“நாங்கள் சாணக்கிய பரம்பரை”

உ.பி.யில் மனுவாதிகள் எதிர்ப்பு என்ற முழக்கத்தோடு தொடங்கப்பட்டது பகுஜன் சமாஜ் கட்சி. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினரை ஓரணியாக்கி, வெகுமக்களை அரசியல் மயமாக்கி, பார்ப்பன மனுவாத சக்திகளை அரசியலில் வீழ்த்தும் திட்டங்கள் அணுகுமுறை களோடு, பகுஜன் சமாஜ் கட்சியைத் தொடங்கினார் கன்ஷிராம். அவர் உரைக் கேட்கத் திரண்ட பெரும் கூட்டத்தில், “இங்கே யாராவது பார்ப்பனர்கள் இருந்தால் வெளியேறி விடலாம்” என்ற அறிவிப்போடு தனது உரையைத் தொடங்குவார் கன்ஷிராம். மாயாவதி உ.பி. முதலமைச்சரான பிறகு, அவர் ‘பெரியார் மேளா’வை நடத்திய போதுதான் பார்ப்பனர்களும், பா.ஜ.க.வினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதே மாயாவதி - இப்போது தனது அரசியல் பாதையைத் தலைகீழாகத் திருப்பியுள்ளார். பிற்படுத்தப்பட்டோரை எதிர்த்து பார்ப்பனர்களுடன் கைகோர்க்க முடிவு செய்தார். பகுஜன் சமாஜ் கட்சியே மாவட்டந்தோறும் பார்ப்பனர்களின் ‘மனுவாத’ மாநாட்டைக் கூட்டியது. பகுஜன் சமாஜ் கட்சியில் முன்னாள் அதிகாரியான எஸ்.சி. மிஸ்ரா என்ற பார்ப்பனருக்கு ஒரு முக்கிய பதவி தந்து, அவர் மூலம் பார்ப்பனர்களை அணி திரட்டும் திட்டங்களை வகுத்தார்.

இந்தியாவில் அதிகார வர்க்கத்தில் பார்ப்பன ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. சக்தி மிக்க நீதித்துறையும் ‘அவாள்’ பிடிக்குள்தான் சிக்கி யுள்ளது. ‘மண்டல் அலை’க்குப் பிறகு, அரசியல் அதிகாரத்தை இழந்த பார்ப்பனர்கள் - இப்போது மாயாவதியை ஏணிப்படியாக்கி, உ.பி. அரசியலில் வலிமை பெறத் துடிக்கிறார்கள். பதவிக்காக - இந்த சமூக துரோகத்தை அரங்கேற்றியிருக்கிறார் மாயாவதி. இந்த ‘எலி-தவளை’ கூட்டு, எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக் குறி ஒரு பக்கம் இருந்தாலும், பார்ப்பன வட்டாரங்கள் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன. மீண்டும் தங்கள் பக்கம் காற்று வீசத் துவக்கிவிட்டதாகவே கருதுகின்றன.

இது பற்றி - வட நாட்டிலிருந்து வெளிவரும் ஆங்கில ஏடுகள், பல முகப்புக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. அதில் ஒன்று ‘அவுட்லுக்’ ஜுன் 4, 2007-ல் அந்த ஏடு - ‘பார்ப்பனர்களின் மீள் வருகை’ (Rerurn of the Brahmin) என்ற தலைப்பில் இது குறித்து விரிவான சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அதன் உள்ளடக்கத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாசகர்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்:

‘இரு பிறப்பாளர்களுக்கு மீண்டும் ஒரு பிறப்பு’ என்ற தலைப்பில் - கட்டுரை ஒன்று ‘அவுட் லுக்’கில் இடம் பெற்றுள்ளது. ‘பல ஆண்டுகள் பதுங்கி நின்ற பிறகு பார்ப்பனர்களின் அரசியல் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. அந்தக் குரலைக் கேட்க, ஒவ்வொரு கட்சியும் ஆர்வம் காட்டுகிறது’ என்ற பீடிகையுடன் அக்கட்டுரை தொடங்குகிறது. ‘மண்டல் யுகத்தில்’ ஓரம் கட்டப்பட்ட பார்ப்பனர்கள், தங்களின் புத்திக் கூர்மைகளைப் பயன்படுத்தி, தங்களை எந்தச் சக்தியாலும் தடுத்து விட முடியாது’ என்பதை நிரூபித்துள்ளனர், என்கிறது அக்கட்டுரை.

