நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் என்ற இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம் 1956 இல் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரியை உற்பத்தி செய்கிற பெரும் நிறுவனம் இது. மின்சார உற்பத்தியின் திறன் ஆண்டுக்கு 5,192 56 மெகாவாட்; ஆண்டு வருமானம் 8,672.84 கோடி; 13,000 தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகிறார்கள். 360 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்க 2013இல் முடிவு செய்யப்பட்டபோது தமிழ் மண்ணில் உள்ள நிறுவனத்தை வேறு அன்னியர்களுக்குக் கொடுத்து விடக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்து, தமிழ்நாடு அரசின் ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் அப்பங்குகளை விலைக்கு வாங்கின. இந்த உளநிலை தொடர வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் விருப்பம்.

1956 இல் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டபோது 30 ஊர்களை சேர்ந்த மக்கள் எவ்வித எதிர்ப்புமின்றி தங்கள் வாழ்விடங்களை அளித்து இந்நிறுவனம் உருவாக உதவினர். தொடக்கத்தில் இக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டது, 2002இல் இந்நிறுவனத்தின் 51% பங்குகளை விற்பனை செய்ய இந்திய அரசு அறிவிப்பு செய்தபோது தமிழ்நாட்டின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயிடம் இது பொதுத்துறை நிறுவனமாகவே தொடர வேண்டும்; 51% பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்று தமிழ்நாட்டின் சில தலைவர்கள் வற்புறுத்திய நிலையில், அந்தத் திட்டத்தை அவர் கைவிட்டார். சிறுகச் சிறுக, வட இந்தியர்கள் மட்டுமே வேலை பார்க்கும் நிறுவனமாக நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் மாறி இருக்கிறது. நிரந்தர பணியாளர்களில் 90% வரை வட இந்தியர்களாக இருக்கிறார்கள், புதிதாக வேலைக்கு சேர்ப்பவர்கள் முற்று முதலாக வட இந்தியர்கள்தாம். 2022இல்கூட முழு நேர ஊழியர்கள் 289 பேர் சேர்க்கப் பட்டதில் (பட்டதாரி பொறியாளர்கள்) ஒருவர் கூட தமிழ் நாட்டவர் இல்லை.neyveli power plant 600நெய்வேலி முதலாவது சுரங்கம் அமைக்க 3000 ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டது, இரண்டாவது சுரங்கம் அமைக்க இருபத்தைந்து கிராமங்களில் 10,000 ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டது. மூன்றாவது சுரங்கம் அமைக்க 26 கிராமங்களில் 12,000 ஏக்கர் நிலம் பறிக்கப்படுகிறது. இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவியில் நிலம் கையகப்படுத்தும் பணியும் அதை சமன்படுத்தும் பணியும் தொடங்கிய போது மக்கள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். 9.3.2023 அன்று பல தலைவர்களும் பொதுமக்களும் கைது செய்யப்பட்டனர்.

ஆண்டுக்கு 11,000 கோடி வருவாயும் 2000 கோடி இலாபமும் காட்டும் இந்த நிறுவனம் தன்னுடைய பலன்களை வடமாநிலங்களுக்கு அளிக்கிறது. தோராயமாக, 5 ஆண்டுகளில் 45 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ள நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் அதனால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய கடலூர் மாவட்டத்திற்கு 447 கோடி மட்டுமே ஒதுக்கியது. இந்நிலையில் இப்போது 1250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முனைகிறது. ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் எதிர்காலத்தில் பாலைவனம் ஆகும் அச்சம் இருக்கிறது.

இதுவரை 37,256 ஏக்கர் நிலம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டுமே வேலை தரப்பட்டது. இப்போது அவர்களும் ஓய்வு பெற்று விட்டனர். 3,500 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களும் பெரும்பாலும் பிற மாநிலத்தவர் ஆவர்.

