பாரிஸ், பாக்தாக், பெய்ரூட் என ஒரு நாளில் (14-11-2015) தன் மொத்த பயங்கரவாத நடவடிக்கையால் பல நூறு பேர் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது அவர்களின் விருப்பம் இல்லாமல்.
உலகம் இன்று மும்பை தாக்குதலின் போதோ, இரட்டை கோபுர தகர்ப்பின் போதோ, செங்கன்யா குண்டு வெடிப்பின் போதோ அடையாத சோகம் பூண்டுள்ளது. ஏனெனில் இன்று சர்வதேச பயங்கரவாத இயக்கங்களே பயப்படும் அளவுக்கு மத்திய கிழக்கில் ஒரு கொலைவெறியுடைய இஸ்லாமிய தீவிரவாத இயக்கமாக மாறிவிட்டது அந்த இயக்கம்.
ஐ.நா அவைக்கு 70 ஆண்டுகள் வயதாகி விட்டது. பனிப்போர் காலகட்டத்தை கூட புத்திக்கூர்மையுடன் சமாளித்த அந்த அமைப்புக்கு இந்த இஸ்லாமிய ஸ்டேட் தீவிரவாதிகளை சமாளிக்க முடியவில்லை. வெறும் வங்கிக் கணக்கு முடக்கம், பயணம் செய்யத் தடை, பாதுகாப்பு சபையில் தீர்மானம், செல்லும் இடமெல்லாம் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என சொல்வது என ஒன்றுக்கும் உதவாத செயல்களை செய்து கொண்டிருக்கிறது.
காலம் மாறிவிட்டதை உணரவில்லை போலும் இந்த ஐ.நா. தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் நாடே இருக்க வங்கி கணக்கு முடக்கமாம், மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைகள் அத்துமீறி சத்தமில்லாமல் உள்நுழையும் அளவுக்கு பாதுகாப்பில்லாமல் இருக்க பயணம் செய்ய தடையாம். இன்னும் டிவிட்டர், பேஸ்புக் என தீவிரவாதிகள் பிராச்சாரம் செய்யும் போது ஐ.எஸ் இயக்கத்தில் சேரக்கூடாதாம்.
எவ்வளவு வேடிக்கை. அமெரிக்கா இலவசமாக மில்லியன் டாலர் கணக்கில் பணம் தருகிறது என்பதற்காக அமெரிக்காவுக்கு எதற்கெடுத்தாலும் ஆமாம் சாமி போடுவதும் என மாறிவிட்டது ஐ.நாவின் பிழைப்பு.
மத்திய கிழக்கு நாடுகளில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் செல்வ செழிப்பு உள்ளவர்கள். ஆனால் சன்னி பிரிவினர் இன்னும் பழங்குடியினர் போல வறுமையில் வாழ்ந்து வருபவர்கள். அதிகமாக பல நாடுகளில் ஷியா பிரிவைச் சார்ந்தவர்களே ஆட்சியில். இதுவே பிரச்சினைக்கு காரணமாக இருந்தது. இதில் தான் முதல் பிரச்சினை ஆரம்பமானது. அமெரிக்கா தனது நாட்டின் தேவைகளுக்குகாக பணக்கார ஷியா முஸ்லீம்களுக்கு ஆதரவு வழங்க, சன்னி பிரிவினர் புறக்கணிக்கப்பட, காழ்ப்புணர்ச்சி ஆரம்பமானது.
ஏற்கனவே மத்திய கிழக்கே தன் தீவிர விசுவாசியான இஸ்ரேல் உடன் பகை போக்கைக் கொண்டுள்ள இரான், சிரியா போன்ற நாடுகளை சமாளிக்க வழி தேடிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு இந்தப் பிரிவினை ஒரு வாய்ப்பாக அமைந்தது. ரஷ்யாவை கட்டுப்படுத்த வழி தேடிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு ரஷ்யாவின் கடற்படை தளம் சிரியாவில் இருப்பதும் சிரியா, இரான் போன்றவை ரஷ்யாவுடன் நெருங்கி உறவாடுவதும் எரிச்சலை ஏற்படுத்தியது.