‘சுதந்திர போராட்ட காலத்தில் - இந்து மகாசபையை உருவாக்கிய பண்டிட் மதன் மோகன் மாளவியா உவாக்கியது அகில இந்திய பார்ப்பன மகாசபா. இந்த மகாசபையின் தலைவராக இப்போது இருந்து வருபவர் மங்கேராம் சர்மா. புதுடில்லியில் வசிக்கும் இந்த பார்ப்பனர், கடந்த 20 வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து, அடுக்கடுக்காக வழக்குகளை தொடர்ந்து வருகிறார்.

காங்கிரசு, பா.ஜ.க. இரண்டு கட்சிகளுமே பார்ப்பனர்களுக்கு துரோகமிழைத்துவிட்டது என்று கூறும் இவர் மாயாவதியைப் புகழ்கிறார். தனது தலையில் சுமந்து வந்த ‘மண்டலை’ தூக்கி வீசிவிட்டார் மாயாவதி. “பிராமணர்கள்” இப்போதுதான் முதல்முறையாக, வாக்களிப்பதில் சாதுர்யத்தைக் காட்டியுள்ளனர் என்று கூறும் இவர், “எங்களை கவுரவித்ததன் வழியாக, மாயாவதி, அரசியலின் போக்கையே திசை திருப்பி விட்டார்.” மாயாவதிக்கு ஒரு உண்மை நன்றாகப் புரிந்தது. “பிராமணர்கள், தாங்களாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. ஆனாலும் அவர்களால் வெற்றி பெற முடியாவிட்டாலும், தோற்கடிக்கும் சக்தி அவர்களுக்கு உண்டு என்பதை மாயாவதி புரிந்து கொண்டார்” என்கிறார் அவர்.

‘பார்ப்பனர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல; ஆனால், தலித் மக்களுக்காகக் கட்டப்பட்ட ஒரு கட்சிக்கு, பார்ப்பனர்கள் ஆதரவு தந்து, அக்கட்சி வெற்றி பெறுவதற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியதுதான் மிக முக்கியமானது. இது, அரசியலில் ரசாயன மாற்றத்தை உருவாக்கிவிட்டது. சமூகத்துக்கு தலைமை ஏற்பதையே வழமையாகக் கொண்டிருந்த பார்ப்பனர்கள், ஒரு தலித்தைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இந்த நிகழ்வு பிற சாதியினரிடையே ஓர் தூண்டும் விசையாக செயல்பட்டுள்ளது. அதாவது பார்ப்பனர்களே ‘தலித்’ தலைவரை ஏற்கும்போது, நாம் ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு?” என்று பிறசாதிகளிடையே உளவியல் தாக்கத்தை இது உருவாக்கிவிட்டது என்கிறது, ‘அவுட்லுக்’ கட்டுரை.

ஒரு மாதத்துக்கு முன்பு வரை - மாயாவதியைப் பற்றி பார்ப்பனர்கள் சிந்திக்கக்கூட மறுத்தார்கள். ஆனால் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, கிராமத்திலிருந்து நகரம் வரை புரோகிதர்களிலிருந்து தொழிலதிபர்கள் வரை, இந்தியா முழுதும் உள்ள பார்ப்பனர்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறார்கள். லக்னோவில், வீதிகளில் பார்ப்பனர்கள் மக்களுக்கு இனிப்பு வழங்கி, “இது எங்களுடைய வெற்றியும் கூட” என்று கொண்டாடினார்கள். “நீண்ட காலத்துக்குப் பிறகு - எங்களுக்கு கவுரவம் கிடைத்துள்ளது, பகுஜன் சமாஜ் கடசியின் வெற்றியில். மீண்டும் ‘ராம ராஜ்யம்’ திரும்பியுள்ளது” என்கிறார்கள் பார்ப்பனர்கள்.

