I 

சே குவேரா பற்றி எழுதப்பட்ட வரலாற்று நூல்களிலேயே மிகுந்த ஆய்வின் பின்னும், அரசியல் சமநிலையுடனும் எழுதப்பட்ட நூல் நியூயார்க்கர் பத்திரிக்கையாளரான ஜோன் லீ ஆன்டர்சனின் 'சே குவெரா : ஒரு புரட்சிகர வாழ்வு (Che Guevara : A Rewvolutionary Life : 1997)' என்பதுதான் என என்னால் சந்தேகமின்றிச் சொல்ல முடியும். கியூபப் புரட்சியில் சே குவேராவின் பங்களிப்பு, பொலிவிய மலைகளில் கொல்லப்பட்ட சேவின் வாழ்காலங்கள் என இரு காலகட்டங்கள் பற்றிய அனைத்து அரசியலும் தழுவிய நூல் அது. அக்காரணத்தினாலேயே சே குவோரா பற்றிய ஐந்துமணி நேரத் திரைப்படத்தினை எடுத்த அமெரிக்க இயக்குனர் சோடர்பர்க் தனது திரைக்கதையை ஆன்டர்சன் நூலினை அடியொற்றி அமைத்துக் கொண்டார். மேலதிகமாக சே குவேராவின் கியூபப் புரட்சிகர யுத்தம் மற்றும் பொலிவியன் டைரி எனும் இரு நூல்களையும் சோடர் பர்க் தனது படத்தின் குறிப்பான காட்சியமைப்புக்களுக்காகத் தேர்ந்து கொண்டார். ஜோன் லீ ஆன்டர்சன் உலகெங்கிலும் பயணம் செய்து புரட்சிகர இயக்கங்களின் நடைமுறை குறித்துக் கட்டுரைகள் எழுதியவர். அவர் லிபியாவுக்கும் பயணம் செய்து கிளர்ச்சியாளர்களையும் சந்தித்து அந்த அனுபவங்கள் குறித்தும் ஒரு கட்டுரை ( Who are the Rebels? : Newyorker : 4 April 2011) எழுதியிருக்கிறார். 

che_350ஆன்டர்சன் என்ன சொல்கிறார்? கிளர்ச்சியாளர்களை அல்கைதாவினர் என்று சொல்வதனை அவர் மறுக்கிறார். அவர்களை வலதுசாரிகள் என்று சொல்வதனை, அடிப்படைவாதிகள் என்று சொல்வதனை அவர் மறுக்கிறார். கடாபி சொல்வதைப் போல பாலிலும் காபியிலும் போதைமருந்து கலந்து கொடுக்கப்பட்ட தள்ளாடும் இளைஞர்கள் அல்ல அவர்கள் என்கிறார். இவர்களில் பெரும்பாலுமானவர்கள் வீதியில் திரியும் கடுமனம் கொண்டவர்கள், கணனி, பொறியியல், மருத்துவம் பயிலும் பல்கலைக் கழக மாணவர்கள், இவர்களோடு வேலையற்றவர்களையும், மெக்கானிக்குகளையும், வியாபாரிகளையும், கடைக்காரர்களையும் வெளிநாட்டு எண்ணெய்க் கம்பெனிகளுக்கு வேலை செய்யும் தொழிலாளர், எண்ணெய்க்கம்பெனி பொறியிலாளர்கள், நிர்வாகிகள், கடாபியின் படையிலிருந்து வெளியேறியோர், அதனோடு தாடியோடு இருக்கிற ஒரு சில மதம் சார்ந்தவர்கள் என இவர்களது அடையாளத்தைச் சொல்கிறார் ஆன்டர்சன். 

இவர்களது அரசியல் தலைமை பற்றியும் அவர் சில கருத்துக்கள் சொல்கிறார். கடாபி வீழ்ந்தால் யார் பதவியேற்பார்கள்? இவர்களது அரசியல் என்ன? எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும். எங்களுக்கு நல்ல பள்ளிக் கூடங்கள் வேண்டும். சுதந்திர ஊடகங்கள் வேண்டும். ஊழல் ஒழிய வேண்டும். இந்த நாட்டைக் கட்டியமைக்க உதவக் கூடிய தனியார்துறை வேண்டும். எப்போது நாங்கள் விரும்பினாலும் அவர்களை வெளியேற்றுமாறான எங்களுக்கான உரிமையைக் கொண்ட ஒரு பாராளுமன்றம் எமக்கு வேண்டும். பென்காசியின் செல்வாக்கு மிக்க ஒரு வர்த்தகப் பிரமுகரான பாமி புத்தாலனயா சொல்லும் இக்கருத்து தான் சந்தித்தவர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது என்கிறார் ஆன்டர்சன். வழக்குரைஞர்களும், கல்வியாளர்களும், பிற தொழில் விற்பன்னர்களும்தான் இப்போது இடைக்கால நிர்வாகத்தை நடத்திச் செல்கிறார்கள். அடிப்படைவாதிகள் இப்போது தலைமை தாங்கவில்லை. மேற்கத்தியக் கல்வி கற்றவர்கள்தான தலைமை தாங்குகிறார்கள். மேற்கு இவர்களுக்கு உதவி செய்யவில்லையானால் வெகுமக்கள் எளிதாக அடிப்படைவாதிகளிடம் வீழந்துவிடுவார்கள். இவர்கள் சோசலிசத்தை விரும்பவில்லை. அல்லது எந்த அதிதீவிர அரசையும் விரும்பவில்லை. இவர்களுக்கு வெளிநாடுகள் பயிற்சியளிக்கவே செய்கின்றன. அவை எவை என ஆன்டர்சன் சொல்வதில்லை. தனது பயணத்தின் சாராம்சமாக ஆன்டர்சன் சொல்வது இதுதான். 

