உ.பி.யில் மாயாவதி - பார்ப்பன அணி ஆட்சியைப் பிடித்திருக்கலாம். ஆனால், மத்தியில் அதிகார வர்க்கத்தில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்து கிறார்கள் என்று, ‘அவுட் லுக்’கில் அனுராதா ரமணன் என்பவர் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கட்டுரை:

அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக - பார்ப்பனர்களே, இப்போதும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு பதவிகளில் செல்வாக்குள்ள அதிகாரிகளாக இருப்பவர்கள் அவர்கள் தான். பிரதமருக்கு ஆலோசனை கூறும் இடத்தில் இருப்பவர்களும் அவர்கள்தான். காலம் காலமாக அவர்களின் இந்த “பிறவி உரிமை” தொடரவே செய்கிறது.

இந்த ஆதிக்கம் - பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. படிப்பாளிகளாக பார்ப்பனர்கள் மட்டுமே இருந்தார்கள். எனவே உயர் பதவிகளில் பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டார்கள்.

மேலோட்டமாக - பார்த்தாலே பார்ப்பன அதிகாரிகளே - இப் போதும் மத்திய அரசில் - மய்யமான இடங்களைப் பிடித்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ‘ரா’ உளவுத்துறை பாதுகாப்பு மற்றும் ஆய்வுத் துறை, விவசாயம், கூட்டுறவு, பொருளாதாரம், வருவாய், சட்டம் போன்ற முக்கிய துறைகளின் பொறுப்பு - பார்ப்பனர்களிடம்தான் இருக்கிறது.

தற்போதைய மத்திய நிர்வாக அமைப்பில் - செயலாளர்கள் என்ற உயர்நிலையில் இருப்பவர்களில் 37 பேர் பார்ப்பனர்கள். 37.17 சதவீதம் பேர் பார்ப்பன அதிகாரிகள் என்று, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

அரசு நிதியுதவியுடன் செயல்படும் ஆராய்ச்சி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் பார்ப்பனர்களே!

வி.பி.சிங் - 1990களில் பிற் படுத்தப்பட்டோருக்கு கதவைத் திறந்தார். ஆனாலும், இடஒதுக்கீட்டின் கீழ், பிற்படுத்தப்பட்டோர் உயர்பதவியில் செயலாளர் என்ற நிலையை எட்டுவதற்கு இன்னும் அய்ந்தாண்டு காலம் பிடிக்கும் என்று, அதிகார வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அய்.ஏ.எஸ். தேர்வுகளில் - இப்போது பிற்படுத்தப்பட்டோர் வரத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு - அய்.ஏ.எஸ். தேர்வில் 144 பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். முதல் இடத்தைப் பெற்றவர்கூட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் தான். “2010 ஆம் ஆண்டில்தான் தற்போதுள்ள அதிகார அமைப்பில் மாற்றத்தைக் காண முடியும். அதுவரையில் பார்ப்பன கட்டுப்பாட்டில் தான் இந்திய அதிகார அமைப்பு இருக்கும்” என்கிறார் ஒரு மூத்த அதிகாரி.

Pin It