மண்டல் அலைக்குப் பிறகு - பார்ப்பனர்கள் தேர்தல் அரசியலில் ஓரம் கட்டப்பட்டு விட்டனர். இது எழுதப்படாத சட்டமாகவே இருந்தது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியோ, தனது வேட்பாளர்களாக பார்ப்பனர்களை நிறுத்தி, அதில் 51 பார்ப்பனர்களை வெற்றி பெறச் செய்ததன் மூலம், மாயாவதி, மண்டல் அலையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டார். மண்டல் அலைக்குப் பிறகு திரைமறைவு அரசியல் நடவடிக்கை களில் மட்டுமே ஈடுபட்டுவந்த பார்ப்பனர்கள், இப்போது நேரடியாகவே களத்துக்கு வந்து விட்டார்கள்.

கன்னட எழுத்தாளரான யு.ஆர். ஆனந்த மூர்த்தி, ‘சம்ஸ்கரா’, ‘கத்தாஸ்ரத்தா’ என்ற பரபரப்பான நாவல்களை எழுதியவர். சம்ஸ்கரா நாவலை 1970 இல் அவர் எழுதினார். ஓர் அர்ச்சகப் பார்ப்பனர், ‘கீழ் சாதி’ப் பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டது பற்றிய நாவல் அது. கிராமத்தில் வாழும் புரோகிதப் பார்ப்பனர்களின் அதிகாரச் செல்வாக்கை, தனது நாவலில் அவர் படம் பிடித்தார். இப்போது, தலைகீழான மாற்றங்கள் வந்துவிட்டன என்கிறார் யு.ஆர். அனந்த மூர்த்தி. ‘பார்ப்பனர்களும் - தலித்துகளும் நிலமற்ற வர்கள்; அதுவே மாயாவதி திட்டம் - வெற்றி பெறு வதற்கான காரணம்’ என்று ஒரு புதிய ‘கண்டுபிடிப்பை’ அவர் முன் வைத்துள்ளார். (நிலங்களை வைத்திருப் போரை - கட்டுப்படுத்தும் சமூக அதிகாரம் படைத்த வர்கள் பார்ப்பனர்கள் என்பதே உண்மை-ஆர்)

அரசியல் ஆய்வாளரான மகேஷ் ரங்கராஜன், தென்னாட்டு பார்ப்பனர்கள் பற்றி ஒரு கருத்தை முன் வைக்கிறார். “வரலாற்று காலத்திலிருந்து - தென்னாட்டில் பார்ப்பனர்கள்தான் அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தில் இருந்தார்கள். அதே பார்ப்பனர்கள்தான் இப்போது புதிய பொருளாதாரக் கொள்கைகள் வந்த பிறகும், முன் வரிசையில் இடம் பிடித்து, வழி நடத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

தென்னகத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையில் - என். ஆர். நாராயணமூர்த்தியைப் போன்ற “ஜாம்பவான்கள்” வந்துவிட்டார்கள். பார்ப்பனர்களிலும், ஏழைக் குடும்பங்கள் உண்டு என்பது உண்மை தான் என்றாலும், தமிழ்நாட்டிலும், மகாராஷ்டிராவிலும், பார்ப்பனத் தொழிலதிபர் பரம்பரைகள் உருவாகி விட்டன” என்கிறார் ரெங்கராஜன்.

தென்னகத்தைவிட, இந்திப் பேசும் பகுதிகளில் பார்ப் பனர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், ‘மண்டலு’க் குப் பிறகு, வடநாட்டுப் பார்ப்பனர்களுக்கு நெருக்கடி வந்துவிட்டது. அரசியலிலும் வேலை வாய்ப்புகளிலும், வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தினர், பார்ப்பனர்கள். இட ஒதுக்கீடு கொள்கை அமுலான பிறகு, அவர்களின் ஆதிக்கம் மட்டுப்படுத்தப்பட்டது. பார்ப்பன அரசியல் ‘ஜாம்ப வான்களான’ கமலாபதி திரிபாதிகளின் காலம் முடி வடைந்து, வடமாநிலங்கள் - பொருளாதார வளாச்சியில் பின் தங்கிக் கிடந்ததால் - அவை சமூகத்திலும், எதிரொலித்தன.

