.97/-க்கும் விற்கப் படுவது ஏன்? ஏற்கெனவே காங்கிரசு ஆட்சிக் காலத்தில் எரிவாயு உருளைக்கு கொடுக்கப்பட்டு வந்த மானியத்தையும் கொடுக்காமல் நிறுத்திவிட்டது மோடி அரசு. ஏழை மக்களைச் சுரண்டி கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்ப்பதுதான் பா.ச.க. வின் கொள்கையாக உள்ளது.

புழக்கத்தில் உள்ள கருப்புப் பணத்தை அழிப்பதற்காக என்று கூறி திடீரென்று 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் நாள் 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்த காரணத்தால் செலவிடுவதற்கு பணமில்லாமல் மக்கள் ஏராளமான தொல்லைக்கு ஆளானார்கள். பணம் மாற்றுவதற்காக வங்கிகளில் காத்துக் கிடந்தனர். சிறு, குறுந்தொழில்கள் அழிந்தன. பலர் மாண்டு போயினர். பெருமுதலாளிகளுக்கு ரிசர்வ் வங்கியிலிருந்து 2000 ரூபாய் புதிய தாள்கள் நேரடியாகவே வழங்கியுள்ளனர். அரசு எதிர் பார்த்த பலன் கிடைத்ததா என்றால் இல்லை என்பதுதான் பதில். ரூ.10,720 கோடி மட்டுமே வங்கிக்கு வராமல் போனத் தொகை. புதிய பணத்தாள்களை அச்சிட்ட வகையில் அரசுக்குச் செலவு 13,000 கோடி ஆகும். ஆனால் பணமதிப்பு நடவடிக்கையால் மக்கள் பெருந்துன்பங்களுக்கு உள்ளாயினர். சிறுகுறு தொழில்கள் பெருமளவில் நலிவுற்றன.

மோடி அரசு 2014இல் பதவி ஏற்ற பிறகு மாணவர்களுக்கோ, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கோ, வேளாண்மை தொழிலுக்கோ கடன் தள்ளுபடி எதையும் செய்ததில்லை. ஆனால் 2019இல் பெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு மட்டும் ஒரு இலட்சத்து நாற்பத்து அய்ந்தாயிரம் கோடி ரூபாய். 2022-2023ஆம் ஆண்டில் பெரு நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி செய்த தொகை ஒரு இலட்சத்து ஒன்பது ஆயிரம் கோடி ஆகும். இப்படி பெருந்தொகை கடன் தள்ளுபடி செய்துவிட்டு பா.ச.க. கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமும், நன்கொடையாகவும் பெருந் தொகையைப் பெற்றுக் கொள்கின்றனர். பா.ச.க. ஆட்சி முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களைக் கொழுக்க வைக்கும் ஆட்சியாகவே உள்ளது. ஏழை மக்கள் வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்கவில்லை என்று கூறி அதற்கு தண்டம் விதித்து அம்மக்களை வயிற்றில் அடித்து பணக்காரர்களை வாழவைக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை நடைமுறைப்படுத்து வதற்கான முதற்கட்டப் பணிகளான ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், சமூகநீதியை ஒழித்துக் கட்டுவதற்காக உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு; சிறுபான்மை இசுலாமிய மக்களை அச்சுறுத்துவதற்காக குடிஉரிமை திருத்தச் சட்டம் பாபர் மசூதியை இடித்து அங்கு இராமர் கோயில் கட்டி மதவெறி அரசியலை ஊக்குவிப்பது; பல்வேறு மொழி, இனங்களை அழித்து இந்துராட்டிரம் அமைப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருதல்; அதற்கு முதற்படி யாக இந்தி, சமற்கிருத மொழிகளைத் திணித்தல்; வருங் காலத்தில் மாநில கட்சிகளையும் ஒழித்து, மாநிலச் சட்ட மன்றங்களை ஒழித்து நாடாளுமன்றம் மட்டுமே என்ற நிலையை உருவாக்குதல்; அதன் முதல்கட்டமாக, காசுமீருக்கு அரசமைப்புச் சட்டத்தில் சிறப்புரிமை வழங்கப்பட்டு இருந்த பிரிவு 370ஐ நீக்கி மாநிலத் தகுதியை இழக்கச் செய்தது; இப்படி ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் பாரதிய சனதா கட்சியென்பது மற்ற தேர்தல் கட்சிகளைப் போன்ற ஒரு கட்சி அல்ல; அது ஒரு பாசிசக் கட்சி.

இந்து சன்னியாசிகள், இந்து ராஷ்ட்டிரம் அமைப்பதற்கான அரசியல் சட்டத்தை எழுதி வருகிறார்கள். 14.8.2023 அன்று 32 பக்க அரசியல் அமைப்புச் சட்டத்தை வெளியிட்டார்கள். முதன்மையாக மூன்று செய்திகளைக் கூறியுள்ளார்கள். அவர்கள் அமைக்கவுள்ள இந்து இராட்டிரத்தில்,

1.          தலைநகர் வாரணாசிக்கு மாற்றப்படும்.

2.          முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் வாக்குரிமை இல்லை.

3.          இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள திரேதா யுகம், கிருதாயுகம், துவாபர யுகம் காலத்தில் பின்பற்றப்பட்ட சட்டமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

இதன் பொருள் இன்றைக்கு உள்ள சனநாயகக் கட்ட மைப்பை அடியோடு ஒழித்துவிட்டு மீண்டும் மநுதர்ம ஆட்சிமுறைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். 1925இல் தொடங்கப்பட்டது. நூறு ஆண்டுகளில் இந்துராட்டிரம் அமைக்க வேண்டும் என்பதே அதன் கொள்கையாக அறிவித்துக் கொண்டது. அவர்களுடைய காலக்கெடு நெருங்கி விட்டது. ஆகவே வருகிற நாடாளு மன்றத் தேர்தலில் பா.ச.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அடுத்தமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

எனவே நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பார்ப்பனியப் பாரதிய சனதாக் கட்சியைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே சனநாயகத்திலும் சமத்துவத்திலும் சமூக நீதியிலும் பற்றுகொண்ட ஒவ்வொருவரின் கடமையாகும்.

- வாலாசா வல்லவன்

Pin It