இதற்கிடையே அமெரிக்காவின் சென்ட்காம்(CENTCOM)இன் பரவலைத் தடுக்கும் விதமாக ரஷ்யாவின் செல்வாக்கு உயர்ந்து வருவதும், அமெரிக்காவை கவலையடைய வைத்தது. மேலும் தென் அமெரிக்கா நாடுகள் பலவும் கம்யூனிசத்தை ஆட்சி முறையாக தேர்ந்தெடுக்க, அமெரிக்காவின் செல்வாக்கு குறைய ஆரம்பிக்க, இறுதியில் தனது உளவு அமைப்பான சி.ஐ.ஏவை பயன்படுத்தி தன்னைப் பிடிக்காத நாடுகளின் ஆட்சியைக் கவிழ்த்து, தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பொம்மை ஆட்சியை நிறுவ ஆரம்பிக்க, ஹியுகோ சாவேஸ் மரணம், அரபு வசந்தம் புரட்சிகள், கடாபி படுகொலை, எகிப்தில் ஆட்சி மாற்றம் என மத்திய கிழக்கில் பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, இறுதியில் சிரியாவில் அந்த முயற்சியை ஆரம்பிக்க, இராக்கில் அமெரிக்கப் படைகள் நிலைத்திருக்க ரகசியமாக பயிற்சியளிக்கப்பட்ட அல்-கொய்தாவின் ஒரு பிரிவாக தொடங்கப்பட்டது தான் இந்த ஐ.எஸ் அமைப்பு. இது ரகசியமாக அமெரிக்க, இஸ்ரேல் ஆதரவைப் பெறுகிறது என தாய் இயக்கமான அல்-கொய்தாவுடன் மோதல். இதுவரை பெரிய அளவில் இஸ்ரேலை தாக்காமல் இருப்பதிலிருந்து இது ஒரளவுக்கு அமெரிக்க ஆதரவைப் பெறுவதை அறியலாம்.
மேலும் இந்த அமைப்பானது அமெரிக்காவின் ஒரு அதிகாரபூர்வமற்ற கருவியாக செயல்படுவதைக் காணலாம். பிரான்ஸ் தனது சக்தி மிக்க ஆயுதங்களையும், போர்க்கப்பலையும் ரஷ்யாவுக்கு விற்பதாக இருந்தது. இதற்கு ஒரு மறைமுக மிரட்டல் விடுக்கும் விதமாகத் தான் இந்த பாரிஸ் தாக்குதல் அரங்கேறியிருக்க வேண்டும். மேலும் தன் படைகளை ஆப்பிரிக்காவில் நிலைநிறுத்த எபோலா வைரஸ்ஸைப் பரப்பி, மக்களை காப்பாற்ற என நுழைந்த படை அங்கேயே ராணுவ தளம் அமைத்து தங்கிவிட்டதும் நாம் கவனிக்க வேண்டியது.
இராக், சிரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளின் ராணுவ நடவடிக்கைகளைக் காணும் போது முறையாக பயிற்சியளிக்கப்படாமல் இந்த மாதிரியான ராணுவ யுக்திகளைக் கையாள முடியாது. அவர்களுக்கு ஸ்டிங்கர் ரக ஏவுகணைகளை ஏவத் தெரிந்திருக்கிறது. பீரங்கிகளை பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது. இத்தனையும் எப்படி சாத்தியம்? உயர் ராணுவ ஆயுதங்களை பயன்படுத்த யார் பயிற்சி அளித்தது?
இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் மூலம் சிரியாவின் ரஷ்யா ஆதரவு அல்-பசாத் ஆட்சியைத் தூக்கி எறிவது, சிரியாவில் உள்ள ரஷ்ய கடற்படை தளத்தை அழிப்பது, ஷியா முஸ்லீம்களின் ஆதரவைப் பெறுவது, இரானை தனிமைபடுத்துவது, மத்திய கிழக்கு நாடுகளில் யூத நாடான இஸ்ரேலை பலப்படுத்துவது, இராக் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது, சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல்-கொய்தாவுக்கு மாற்றாக தன் ஆதரவில் ஒரு தீவிரவாத இயக்கத்தை உருவாக்குவது என பல கனவுகள், ராஜதந்திர நடவடிக்கைகள் இந்த இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளுக்கு பின்னணியில் இருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.
சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து இருந்தது. எப்படியாவது சோவியத் ரஷ்யாவை விரட்ட வேண்டும் என்பதற்காக அங்கு போராடிக் கொண்டிருந்த உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை ஒன்றிணைத்து தாலிபான் இயக்கத்தை வளர்த்துவிட்டு, அதனுடன் இணைந்து போரிட்டு சோவியத் ரஷ்யாவை விரட்டியது என வரலாறு சொல்கிறது. உலகமெங்கும் உள்ள பல தீவிரவாதக் குழுக்களின் ஆரம்பம் அமெரிக்கா என அறியவும்.
