திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவில் பார்ப்பன குருக்கள் தூண்டுதலின் பேரில் வேத பாட ஆசிரியரைத் தாக்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தின்படி தமிழகத்தில் 6 கோவில்களில் பயிற்சிப் பள்ளி துவக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி கடந்த மே 11 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு வேத பாட ஆசிரியர் இல்லாததால் கோவில் பார்ப்பன குருக்கள் யாராவது பாடம் எடுக்குமாறு அறநிலையத்துறை கேட்டுக் கொண்டது. பிற சாதியினருக்கு வேத பாடம் சொல்லிக் கொடுப்பதா என்ற குறுகிய நோக்கத்துடன் யாரும் பாடம் கற்பிக்க முன் வரவில்லை.
இந்தச் சூழலில்தான் ராசிபுரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (80) வேத பாட ஆசிரியப் பணிக்கு வந்தார். அனைத்து சாதி மாணவர்களுக்கும் வேத பாடத்தைக் கற்றுக் கொடுத்தார். இது அங்குள்ள பார்ப்பன குருக்களுக்கு ஆத்திரமூட்டியது.
இந்தப் பின்னணியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி ஆசிரியர் ராமகிருஷ்ணன் அடையாளம் தெரியாத குண்டர்களால் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளானார். தாக்குதலில் நிலை குலைந்து போன 80 வயது ராமகிருஷ்ணனுக்கு இனியும் இங்கு தங்கி பாடம் சொல்லிக் கொடுத்தால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தது அந்த கும்பல்.
இதில் பலத்த காயமும், மன உளைச்சலுக்கும் ஆளான ஆசிரியர் ராமகிருஷ்ணன் வேலையை உதறிவிட்டு வீடு திரும்பினார்.
அப்பட்டமான இந்த அத்து மீறலை ஜனநாயக அமைப்புகள் அத்தனையும் கண்டித்தன. ஆசிரியரைத் தாக்கிய கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் திருவண்ணாமலையைச் சேர்ந்த மூன்று பேரைப் பிடித்தனர். காந்தி (30), கம்பிராஜா (26), விஜி (எ) பாஸ்கர் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் இவர்களை ஏவி விட்ட நபர் யார் என்ற விவரம் போலீசுக்கு கிடைத்தது.
அண்ணாமலையார் கோவில் அர்ச்சகரான பார்ப்பனர் பி.டி. ரமேஷ் தான் இத்தனை பிரச்சனைக்கும் மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்தது. 3 பேரும் அளித்த வாக்குமூலத்தில் போலீசார் இதனை உறுதி செய்து கொண்டனர். தாக்குதல் நடத்தியபோது ரமேசும் உடன் இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தற்போது பார்ப்பன அர்ச்சகர் ரமேசை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸ் இறங்கியுள்ளது.
பார்ப்பனரும் பார்ப்பனியமும்
கேள்வி : தந்தை பெரியார் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியை (பார்ப்பனர்கள்) பழித்து பேசுபவர் என்றும், அச்சாதி மக்களை அறவே இம் மண்ணிலிருந்தும் அழிக்க வேண்டும் என்ற கருத்தில் முனைப்பாக இருந்தவர் என்றும் என் நண்பர் ஒருவர் கூறினார். நான் அவ்வாறில்லை என்றும், அய்யா அவர்கள் பார்ப்பனீயத்தை மட்டும்தான் எதிர்த்தார்; பார்ப்பனர்களை அல்ல என்று கூறியும் நண்பர் அதை ஏற்க மறுக்கிறார்.
பதில்: ‘பெரியார்’ திரைப்படத்திற்கு உங்கள் நண்பரை அழைத்துச் சென்று காட்டுங்கள் - புரிந்து கொள்வார்!
- உண்மை கேள்வி-பதிலில் கி. வீரமணி
பெரியார் ‘பார்ப்பனீயத்தை’த் தான் எதிர்த்தார், பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை என்று, கி.வீரமணி கூறுகிறாரா? பார்ப்பனர் எதிர்ப்பு இல்லாமல் பார்ப்பனீயத்தை ஒழித்து விட முடியுமா, இது தான் பெரியார் கருத்தா?
அப்பா - மகன்
மகன்: தனியார் பொறியியல் கல்லூரி களில் 65 சதவீத இடங்களை அரசே எடுத்துக் கொள்ளும் - தமிழக அரசின் நியாயமான சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் முடக்கிவிட்டதே, அப்பா!
அப்பா: ஆம், மகனே! இனி தனியார் கல்லூரிகளுக்கு கடிவாளமே கிடையாது!
மகன்: தமிழ்நாட்டின் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுக்கும் அறிக்கை விடும் தி.க. தலைவர் கி.வீரமணி, அரசின் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது பற்றி வாய் திறக்காதது ஏன், அப்பா? அவரது நிறுவனமே பொறியியல் கல்லூரிகளை நடத்து வதாலா?
அப்பா: ஏன் மகனே, என்னை வம்பில் மாட்டி விடுகிறாய்?