சிவகங்கை இராசேந்திரன்(16.7.1947 – 27.1.1965)
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் சிவகங்கை இராசேந்திரன், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு முதன் முதல் பலியானார். சொந்த மக்களைக் கொள்வதற்காக இராணுவம் இறக்கப்பட்டதும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதும் 1965 ஆம் ஆண்டு தான் தமிழகத்தில் முதன் முதலாய் நடந்தன.
காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான இராசேந்திரன், காவலராய்ப் பணியாற்றியவரின் மகன் தந்தை முத்துக்குமார் சிவகங்கையில் காவலர் முத்துக்குமார் வள்ளிமயில் இருவரின் மகனாக 16.7.1947இல் பிறந்தவர் இராசேந்திரன். உடன் பிறந்தோர், ஆறு பேர் சக்திவேல், மேனகா, தைலம்மாள், சகுந்தலா, சேகர், கீதா.
இந்தி எதிர்ப்பு முழக்கத்துடன் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் 3000 பேருக்குமேல் 27.1.1965 காலை சிதம்பரம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். ‘இந்தி அரக்கி’ கொடும் பாவியும் இழுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தை மரித்த காவல் துறையினர் கற்களை வீசிக் கலைக்க முடியாததால் தடியடி நடத்தினர்.
'தமிழ் வாழ்க' எனும் முழக்கம் கேட்டு ஆந்திரக் காவல் படை ஆத்திரம் கொண்டது. வானத்தில் சுட்டு எச்சரிக்கை செய்யாமல், அநியாயமாய் மாணவர் கூட்டத்தை நேருக்கு நேர் சுட்டது. சிவகங்கை இராசேந்திரனின் நெற்றியில் துப்பாக்கிக்கு குண்டு பாய்ந்தது.
காவல் வெறியாட்டத்தில் மாணவர் இராசேந்திரன் பலியான செய்தி தமிழக மாணவர் உலகத்தைத் துடிக்க வைத்தது. மாணவருலகம் ஏந்தும் தீப்பந்தமானார் சிவகங்கை இராசேந்திரன். மாணவர்களால் எழுப்பப்பட்ட மாணவர் இராசேந்திரன் சிலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு, இன்றும் திசைகாட்டிக் கொண்டுள்ளது.
எத்தனை நாள் இந்திப்போர்?
எத்தனை நாள் எத்தனை ஆண்(டு)
எத்தனைப் போர் எத்தனைப் பேர்
எத்தனைத் தோள் இந்திக் கெழுவதோ?
எத்தனைப்பேச்(சு) எத்தனைத்தாள்?
எத்தனைப்பா(டு) எத்தனைப் பாட்(டு)
எத்தனை தாம் எழுதிக் குவிப்பதோ?
எத்தனைநாள் நாம் பொறுப்ப(து)
எத்தனைப் பேர் நாமிறப்ப(து)
எத்தனைநாள் இந்தி எதிர்ப்பதோ?
ஒத்திணையும் எண்ணமிலை;
ஒன்றிரண்டு பார்த்துவிட
ஊர்ப்படைக்கு நாளொன் றுரைப்பமே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
(கனிச்சாறு – 1, பக்கம் – 108)
- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை
(தொடரும்...)