தன் தோழமை நாடுகளையே உளவு பார்த்ததாகவும், தொலைபேசி அழைப்புக்களை ஒட்டு கேட்டதாகவும் பல ஆவணங்களை விக்கிலீக்ஸ், எட்வர்டு ஸ்நோடன் போன்றவர்கள் வெளியிட்டதும் உலகறியும். அந்த அளவுக்கு ஏகாதிபத்ய வெறிகொண்ட நாடாக அமெரிக்கா நிலவிவருகிறது.
அமெரிக்கா என்றென்றும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளது. ரஷ்யா தனது பழைய ராணுவ ஒப்பந்தங்களான வார்சா உடன்படிக்கையை கைவிட்டாலும் அமெரிக்கா இன்னும் அந்த நேட்டோ உடன்படிக்கையை கைவிட்டதாக இல்லை. சோவியத் யுனியன் சிதறலைத் தொடர்ந்து ரஷ்யா பல பாடங்களை கற்றுக்கொண்டு தனது மிகப்பெரிய உளவு அமைப்பான கே.ஜி.பி(KGB) ஆகியவற்றை கலைத்துவிட்ட பின்பும் அமெரிக்கா விடுவதாக இல்லை.
உலகில் ஏற்பட்ட பல உள்நாட்டு போர்களுக்கும், யுத்தங்களுக்கும் முக்கிய காரணம் அமெரிக்கா என்பதை யாரும் மறுக்க முடியாது. சீனா அணு ஆயுதம் வைத்திருந்தால் ஏன் அமெரிக்காவிற்கு வலிக்கிறது? இரான், சிரியா அணு ஆயுதங்களை வைத்திருந்தாலோ, அல்லது ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவிற்கு என்ன பிரச்சினை? இந்தியா-பாக்கிஸ்தான் மோதிக்கொண்டால் அமெரிக்காவிற்கு என்ன கவலை? உலகமெங்கும் தன் ராணுவத்தையும், ஆயுதங்களையும், கப்பற்படையையும் குவித்து வைக்க அமெரிக்காவிற்கு என்ன உரிமை உள்ளது?
"அதுவும் ஒரு நாடு தான்; இராக்கும் ஒரு நாடுதான். அமெரிக்கா ஒன்றும் உலகமில்லை. 196 நாடுகள் சேர்ந்ததே உலகம். அந்த அந்த நாட்டின் எல்லை, பரப்புக்கள் அவர்களுக்குரியது. மேலும் அந்த நாட்டின் இறையாண்மையை மதிக்கவேண்டும். சும்மா எல்லா நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது" போன்ற பாடங்களை அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும் .
உலகில் அதிக பகைவர்கள் உள்ள நாடு அமெரிக்கா என்றே சொல்ல வேண்டும். இரான், சிரியா, கியூபா, வெனிசுலா, பொலிவியா, சீனா, ரஷ்யா என பட்டியல் நீளுகிறது. இவை அனைத்தும் மறைமுகமாக அமெரிக்காவின் மீது பகைமை கொண்ட தேசங்களாகும். எந்த விவகாரங்களிலும் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை உடையவை. இது போதாது என அமெரிக்காவின் எண்ணெய் வள பேராசையால் பகைவர்களாக மாற்றப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தீவிரவாதக் குழுக்கள் என இந்தப் பட்டியல் நீளுகிறது.
ஒன்று மட்டும் அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படி பல தீவிரவாத இயக்கங்களை உருவாக்கி விட்டு, அதை எதிர்க்க மற்ற தீவிரவாத குழுக்களுக்கு கொம்பு சீவி விடுவதுமாக, தொடர்ந்தால் நிச்சயம் அமெரிக்கா ஒரு பல்முனை பெரிய தீவிரவாத தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். இதன் வெள்ளோட்டம் தான் பாரிஸ் தாக்குதல். கொஞ்சம் தன் நாட்டு விவகாரங்களை மட்டும் கவனித்து வந்தால் நலம். இல்லை நான் சர்வதேச போலிஸ் என பிதற்றிக்கொண்டு திரிந்தால் நிச்சயம் ஒரு பிடிபடாத திருடன் தோன்றுவான். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு. படிப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் ஏகாதிபத்ய அமெரிக்காவை.
- நேதாஜிதாசன்