தமிழில் வெளியாகும் எல்லா மொழிபெயர்ப்பு நூல்களும் அதனதன் தேவையை பொறுத்து தனது முக்கியத்துவத்தை எப்போதும் கொண்டிருக்கும். ஆனால் அதில் சில நூல்கள்தான் தனது முக்கியத்துவத்தையும் தாண்டி பல்வேறு மட்டங்களில் தத்துவார்த்த விவாதங்களை தூண்டுபவைகளாக இருக்கும். அந்த வகையில் தோழர் கொற்றவை அவர்கள் அருமையாக மொழிபெயர்த்துள்ள தோழர் ரங்கநாயகம்மா அவர்களின் (உண்மையிலே இந்நூல் மொழிபெயர்ப்பு போலவே தெரியவில்லை. அந்தளவிற்கு படிப்பதற்கு இலகுவாக இருக்கிறது. மேலும் இப்படிப்பட்ட நூல்களை மொழிபெயர்ப்பதற்கு ஒரு சித்தாந்த உறுதி வேண்டும். அந்த வகையில் தோழர் கொற்றவைக்கும், அதேபோல மிகக் குறைவான விலையில்தான் புத்தகம் போடவேண்டும் என்ற தோழர் ரங்கநாயகம்மா அவர்களின் கொள்கைக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்) சாதியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை! என்ற நூல் அதன் தலைப்பில் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலே மிகவும் காத்திரமான விவாதப் பொருளையும், தன்மையையும் கொண்டிருக்கிறது.

ranganayagamma 230இந்நூல் அம்பேத்கரின் சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு, பௌத்தம் மற்றும் பொருளாதார கோட்பாடு, மார்க்சியம் குறித்த அவரது வெறுப்பு நிலைப்பாடு, அரசியலமைப்பு சட்ட வரைவில் அவரது பங்கு என இவற்றில்தான் தனது ஆய்வுக் களத்தை பிரதானமாக கொண்டுள்ளது. இவை அனைத்திலும் அம்பேத்கர் முன்வைத்த முன்னுக்குப்பின் முரணான ஆய்வு முடிவுகளை, தீர்வுகளை மற்றும் அவரது தத்துவார்த்த தெளிவின்மையை அம்பேத்கரின் எழுத்துகளிலும், பேச்சுகளிலுமிருந்தே மறுக்க முடியாத ஆதாரமாக நமக்கு எடுத்துக்காட்டுகிறார் தோழர் ரங்கநாயகம்மா. இது சமூக மாற்றத்திற்காக அம்பேத்கரியத்தை உயர்த்தி பிடிக்கும் முன்னணியாளர்களுக்கு ஒருவகையான அதிர்ச்சியை கொடுக்கும் என்றாலும், செல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய சக்த்திவாய்ந்த சித்தந்தாந்தமே இவ்வுலகிற்கு தேவைப்படுகிறது. அது எந்த தத்துவமாகவும் இருக்கலாம். அவர் எந்த சித்தாந்தவாதியாகவும் இருக்கலாம். நோயை எது குணப்படுத்துகிறதோ அதுவே மருந்து. ஒரு தலைவர் சொல்லும் போதனைகளில் சரியானவற்றை ஏற்றுக்கொண்டு தவறானதை நாம் நிராகரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எதையுமே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாதுஎன்று முன்னுரையிலே தோழர் ரங்கநாயகம்மா அவர்கள் கூறுவதை நாம் பக்குவத்துடன் உள்வாங்கிக் கொண்டால் அந்த அதிர்ச்சி நமக்கு தேவையில்லாத ஓன்றாகிவிடும்.

அம்பேத்கரின் முரண்கள்

புறமணமுறை நிலவியதால் வருண அமைப்பை மேம்பட்ட ஒன்று எனவும், அதை நல்லது எனவும் கூறிய அம்பேத்கர், பின்னர் மற்றொரு சந்தர்ப்பத்தில் வருண அமைப்பில் மேல் வருணம் கீழ் வருணம் இருந்தது எனவும், அது தீயது எனவும் மாற்றிக் கூறுவதையும்; இன்னும் ஒருபடி முன்னேறி சாதி அமைப்பைவிட வருண அமைப்பு மேம்பட்டது என அம்பேத்கர் கூறியது போன்றவற்றையும் அவரது தொகுதி 7-ல் இருந்து எடுத்து நம்முன் வைத்து நூலின் ஆரம்பத்திலேயே அம்பேத்கரின் தொடர்ச்சியான குழப்பவாத, முரண்பாடான கூற்றுக்களை அக்குவேறு ஆணிவேராக அலச தொடங்குகிறார் தோழர் ரங்கநாயகம்மா.

அதனைத் தொடர்ந்து அம்பேத்கரின் முரண்பாடுகளை, தெளிவின்மையை வரிசையாக ஒன்றுவிடாமல் ஆதாரத்துடன் அடுக்கிக்கொண்டே செல்கிறார்.

சாதியின் தோற்றம் என்ற பிரச்சனையில் அம்பேத்கர் சாதி அமைப்புகளை மநுவோ, பிராமணர்களோ மக்கள் மீது சுமத்தவில்லை; அவர்களுக்கு அந்தத் துணிவில்லை; மக்களே முழு மனதுடன் தங்களுக்குள் சாதியை அறிமுகம் செய்து கொண்டார்கள் என்பது - மறுபுறம் தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாதியை தங்கள் மீதே சுமத்தும் நபர்களை மக்கள் உயிருடன் விடுவார்களா என்று அவரே கேட்பது என அம்பேத்கரின் குழப்பங்கள் மீதான தோழர் ரங்கநாயகம்மா அவர்களின் விமர்சனம் தொடர்ந்து கொண்டே செல்கிறது.

பின்னர் சூத்திர வர்ணத்தின் தோற்றம், சதி எவ்வாறு தொடங்கியது, விதவை நிலை (கூடுதல் ஆண் - கூடுதல் பெண் கோட்பாடு) என்ற கேள்விகளிலும் இதுபோன்ற அவரின் முரண்பட்ட வாதங்களை ஆதாரத்துடன் நம்முன் வைக்கிறார்.