இதுவன்றி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுகிறது என்பது தொடர்பாக சர்வதேசியப் பத்திரிக்கைகள் அனைத்திலும் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டப்படும் தரவுகள்தாள் என்ன? அமெரிக்கா சவூதியை ஆயுதம் அனுப்பக் கேட்டிருக்கிறது என்பதுதான் அது. ஆயுதம் அனுப்பபப்பட்டதாக அச்செய்தி இல்லை. லிபிய ‘வியாபாரி’ லிபியக் கிளர்ச்சியாளர்களுக்கும் எகிப்துக்கும் இடையில் ஆயுதப் பரிவர்த்தனைக்கு தாம் ஏற்பாடு செய்வதாகக் கூறுகிறார். எகிப்திய அரசுப் பேச்சாளர் சகஅரபு நாட்டுக்கு எதிராகத் ‘தாம் ஆயுதம் அனுப்புவது எமது அரசுக் கொள்கை இல்லை’ என்கிறார். லிபியக் கிளர்ச்சிக்காரர்களின் பேச்சாளர் தாம் ஆயுதம் ‘கொள்முதல் செய்கிறோம். ஆனால் எந்த நாட்டிலிருந்து, எவ்வளவு தொகை என்பதனையெல்லாம் சொல்ல முடியாது' என்கிறார். கிளர்ச்சியாளர்கள் தமக்குச் ‘சந்தையில்‘ கிடைக்கிற ஆயுதங்களை, அது எந்த நாடு ஆனாலும் ‘வாங்குவார்கள்’. வேறு எந்தவிதமாக கிளர்ச்சிக்காரர்கள் நின்று பிடித்துப் போராடுவது சாத்தியம்? பிரச்சினை நாடுகளின் அரசு மட்டத்தில் ‘அதிகாரபூர்வமாக’ ஆயுதம் வழங்குவதற்கான முடிவுகளை எடுத்துச் செயல்பாடுகிறார்களா என்பதுதான். இப்போது அது ‘தெளிவாக’ இல்லை. ஆனால், இவர்கள் எதிர்காலத்தில் அதிகாரபூர்வமாக அதனைச் செய்யமாட்டார்கள் என்று சொல்வதற்கான இடமேயில்லை. அதனை அவர்கள் செய்வதற்கான சாத்தியமே இருக்கிறது. 

விவாதமே இதனை ஒட்டியதுதான்: மத்தியக் கிழக்கு எழுச்சிகளின் அங்கமே லிபியக் கிளர்ச்சி. அதனை நடத்துபவர்கள் பல கருத்துக் கொண்டவர்கள். இது அமெரிக்காவோ அல்லது எகிப்தோ தூண்டியது இல்லை. ஆனால், கிளர்ச்சி தோன்றிய பிறகு அனைத்து மத்தியக் கிழக்கு நாடுகள் போலவே, லிபியாவிலும் அமெரிக்கா தனது செல்வாக்கை நிலைநாட்டத் தலையிடுகிறது. எகிப்து, துனீசியா, பஹ்ரைன், யேமான் போன்ற நாடுகளில் அப்போதும் இப்போதும் அமெரிக்க-மேற்கத்திய செல்வாக்கு இருக்கிறது. அது வலிமையாக இல்லாத நாடுகளான லிபியா, அல்ஜீரியா, சிரியா போன்றவற்றில் அது செல்வாக்குப் பெற முயலும். இது மிகச் சாதாரணமான ஒரு பகுப்பாய்வு. இது சரியா தவறா என்பதும், இதில் என்ன நிலைபாடு எடுப்பது என்பதும் பிறதொரு கேள்வி. 