சந்திரபான் பிரசாத் என்ற தலித் ஆய்வாளர் - பார்ப்பனர்களுடன் ‘தலித்’ இணைய வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் ஆவார். (தமிழ்நாட்டிலும் இதே கண்ணோட்டத்தில் செயல்படும் சில தலித் “அறிவு ஜீவி”களும் இருக்கிறார்கள். எப்படியா வது அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.)

“மண்டல் அமுலாக்கத்துக்குப் பிறகு, உயர் சாதியினர் புறக்கணிக்கப்பட்டனர். அதிகாரத்துக்கு வந்த பிற்படுத்தப்பட்டவர்கள் தவறாக முறைகேடான ஆட்சி நடத்தினர். அதுவே அவர்கள் அதிகாரத்தை இழப் பதற்குக் காரணமாகிவிட்டது. இந்த நிலையில் - தலித்துகளும், பார்ப்பனர்களும், கரம் கோர்த்தது இயல்பான விளைவுதான்” என்று, இவர் தலித் - பார்ப்பனக் கூட்டணியை நியாயப்படுத்துகிறார்.

(மண்டல் சகாப்தத்துக்கு முன்பு - வடமாநிலங்களில் பார்ப்பனர்களும், உயர்சாதியினரும் மட்டுமே முதல்வராக இருந்தார்கள். அவர்கள் ஆட்சி காலத்தில் - ஏதோ மக்களுக்கான ஆட்சி நடந்ததைப் போலவும், பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துக்கு வந்த பிறகுதான் நிர்வாகமே சீர் குலைந்தது என்பது போலவும் ஒரு தோற்றத்தை உரு வாக்குகிறார் சந்திரபான் பிரசாத்.- ஆர்)

பிரபாஷ் ஜோஷி என்ற மூத்த பார்ப்பன பத்திரிகையாளர் உ.பி.யில் இந்த கூட்டணியின் வெற்றியை பிற மாநிலங்களிலும் எதிர்பார்க்க முடியாது என்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும், தலித் - பார்ப்பன உறவு வெவ்வேறாக இருக்கிறது. உ.பி.யைப் பொறுத்த வரை, பார்ப்பனர் எண்ணிக்கையில் கணிசமாக உள்ளனர். அத்துடன் மாயாவதிக்கு, தலித் சமூகத்தின் முழுமையான ஆதரவு இருந்தது. எனவே வெற்றிக்கு வாய்ப்புகள் இருந்தன. பிற மாநிலங்களில், இந்த நிலை இல்லை” என்கிறார், அவர்.

விரைவில் ம.பி. ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வரவிருக்கிறது. பார்ப்பன உறவை மாயாவதி புத்திசாலித் தனமாகக் கையாண்டால், அவர் இந்த மாநிலங்களிலும், ஒரு சக்தியாக உருவாகக் கூடும் என்கிறார், இந்தி எழுத்தாளரான ராஜேந்திர யாதவ். மாயாவதி - பார்ப்பன ஆதரவைத் தொடர வேண்டும் என்பதில் கவனமாகவே இருக்கிறார்.

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் வேண்டும் என்று மாயாவதி கூறியிருப்பதிலிருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும்.. மாயாவதியைத் தொடர்ந்து, மன்மோகன்சிங்கும், அத்வானியும், இதே கருத்தை எதிரொலிக்க வேண்டிய கட்டாயம் நிகழ்ந்துள்ளது.

வாக்கு வங்கி நோக்கத்தோடு - பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளான பா.ஜ.க., அதன் காரணமாக பார்ப்பன உயர்சாதியினரின் நம்பிக்கையை இழந்து வருகிறது. “அகில பாரத பிராமண மகாசபா”வின் தலைவராக இருப்பவர் மகேஷ்தத் சர்மா. இவர் ஆர்.எஸ்.எஸ்.சிலும் தீவிரமான ‘பிரச்சாரகர்’. ‘இடஒதுக்கீட்டை பா.ஜ.க.வும் காங்கிரசும் ஆதரித்ததன் மூலம் பெரும் பாவத்தை இழைத்து விட்டன” என்கிறார் அவர். “எங்களுடைய ஆதரவு இல்லாமல், இந்தியாவை எவராலும் ஆட்சி செய்ய முடியாது.

