‘‘தீவிரவாதம் தலைதூக்கியுள்ள காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டது. இனக் கலவரம் வெடித்த குஜராத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. நக்சல்களின் தீவிரவாதம் நடைபெறும் ஆந்திர மாநிலப் பகுதியில்கூட, தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஏன் தேர்தல் நடத்த இயலவில்லை? சாதி, மதம் என்ற பெயரில் ஜனநாயகப் படுகொலைதான் நடைபெறுகிறது. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி அமைப்பு இல்லாவிட்டால் குடிநீர், சாலை, மின் வசதி கிடையாது என்று அரசு ஆணையிட வேண்டும்'' என்று 29.9.2005 அன்று சட்டப் பேரவையில், காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி, தமது வேதனையைத் தெரிவித்துள்ளார்.

இந்த நியாயமான கேள்விக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், ‘‘உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை என்பதற்காக பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட நான்கு கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகளை நிறுத்த வேண்டும் என்பது சரியல்ல. சாலை வசதி, தண்ணீர் வசதி போன்றவற்றை வழங்கி, மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதை நிறுத்த முடியாது'' என்று பதிலளித்துள்ளார்.

தி.மு.க. அரசைப் போலவே, அ.தி.மு.க. அரசும் இத்தொகுதிகளில் தேர்தலை நடத்த முடியாத தன் இயலாமையை, வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்தி உள்ளது. சாதி எல்லா தீவிரவாதங்களையும்விட மிக மோசமானது. அது, ஜனநாயகத்திலேயே தீவிரமாக உயிர் வாழ்கிறது என்ற பேருண்மை, மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது. ‘அடிப்படை வசதியை நிறுத்த முடியாது; மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை' என்று அமைச்சர் முழங்குகிறார். எந்த மக்களின் உரிமையை இந்த அரசு பாதுகாக்கிறது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகச் சொல்லப்படும் நாட்டில், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இல்லையா?
அடுத்து, மனிதக் கழிவுகளைக் கையால் அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க கடந்த ஆகஸ்ட் மாதமே பிரதமர் மன்மோகன் சிங் அரசு கெடு விதித்திருந்தது. அதிலும் குறிப்பாக, ரயில்வே துறையில் இதை முதலில் ஒழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. தற்பொழுது, ரயில்வே துறையை நவீனப்படுத்துவதற்கு 24,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்நவீனத்திட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமையை அகற்றும் எந்தத் திட்டம் இல்லை. அதுமட்டுமல்ல, ‘இதை முழுவதுமாக ஒழிக்க எந்தக் காலக்கெடுவும் வைக்க முடியாது' என்று ரயில்வே அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரப்படுத்தும் அமைச்சகத்திற்குத் தெரிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் உள்ள இருப்புப் பாதைகளில், மனிதக் கழிவுகள் கீழே விழாமல் இருக்க முக்கியமான 500 ரயில் நிலையங்களிலும், 27 அதிவேக ரயில்களிலும் மட்டும் நவீன முறையில் கழிவறை அமைப்பதற்கே இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்படுமாம். தற்பொழுது நான்கு நிலையங்களில் மட்டுமே இத்தகைய வசதிகள் இருக்கின்றன. இந்தியாவில், எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் 500 நிலையங்களில் (6 சதவிகிதம்) மட்டுமே எந்திரத்தின் மூலம் தண்ணீர் பாய்ச்சி, கழிவுகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. எஞ்சியிருக்கும் 94 சதவிகித ரயில் நிலையங்களில், இம்முறையை ஒழிக்க எப்போது திட்டம் தீட்டப்படும் என்பதற்கு அரசிடம் பதிலில்லை. 500 ரயில் நிலையங்களில் நவீன முறையை மேற்கொள்ள 1,100 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில், இதற்கென 200 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகமற்ற, நவீனமற்ற அவமானகரமான ஒரு வாழ்க்கையை வாழவே இந்நாட்டின் தலித்துகள் நிர்பந்திக்கப்படுகின்றனர். நிலாவுக்கு ‘ராக்கெட்' அனுப்பும் திட்டத்திற்கு ஆகும் செலவில், பத்தில் ஒரு பகுதியை இதற்குச் செலவழித்தாலே ரயில் நிலையங்களில் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால், இம்முறையை ஒழிக்க, 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை மய்ய அரசே கேலிக்குரியதாக்குகிறது. எனவே, இதைக் கண்டித்து ‘ஆதித் தமிழர் பேரவை' நவம்பர் 28, 2005 அன்று, தமிழகத்தின் முக்கிய பத்து நகரங்களில் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது.

இது பற்றி ‘ஆதித்தமிழர் பேரவை'த் தலைவர் அதியமான் குறிப்பிடும்போது, ‘‘பன்னாட்டு நிறுவனங்களை குறிப்பாக ‘கோக்' நிறுவனங்களை விரட்டியடிக்க மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. நாம் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால், மனித இனமே வெட்கித் தலைகுனியும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எவரும் போராட முன்வராத நிலையில், நாங்கள் மட்டும்தான் இதை முன்னெடுத்துப் போராட வேண்டியிருக்கிறது'' என்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ‘ஆதித் தமிழர் பேரவை'யின் மறியலின் போது, எத்தனை ஜனநாயக, சமூகநீதி, இடதுசாரி, முற்போக்கு இயக்கங்கள் இதில் பங்கேற்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்
Pin It