இடதுசாரிகள் முதலாகக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி: கடாபி குறித்த இவர்களது நிலைபாடு என்ன? கிளர்ச்சியாளர்களுக்கு முன்னுள்ள தேர்வுகள் எத்தகையது? அவர்களது தேர்வுகள் எத்தகையதாக இருக்க வேண்டும் என இடதுசாரிகள் கருதுகிறார்கள்? கடாபி எக்காரணம் கொண்டும் தனது அதிகாரத்தை, தனது வாரிசுகளின் அதிகாரத்தை விடப்போவது இல்லை. எதிரிகளையும் உயிரோடு விடப்போவது இல்லை. அவர்களிடம் போய் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கடமையின் படி, ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான கடாபியுடன் சேர்ந்து, ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுங்கள் எனக் கேட்கலாமா? இதற்கான பதில் மட்டுமே இந்த விவாதத்தை மேலெடுத்துச் செல்ல உதவும். 

மாறாக லிபியாவை ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்தி என்பதும், லிபியக் கிளர்ச்சியை அமெரிக்கா தூண்டியது என்பதும் முற்றிலும் அர்த்தமற்ற வாதம் என்பதுதான் எனது நிலைபாடு. இன்றைய லிபிய நிலைமையைப் பாருங்கள். லிபியக் கிளர்ச்சியாளர்களுக்கு கடாபியை எதிர்கொள்கிற ஆயுத வலிமை இல்லை. கடாபி எல்லாவிதமான எதிர்ப்பையும் ஆயுதமுனையில்தான் எதிர்கொள்வார். அவர் எந்தவிதமான அதிகார மாற்றத்திற்கோ ஜனநாயகத்திற்கோ தயாரில்லை. அவருக்கு அறிவுரை சொல்கிற, அவருக்கு நேசமான உலக அளவிலான அமெரிக்க-மேற்கத்திய எதிர்ப்புச் சக்திகளும் வலிமையாக இல்லை. எமது பகுப்பாய்வுகள் எல்லாம் இருக்கட்டும். கிளர்ச்சியாளர்கள் இந்த நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என இடதுசாரிகள் நினைக்கிறார்கள்? 

இதுவரையிலும் இவர்களை யார் யார் அங்கீகரித்திருக்கிறார்கள்? பிரான்ஸ், இத்தாலி, கத்தார் போன்ற நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இவர்களை அங்கீகரிக்கவில்லை. இந்த இரண்டு நாடுகளும் இவர்களுக்கு ஆயுதம் வழங்கவில்லை. அதற்கான பரிசீலனையில் இருக்கிறார்கள். ஈராக் போல அமெரிக்க-ஐரோப்பிய காலாட்படைகளை கிளர்ச்சியாளர்கள் வரவேற்கவில்லை. ஆனால் ஆயுதங்கள் வேணடும் எனக் கேட்கிறார்கள். அமெரிக்கா, தனது விமானத் தாக்குதலின் ஆரம்பக்கட்டத்தில் தனது உளவுத்துறையினரை அனுப்பி கிளர்ச்சியாளர்களின் பின்னணி குறித்தும் அவர்களுக்கு உதவி செய்யலாமா என்பது குறித்தும் ஆய்வுகள் செய்திருக்கிறது. லிபியாவில் வெடித்துச் சிதறிய விமானத்திலிருந்த இரண்டு அமெரிக்கர்கள் உளவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவது அல்லது அமெரிக்க பிரித்தானியக் காலாட்படைகளை லிபியாவுக்குள் அனுப்புவது எனும் இரண்டு கருத்துக்களையும் அமெரிக்க பிரித்தானிய அரசுகள் பேசி வருகின்றன. என்றாலும் இந்நாடுகளின் படையதிகாரிகள் இதனை மறுத்து வருகிறார்கள். கிளர்ச்சியாளர்கள் மீது ‘தவறுதலாக’ நடந்த விமானத் தாக்குதலில் தமது பேராளிகள் கொல்லப்பட்டதற்காகத் தமது கோபத்தை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். என்றாலும், இது அமெரிக்க-ஐரோப்பியப் படைகளுக்கு எதிரான தமது முரணாகக் கொள்ளத் தேவையில்லை என்பதனையும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அமெரிக்காவும்-பிரித்தானியாவும் கிளர்ச்சியாளர்கள் தமக்கு அடங்கி நடப்பார்களா என்ற சந்தேகம் கொண்டிருக்கிறார்கள். கிளர்ச்சியாளர்களை அங்கீகரிக்க அவர்கள் காட்டி வரும் தயக்கத்திற்கு அதுவே காரணமாக இருக்கிறது. ஆப்கானிலும் ஈராக்கிலும் தமக்குச் சாதகமான பொம்மை ஆட்சிகளை அமைத்தது போலவே லிபியாவிலும் அவர்கள் அமைக்க விரும்புவார்கள். அதற்கு ஏதுவானவர்களாக லிபியக் கிளர்ச்சிக்காரர்கள் அமைவார்களா எனும் சந்தேகமே அவர்களது முழுமையான ஆதரவு தராதற்கான காரணமாக இருக்கிறது. 