இவை எல்லாவற்றையும் விட தீண்டாமையின் தோற்றம் என்பது அம்பேத்கரை பொறுத்தவரை மாட்டிறைச்சி உண்பது, பிராமணர்களை தலித்துகள் ஒதுக்கி வைத்தது! (ஆம். அதிசயமான தலைகீழ் கருத்து) மற்றும் பௌத்த எதிர்ப்புடன் மட்டுமே தொடர்புடையது. ஆனால் ஏன் தலித்துகள் பிராமணர்களை ஒதுக்கி வைத்தனர்? ஏன் தலித்துகள் பௌத்த மதத்திற்கு மாறினார்கள்? மற்றும் உண்மையிலே அவர்கள் மதம் மாறினார்களா? என எந்த ஒரு கேள்விக்கும் அம்பேத்கரிடம் ஆதாரம் இல்லை என்கிறார்.

ஆனால் அம்பேத்கரோ இன்னும் ஒருபடி மேலே சென்று “சண்டாளனை தொட்ட பிராமணன் உடனே குளித்துவிட்டால் தீட்டு அகன்றுவிடும்” என்பது போன்ற விவரணைகள் தீண்டாமையோடு தொடர்புடையவை அல்ல; அது வெறுமனே தூய்மைவாதம்தான் என்றும், மநுவின் காலத்தில் தீண்டாமை இல்லை என்றும் (தொகுதி14: பக்214) கூறுகிறார். ஆனால் அவரே மற்றொரு இடத்தில் “பாஹயாக்கள் என்று மநுவால் அழைக்கப்பட்டவர்கள் இந்தியாவில் தற்காலத்தில் வாழ்கின்ற தீண்டப்படாதவர்களுக்கு நிகரானவர்கள்” (தொகுதி1௦: பக்239) என்றும் சொல்கிறார்.

அதேபோல “கி.பி. 4௦௦-ஆவது ஆண்டு வாக்கில்தான் தீண்டாமை தோன்றியிருக்க வேண்டும் என்று ஓரளவு நம்பிக்கையோடு நாம் கூறமுடியும்” (தொகுதி14: பக்226-227). என்கிறார். பின்னர் தன்னுடைய புத்தரும் அவரது தம்மமும் என்ற நூலில் புத்தரை உயர்த்திக் காட்டுவதற்காக கிறிஸ்துவத்திற்கு முன்னர், புத்தர் காலத்திலே தீண்டாமை நிலவியது என்று எழுதுகிறார்.

இதனைத் தொடர்ந்து தீண்டாமை அதிக கொடுமையா? இல்லை அடிமைத்தனம் அதிக கொடுமையா என்ற விவாதத்திலும், சாஸ்திரங்களில் தீண்டாமை இல்லை என அவரே சொல்வத்திலும், பிறகு அதே சாஸ்திரத்தை கைவிடாத சீர்திருத்தவாதிகளிடம் அவர் குறை காண்பதிலும் அம்பேத்கரின் முரண்பாடுகள் உச்ச நிலையை நோக்கி செல்வதை நம்முன் தோலுரித்துக் காட்டி, ஒவ்வொரு இடத்திலும் “நான் ஒரு புதிய கோட்பாட்டை கண்டுபிடித்திருக்கிறேன்” என்று கூறும் அம்பேத்கரின் இதுபோன்ற ஆய்வுகளை படிக்கும் வாசகர்கள் என்ன மாதிரியான முடிவுக்கு வர முடியும்? என்கிறார் தோழர் ரங்கநாயகம்மா.

மேலும் கலியுகம் எப்போது தொடங்கியது? புனிதப் பூணுல் எத்தனை அடுக்குகளைக் கொண்டது? பிரம்மனும், பிரஜாபதியும் ஒருவர்தானா? என்பது போன்ற பிதற்றல்கள் மீதான விவாதம் எந்த ஒரு வாழ்வியல் பிரச்சனையையும் தீர்க்க உதவாதபோது, அதுபோன்ற புராண இலக்கியங்களிலும், உபநயனம் போன்ற மதவாத சடங்குகளிலும் அம்பேத்கர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாக செலவழித்தது ஏன் என்று தெரியவில்லை என்கிறார் தோழர் ரங்கநாயகம்மா.

ஆனால் ஆழமான ஆய்வு தேவைப்பட்ட சாதி ஒழிப்பு என்ற முக்கியமான கட்டுரையில் எந்தவித தீர்வும் இல்லாமல் அந்த கட்டுரை இறுதியில் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை (1.பிராமணர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறக்கின்றனர். 2. எந்த சாதியையும் மாற்றத்தை விரும்ம்பவில்லை.) என்ற கட்டத்தை நோக்கி நகர்வது ஏன்? என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான எந்த வேலைத் திட்டத்தையும் அந்த கட்டுரை ஏன் முன் வைக்கவில்லை என்றும் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே செல்கிறார் தோழர் ரங்கநாயகம்மா.

அம்பேத்கரின் பௌத்தத்தையும் விடவில்லை

நூலின் ஒரு பெரும்பகுதி பௌத்தத்தின் மீது காட்டமான விமர்சனத்தை முன்வைக்கிறது. புத்தரின் பிறப்பிலிருந்து அவர் இறப்பு வரையிலுமான சம்பவங்களை ஒரு முட்டாள்த்தனமான மதநூலைப்போலவும், அவ்வளவு மூட நம்பிக்கையுடனும், எந்தவித ஆதாரமும் இல்லாமல் அம்பேத்கர் “புத்தரும் அவரது தம்மமும்” என்ற நூலில் விவரிப்பதை கடுமையான முறையில் தோழர் ரங்கநாயகம்மா விமர்சிக்கிறார். அதற்கு அவர் காட்டும் ஆதாரங்களை நாம் இங்கு விவரிப்போமேயானால் அதுவே ஒரு சிறிய நூலாகிவிடும்.

இந்த நூலிலும் அம்பேத்கரின் முரண்பாடுகள் தொடர்கின்றன. புத்தரைப் போற்றுகின்ற ஒரே காரணத்திற்காகவே ரிஷிகளை, முனிவர்களை, பிராமணர்களை எந்தவித கூச்சமும்மில்லாமல் அம்பேத்கர் ஆதரிக்கிறார். அவர்களது சமூக மேலாதிக்கத்தை கண்மூடித்தனமாக போற்றுகிறார். அவர் ஒரு பருக்கை சோற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தார் என்று சொல்லும் அம்பேத்கர்தான், இன்னொரு இடத்தில் நாற்பது நாட்களுக்கு புத்தர் உணவை சேர்த்து வைத்தார் என்றும் சொல்கிறார். அமர்ந்த நிலையிலே நகர்ந்து செல்வார், அவர் உடம்பில் உள்ள அழுக்குகள் தானாகவே உதிர்ந்துவிடும், அவர் தனது நாக்கால் காதை, நாக்கை தொட்டார் (இந்த இடத்தில் தோழர் ரங்கநாயகம்மா அவர்கள் புத்தர் மனிதரா இல்லை நரி போன்ற விலங்கா என கேட்டுவிட்டு, இவ்வளவு செய்தும் புத்தருக்கு ஞானத்தை தவிர முதுகு அரிப்பு மட்டும்தான் வந்தது என தைரியமாக கிண்டலடிக்கிறார்). மாயாஜாலங்கள் செய்தார் என்று பைத்திகார கதைகளை சொல்லிகொண்டே செல்கிறார்.

