வெளியேற்றப்பட்ட மொழியா தமிழ்?

மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமன்றிப் பிற மாநிலங்கள், தமிழீழம், மலையகம், சிங்கை, நிப்பான், தென்கொரியா, பிரான்சு, செருமனி உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் தமிழ் அறிஞர், பாவலர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அகழ்வாய்வறிஞர், பதிப்பாளர் பங்கேற்கின்றனர் என்றும் தமிழின் தொன்மை, தமிழிலக்கியம், மொழியியல், தமிழ்ப் பண்பாடு, தொல்லியல், கல்வெட்டியல், மாந்தவியல், குமுகவியல், மொழிபெயர்ப்பியல் எனப் பல்வேறு தலைப்புகளில் ஏறத்தாழ 200 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட விருக்கின்றன என்றும் மாநாட்டைத் தொடங்கிவைக்க முதலமைச்சரைஅழைத்திருப்பதாகவும் அவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்றும் சூன் 2ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் மன்ற ஆள்கையர் தெரிவித்ததாக மறுநாள் நாளேட்டில் செய்தி வந்திருந்தது. ஆனால், அவர் வரவில்லை.

மாநாட்டிற்கு வந்திருந்தோரில் சிலர் “இந்த இடத்தில் வைத்தால் எப்படி முதலமைச்சரால் வர முடியும்? வேறு ஓர் அரங்கில் நகரத்தின் நடுப்பகுதியில் ஏந்து உள்ள பகுதியில் வைத்திருந்தால் வந்திருப்பார்” என்று கூற, ஒருவர், “முதலமைச்சர் அப்படி எல்லாம் பார்ப்பவரில்லை; குடிசைப் பகுதிகளுக்கு எல்லாம் சென்று வருபவர்; இங்கு எப்படி வராமல் போய்விடுவார்?” என்று மறுத்துக் கூறிக் கொண்டிருந்தார். “2010இல் உலகத்தமிழ் மாநாட்டைத் தமிழ்நாட்டில் நடத்தத் தமிழ்நாட்டரசு சார்பில் கேட்ட பொழுது, “குறுகிய கால இடைவெளியில் நடத்த இயலாது; மாநாடு தொடர்பான ஏற்பாடுகளுக்கும் ஆய்வுக் கட்டுரைகளை உலக முழுவதிலுமுள்ள தமிழறிஞரிடமிருந்து பெறவும் போதிய கால இடைவெளி வேண்டுமென்றும் அப்போதைய உலகத் தமிழாராய்ச்சி மன்றத் தலைவராக இருந்த நிப்பான் நாட்டுத் தமிழறிஞர் நொபொரு கரசிமா தெரிவித்தார். ஆனால் அப்பொழுதைய முதலமைச்சர் மாநாட்டினை உடனடியாக நடத்த வேண்டிய சூழலில் தான் இருப்பதாகக் கருதினார். அதனால் மன்றத்தின் துணைத் தலைவர் இருவர் மாநாடு நடத்தத் தமிழ்நாட்டரசுக்கு இசைவளித்தனர். ஆனாலும் அரசு அதனை ஏற்காமல் செம்மொழி மாநாடு என்று அறிவித்து நடத்தியது. ஆகவேதான் இப்பொழுதைய மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கவில்லை” என்றும் சிலர் பேசிக் கொண்டனர்.

மாநாட்டின் தொடக்க விழா நடந்துகொண்டிருந்தபோது, ‘சிறுபான்மையினர், வெளிநாடுவாழ் தமிழர் நலன், அகதி, வெளியேற்றப்பட்டோர் துறைகள்’ அமைச்சர் பங்கேற்றார். உலகளாவிய தமிழ், தமிழ்நாட்டில் ‘சிறுபான்மையினர், வெளிநாடுவாழ், அகதி, வெளியேற்றப்பட்டமொழியானதோ? அதனால்தான், சிறுபான்மையோர் ஆணையத் தலைவர் மாநாட்டினைத் தொடங்கி வைத்தாரோ? என்னே தமிழுக்கு நேர்ந்த நிலை! மாநாடு நடைபெறும் தொகுதியினுடைய நாடாளுமன்ற உறுப்பினரும் மாநாட்டில் பங்கேற்றார். “எதற்கும் பயன்படலாம் என்பதற்காகவோ பழி வந்துவிடக்கூடாது என்பதற்காகவோ இவ்விருவரையும் அணுப்பினரோ”? என்றும் ஒரு பேச்சு பார்வையாளரிடையே நிலவியது.