II 

மத்தியக் கிழக்குக் கிளர்ச்சிகள் துவங்கி ஏறக்குறைய மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. இந்த மூன்று மாதங்களில் என்ன நடந்திருக்கிறது? துனீசியாவிலும் எகிப்திலும் அதனது சர்வாதிகாரிகள் அகற்றப்பட்டிருக்கிறார்கள். புதிய யாப்பு, சர்வாதிகாரிகள் மீதான விசாரணை, அரசியல் ஜனநாயகம், பொருளாதார நீதி என்பவற்றுக்கான தொடர் போராட்டம் இந்த இரண்டு நாடுகளிலும் இன்னும் நடந்தபடி இருக்கின்றன. எகிப்திய ராணுவம் முதன் முதலாக தானியங்கித் துப்பாக்கிகளால் சுட்டதால் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி இரண்டு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யேமானிலும் பெஹ்ரைனிலும் சிரியாவிலும் ராணுவம் மக்களைக் கொன்றுகொண்டேயிருக்கிறது. இந்த மூன்று நாடுகளிலும் கிளர்ச்சியாளர்களது கோரிக்கை ஒன்றுதான்: சர்வாதிகாரிகள் பதவி விலக வேண்டும். பாரம்பரிய ஆட்சி முடிவுக்கு வரவேண்டும். புதிய யாப்பு வேண்டும். அரசியல் ஜனநாயகம் வேண்டும். பொருளாதார நீதி வேண்டும். லிபியக் கிளரச்சியாளர்களினதும் கோரிக்கை இதுதான். 

சர்வாதிகாரி பென் அலியை ஆதரித்து துனீசிய மக்கள் கிளர்ச்சியை இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கிளர்ச்சி எனச் சொன்ன கடாபி தனது நாட்டின் கிளரச்சியாளர்களையும் அவ்வாறே சொல்கிறார். 42 ஆண்டுகளாகத் தனதும் தனது குடும்பத்தினதும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிற கடாபி தான் எக்காரணம் கொண்டும் அதிகாரத்தை விடமுடியாது என்கிறார். எமது தந்தை தனது அதிகாரத்தை விடமாட்டார் என அவரது வாரிகளான அவரது இரு மகன்கள் சொல்கிறார்கள். கடாபியோடு, அவரைப் பதவியில் இருத்திக் கொண்டு எந்தச் சமரசமும் சாத்தியமில்லை, கடாபி அதிகாரத்திலிருந்து வெளியேற வேண்டும் எனக் கிளர்ச்சியாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்கள். இந்தக் கோரிக்கை, தமது நாடுகளின் சர்வாதிகாரிகள் அதிகாரத்தை விட்டு விலக வேண்டும் எனும் கோரிக்கை, முழு மத்தியக் கிழக்கு மக்களதும் கோரிக்கை. இதற்காக நூற்றுக்கணக்கிலானவர்களை அந்தந்த நாடுகளின் படையினர் தொடர்ந்து கொலை செய்து கொண்டிருந்தாலும் மக்கள் சளையாது போராடிக் கொண்டு இருக்கிறார்கள். 

மத்தியக் கிழக்கு மக்களின் இந்தப் பொதுக்கோரிக்கைகளை மறந்துவிட்டு, லிபியாவை மட்டும் ஏகாதிபத்திய எதிர்ப்பின் பேரில் வெட்டியெடுத்துப் பேசுவது எந்தவிதமான புரட்சிகர அறத்திலும் சேர்த்தியில்லை. ஏகாதிபத்திய எதிரப்பு எனும் கறுப்பு வெள்ளை அரசியல் எந்த விதத்தில் வங்குரோத்து வாதமாக இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும். யேமான் அமெரிக்க-மேற்கத்திய அரசுகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் கூட்டாளி அரசு. அந்த யேமான் சர்வாதிகாரியை அதிகாரத்தைவிட்டு இறங்கச் சொன்னதற்காக, இன்னொரு அமெரிக்கக் கூட்டாளியான கத்தார் நாட்டின் தூதுவரை திருப்பி அனுப்பியிருக்கிறது யேமான் அரசு. அந்நியத் தலையீட்டை நாம் அனுமதிக்க மாட்டோம் என்கிறார் யேமானின் சர்வாதிகாரி. மற்ற நாட்டிலுள்ள பயங்கரவாதிகளை அழிக்க அமெரிக்கப் படைக்குத் தளம் தருகிற யேமானின் சர்வாதிகாரி, தனது நாட்டு மக்களைக் கொல்வதைத் தனது உள்நாட்டுப் பிரச்சினை என்கிறார். இங்கே தார்மீகம் ஒரு நிலைபாடாக இருக்கிறதா? அல்லது ஏகாதிபத்திய எதிரப்பு அல்லது ஆதரவு என்பது பிரச்சினையாக இருக்கிறதா? ஆனால் அதே கத்தார் அரசு தனது சன்னி இஸ்லாம் நண்பனான பெஹ்ரைன் சர்வாதிகாரிக்கு ஆதரவாக மக்களைக் கொல்லத் தனது படைகளை அனுப்புகிறது. அதே கத்தார் அரசு கடாபிக்கு எதிராக நேட்டோ படைகளுக்கு விமானங்களைத் தந்து உதவுகிறது. 

