அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தமிழகத்தினை ஆளும் வாய்ப்பினைப் பெறப்போவது எந்தக் ‘கூட்டணி’ என்பதை நிர்ணயம் செய்யும் தேர்தல் இது.

மீண்டும் ஒரு தடவை தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் வாய்ப்பினைத் தமிழக வாக்காளர்கள் பெறுகிறார்கள்! இதில் அவர்கள் அளிக்கின்ற தீர்ப்பின் பலன்களை அடுத்த தேர்தல்வரை அனுபவிக்கப் போவது அவர்கள்தாம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டு செயல்படுவதன் வழி, தாமும் நாடும் வளர அவர்கள் ஆற்றும் பணி முக்கியமானது.

மக்கள் தங்களுக்கான ‘கடமை’யை எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க, அவர்கள் முன்னே ‘மக்கள் பிரதிநிதி’களாய்த் தொண்டாற்ற(!) முன்வந்திருக்கும் வேட்பாளர்களைப் பார்க்கும் போது சற்று திகிலாகத்தானிருக்கிறது!

தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, பா.ம.க, பா.ஜ.க - இப்படித் தேர்தல் களத்தில் நிற்கும் பிரதான கட்சிகள் யாவும் தங்கள் சார்பாக மொத்தம் 679 வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. இவர்களில் 125 பேர்மீது குற்றப்பதிவு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிலும் 66 பேர்மீது கடுமையான குற்றப்பதிவுகள் உள்ளன எனப் பட்டியல் இட்டுள்ளது தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு!

தப்பித்தவறி இந்த 125 பேரும் வெற்றி பெற்றுவிட்டார்களானால் ‘குற்றவாளிகள் கூட்டணி’ என்னும் பேரில் புதிய அரசு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

அதுதான் போகட்டும், மீதம் உள்ளவர்களில் யாரைத் தெரிவு செய்து சட்டசபைக்கு அனுப்புவது என்பதைப் பார்ப்போம்……..

இந்த 679 வேட்பாளர்களுள் 240 பேர் கோடீஸ்வரர்கள்….. இவர்களில் பலர் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் தங்கள் ‘கோடிகளை’ப் பெருக்கிக் கொண்டவர்கள் அல்லது புதிதாகக் கோடீஸ்வரர்களானவர்கள்!

கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பது தி.மு.க.வும் அதற்கு முண்டு கொடுக்கும் காங்கிரஸுமே ஆகும். திமுகவில் 66 விழுக்காட்டினரும், காங்கிரஸில் 61 விழுக்காட்டினரும் கோடீஸ்வரர்கள் என்கிறது புள்ளிவிபரம்.

அ.தி.மு.கவில் 52 விழுக்காடும், பா.ம.கவில் 41 விழுக்காடும், தே.மு.தி.க மற்றும் வி.சி.யில் தலா 33 விழுக்காடும், பி.ஜே.பி யில் 15 விழுக்காடும் கோடீஸ்வர வேட்பாளர்கள் எனவும் தெரிகிறது. இடது கம்யூனிஸ்ட்டில் எவரும் கோடீஸ்வர அந்தஸ்த்தை(?) இதுவரை எட்டவில்லை!

இத்தனை கோடீஸ்வரர்கள் இருந்தும் தேர்தல் ஆணையத்தின் ‘கிடுக்கிப் பிடியால்’ ’பணநாயகத்தின்’ செவ்வாக்கு குறிப்பிடத்தகுந்த அளவு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், பணத்துக்கு ‘விலைபோகும்’ பலர் தங்கள் வாக்குகளைத் தமக்குப் பிடித்த வேட்பாளருக்கு அளிக்கும் சுதந்திரம் கிட்டும் என நம்பலாம்.

தமிழகத்தைப் பொறுத்த மட்டில், ஆட்சி அதிகாரத்துக்காகப் போட்டியிடும் இரண்டு பெரிய கட்சிகளும் பல விடயங்களில் ஒன்றுக்கு மற்றொன்று சளைத்தவையல்ல!