அரசுத் தமிழ் நிறுவனங்கள், பேராசிரியர், அறிஞர் நிலை:

மொழித் தொடர்பான இந்திய அரசின், தமிழ்நாட்டரசின் அத்துணை அமைப்புகளில் ஒன்றுகூட இந்த மாநாட்டில் பங்கேற்றதாகவோ சிறு துணைநின்றதாகவோ தெரியவில்லை. அந்த அளவுக்குத் தமிழுக்கு மிக அவலமான நிலை ஏற்பட்டது. இதிலும் தமிழ் தன்னேரில்லாத தமிழாக ஆகிவிட்டது. இந் நிறுவனங்களின் அதிகாரிகளும் உயரலுவலர்களும் பேராசிரியன்மாரும்கூட இவ் அரசுகளுக்கு அஞ்சிப் பங்கேற்கவில்லை என்ற பேச்சும் காதில் விழுந்தது. ஆனால், இந் நிறுவனங்களுள் ஒன்றின் பேராசிரியர் சிலர் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியதைக் காணமுடிந்தது.

முதுபெரும் பேராசிரியர் என்றும் தமிழறிஞர் என்றும் நன்கு அறியப்பட்டோருள் பலரை இம் மாநாட்டில் காணமுடியவில்லை. அகவை முதிர்ச்சி, வெளிநாடு சென்றமை, நலக் குறைவு, போட்டிக் குழுக்களிடையே எந்தப் பக்கமும் சாராமல் இருந்துவிடுதல், அரசுநிலைபாட்டுக்குச் சார்பாயிருத்தல் என்று இதற்குக் காரணங்கள் பல தெரிந்தன.

பாராட்டு!

குறைபாடுகள் சிற்சில இருந்தாலும் சென்ற இதழில் சுட்டிய பல்வேறு பின்னிழுப்புகளுக்கு இடையே மன்றப் பொறுப்பாளர், மாநாட்டு ஆள்கையர் எப்படியோ மாநாட்டினை நடத்தி முடித்தது, அவர்தம் நிலையிலிருந்து பார்க்கும்போது பாராட்டுக்குரியதே!

58 ஆண்டுகளில் 11 மாநாடுகளே!

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் தொடங்கி 58 ஆண்டுகள் ஆகியுள்ளன. அதனை நிறுவிய அறிஞர் குழாத்தினர் “ஈராண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய தமிழாராய்ச்சி மாநாடு நடத்துவது என்று எடுத்த முடிவின்படி இதுவரை 29 மாநாடுகள் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 11 மாநாடுகள் மட்டுமே நடந்து முடிந்திருக்கின்றன. உலகில் எவருக்கும் தாய்மொழியாக இல்லாத சமற்கிருதத்திற்குப் பல மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்திய அரசும் அம் மொழிக்குக் கோடிக் கணக்கில் மக்கள் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறது. ஆனால் உலகளாவிய தமிழ்மொழியின் மாநாடு நடைபெறுவதில் எத்துணை எத்துணை இடர்ப்பாடுகள்? தடைக்கற்கள்? முட்டுக்கட்டைகள்? முகச் சுளிப்புகள்? கோணல்மாணல்கள்? குறுக்குச்சால்கள்? குழப்படிகள்? உருட்டுகள்? புரட்டுகள்? தடால்புடால்கள்? பிளவுகள்? ஆம். 2010இல் ஒரு பிளவு. 2023இல் மீண்டும் ஒரு பிளவு. மிகச் சிறந்த நோக்கங்களுடன் தொடங்கப்பட்ட உலகத்தமிழாராய்ச்சி மன்ற ஆளுகையர், மிகவிரைவாகப் புறந்தள்ள கூடிய சிறிய அளவிலான சிக்கல்களுக்கு ஈடு கொடுக்காமல் பிளவுபட்டுள்ளனர். தமிழின் நலமா? தம்மின் பெருமையா? எது பெரியது என்று எண்ண வேண்டாவா?