பிறிதொருபுறம் சிரியாவைப் பாருங்கள். அந்தச் சர்வாதிகாரி பாத்தியச் சோசலிசம் பேசுகிற ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். அவர் எந்தச் சீர்திருத்தமும் சாத்தியமில்லை. எதிர்க்கட்சிகள் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறார். அவரும் படையினரை ஏவி மக்களைக் கொன்று கொண்டேயிருக்கிறார். ஏகாதிபத்திய எதிர்ப்பின் பெயரில் அவரை ஆதரிக்க முடியுமா? மத்தியக் கிழக்கு நிலைமை மிகவும் சிக்கலானது. அதனை மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சியின் தராதரத்தின் அடிப்படையில்தான் அணுகவேண்டுமேயொழிய அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு எனும் மையத்திலிருந்து அப்பிரச்சினையை அணுகமுடியாது. 

இந்த அணுகுமுறை ஒரு அரசியல் விஷச்சுழல். உலகு குறித்த அமெரிக்காவின் பார்வையை அவ்வாறே ஏற்கும் அணுகுமுறை. அரபு மக்கள் மற்றும் இஸ்லாமியர் குறித்து அமெரிக்கா என்னவிதமான கருத்துக் கொண்டிருக்கிறது? அவர்களுக்கு ஜனநாயக மரபு என்றால் என்னவென்று தெரியாது. அவர்களுக்கு ஜனநாயகத்தை நாம்தான் ஏற்றுமதி செய்ய வேண்டும். ரெஜிம் சேஞ்ஜ் அல்லது அரசு மாற்றத்தின் மூலம்தான் அது சாத்தியம் என்கிறது அமெரிக்க மனம். அந்த மக்கள் பழங்குடி இனமரபு கொண்டவர்கள், அவர்களுக்கு நிர்வாகம் நீதிப் பராமரிப்பு தெரியாது என்பதுதான் அமெரிக்காவினதும் மேற்கினதும் பார்வை. ஹமாஸையும் சகோதரத்துவ இஸ்லாமையும் ஹிஸ்புல்லாவையும் அவர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள்? அவர்கள் அடிப்படைவாதிகள் என்பதற்கு அப்பால், அவர்கள் வறிய மக்களிடம் பெற்றிருக்கிற செல்வாக்கு, அவர்கள் நடத்துகிற மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், சிவில் சமூகத்திற்கு அவர்களது பங்களிப்பு போன்றவற்றைப் பற்றியெல்லாம் அமெரிக்காவுக்கு அக்கறையில்லை. தன்னைக் காத்துக் கொள்ள இதே பார்வையைத் தான் ஆயுதமாகப் பாவிக்கிறார் கடாபி. இதைத்தான் பாவித்தார் முபாராக். இதனைத்தான் பாவித்தார் பென் அலி. தாங்கள் போய்விட்டால் அடிப்படைவாதிகள் வந்துவிடுவார்கள் என்றார்கள் அவர்கள். 

chavez_kadafi_360பழங்குடி இனமக்களை கடாபிதான் கையாள முடியம் என்கிறது லிபியாவினது இன்றைய கடாபியினது அரசியல் தலைமை. கிளர்ச்சியாளர்களோடு பேசத் தயார், ஆனால் கடாபிதான் அதிகாரத்தில் இருப்பார் எனும் அடிப்படையில் துனீசியா, துருக்கி, கிரீஸ் நாடுகளுக்குச் சென்று வந்தனர் கடாபி நிர்வாகத்தினர். அந்த மூன்று நாடுகளும் கடாபி பதவி விலக வேண்டும் எனச் சொல்லிவிட்டன. கிளர்ச்சியாளர்களும் கடாபியோடு பேச்சுவார்த்தை சாத்தியமில்லை, அவர் வெளியேறட்டும் என்கிறார்கள். பென்காசியைப் பாருங்கள். அவர்கள் தமது நிர்வாகத்திற்காக ஒரு வங்கியைத் திறந்திருக்கிறார்கள். நகரின் நிர்வாகத்திற்காக ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். பெட்ரொலியம் ஏற்றுமதியையும் துவங்கிவிட்டார்கள். அவர்கள் உதாரணமான ஒரு நிர்வாகத்தை பென்காசியில் உருவாக்கி இருக்கிறார்கள். நீதிபதிகளும் வழக்குரைஞர்களும் சிவில் சமூக மனிதர்களும்தான் அங்கு நிர்வாகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அடிப்படைவாதிகள் பென்காசியை ஆளவில்லை. 