2018 இல் மூன்றாவது சுரங்கம் அமைக்க 26 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது. முன்பு நிலங்களை அளித்தவர்களுக்கு இழப்பீடும் வேலைவாய்ப்பும் அளிக்கப்படாத நிலையில், இப்போது நிலத்தைப் பறிக்க முயற்சிப்பது என்பது மக்களுக்கு எதிரான செயல்பாடு ஆகும். நெய்வேலியில் இரண்டு நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் முதல் சுரங்கத்தின் விரிவாக்கம் என மூன்று சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று மட்டுமின்றி நான்காவதாக, "மூன்றாவது சுரங்கம்" என்ற பெயரில் புதிய சுரங்க வேலை தொடங்கப்படுகிறது. இதற்கு நிலம் எடுக்க கொளப்பாக்கம், அரசகுழு. கோ. ஆதனூர், பெருவரப்பூர், பெருந்துறை, வட்டிமேடு, கோட்டிமுளை, சிறுவரப்பூர், க. புத்தூர், சாத்தப்பாடி, தர்மநல்லூர் போன்ற 26 கிராமங்களில் 12,125 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இவை வளமான நிலம் ஆகும். இவற்றில் உள்ள விவசாயம் முற்று முதலாக அழிக்கப்பட்டு, திறந்தவெளி சுரங்கம் அமைக்கப்பட்டு, பழுப்பு நிலக்கரி எடுக்கப்படும். இவ்வாறு நிலக்கரிக்காக மேலும் நிலங்களைக் கையகப்படுத்துவது தேவையற்றது. ஏனெனில் 1985இல் கையகப்படுத்தப்பட்ட நிலம் இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் மேலும், மேலும் நிலத்தை கையகப்படுத்துவதன் நோக்கம் என்ன? ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மகாலட்சுமி நிறுவனம் இங்கே நிலக்கரியை வெட்டி எடுக்க ஒப்பந்தமிட்டு இருக்கிறது. இவர்கள் அனுமதிக்கப்பட்டதை விட அல்லது திட்டமிடப்பட்டதை விட பல மடங்கு அதிகம் வெட்டி எடுத்து வெளியில் விற்பனை செய்து வருகிறார்கள். அதற்காகவே கூடுதல் நிலம் பறிக்கப்படுகிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களுக்கு என நிலம் கொடுப்பது ஏதோ நாட்டின் நலன் கருதி என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் உண்மைநிலை அப்படி அல்ல. தனியார் நிறுவனங்கள் கூடுதல் இலாபம் பெறவே இப்போது நிலங்கள் பறிக்கப்படுகின்றன

[28/07, 12:35 ஜீ.வி] பேராசிரியர் செயராமன்: 1956-இல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக மந்தாரக்குப்பம், நெய்வேலி, கெங்கைகொண்டான் போன்ற பகுதிகளில் 23 கிராமங்கள் கையகப்படுத்தப்பட்டு, இன்று 67 ஆண்டுகளாகியும் இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்கப்படாமல் அந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கம்மாபுரம், கத்தாழை பகுதியில் நிலங்களைக் கையகப்படுத்த நெய்வேலி நிலக்கரி நிறுவனமும், அரசு அதிகாரிகளும் முயற்சி செய்தபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள், கடந்த 2022 டிசம்பர் 26 ஆம் தேதி நிலக்கரிக்காக நிலம் கொடுத்தவர்களுடைய போராட்டம் நடைபெற்றது.

இதுவரை கையகப்படுத்தப்பட்டநிலத்தின் பரப்பளவு முதல் சுரங்கத்திற்காக 3000 ஏக்கர், இரண்டாம் சுரங்கத்திற்காக 25 கிராமங்களில் 10,000 ஏக்கர், மூன்றாம் சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் 12,125 ஏக்கர். இரண்டாவது சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக மேலும் கூடுதல் நிலம் கையகப்படுத்துதல் ஆகியவை நடைபெற்று இருக்கின்றன. 2023 மார்ச் 9ஆம் தேதி வளையமாதேவியில் நிலத்தை சமன்படுத்தும் வேலையை நிறுவனம் முன்னெடுத்த போது பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது இதில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக கத்தாழை ,கரிவெட்டி மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களை என்எல்சி நிர்வாகம் விவசாயநிலங்களைக் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது. இதில் இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை எனவும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தரவேண்டும், மாற்று குடியிருப்பு மற்றும் கடந்த காலங்களில் ரூ.6 லட்சம் வழங்கி யவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையின் காரணமாக பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருந்தன. அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன.

வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணிக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட பெரியமண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு வந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது. இதில் விளைநிலங்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. ஆகவே பிரச்சினை தொடர்கிறது.

[28/07, 12:38 ஜீ.வி] பேராசிரியர் செயராமன்: 10 ஆண்டுகளுக்கு முன் கட்டாயத்தின் பெயரிலும் அச்சுறுத்தலின் பெயரிலும் நிலத்தை கொடுத்து விட்டு, கையில் ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டவர்கள் இப்போது தவியாய் தவிக்கிறார்கள். உறுதிமொழி கொடுத்தபடி நிரந்தர வேலையும் என்எல்சி நிர்வாகம் தரவில்லை. நிலத்திற்கு பணத்தை வாங்கிக் கொண்டு நிறுவனத்தை ஏமாற்றுகிற வேலையாக இதை கருத வேண்டாம். அந்த மண்ணில் எத்தனைத் தலைவர்கள் இருக்கிறார்கள்..எந்த தலைவரும் பொறுப்புணர்வோடு மண்ணை கொடுக்காதீர்கள் என்று சொன்னதில்லை. கடலூர் மாவட்டத்தின் வளமான பகுதிகள் எல்லாம் நிலக்கரி வயலுக்காக எடுக்கப்பட்டு அழிக்கப்படுமானால், தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாடு குறைந்து விடும் என்பதுதான் உண்மை, எந்த நாடும் தன்னுடைய வளமான விளைநிலங்களை பாழ்படுத்தி விட்டு நீடு வாழ்ந்து விடாது. என். எல். சி. நிறுவனத்திற்கு மொத்த கடலூர் மாவட்டமும் வேண்டும்; செயங்கொண்டம் உள்ளிட்டு அரியலூர் மாவட்டமும் வேண்டும், அவர்கள் தொடர்ந்து தோண்டிக்கொண்டே இருப்பார்கள். இதற்கு ஒரு வரம்பு கட்ட வேண்டும்.

முன்பு ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டார்கள் என்பது உண்மை. அச்சுறுத்தல், ஆசை காட்டுதல், அதிகாரிகளின் கட்டாயம் இவற்றின் அடிப்படையில் மக்கள் நிலத்தைக் கொடுத்தார்கள். நிலத்தை கொடுக்க விரும்பாதவர்களுடைய நிலமும் சேர்த்துப் பறித்து எடுக்கப்பட்டது. இப்போது தமிழ்நாட்டின் நலன் கருதி, சுரங்க விரிவாக்கத்திற்கு நிலத்தை கொடுக்காமல் தடுத்து நிறுத்த வேண்டிய தேவை இருக்கிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் திட்டமிட்டிருக்கிறபடி ஒன்பதாவது சுரங்கம் அமைப்புவரை இவர்கள் தொடர்ந்தால் 1,25,000 ஏக்கர் நிலம் சுரங்கத்திற்காகப் பறித்தெடுக்கப்படும். இதனால், தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாடு என்பது முற்றிலுமாக அழிந்து போகும். ஆகவே தமிழ் நாட்டின் நலன் கருதியும், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுத்து நிறுத்தவும், இதற்கு மேல் சிறிதளவு கூட நிலம் கொடுக்காமல் பத்திரப்படுத்த வேண்டும். மாற்று எரிசக்தி நோக்கி நகர வேண்டிய இத்தருணத்தில், தரம் குறைந்த பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி அனல் மின் நிலையங்களை நடத்த முற்படுவது ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தையும், அரியலூர் மாவட்டத்தையும் காவுகொள்ள வாய்ப்பளிப்பதாகி விடும்.