ஒரே பெயரில் இரண்டு மாநாடுகள்:

இப்பொழுது பிரிந்து சென்றோர், மலையகத்தில், சென்னை மாநாடு நடந்த 12 நாள்களே ஆன நிலையில், ‘பதினொன்றாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்ற அதே பெயரில், மலையக அரசு, மலையகப் பல்கலைக் கழகம் துணையுடன் மாநாடு நடத்தியுள்ளனர். ஒரே ஆண்டில், மாதத்தில், ஒரே பெயரில் இரண்டு மாநாடுகள் என்ற வரலாற்றுப் பழியினை ஏற்படுத்திவிட்டனர். தமிழ்நாட்டு முதலமைச்சர், பிற அமைச்சர் பலரையும் சந்தித்து அழைப்பு விடுத்த படங்களை அவர்தம் இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். முதலமைச்சர் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் இரண்டு பிரிவினரையும் ஒன்றுபடுமாறு அறிவுரைத்திருந்தால் தமிழ் மக்கள் மகிழ்ந்திருப்பர். 25 கோடி உருவா செலவில் நடத்தப்படுவதாக இணையத்தளத்தில் விளம்பியிருந்தனர். சென்னை மாநாடு 25 இலக்கத்துக்குள் முடிந்திருக்கும் என்றே மதிப்பீடு செய்யப்படுகிறது.

மலையக மாநாட்டிற்குத் தமிழ்நாட்டிலிருந்து ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, இவ்விரண்டின் கூட்டணிக் கட்சிகள் என்று தேர்தல் கட்சிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் சிலவற்றின் தலைமைகள், முன்னணியர் என்று சிலர் பங்கேற்றனர். அன்னார் இங்கே பேசும் அரசியல் செய்திகளை அங்கேயும் பேசினர். இதனால் மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. தமிழர் ஒற்றுமைபற்றிப் பேசும் இத்தகையோர் உலகத் தமிழாராய்ச்சி மன்றப் பிளவைத் தவிர்ப்பதில் சிறிதேனும் முயன்றிருக்கலாமே? இத்தகையோர் சென்னை மாநாட்டிற்கும் வந்திருக்க வேண்டுமன்றோ? தமிழ்மீது அக்கறை இருக்குமானால் அழைக்கவில்லை என்றாலும் பார்வையாளராகப் பங்கேற்றிருந்தால் அன்னவருக்கே அச் சிறப்பு என்பது எளியோரின் எண்ணம். இதுகூட அன்னார் அங்கு மட்டுமே சென்றதனால்தான். இவருள்ளும் சிலர் மலையக மாநாட்டிற்குத் தாம் செல்வது சரியே என்பது போல் வலையொளி உலாவில் செவ்வி அளித்திருந்தனர். அத்தகைய சில காணொலிகளைக் காண நேர்ந்தது. தனிநாயக அடிகள் இம் மன்றத்தைத் தொடங்கியது பற்றியும் முந்தைய மாநாடுகளைப் பற்றியும் குறிப்பிட்டனர். 2010 பிளவு பற்றிக் குறிப்பிட்டபோது, பிரிந்துசென்றோர் நீங்கிய பிறகு முறைப்படியான மன்றத்தினர் நடத்திய மாநாடுகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்த அளவுகோலைச் சென்னை மாநாட்டிற்குப் பொருத்தாமல் மழுப்புகின்ற வகையில் கூறினர். இதன் காரணம் யாதோ?

தமிழ் மக்களது விருப்பம்:

தமிழுக்காக என்று சொல்லிக் கொண்டு இப்படி முரண்பட்டுப் போட்டி மாநாடுகளை நடத்துவது சரியில்லை என்பதும் இப்பொழுதைய பிளவை நீக்கிக்கொண்டு இனி வருங்காலத்திலாவது இரு பிரிவினரும் ஒன்றுபட்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளைச் சிறப்பாக நடத்தி, மற்ற மொழியினர் ஒற்றுமையுடன் பாடுபட்டு அவரவர் மொழிக்கு ஆக்கம் சேர்ப்பது போல், தமிழுக்கு ஆக்கம் சேர்க்கவேண்டும் என்பதுமே உலகத் தமிழ் மக்களுடைய விருப்பம் என்பதில் ஐயமில்லை!

(பின்குறிப்பு: உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தோற்றம், நோக்கங்கள், செயற்திட்டங்கள், வரலாறு, இதுகாறும் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள், அவை நடந்தபோது நிகழ்ந்த சில அறியப்படவேண்டிய செய்திகள், பாவாணர் பாவலரேறு உள்ளிட்ட தமிழறிஞர்க்கு நேர்ந்த நிலைகள்பற்றி அடுத்த இதழ்களில் பேசுவோம்!)

- முனைவர் கி.குணத்தொகை

Pin It