எகிப்தில் சகோதரத்துவ இஸ்லாம் புதிய யாப்பை ஏற்றிருக்கிறது. எகிப்தியப் புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்வு சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது. முபாராக் பதவியைவிட:டு விலகியவுடன் தாஹிரர் சதுக்கத்தை வெகுமக்கள் விட்டு விலகும் முன்பாக, வெகுமக்கள் தாமாகவே முன்வந்து சதுக்கத்தைக் கூட்டி துப்புரவு செய்து, தண்ணீர் தெளித்துவிட்டுச் செல்கிறார்கள். தெருக்களை வெகுமக்கள் துப்புரவு செய்துவிட்டுச் சென்றார்கள். இந்த ஆன்மீக வலிமையை அந்த மக்களுக்குத் தந்தது யார்? அமெரிக்க-மேற்த்திய மனோபாவங்களை மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகள் வெளிப்படுத்திய ஜனநாயக்தன்மை தகர்த்தெறிந்திருக்கிறது. தாரிக் அலி இதனை வலியுறுத்திச் சொல்கிறார். இரண்டு கட்சிகளே மாறி மாறி அரசுக்கு வந்து கொண்டிருக்கிற அமெரிக்க-மேற்கத்திய போலி ஜனநாயகத்திற்கு மாறறான ஒரு போக்கினை மத்தியக் கிழக்கு மக்கள் துவங்கி வைத்திருக்கிறார்கள் என்கிறார் அவர். பல்கட்சி ஜனநாயகமரபு என்பதுதான் அது எனவும் அவர் மேலும் சொல்கிறார். 

லிபியக் கிளர்ச்சியாளர்களுக்கும் அமெரிக்க-மேற்கத்தியப் படைகளுக்கும் இருக்கும் உறவு முரண்தர்க்க அடிப்படையிலானது. அவர்கள்தான் அறிவிக்காது தரையிறங்கிய பிரித்தானிய உளவுப் படையினரைக் கைது செய்து பிற்பாடு விடுவித்தார்கள். தமது போராளிகள் கொல்லப்பட்டபோது அவர்கள்தான் அமெரிக்க விமானத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அவர்கள்தான் அந்நியத்தலையீடு வேண்டாம் என்கிறார்கள். அவர்கள்தான் தமக்கு ஆயுதம் வேண்டும் எனவும் கேட்கிறார்கள். அவர்களது முரண்களை அவர்கள் கையாளட்டும் என்று பார்ப்பதுதான் இன்றைய நிலையில் சரியான நிலைபாடாக இருக்கும். அதனை விட்டுவிட்டு அவர்களை அடிப்படைவாதிகள், நிறவாதிகள், அல்கைதாவினர் எனப்பார்ப்பது எந்தவிதத்திலும் இடதுசாரி நோக்காக ஆகாது. 

III 

பிடல் காஸ்ட்ரோ சொல்கிறார் பாருங்கள் : லிபியாவில் மையம்கொண்டுள்ள இந்த பூகம்பம் உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கப்போகிறது. எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜார்ஜ் புஷ் மீதும் நேட்டோ ராணுவக்கூட்டமைப்பு மீதும் லிபிய ஜனாதிபதி கடாபியும் அந்நாட்டின் தலைமையும் வைத்த நம்பிக்கை தவறாகிப்போனது. எனக்கு எந்த சந்தேகமுமில்லை... அரபு உலகம் முழுவதிலும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கிளர்ந்தெழுந்துள்ள புரட்சிகர போராட்ட அலையை ஒழித்துக்கட்டுவதற்கு லிபியா மீது ராணுவத்தாக்குதலை நடத்த அமெரிக்காவும் நேட்டோவும் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டன. மார்ச் 19 சனிக்கிழமை மாலையில் மிக      அற்புதமான ஆரோக்கியமான விருந்துக்குப்பின்னர் நேட்டோவின் தலைவர்கள் தங்களது படைகளுக்கு உத்தரவிட்டார்கள் லிபியாவை தாக்குங்கள் என்று! “ஒடிசி டான்” என்று இதற்குப் பெயர்வைத்திருக்கிறார்கள். தன்னை உலகின் அனைத்து அதிகாரமும் படைத்த தலைவன் என்று கருதிக்கொண்டிருக்கும் அமெரிக்கா முடிவெடுக்காமல் இது நிற்கப்போவதில்லை.. நேட்டோவின் ராணுவத்தலையீட்டை உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அந்நியர்களின் தலையீடு ஏதுமின்றி ஒரு அரசியல் தீர்வு உருவாக்கப்படவேண்டும் என்ற கருத்தை உரத்து முழங்குகிறோம். தங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள ஏகாதிபத்தியத் தாக்குதலை தேசபக்த லிபிய மக்கள் தங்களது இறுதி மூச்சுவரை எதிர்கொண்டு தாய்நாட்டைக் காப்பார்கள் என்று நம்புகிறோம் (Two Earthquakes : Fidel Castro Ruz : Granma International : 11 March 2011 : தமிழாக்கத்திற்கு நன்றி - இரண்டு பூகம்பங்கள் : இளைஞர் முழக்கம் : ஏப்ரல் 2011). 

