கீற்றில் தேட...

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடும்போது, எல்லோரும் ஒன்றிணைவார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் வெளியேறி, ஒரு வெற்றிடம் ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சமூக, பொருளாதார நிலைமைகளை மறு ஆய்வு செய்யும்போது நிலப்பிரபுக்களும், விவசாயத் தொழிலாளர்களும், முதலாளிகளும், தொழிலாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட முடியுமா? சுயராஜ்ஜியம் வந்த மறுகணமே காங்கிரஸ் கட்சி சிதறி விடும். ஆனால், பட்டியல் சாதியினரின் கட்சி என்றென்றும் நீடித்திருக்கும். அது ஒரு நிரந்தரக் கட்சி. அது சில அடிப்படைக் கொள்கைகளோடு இருக்கிறது.

ambedkarபட்டியல் சாதியினர் ரொட்டிக்காகவும், மீனுக்காகவும் போராடுகின்றனர் என்று கூறுவது கடைந்தெடுத்த முட்டாள்தனம். அவர்கள் இந்த நாடு பின்பற்ற வேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த கொள்கைகளுக்காகப் போராடுகின்றனர். அவர்களுடைய கொள்கைகள், பட்டியல் சாதியினரின் நலன்கள் என்ற குறுகிய வட்டத்தைக் கடந்து நிற்கின்றன. அவர்களுடைய கொள்கைகள் இந்தியாவை மட்டுமல்ல; அது உலகையே மறு சீரமைக்கக் கூடியவை. பட்டியல் சாதியினரை மேம்படுத்துவதைவிட, இந்தியாவில் வேறு உன்னதமான எந்தப் பணியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியில் எனக்கு பல நண்பர்கள் உள்ளனர். அவர்கள் என்னுடைய அரசியலை விரும்பவில்லை என்றாலும், என் மீது அன்பு கொண்டுள்ளனர். நான் காங்கிரசில் இணைந்து நாட்டின் பரந்துபட்ட நலன்களுக்காக உழைத்தால், ஒரு நாள் நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராகலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய யோசனைகள் என்னை எப்போதும் கவர்ந்ததில்லை. நான் இந்த வகுப்பினரிடைய பிறந்துள்ளதால், இம்மக்களுக்காக நான் முதலில் எதையாவது செய்தாக வேண்டும் என்று நினைக்கிறேன்.

பட்டியல் சாதியினரின் நலன்களுக்காகப் பாடுபடும் திறமையுள்ள நானோ, மற்றவர்களோ-இந்தப் பணியை கைவிட்டு வேறு பணிக்குச் சென்று விட்டால், இப்பணியைச் செய்ய வேறு எவரும் வரமாட்டார்கள். இந்நிலையில், பட்டியல் சாதியினரின் நிலைமை கடந்த 2000 ஆண்டுகளாக எத்தகைய உருக்குலைந்த நிலையில் இருந்து வந்துள்ளதோ, அதே போலவே அது தொடரும் என்று தான் நான் கருதுகிறேன். ஆனால் இது ஒரு குறுகிய கருத்துதான். இப்பணியை நான் மேற்கொண்டதற்கு மற்றொரு காரணம், இப்பணி மிகவும் உயர்வான பணி என்பதுதான்.

இந்துக்களின் செயல்திட்டம் என்ன? காங்கிரசின் செயல்திட்டம் என்ன? தேச சுதந்திரம் என்கிறார்களே, அது என்ன? இந்துக்களின் செயல்திட்டம் என்பது, உறிஞ்சும் வகுப்பினரின் செயல்திட்டம் போன்றது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் ரத்தத்திலும், பலத்திலும், உழைப்பிலும் இவர்கள் வாழ்கின்றனர். அரசியல் மற்றும் அறக்கோட்பாடுகளை அறிந்தவர்கள், ஒவ்வொரு சமூகத்தின் பொருளாதார, சமூக அமைப்பு-சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையாமல் உலகம் முழு விடுதலை பெறாது என்பதைப் புரிந்து கொள்வர். பட்டியல் சாதியினரின் மேம்பாட்டுக்கு உழைக்காமல் நாம் இந்துக்களின் மேம்பாட்டுக்குப் பாடுபட வேண்டும் என்று இவர்கள் சொல்வார்களா?

நாட்டின் சுதந்திரம் என்ற பணியை எடுத்துக் கொள்ளுங்கள். வலிமை பெற்றவர்கள் எளியவர்களை ஒடுக்குவதற்கான சுதந்திரத்திற்கும், நலிவடைந்தவர்கள் முழு மனிதனாக வளர்வதற்கு வாய்ப்பளிக்கும் சுதந்திரத்திற்கும் இடையில் பெருத்த வேறுபாடு உள்ளது. சுதந்திரம் என்று முட்டாள்தனமாகப் பேசும் இந்த தேச பக்தர்களிடம் நான் கேட்கிறேன், அவர்கள் இந்த சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? சமூக சுதந்திரம் இல்லாத சூழலில், மனிதர்களின் மனநிலை அப்படியே இருக்கும் நிலையில், ஆங்கிலேயரிடமிருந்து அவர்கள் பெறப் போகும் சுதந்திரம், ஒடுக்கப்பட்ட-அடக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் எனில், ஒருவர் ஏன் சுதந்திரத்திற்காகப் போராட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. மாறாக, எமது குறிக்கோளை நீங்கள் பரிசீலித்தால், நாங்கள் எந்தக் கொள்கைக்காகப் போராடுகிறோம் என்று பார்த்தால், எங்கள் நோக்கம் குறுகியது அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

இன்றைய ஜனநாயக அமைப்பில் ஒரு செய்திப் பத்திரிகை என்பது, நல்லதொரு ஆட்சி முறைக்கு அடிப்படைத் தேவையாகும். மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்கான ஒரு வழிமுறையே இது. எனவே, ஒப்பிட இயலாத துன்பத்தில் சுழல்கிற பட்டியல் சாதியினரான நாம், இந்த நிலைமைகளைக் களைந்தெறியப் பாடுபடும் போது, தீண்டாமைக்கு ஆட்பட்ட எட்டுக் கோடி மக்களும் அரசியல் விழிப்புணர்வு பெற்றால் ஒழிய-நாம் நமது பணியில் வெற்றி பெற முடியாது. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் சமூக,பொருளாதார அமைப்புகள் அமைந்தாலொழிய, உலகம் முழு விடுதலை பெற வழியில்லை.

(நன்றி : தலித் முரசு 2008)