இந்த முரண்பாடுகள் முற்றிப்போய் அம்பேத்கரே குழம்பி புத்தர் உலக நன்மைக்காக துறவறம் மேற்கொள்ளவில்லை, தனது குடும்பச் சொத்துகளை சாக்கிய சங்கம் பறிமுதல் செய்யாமல் இருப்பதற்கு கெஞ்சி கூத்தாடி இறுதியில் சந்நியாசியாக போக முடிவு செய்தார் என புத்தர் துறவறம் பூண்டதற்கு அம்பேத்கர் புதிய காரணத்தையும் கண்டுபிடித்து விடுகிறார்.

ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டால் எப்படி ஞானம் வரும் என்ற பகுத்தறிவுப் பூர்வமான கேள்வியைக்கூட எழுப்பாமல் அதை மிகப் பெருமையாக விவரிக்கிறார் அம்பேத்கர். மேலும் விவசாயிகளை கசக்கி பிழிந்த, பல கொலைகள் புரிந்த மற்றும் 5௦௦ மனைவிகளை கொண்ட மகத நாட்டு அரசர் பிம்ம்பிசாரரை எந்தவித கேள்வியும் கேட்காமல் தன்னுடைய சீடராக புத்தர் ஏற்றுகொள்கிறார். சீடரான உடன் அரசன் எதையும் கைவிடவில்லை. தான் முன்பு செய்ததையே வழக்கமாக செய்கிறார். அதிகளவு நன்கொடை மட்டும் பௌத்த சங்கத்திற்கு தொடர்ந்து வழங்குகிறார் (தேவையும் அதுதானே).

இந்த கேடுகெட்ட அரசன் பிம்பிசாரனின் தலைநகரான ராஜகிரகம் என்ற பெயரைத்தான் அம்பேத்கர் தனது மும்பை வீட்டிற்கு வைத்துக்கொண்டார். இதைத்தான் 5௦௦ மனைவிகளை வைத்திருந்த அரசன் மீது அம்பேத்கருக்கு எவ்வளவு மரியாதை என தோழர் ரங்கநாயகம்மா காட்டமாக கேட்கிறார்.

அதுமட்டுமல்ல, பிம்பிசாரனை கொன்ற அவரது மகனான அஜாதசத்ருவையும் தனது சீடனாக புத்தர் ஏற்றுக்கொள்கிறார். போர் எதற்கும் தீர்வல்ல மக்கள் போரிடக்கூடாது என்று ஓரிடத்திலும், படைவீரர்கள் அரசரின் ஆணையை ஏற்று போரிடவேண்டும் என்று மற்றொரு இடத்திலும் புத்தரே சொல்கிறார். இதுதான் புத்தரின் வாழ்க்கை நெறி! அன்பு! எல்லாம்.

இதைத்தான் தோழர் ரங்கநாயகம்மா அம்பேத்கர் மீதான விமர்சனமாகவும் வைக்கிறார். அதாவது ஒவ்வொரு மனிதரும் தமக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டும் என்று எல்லா இடங்களிலும் வாதிடும் அம்பேத்கர், போரிட மறுத்து வேலையை துறந்த வீரர்களின் சுதந்திரத்தை மறுத்த புத்தரின் செயலை பெருமையோடு விவரிப்பது ஏன்? என கேட்கிறார். 

இப்படிகனைக்கும் கழுதை மேயும் கழுதையை கெடுத்தது போல புத்தர் தான் உழைக்காமல் உண்டது மட்டுமில்லாமல் உழைப்பவர்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு பிச்சை எடுக்க அழைத்துச்சென்ற, சொத்து சேர்த்த, அரசர்களுக்கு அதரவான, உழைப்பை மறுத்த பௌத்ததைதான் அம்பேத்கர் “புத்தரா? காரல் மார்க்ஸா?” என்ற கட்டுரையில் கம்யூனிசத்தைவிட மேம்பட்ட ஒன்றாக அம்பேத்கர் முன்வைக்கிறார். பொதுவுடமை தத்துவத்தை பன்றிகளின் தத்துவம் என்கிறார். (தொகுதி 7 பக் 433).

சுரண்டலை ஆதரிக்கும் அம்பேத்கரின் தீர்வுகள்

அடுத்ததாக, நிலவுகின்ற முதலாளித்துவ சமூக அமைப்பில் சிறு சிறு மாற்றங்களை செய்து, தொழிலாளி - முதலாளி சமரசமாக இருந்தாலே போதும் பொருளாதார சுரண்டல் முழுவதுமாக அகன்று விடும் என்ற அம்பேத்கரின் அபத்தமான பொருளாதார கருத்துகளை நோக்கி நூல் செல்கிறது. நிலங்கள் நிலப்பிரபுக்களின் சொத்து, மூலதனம் முதலாளிகளின் சொத்து என்ற அளவில்தான் அவருக்கு பொருளாதாரம் குறித்த பார்வை இருக்கிறது என்கிறார் தோழர் ரங்கநாயகம்மா. இறுதியில் உழைக்காமல் வரும் வருமானத்தை காக்கும் அவரது பொருளாதார திட்டத்திற்கும், காந்திய பொருளாதாரத்திற்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை நிறுவுகிறார். இதைதான் மார்க்ஸை காட்டிலும் அம்பேத்கர் சிறந்த பொருளாதார மேதை என இங்குள்ள தலித்திய சிந்தனையாளர்கள் சொல்கின்றனர்.

ஏனெனில் அம்பேத்கர் ஆளும்வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார். “காங்கிரசும், காந்தியும் தீண்டப்படாதோருக்குச் செய்தது என்ன?” என்று நூல் எழுதிய அம்பேத்கர்தான்.. எம்.சி.ராஜா “நாம் இந்துக்களோடு ஒன்றாக இருப்போம்” என்று கூறி காங்கிரஸ் அதரவாளரானபோது அவரை “வெறும் கையாள்” என்று கூறிய அதே அம்பேத்கர்தான், பின்னராக “நான் எனது முழக்கங்களை ஒரு புறம் ஒதுக்கி வைக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு காங்கிரசுக்கு உற்ற தோழன் ஆனார். காங்கிரசும் அவருக்காகவே பம்பாயில் இருந்த ஒரு காங்கிரசு உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்து அம்பேத்கரை அந்த இடத்திற்கு தேர்ந்தெடுத்து, அரசியலமைப்பை உருவாக்க பணிக்கப்பட்டார். விஷயம் என்னவென்றல், இந்த இருவடைய, இந்த இரண்டு கோஷங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? ஒருவர் செய்தால் துரோகம் இன்னொருவர் செய்தால் தியாகமா? என்று கேட்கிறார் தோழர் ரங்கநாயகம்மா.