என்றாலும், இவையிரண்டில் எது சிறந்தது என்பதை விடவும், எது மோசமானது எனப் பார்க்கும் நிலையிலேயே இன்றைய வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

அரசு நிறுவனங்கள், தொழிலகங்கள், நிர்வாக மையங்கள், பாடசாலைகள் போன்ற அனைத்திலும், அங்கு கடமையாற்றும் ஊழியர்களைக் குறிப்பிட்ட காலத்தின் பின் அதே துறைசார்ந்த மற்றோர் இடத்திற்கு மாற்றுவதை வழக்கமாக கொண்டிருப்பதை நாமறிவோம். இதன் பின்னணியில் புதைந்திருக்கும் ‘ரகசியம்’ யாரும் அறியாத ஒன்றல்ல. ஒரே இடத்தில் பலவருடங்களாய் நிலை கொண்டிருப்பவர்கள் தம்மைச் சுற்றிலும் ஓர் ‘பாதுகாப்பு அரணை’ அமைத்துக் கொண்டு தமது நடவடிக்கைகளைப் பிறரிடமிருந்து மறைத்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகி விடும். இதனைப் பயன்படுத்திச் சிலர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடினும் அவை வெளியுலகுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுவிடும். இதனால் நிர்வாகச் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதாலேயே இது போன்ற அரசுத் துறை மாற்றங்கள் கடைப்பிடிக்கப் படுகின்றன.

ஊழியர்கள் விடயத்தில் இத்தனை முன் எச்சரிக்கையாகச் செயல் படும் அரசுகள், தமது விடயத்தில் மட்டும் இது போன்ற மாறுதல்களுக்கு இடம் அளிப்பதில்லை என்பது வியப்புக்குரியதே!. இது எந்த வகையில் நியாயமாகும்?.

தொடர்ந்து தாமே ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அவை பல மக்கள் விரோதப் போக்குகளைக் கடைப்பிடிக்கின்றன. இலவசங்களை அறிவிப்பது, தேர்தலின் போது பணம்,பொருட்களை விநியோகிப்பது, இயலாத பட்சத்தில் மிரட்டுவது போன்றவற்றில் இவை ஈடுபடுகின்றன.

இதுபோன்ற செயல்களின் பின்னணியில் தாம் இதுவரை அனுபவித்து வந்த அதிகார சுகமும், வருவாயும் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்பதும், அவ்வாறு ஆட்சி அதிகாரம் கைநழுவும் பட்சத்தில் ஏற்கனவே தாம் செய்த முறை கேடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்னும் பயமுமே காரணமாகின்றன.

இவையன்றி, உண்மையில் மக்கள் தொண்டின் மீதுள்ள ஆர்வம் காரணமாகவே இவர்கள் இத்தனையையும் செய்கிறார்கள் என்பதை யாரும் நம்பப்போவதும் இல்லை.

உண்மையான ஜனநாயகம் பேணப்பட இது போன்ற ஆட்சி மாற்றங்கள் அவசியமானவையே. இல்லையேல், தங்கள் எண்ணப்படி ‘ஊழல்’புரியவும், புரிந்தவற்றை நிரந்தரமாக மறைத்து விடவும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அடுத்து வருபவர்கள் தமது குற்றங்களைக் கண்டுபிடித்து அதற்குரிய தண்டனைகளை அளிப்பார்கள் என்னும் பய உணர்வே எந்த ஒரு தனி மனிதனையும், குழுவையும்[கட்சி] பொது வாழ்க்கையில் நேர்மையாளர்களாக இருக்க வழிசெய்யும்.

இந்தத் தடவை தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுவதன் மூலமே, பிறழ்ந்து போயிருக்கும் நிர்வாக இயந்திரத்தினை ஓரளவுக்கேனும் சீர் செய்திட இயலும் என்பதை வாக்காளர்கள் புரிந்துகொண்டு செயல்படுவார்களாயின் அதுவே மக்களின் வெற்றியாகக் கருதப்படும்.

ஆட்சி அதிகாரம் மாறுவதன் வழியாக அனைத்தும் மாற்றம் அடைந்துவிடும் என்பதல்ல இதன் பொருள்!

ஆனால், நல்லதோர் மாறுதலுக்கான முதற்படியில் தமிழகம் அடியெடுத்து வைப்பதற்கு இம் மாற்றம் அவசியமே. மாற்றம் ஏற்படினும் ஏமாற்றம் முழுமையாய் அகல இன்னும் சில வருடங்கள் ஆகலாம். ஏழு கோடித் தமிழ் மக்களில் 234 நேர்மையாளர்கள் கிடைக்காமலா போய்விடுவார்கள்?.அதுவரை, சில ஏமாற்றங்களைச் சுமந்தாலும், முதலில் மாற்றத்தினை ஏற்படுத்த இத் தேர்தல் வழிகாட்டட்டும்.

[www.sarvachitthan.wordpress.com]

Pin It