ஜோர்ஜ் புஸ்ஸை கடாபியும் அவரது தலைமையும் நம்பிக் கெட்டது என்கிறார் பிடல். ஏன் கடாபி ஜோர்ஜ் புஸ்ஸை நம்பினார்? அப்படி என்றால் அதனது நடைமுறை அர்த்தம் என்ன? புஸ்ஸின் பயங்கரவாத எதிர்ப்பின் கூட்டாளி கடாபி என்று அர்த்தம். இதில் என்ன ஏகாதிபத்திய எதிர்ப்பு இருக்கிறது? பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானிய எண்ணெய்க் கம்பெனிகளுக்கு நாட்டின் எண்ணெய்வளங்களை விற்றார் கடாபி. இதில் என்ன ஏகாதிபத்திய எதிர்ப்பு இருக்கிறது? தன்னுடைய 42 ஆண்டுகால சர்வாதிகாரத்தையும், தனது குடும்பத்தின் அதிகாரத்தையும் காத்துக்கொண்டதைத் தவிர என்ன முற்போக்குத் தன்மை கடாபியின் நடவடிக்கையில் இருக்கிறது? கடாபி தன்னைக் காத்துக் கொள்ள எதுவும் செய்யலாம், ஆனால் அவரது ஒடுக்குமுறைக்கும் கொலைகளுக்கும் விமானத் தாக்குதலுக்கும் உள்ளாகிற கிளர்ச்சியாளர்கள் கடாபியைப் போல அமெரிக்காவையும் மேற்கையும் பாவிக்கக் கூடாதா? ஐக்கியநாடுகள் சபையினை அணுகக் கூடாதா? 

அரபு உலகம் முழுவதிலும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கிளர்ந்தெழுந்துள்ள புரட்சிகர போராட்ட அலையை ஒழித்துக்கட்டுவதற்கு லிபியா மீது ராணுவத்தாக்குதலை நடத்த அமெரிக்காவும் நேட்டோவும் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டன என்கிறார் காஸ்ட்ரோ. இதில் பெரிதாக முரண்பட அவசியமில்லை. மத்தியக் கிழக்கின் எழுச்சிகளை அவதானிக்கிற எவரும், அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தம்மை அம்மக்களின் காவலர்களாக, நண்பர்களாக நிரூபித்துக்கொள்ளத்தான் இதனைப் பாவிக்கிறார்கள் என்பதனை எவரும் மறப்பதற்கில்லை. நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மத்தியக் கிழக்கின் எழுச்சிகள் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் விரும்பியிராத, அவர்களுக்குச் சவாலாக எழுந்த, எழுந்திருக்கிற ஒரு நிகழ்வுப் போக்கு. ஆரம்பத்தில் அதற்கு எதிரான நிலைபாட்டையே அவர்கள் எடுத்தார்கள். பென் அலியையும் முபாராக்கையும், ஏன் கடாபியையம் கூட (இத்தாலிய அரசு கடாபியை முழுமையாக ஆதரித்தது) அவர்கள் காப்பாற்றவே முனனந்தார்கள். ஆனால் வெகுமக்களின் எழுச்சி அவர்களது எதிர்பார்ப்புக்களைத் தாண்டிச் சென்றது.

மத்தியக் கிழக்கு மக்களை இதுவரை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரிகளின் மீதான பயம் என்பது அம்மக்களை விட்டு முற்றிலும் விலகிப்போனதை அவர்கள் கண்டார்கள். இது ஒரு மிகப்பெரும் அரசியல் பாய்ச்சல். சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக இருப்பது அம்மக்களுக்கு எதிராகச் செல்வது என்பதனை அவர்கள் உணர்ந்தார்கள். அது தமக்கு எதிராகவும் திரும்பும் என்பதனை அவர்கள் கண்டார்கள். ஏற்கனவே ஈராக் ஆக்கிரமிப்பில் அதனை அவர்கள் அனுபவித்திருந்தார்கள். இந்தமுறை இதனை வேறு முறையில் கையாள முடிவு செய்தார்கள். விளைவாகவே மக்கள் எழுச்சிகளின் ஆதரவாளர்களாக அவர்கள் வேஷம் தரித்தார்கள். இதுதான் இன்றைய சர்வதேசிய அரசியல். இதுதான் இன்று ரஸ்யா, சீனா, இந்தியா, கியூபா போன்ற நாடுகளினதும் அரசியல். அனைவருடையதும் தந்திரோபாய அரசியல்தான். இவர்களுக்கிடையிலான முரண்களைத் தமது நலன்களுக்கு உகந்தவிதமாக எப்படிப் பாவிப்பது என்பதில்தான் இன்று ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களது அரசியலின் தீர்க்கதரிசனம் இருக்கிறது. கிழக்குத் தீமோர் இதற்கான மிகச்சிறந்த உதாரணம். தமக்கு முன்பாக வேறு தெரிவுகள் விட்டுவைக்கப்படாத நிலைமையில் இதனைத்தான் லிபியாவின் கிளர்ச்சியாளர்களும் மேற்கொள்கிறார்கள். 

லிபியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அந்நியர்களின் தலையீடு ஏதுமின்றி ஒரு அரசியல் தீர்வு உருவாக்கப்படவேண்டும் என்ற கருத்தை உரத்து முழங்குகிறோம். தங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள ஏகாதிபத்தியத் தாக்குதலை தேசபக்த லிபிய மக்கள் தங்களது இறுதி மூச்சுவரை எதிர்கொண்டு தாய்நாட்டைக் காப்பார்கள் என்று நம்புகிறோம் என்கிறார் காஸ்ட்ரோ. இது மத்தியக் கிழக்கு யதாரத்தைத்தைக் கணக்கில் கொள்ளாத முற்றிலுமான கனவு. லிபியாவில் ஏற்கனவே கனிசமான அந்நியத் தலையீடு இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாகவே கடாபி அதனை வரவழைத்துத்தான் இருக்கிறார். இன்று லிபியாவில் ஏற்பட்டிருப்பது அந்நிய ஆக்கிரமிப்பு இல்லை. நிலைமை வியட்நாம் போன்றதோ அல்லது ஈராக் போன்றதோ இல்லை. இது சர்வதேசியச் சட்டங்களின் அடிப்படையிலான, ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானத்தின் அடிப்படையிலான தலையீடு. இந்தத் தலையீட்டைத் தமது ஆதிக்க நோக்கங்களுக்கு நேட்டோ நாடுகள் பயன்படுத்துவதான நிலைமை எப்போதும் திறந்த நிலையில் இருக்கிறது. இந்தத் தலையீடு கடாபியின் கொலைகளைக் கட்டுப்படுத்துவது என்பதற்கு அப்பால் செல்வதைத்தான் எவரும் எதிர்க்க வேண்டும். கடாபியை எப்படிப் பதவியிலிருந்து அகற்றுவது என்பதனைக் கிளர்ச்சியாளர்களின் முடிவுப்படியே விட்டுவிட வேண்டும். இதனை அமெரிக்க- மேற்கத்திய அரசுகள் அவர்கள்மீது சுமத்தக் கூடாது. இதுவே இன்று எழுப்பப்பட வேண்டிய கோரிக்கையாக இருக்கும். 

அமெரிக்காவிடம் அல்லது மேற்கத்திய நாடுகளிடம் ஆயுதம் கேட்பதும் கேட்காததும் கிளர்ச்சியாளர்களின் விருப்பத்தையும், விருப்பமின்மையையும் பொறுத்தே அமையும். இதில் எந்தவிதமான பிறரது ஆலோசனைகளுக்கும் ஏதும் அர்த்தமில்லை. அது பிடல் காஸ்ட்ரோவினது அபிப்பிராயத்துக்கும் பொருந்தும். கடாபியினது கொலைகளைத் தடுத்து நிறுத்த முனையாதவர்கள், கிளர்ச்சியாளர்களது தேர்வுகளை மட்டுப்படுத்த நினைப்பது என்னவகையிலான நிலைபாடு? ஓரு புறம் ஒடுக்குமுறையாளனான, தனது சொந்த மக்களைக் கொல்கிற கடாபி. பிறிதொருபுறம் அவரை அதிகாரத்திலிருந்து அகற்றுவதில் முனைப்பாக இருக்கும் கிளர்ச்சியாளர்கள். இதில் சமரசம் என்பதற்கான சாத்தியம் இருப்பதற்கான வாய்ப்பேயில்லாத சூழலில், ஏகாதிபத்தியத் தாக்குதலை தேசபக்த லிபிய மக்கள் தங்களது இறுதி மூச்சுவரை எதிர்கொண்டு தாய்நாட்டைக் காப்பார்கள் என்று நம்புகிறோம் என்று பிடல் காஸ்ட்ரோ எழுதுவது முற்றிலும் கற்பனாவாதம் அன்றி வேறில்லை. தமிழக வைதீக மார்க்சியர்கள் இந்தக் கற்பனாவாதத்திலிருந்து வெளியே வராத வரை, அவர்கள் இலங்கையில் மகிந்த ராஜபக்சே அரச ஆதரவைத்தான் நடைமுறையில் கொண்டிருக்கிறார்கள் என்கிற அவப்பெயரிலிருந்தும் அவர்கள் மீளப் போவது இல்லை.

- யமுனா ராஜேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)