மேலும் அரசியல் நிர்ணய சபையில் கிட்டத்தட்ட 1௦௦ உறுப்பினர்கள் நிலப்பிரபுகள். அவர்கள் தேர்தலே இல்லாமல் அதனுள் நுழைந்தவர்கள். அது மக்களுக்கான சபையாகக்கூட இருக்கவில்லை. எங்கு தன் வாயைத் திறந்தாலும் ஜனநாயகம் ஜனநாயகம் என பேசிய அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபையின் ஜனநாயகமின்மை குறித்து வாயே திறக்கவில்லை; மட்டுமில்லாமல் இப்படிப்பட்ட ஒழுங்கின்மையை பாராட்டியும், அரசியல் நிர்ணய சபைக்கு அவர் நன்றிகளை தெரிவித்துக்கொண்ட கதையும் இதில் உண்டு. அதேபோல அரசியலமைப்பு முழுவதையுமே பல்வேறு நாடுகளிலிருந்து காப்பி எடுக்கும் வேலைதான் அம்பேத்கருக்கு ஒதுக்கப்பட்டது என்றும், தனது முழக்கங்களை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வைத்துக்கொண்டு அவரால் எப்படி தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை காக்க அரசியல் நிர்ணய சபையில் நுழைந்ததாக கூற முடிந்தது? என்றும் கேள்வி கேட்கிறார் நூலாசிரியர்.

பின்னர் இதுபோன்ற அரசியலமைப்பை எதிர்த்த கம்யூனிஸ்டுகளை அம்பேத்கர் வசைபாடவும் செய்கிறார். அதேபோல அரசியலைமைப்பு சட்டத்திற்கு எதிரான விமர்சனத்தை கடுமையாக எதிர்த்தார். மேலும் அரசியலைமைப்பு சட்டத்தின் வழிமுறைகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்றும், இரத்தம் சிந்தும் புரட்சிகர வழிமுறைகளை கைவிட வேண்டும் என்றார்.

இறுதியில் அரசியலைமைப்பு சட்டத்தை எரிக்கும் முதல்நபர் நானே என்றார் அம்பேத்கர். இப்படி தொடர்ந்து தலைகீழாக மாற்றி மாற்றி பேசுவதை வழக்கமாக கொண்ட அம்பேத்கரை விவரித்துகொண்டே செல்லும் தோழர் ரங்கநாயகம்மா ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து போய் “அம்பேத்கருக்கு இருப்பது நாக்குதானா அல்லது படகின் துடுப்பா?” என்று கேட்டுவிடுகிறார். இவையெல்லாவற்றையும் படிக்கும் எவருக்கும் அந்த கேள்வி சரியானதாகத்தான் இருக்கும்.

இதுபோன்ற அம்பேத்கரின் நிலைபாடுகளினால்தான் அவர் அங்கம் வகித்த நேரு அரசாங்கம் தெலுங்கானாவில் மக்கள் புரட்சியை அடக்குவதற்காக 5௦,௦௦௦ இராணுவ வீரர்களை அனுப்பி பல்வேறு அட்டுழியங்களை நிகழ்த்தியபோது எந்தவித சலனமுமில்லாமல் அம்பேத்கர் ஜனநாயகத்தை (!) காப்பாற்றிக்கொண்டு, தனது அமைச்சர் பதவியையும் கைவிடாமல் அதே அரசாங்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். பின்னர் தான் கேட்ட அமைச்சகம் தனக்கு வழங்கப்படாதபோது, அரசின் அந்நிய கொள்கை பிடிக்கவில்லை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி ராஜினாமா செய்தார்.

ambedkar communismஇதற்கு நடுவில் அம்பேத்கருக்கு முன்னரே, அதாவது அவர் அரசியலுக்கு நுழைவதற்கு முன்பே 1917-இல் சர்.நாராயண் சந்தவார்க்கர் தலைமையில் இடஒதுக்கீட்டுக்கான முயற்சி தொடங்கப்பட்டதையும் விரிவாகச் சொல்லி செல்கிறார் தோழர் ரங்கநாயகம்மா. இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விசயமும் இருக்கிறது அதாவது அம்பேத்கர் அரசியலுக்கு வந்த பின்னர்தான் சாதி ஒழிப்பு கருத்துகளே தோன்றின என்பது பொய்யாகும்.

இவை அனைத்தையும் நமக்கு விவரித்துவிட்டு, இறுதியில் அம்பேத்கர் யார்? என்ற கேள்வியை கேட்டு அவரின் முரண்பாடுகளை, தர்க்கப்பூர்வமற்ற ஆய்வு முடிவுகளை, மூட நம்பிக்கைகளை வரிசையாக சொல்லிச் சென்று, அவர் பாதை தவறிப்போன ஒரு அறிவுஜீவி என்கிறார்.

ஆம். அவர் பழமைவாதிகளைப்போல மூட நம்பிக்கைகளை, சுரண்டல் சமூகத்தை ஆதரித்தார். அகமண முறையால் சாதிகள் தோன்றின. தங்களது ஆதிக்கத்தையும், சிறப்புரிமைகளையும் தக்கவைத்துக்கொள்ள பிராமணர்கள் அகமண முறையை கடைபிடித்தனர் என்றார். அப்படி என்றால் சாதிகள் இல்லாத காலத்திலும் பிராமணர்கள் ஆதிக்கத்திலிருந்தது எப்படி? என்ற கேள்விக்கு அவரிடம் பதில்லில்லை. பின்னர் கடந்தகால சூத்திரர்களுக்கும், நிகழ்கால சூத்திரர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றார். இதுபோன்ற எல்லா ஆய்வுகளையும் அனுமானத்திலேதான் செய்தார். ஆனால் அவற்றை உறுதியான முடிவு என்றும், தான்தான் அதை கண்டுபிடித்தேன் எனவும் ஒவ்வொரு இடத்திலும் பெருமையாகச் சொல்லிக்கொண்டார். மகாபாரதத்தை எழுதியவரை ஒரு இடத்தில் உண்மை விரும்பி என்கிறார். மற்றோர் இடத்தில் நேர்மையற்றவர் என்கிறார். தீண்டாமையை விட அடிமைத்தனம் மேலானது என்று தொடர்ந்து வாதிட்டு வந்து, இறுதியில் அப்படி நினைப்பது அவசர முடிவு என்கிறார். சாதி ஒழிப்பு என தலைப்பு வைத்துக்கொண்டு அது சாத்தியமில்லை என்பதுபோல முடிக்கிறார்.