மண்ணைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை பொறுப்புணர்வோடு இந்த மக்களுக்கு எவராவது எடுத்துச் சொல்லி இருக்கிறார்களா? "நல்ல பணம் தருகிறேன் என்பார்கள், அவசரப்பட்டு கொடுத்து விடாதீர்கள்’ என்பர்களேயொழிய இது தாய் மண்; இதை இழந்தால் மீண்டும் பெற முடியாது" என்று எவராவது சொல்லி இருக்கிறார்களா? நிலக்கரி எடுத்து விட்டால் அதன் பிறகு அது விளைநிலமாக மாறுமா ? எதற்காக மேலும் மேலும் நிலத்தைத் தோண்டுகிறீர்கள்?

நெய்வேலி அனல் மின் நிலையங்கள் செயல்பட்டால்தானே தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கிடைக்கும் என்று சிலர் கூறுவார்கள். தமிழ்நாட்டில் இருந்து நாள்தோறும் 11 கோடி யூனிட் மின்சாரம் வெளிமாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. நெய்வேலி மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மண்μம் தமிழ்நாட்டின் நிலத்திற்கு அடியில் இருக்கக்கூடிய கனிம வளமும் தமிழ்நாட்டிலேயே கையாளப்பட வேண்டும்.

தமிழ்நாட்டிடம் நிறுவனத்தை ஒப்படைத்துவிட்டு ஏன் எல்சி. நிர்வாகம் வெளியேற வேண்டும். அதுதான் நியாயம். பல்வேறு நாடுகளில் அப்படி நிகழ்ந்திருக்கின்றன. ஒன்று, அந்த நிலத்தை என்.எல்.சி. நிர்வாகமே மக்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்;அந்த தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது தமிழ்நாடு அரசு அந்த தொகையை செலுத்தி நிலத்தை மக்களுக்கு மீட்டுத் தர வேண்டும்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வது இல்லையா? அதைப்போல இதைச் செய்யக்கூடாதா? பல்லாயிரம் கோடி கடனை வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடிப் போனார்களே கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களை என்ன செய்து விட்டார்கள்? ஏமாந்து போய் நிலத்தைக் கொடுத்துவிட்டு நிற்கும் மக்கள் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு தமிழ் மண்ணை மீட்க வேண்டும்.

தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாட்டையும், தமிழ்நாட்டின் நிலப்பரப்பையும் காப்பாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கோருகிறோம்.

நெய்வேலியை மீட்போம்! - ஆர்ப்பாட்டம்

கடந்த ஆகத்து 12 அன்று மாலை சிதம்பரத்தில் தமிழக மக்கள் முன்னணி நெய்வேலியை மீட்போம், விளைநிலங்களைப் பறிக்காதே, என் எல் சி யே வெளியேறு, 1956 தொடங்கிப் பங்குத் தொகை(இராயல்டி) கொடு, தமிழ்நாடு அரசே நெய்வெலியை ஏற்று நடத்து என்ற முழக்கங்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.. காவல்துறை தொடக்கத்தில் இசைவு கொடுத்தவர்கள் நிகழ்ச்சி அன்று காலை ஆர்ப்பாட்டத்தை நடத்தக்கூடாது என மறுத்தனர்.. பின்னர் தோழர்கள் விடாது போராடி நடத்த இசைந்தவர்கள் நாற்காலிகள் போட, ஒலிபெருக்கி அமைத்துக்கொள்ள மறுத்தனர்.. ஒவ்வொன்றுக்கும் போராடிப் போராடியே பெறமுடிந்தது,, இறுதியாகத் தோழர் தங்க குமரவேல் தலைமையில், தோழர்கள் பேராசிரியர் செயராமன், பொழிலன், பாவெல், நிலவழகன், சுப்பு மகேசு, தெய்வமணி, விடுதலைச் செல்வன், தயாநிதி, நிலவன், தமிழ்க்செல்வன் உள்ளிட்டுத் தோழர்கள் கண்டன உரையாற்றினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்..

பேராசிரியர் த. செயராமன், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்

Pin It