சாணக்கியனை மறந்து விட வேண்டாம், சந்திரகுப்த மவுரியரையே வீழ்த்தியது சாணக்கியன் மூளைதான். பா.ஜ.க.வை வளர்த்தவர்கள் நாங்கள் தான். ஆனால் இடஒதுக்கீட்டுக் கொள்கை களைத் தொடர்ந்து பா.ஜ.க. ஆதரித்தால் - தனது நிலையை மாற்றிக் கொள்ளா விட்டால் - பா.ஜ.க. மேலும் மோசமாகி விடும்” என்று எச்சரிக்கிறார், அந்த ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்.

பா.ஜ.க.விலும் - இதே சிந்தனைதான் எதிரொலிக்கிறது. உடடினயாக பா.ஜ.க. வின் தலைவராக தற்போதுள்ள ராஜ்நாத் சிங்குக்கு பதிலாக - ஒரு பார்ப்பனரைக் கொண்டு வரவேண்டும் என்று, கட்சித் தலைமை நிலையத்தில் விவாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ம.பி., குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் - பா.ஜ.க., பிற்படுத்தப்பட்டோர் ஆதரவுத் தளத்திலே தான் உயிர் பெற்று நிற்கிறது.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைமையோ பார்ப்பனர்களிடமே இருக்கிறது. இஸ்லாமியர் எதிர்ப்பு மட்டுமன்றி, பார்ப்பன உயர்சாதி ஆதிக்க நலனைப் பேண வேண்டும் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கிய குறிக்கோள். “இந்துக்கள் ஒற்றுமையைத் தானே மாயாவதி ஏற்படுத்தி இருக்கிறார்” என்று ஆர்.எஸ்.எஸ். தத்துவவாதிகள் ஒரு பக்கம் மாயாவதியைப் புகழ்கிறார்கள்.

மறுபக்கத்தில் - பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு இடஒதுக்கீடு தருவதை - ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள். இட ஒதுக்கீடு - இந்து ஒற்றுமை என்ற கோட்பாட்டுத் தளங்களில் நிற்கும் இந்த முரண்பாடு பா.ஜ.க.வில் கடும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

இந்தியா “சுதந்திரம்” பெற்றபோது - அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்றிருந்த 20 பேர்களில் 13 பேர் பார்ப்பனர்கள். கல்வியில் அவர்களுடைய ஆதிக்கமே இதற்குக் காரணம். அதே பார்ப்பனர்கள் தான் உ.பி.யில் தங்களுக்கும், அரசியல் வாயிற்கதவு திறக்கப்பட்டுவிட்டது என்று இன்று மகிழ்ச்சி அடைகிறார்கள். தலித் பார்ப்பனக் கூட்டணியால் - உ.பி.யில் பார்ப்பனர்களுக்கு, நல்ல பயன்கள் கிடைக்கக் கூடும்.

அதே நேரத்தில் எண்ணிக்கையில் பெரும் பகுதியினராக இருக்கும் பிற்படுத்தப்பட்டோரை, அரசியலில் பார்ப்பனர்கள் வீழ்த்துவது எளிதானது அல்ல; நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பார்ப்பனர்களுக்கு தேர்தல் அரசியலில் பங்கு கிடைத்திருக்கிறது; மூடப்பட்ட கதவு திறக்கப்பட்டுள்ளது என்று கூறலாமே தவிர, மற்றபடி பார்ப்பனர்களின் பழைய முழுமையான ஆதிக்கம் திரும்ப வாய்ப்பில்லை என்கிறது, ‘அவுட் லுக்’. பார்ப்பனர்களின் மகிழ்ச்சி தற்காலிகமானதா? அல்லது நீடிக்கக் கூடியதா என்பது இனிமேல்தான் தெரியும்.

Pin It