இப்படி, அம்பேத்கரின் முரண்பாடுகளையும், இயலாமைகளையும் நமக்கு விளக்கிவிட்டு இறுதியில், உலகில் நாம் ஏதேனும் ஆசிரியர், தத்துவவாதி அல்லது சித்தாந்தவாதிகளை அரிய நேரும்போது உற்பத்தி உறவுகள், சொத்துடைமை, செல்வம் மற்றும் ஏழ்மை குறித்தெல்லாம் அவர்களின் போதனைகள் என்ன கூறுகின்றன என்பதையும், அவர்கள் எந்த மக்களின் பக்கம் நிற்கின்றனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ளாவிட்டால் சமூகத்தில் நாம் எதையும் புரிந்துகொள்ள முடியாது என்று உறுதியுடன் கூறுகிறார் தோழர் ரங்கநாயகம்மா.

சமுதாயத்தில் தொடக்கத்திலே எவ்வாறு சாதி தோன்றியிருக்க முடியும்? அதை அழிக்க கலப்பு மணம் மட்டுமே எப்படி தீர்வாகும்? என்ற கேள்வியையும் நம்முன் வைத்து, சாதி ஒழிப்பு குறித்து மார்சியம் என்ன போதிக்கிறது என்று பல்வேறு தர்க்கத்துடன் நூலை நிறைவு செய்கிறார் தோழர் ரங்கநாயகம்மா.

ரங்கநாயகம்மா முன்வைக்காத கருத்துகளும், சொல்லப்படாத விசயங்களும்

அவை நிறையவே இருக்கின்றன. அவை அனைத்தும் அவரை ஒரு பழுத்த முதலாளித்துவ தேசியவாதியாகவும், சீர்திருத்தவாதியாகவுமே, மூட நம்பிக்கைகளை பின்பற்றுபவராகவுமே காட்டுகிறது. அவருக்கு அரசியல் இயக்கத்தைவிட சீர்திருத்தங்களே முக்கியமாக இருந்ததை காட்டுகிறது. அம்பேத்கரின் கோட்பாடு பழமைவாதம் பேசும் முதளித்துவ ஜனநாயகம்தான் என்பதை அவருடைய “என் வாழ்க்கை தத்துவம்” என்ற அவரது உரையே நிரூபிக்கும்.

சமீபத்தில் காலச்சுவடு பதிப்பகம் நாம்தேவ் நிம்கடே( அம்பேத்கரோடு நெருங்கி பழகியவர்) எழுதிய புலியின் நிழலில் (இதுவும் மொழிபெயர்ப்பு புத்தகம்தான்) என்ற நூலை படிக்க நேரிட்டது. அம்பேத்கர் குறித்து உயர்வாக சில அவர் விசயங்களை கூறுகிறார். ஆனால் அது நமக்கு கொஞ்சம்கூட பெருமையாகப் படவில்லை. உரையாடல் இதுதான்:

“பாபா சாகப் நீங்கள் பெரும்பாலும் தனிமையில் இருக்கிறீர்கள். உங்களுக்கோ நிறைய எதிரிகள். அவர்களை குறித்து பயமில்லையா?” என்று நாம்தேவ் கேள்வி கேட்கிறார். அதற்கு அம்பேத்கர் இவ்வாறு பதில் கூறுகிறார்: எனக்கு இரண்டு மூடநம்பிக்கைகள் உண்டு. எனது பெற்றோரின் ஆவிகள் என்னை சுற்றியே இருக்கின்றன. அது எந்த ஆபத்தும் இல்லாமல் என்னை காப்பாற்றிவிடும். அத்துடன் புத்தர் பெருமான் என்னை காப்பாற்றுவார். புத்தரை நான் கடவுளாகவே நம்புகிறேன். நம்பிக்கை இல்லாதவன் இருட்டில்தான் திரிய வேண்டும்.” (பக்-236)

மற்றொரு இடத்தில், அம்பேத்கர் சமஸ்கிருதத்தை “ஓர் அறிவு சுரங்கம். இலக்கிய பெட்டகம். பிராமணர்கள் இதை சரியாக கற்பதில்லை. மற்றவர்களையும் கற்க விடுவதில்லை” என்று கூறியதை குறிப்பிடுகிறார். (பக்-22௦)

நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை மீதான நடந்த விவாதத்தில் அம்பேத்கர் பேசியதை எடுத்து காட்டுகிறார். அதில் அம்பேத்கர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “உங்கள் அறிவுக்காக ஒரு விஷயத்தை சொல்கிறேன். நான் படித்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை நீங்கள் படித்ததைவிட, உங்கள் முன்னோர்கள் படித்ததை விட, ஏன் இனிவரப்போகும் எதிர்கால சந்ததியினர் படிக்கப்போவதை விட மிகமிக அதிகம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” (பக்-221) நிம்கடே பெருமையாகச் சொல்லும் இந்த தற்பெருமையைத்தான் தோழர் ரங்கநாயகம்மா தனது நூல் முழுவதும் சாடுகிறார். அம்பேத்கரை பொறுத்தவரை அவர் எப்போதுமே இப்படித்தான் பேசுகிறார்.

“எல்லா கம்யூனிஸ்டு தலைவர்களும் சேர்ந்து எத்தனை புத்தகங்கள் படித்திருப்பார்களோ அவற்றைவிட நான் அதிகம் படித்திருக்கிறேன்” (தொகுதி 37 பக் 221).

அந்த நூலில் இதுபோன்ற அம்பேத்கர் புகழ் தொடர்ந்து பாடப்படுகிறது: “தங்க எழுத்துகள் பதிந்த அழகிய குரான் சுருள் ஒன்றை ஒரு முஸ்லிம் பண்ணையார் வீட்டில் பார்த்தாராம். அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்ற ஆர்வத்தில் அதற்கு எட்டாயிரம் ரூபாய் (அந்த காலத்தில்) கொடுத்து வாங்கிவிட்டாராம்” (பக்-225)

“தொப்பி சரியில்லை என்று காரை தம் வீட்டிற்கு திருப்பி செலுத்தச் சொன்னாராம்” (பக்-22௦)

அம்பேத்கர் தனது தொப்பி சரியில்லை என்று காரைத் திருப்பச் சொன்ன காலகட்டத்தில்தான், இந்தியாவிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை ஆங்கில ஏகாதிபத்தியம் தங்களது சொகுசுக்காகவும், கொள்ளைக்காகவும் இங்கே வால்பாறை, ஆனைமலை முதல் இலங்கை, பர்மா, மலேசியா என ஒவ்வொரு நாடுகளையும் நோக்கி தாங்கொண்ணாத துயரங்களையும், நோய்களையும், மரணத்தையும் அனுபவிக்க தேயிலை தோட்டங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. தமிழகத்தில் சாணிப்பால், சவுக்கடி தொடர்ந்து கொண்டிருந்தது. அம்பேத்கர் அங்கம் வகித்த அரசாங்கம் தெலுங்கானாவில் சொந்த தாயின் முன்பு மகனையும், தந்தையின் முன்பு மகளையும் நிர்வாணமாக்கி காட்டாட்சி நடத்திக் கொண்டிருந்தது. ஆனால் இதை எதையும் குறித்து வாய் திறக்காமல் மத்திய அரசு ஆட்சி முறையை கொடுத்ததற்காகவும், மக்களிடையே ஒற்றுமையை எற்படுத்தியதற்காகவும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு நன்றி கூறிக் கொண்டும், தான் எப்பொழுதும் பிரிட்டிஷ் அரசிற்கு விசுவாசமாக நடப்பேன் என உறுதி கூறிக்கொண்டும் இருந்தார் அம்பேத்கர். இவை எல்லாவற்றுக்கும் எதிராக உயிரைகொடுத்துபோராடிக்கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் மீது “அவர்கள் தன்னுடைய பரம்பரை எதிரி என்றும், கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் தொழிலாளர்களை தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக சுரண்டுபவர்கள் என்றும்” கூறி வெறுப்பைக் கொட்டிக்கொண்டிருந்தார். (தொகுதி 37 பக் 212)

மேலும் “காரல் மார்க்ஸை படித்த பிறகு சமய மறுப்பாளர் குழு ஓன்று உருவாயிற்று என்பதை நான் அறிவேன். சமயம், மதம் பயனற்றது, வீணானது என்பது அவர்களது கருத்து. அவர்கள் மதத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை, அதனை மதிப்பதில்லை. காலையில் அவர்கள் காலையுணவு உண்பார்கள். அதில் ரொட்டி, பாலேடு, வெண்ணை, கோழி இறைச்சி இருக்கும்; பின்னர் மதியம் முழு சாப்பாடு, ஆழ்ந்த தூக்கம்: அடுத்து திரைப்படங்கள் பார்த்தல்; இத்யாதி. இதுதான் அவர்களது வாழ்க்கை கோட்பாடு. இவைதான் நடைமுறைத் திட்டம்.” (தொகுதி 37 பக் 686). என்று எழுதிக்கொண்டிருந்தார். வாழ்நாளின் கடைசியில் அவரின் கம்யூனிச வெறுப்பு இன்னும் உச்ச நிலைக்கு சென்றது.

“உலகை அழிக்கும், குறிப்பாக அதன் தென்கிழக்கு ஆசியப் பகுதியை பாதிக்கும் மூன்றாவது அம்சம் ஒன்றும் உள்ளது. காரல் மார்க்சும், அவர் ஈன்றெடுத்த கம்யூனிசமும்தான் அந்த மூன்றாவது அம்சம்.... ரஷ்ய பாணி கம்யூனிசம் இரத்த களரியான ஒரு புரட்சியின் மூலம் அதனை சாதிக்க முயல்கிறது..” (தொகுதி 37 பக் 657). என்றும்,

“என்னை பொறுத்தவரை நாடாளுமன்ற முறை அரசாங்கத்திற்கு நான் பெரும் முக்கியத்துவம் தருகிறேன்.... நாடாளுமன்ற ஆட்சி முறையில் வாரிசு ஆட்சிக்கு இடமில்லை... (சே! இப்போதிருக்கும் வாரிசுகள் என்ன நினைப்பார்கள்?) இந்நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போனால் நான் குறிப்பிட்ட காரணங்களினால்தான் அது தோற்றுப்போகும். அதன் விளைவாக கலகம், அராஜகம், கம்யூனிசம் தோன்றும்... ரஷ்யா நமது நாட்டில் மேலாண்மை பெற்று தனிமனித சுத்தந்திரத்தை நசுக்கி, நமது சுத்தந்திரத்தையும் ஒழித்துவிடும். (தொகுதி 37 பக் 531-539). என்றும்..

“...உண்மையைக் கூறுவதானால் இது பாதி உலகை தன் பிடியில் வைத்துக் கொண்டுள்ள விஷயம். பௌத்த நாடுகளில் ஏராளமான மாணவர்கள் இதன் பிடியில் சிக்கி உள்ளனர். இந்த விசயத்தின் பிந்திய அம்சத்தை நான் மிகுந்த கவலையோடு நோக்குகிறேன்.” என்று ஆரம்பித்து “கம்யூனிஸ்டுகளின் வெற்றிகளை கண்டு மயங்கி விடாதீர்கள்” என்பது வரை அவ்வளவும் கம்யூனிச வெறுப்பு. -(புத்தரா அல்லது காரல் மார்க்ஸா (தொகுதி 37 பக் 7௦5-717) என்றும்.. கம்யூனிச நாடுகளில் ஒழுக்கநெறி என்பதே இல்லை எனவும், அது எதிர்படும் எல்லாவற்றையும் எரித்து அழித்துவிடும் என்றும் கடுமையாக பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார்.

கம்யூனிசத்தை கடுமையாக எதிர்த்தவரின் இந்துத்துவ கரிசனை

அவரின் எழுத்துகள் பேச்சுகள் அனைத்தும் இந்துத்துவ இயக்கங்கள் அவரை பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும், மிகவும் பயனுள்ளவையாகவும் இருப்பதற்கு ஏற்ற வகையில் உதவி செய்து கொண்டிருந்தது. இந்துமதம் அழிய வேண்டும் என்று அவர் பேசியதை விட இந்துமதத்தில் சீர்திருத்தங்கள் வேண்டும் என அவர் பேசியது, ஒன்றுபட்ட இந்தியாவை கோரியது, மொழிவாரி மாநிலங்களை எதிர்த்தது, இந்திமொழியை மட்டுமே ஆட்சி மொழியாக்க வேண்டும் என சொன்னது, அதுவும் தேவநாகரி வடிவில்தான் இருக்க வேண்டும் என்றது, சமஸ்கிருத்தத்தை அலுவலக மொழியாக்க சம்மதம் தெரிவித்து அந்த மொழியை ஆதரித்து உயர்வாக பேசியது, முஸ்லிம்களுக்கு எதிராக பேசியது, காஷ்மீர் விவகாரம், பொது சிவில் சட்டம் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

ambedkar sanskrit

சுவாமி வேதாநந்தா தீர்த்தா எழுதிய ராஷ்ட்ர ரக்க்ஷ கி வைதிக் சதன் நூலுக்கு எழுதிய முன்னுரையில் கொஞ்சம் இந்தியாவின் பண்டைய வேத காலத்தை புகழ்ந்து விட்டு “உலகம் மாயை என்ற தத்துவம் ஒரு புதிய கண்டுபிடிப்பு என்பது நமது அறிவுக்கு ஒரு பெரிய பங்களிப்பாகும். இந்த கண்ணோட்டத்திலிருந்துதான் நான் இந்த புத்தகத்தை பரிந்துரை செய்கிறேன்.” என்கிறார். (தொகுதி 36 பக்123) “பண்டைய காலத்தில் பிரெஞ்சு புரட்சியே ஒரு சுண்டைக்காய் என்று சொல்லுமளவுக்கு இந்தியா ஒரு புரட்சி பூமியாக விளங்கியது.” என்று அதிகபட்ச பெருமையோடும், கொஞ்சம் கூட வரலாற்றுப் பார்வையின்றியும் மாயாவாதம் பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் புரிந்து வைத்திருந்த இந்திய ஆளும் வர்க்கமும், போர்டு பவுண்டசனும் தாங்கள் பெற்றெடுத்த தலித்தியம் என்ற பிள்ளையை வளர்த்தெடுக்க அம்பேத்கரை பயன்படுத்திக்கொண்டது. இதன் பின்னர்தான், குறிப்பாகச் சொன்னால் 9௦களின் ஆரம்பத்தில், தலித்துகளின் சிக்கலை அவர்கள்தான் பேச வேண்டும், பெண்கள் பிரச்சனை பொதுப் பிரச்சனை அல்ல, அதற்கு மார்க்சியம் தீர்வை முன் வைக்கவில்லை என்பது போன்ற தொடர் தத்துவார்த்த, அரசியல் தாக்குதலை பின்நவீனத்துவவாதிகள் மற்றும் என்.ஜீ.வோக்கள் மூலமாக புரட்சிகர முற்போக்கு இயக்கங்களை உடைப்பதற்கு வீரியமாக முன்னெடுக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் அம்பேத்கர் மட்டுமே காரணம் இல்லையென்றாலும் அவரின் கோட்பாடுகளும், கருத்துகளும் அதில் முக்கிய இடத்தை வகித்தது. இதன் வலைப்பின்னல் விரிவானது; ஆழமானது. எனவே இதை குறித்து நாம் இன்னொரு சந்தர்பத்தில் விரிவாக பேசுவோம். இப்போது நாம் மீண்டும் அம்பேத்கரிடம் செல்லலாம்.

1946 டிசம்பர் 17 அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் இப்படி பேசுகிறார்: “காலமும் சூழ்நிலையும் நன்கு அமையுமாயின் இந்த நாடு ஒரே நாடாக பரிணமிப்பதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது... நம்மிடையே எத்தனை எத்தனையோ ஜாதிகளும் சமயக் கோட்பாடுகளும் இருப்பினும் நாம் ஐக்கியப்பட்ட மக்களாக ஆவோம் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. இந்தியாவை பிரிக்க வேண்டுமென்ற முஸ்லிம் லீகின் கிளர்ச்சி இருந்தபோதிலும், ஒருநாள் முஸ்லீம்களிடையிலே போதுமான தெளிவு ஏற்பட்டு ஐக்கியப்பட்ட இந்தியாவே தங்களுக்கும் நல்லது என்று அவர்கள் சிந்திக்க துவங்குவர் என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் மயக்கமும் இல்லை.” (தொகுதி 26 பக் 13)

“இந்துக்களை விட தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் ஒன்றும் பெரிய நண்பர்களல்ல என்பது எனது கருத்து.” (தொகுதி 35 பக் 468) “அரிஜன வகுப்பினரின் நியாயமான கோரிக்கைகளை இந்து மகாசபா ஏற்றுக்கொள்வதாக இருந்தால் தானும் இந்து மகாசபாவில் சேர்ந்து கொள்ள தயார்” (தொகுதி 37 பக் 392). இன்னொரு இடத்தில் அந்த அமைப்பை விமர்சிக்கிறார். இப்படி தொடர்ச்சியாக மாறி மாறி பேசுவது மட்டும்தான் அம்பேத்கரிடம் மாறாத ஒன்றாக இருக்கிறது.

“இந்திய இராணுவத்தில் முஸ்லீம்களின் செல்வாக்கை குறைத்து, விரோத சக்திகளை வெளியேற்றிவிட வேண்டும். நமது பூமியை நாம் காப்பாற்றுவோம். இந்தியாவில் முஸ்லிம் சாம்ராஜ்யத்தை பாகிஸ்தான் விரிவுபடுத்தி விடும் என்று தவறான கருத்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்துக்கள் அதை மண்ணை கவ்வச் செய்வார்கள். சாதி இந்துக்களிடம் நான் சண்டையிடுகிறேன் என்பது உண்மைதான். ஆனால் நமது பூமியைக் காப்பற்றுவதற்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன் என்று உங்கள் முன் சத்தியம் செய்கிறேன்” (தொகுதி 37 பக் 294). “பாகிஸ்தானில் அவர்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) இந்தியாவிற்கு வர அனுமதிக்கபடுவதில்லை. அவர்கள் பலவந்தமாக இஸ்லாமிற்கு மாற்றப்படுகிறார்கள். ஹைதராபாத்தில் அங்குள்ள முஸ்லிம் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கத்தோடு அவர்கள் பலவந்தமாக முஸ்லீம்களாக மாற்றப்படுகிறார்கள்.” (தொகுதி 35 பக் 473) தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களில் (474, 475)

“முஸ்லீம்கள் நண்பர்களல்ல” என்ற தலைப்பில் அம்பேத்கர் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியர் போலவே அவ்வளவு முஸ்லீம் விரோத்ததுடன் பேசிச் செல்கிறார். இந்துமதமும் புத்தமதமும் ஒன்றுதான். அது முஸ்லிம்கள் படையெடுப்பால் தனது பரிசுத்த தன்மையை இழந்துவிட்டது என அந்த தொகுதி முழுவதும் இப்படியேதான் போகிறது. இந்து மதம் போல கொடுமையான மதத்தில் இருந்து எவ்வளவு தீண்டாமை கொடுமையை அனுபவித்தாலும் இஸ்லாமிற்கு மட்டும் மாறிவிடக்கூடாது என்ற அம்பேத்கரின் இதுபோன்ற பேச்சுகளைத்தான் காவிக்கூட்டங்கள் இன்று பயன்படுத்திக்கொள்கின்றன. இதற்கிடையில் ஆங்காங்கே மத பிடிப்பு பற்றிய கருத்துகள் நிரம்பி வழிகின்றன.

“என்னிடமிருக்கும் நல்ல பண்புகளுக்கும், என் கல்வியால் சமுதாயத்திற்கு கிடைத்த நல்ல பயன்களுக்கும் என் மத உணர்வுகளே காரணம்” (தொகுதி 37 பக் 248). “சோசலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் சொல்வதுபோல மதமே தேவையில்லை என்று நான் நம்பவில்லை. மனிதனுக்கு மதம் கண்டிப்பாக தேவை. நீதி, தர்ம சாசஸ்திரங்களைப்போல மனித குலத்தை எந்த அரசாங்கமும் பாதுகாக்கவோ, ஒழுங்குபடுத்தவோ இயலாது” (தொகுதி 37 பக் 5௦8).  “மறுபிறப்பில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. மறுபிறப்பு என்பது தடுக்க முடியாது என்பதை விஞ்ஞானிகளுக்கு என்னால் நிரூபித்துக் காட்ட முடியும்” (தொகுதி 37 பக் 656). “சடங்குகள் என்பவை மதத்தின் ஒரு முக்கி அங்கம். பகுத்தறிவுவாதிகள் என்னதான் சொன்னபோதிலும் மதத்தில் சடங்குகள் முக்கிய அங்கம்.” (தொகுதி 37 பக் 5௦9).

அம்பேத்கர், பிற்போக்கான பௌத்தத்தை புனிதமானது என்றும்; மதமாற்றத்தை புரட்சிகரமானது என்றும்; மார்சியத்தை பிற்போக்கானது என்றும்; வர்கப்போரட்டத்தை தவறானது என்றும் கூறி, மக்களையும் மோசமான வழிமுறைகளுக்கும், தவறான பாதைக்கும் அழைத்து சென்று, உண்மையில் சமூக விடுதலைக்கு அம்பேத்கர் துரோகம்தான் இழைத்துள்ளார். சாதிய ஒடுக்குமுறையை வெறுமனே பார்ப்பனியம் என்று வரையறுத்தால் மட்டும் போதாது. சாதியை ஒழிக்க வேண்டுமானால் அதனால் பலன்பெறும் உற்பத்தி முறையை முதலில் ஒழிக்க வேண்டும். அதற்கு புரட்சிகர அமைப்பும், அதனை தொடர்ந்த உழைக்கும் மக்கள் சர்வாதிகாரமும் வேண்டும்என்பதுதான் கம்யூனிசம்.

எல்லா ஒடுக்குமுறைகளும் அதிகாரத்தின் மூலமே செலுத்தப்படுகிறது. நிலவுகிற ஒடுக்குமுறையை ஒழிப்பத்தற்கு அதிகாரம் உழைக்கும் மக்கள் கைகளில் வரவேண்டும். புரட்சிகர அதிகார மாற்றம் இல்லாமல், புரட்சிகர சமூக மாற்றம் சாத்தியம் இல்லையென்பதே மார்க்சியம்.

சாதிய ஒடுக்குமுறைகள் அனைத்தும் சாதிய அதிகாரத்தின் மூலமே நிகழ்த்தப்படுகின்றன. ஆகவே சாதியை ஒழிப்பதற்கு சாதியாதிக்கவாதிகளின் அதிகாரம் ஒழிக்கப்பட்டு, சாதி ஒழிப்பாளர்களிடம் அதிகாரம் வார வேண்டும்.

அனால் அம்பேத்கரோ தலைகீழாக சாதி ஒழிப்பை முன்வைக்கிறார். அதிகார மாற்றமில்லாத, கற்பனாவாத சாதி ஒழிப்பை கூறுகிறார். இது இன்று சாதியவாதம் பேசிக்கொண்டு பிழைப்பு நடத்தும் தலித் இயக்கங்களைத்தான் தோற்றுவித்துள்ளது.

அம்பேத்கர் அதிகாரவர்க்கத்தின் இராணுவம், போலிசு, நாடாளுமன்றம், நீதித்துறை மற்றும் அதன் அமைப்புமுறை குறித்து எந்த கேள்வியையும் உறுதியாக எழுப்பாதவர். அவரின் கோட்பாடு சாதிய கட்டுமானத்தை உடைப்பதில் தோற்றுவிட்டது. அவர் சமூகத்தின் பிரதானமான ஒடுக்குமுறை சக்திகளை கணிக்க தவறிவிட்டார். சாதியை, அதற்கான பொருளாதார அடித்தளத்தை அழிக்கும் திட்டம் எதுவும் அம்பேத்கரியத்தில் இல்லை.

இன்னும் கொஞ்சம் ஆழமாக பேசினால் அம்பேத்கரின் கருத்துகள் ஆளும் வர்க்கத்திற்கு பாதுகாப்பான ஓன்று. அது சட்டவாதத்தில் மூழ்கிப்போனது. கம்யூனிச கருத்துகளை ஒழித்துகட்ட அதை நாடு முழுவதும் கொண்டு சேர்த்ததும் அதே ஆளும் வர்க்கம்தான். என்.ஜீ.வோக்கள், வெளிநாட்டு பவுண்டேஷன்கள், பின்நவீனத்துவவாதிகள் முதல் காவிகூட்டங்கள் வரை அம்பேத்கரை பயன்படுத்துவதற்கு உண்டான அத்தனை கூறுகளும் அவரிடமே இருகின்றன.

இதுபோல இன்னும் நாம் சாதி ஒழிப்பில் முன்னேறிச் செல்ல தோழர் ரங்கநாயகம்மாவின் நூல் மட்டுமே போதாது என்றாலும், அதற்கான தொடர் முன்னெடுப்புகளுக்கு இந்நூல் மிகவும் உற்ற துணையாக இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் இருவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.

- பாவெல் சக்தி

Pin It