VI
இன்று நாம் அனுபவித்து வருவது போன்ற தேசிய நெருக் கடி சமயங்களில் இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் கடைப் பிடிக்கும் போக்கை ஏனைய நாடுகளிலுள்ள ஆதிக்க வகுப்பினர் கடைப்பிடிக்கும் போக்குடன் ஒப்பிடுவது இங்கு உசிதமாக இருக் கும். பிரான்சில் புரட்சி வெடித்து சமத்துவம் கோரப்பட்டபோது என்ன நடை பெற்றது? அங்கிருந்த ஆதிக்க வர்க்கம் தானே முன்வந்து தன் அதிகாரங்களையும் சலுகைகளையும் விட்டுக் கொடுக்கவும் நாட்டின் மக்களுடன் ஒன்று கலக்கவும் முன்வந்தது.
பிரான்சின் சட்ட மன்றம் கூட்டப்பட்ட போது என்ன நடைபெற்றது என்பதிலிருந்து இதனைத் தெரிந்து கொள்ளலாம். அப்போது பொது மக்கள் 600 பிரதி நிதிகளையும், திருச்சபை குருமார் தொகுதியினர் 300 பிரதிநிதிகளையும், உயர் குடியினர் 300 பிரதிநிதிகளையும் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிக்கல் எழுந்தது: இந்த 1200 பிரதிநிதிகளும் எங்கு கூடி எப்படி விவாதித்து, எவ்வாறு வாக்களிப்பது என்ற பிரச்சினை தோன்றிற்று.
மூன்று பிரிவினரும் ஒரே மன்றத்தில் கூடுவோம், ’தலைக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்துவோம் என்று பொதுமக்கள் பிரதிநிதிகள் கூறினர். இதனை குருமார் தொகுதியினரும் உயர்குடிப் பிரதிநிதிகளும் ஏற்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல.
ஏனென்றால் இதன் காரணமாக, பண்டைக் காலம் முதல் அனுபவித்து வரும் உரிமைகளையும் சலுகைகளையும் அவர்கள் கைவிட வேண்டியிருக்கும். எனினும் இவர்களில் கணிசமான பகுதியினர் இதன்பேரில் இவர்கள் அனைவரும் சேர்ந்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் அடிப்படையில் அமைந்த அரசிய லமைப்பை பிரான்சுக்கு வழங்கினர்.
ஜப்பானின் 1855க்கும் 1870க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அந்தக் காலப்பகுதியில் தான் ஜப்பானிய மக்கள் நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலிருந்து, ஒரு நவீன தேசமாக மாறினர். அப்போது ஜப்பானின் ஆதிக்க வர்க்கங் கள் கடைப்பிடித்த போக்கு பிரெஞ்சு ஆதிக்க வர்க்கங்கள் காட்டிய போக்கைவிடவும் தேசபக்தி மிகுந்ததாக இருந்தது. ஜப்பானிய வர லாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருப்பது போல் (ஜப்பானின் வீர காவியம், ஜேம்ஸ் ஏ.பி. செச்சரர்).
ஜப்பானிய சமுதாயத்தில் நான்கு வர்க்கங்கள் இருந்தன: (1) டமியோஸ், (2) சமுராய், (3) ஹெமின் அல்லது சாமானிய மக்கள், (4) எதா அல்லது கீழ்த் தட்டு வர்க்கத்தினர். இந்த நான்கு வர்க்கத்தினரும் படிநிலை ஏற்றத் தாழ்வு அடிப்படையில் அமைந்திருந்தனர். இந்த வரிசையில் சில பல ஆயிரங்களைக் கொண்ட எதாக்கள் எல்லோருக்கும் கீழே இருந்தனர். எதாக்களுக்கு மேலே ஹெமின்கள் இருந்தனர். அவர்களுடைய எண் ணிக்கை சுமார் 2.5 கோடி முதல் 3 கோடியாக இருந்தது.
அவர்களுக்கு மேலே சமுராய்கள் இருந்தனர்; இவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 20 லட்சமாக இருந்தது. ஹெமின்களின் வாழ்வும் மரணமும் இவர்கள் கையில்தான் இருந்தன. டமியோஸ்கள் அல்லது குறுநிலக்கோமான் கள் இவர்களுக்கு எல்லாம் மேலே உச்சியில் இருந்தனர். இவர்கள் எண்ணிக்கை வெறும் 300 தான். வர்க்க இயையும் வர்க்க உறவுகளும் கொண்ட இந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை சமத்துவ குடியுரிமை கொண்ட ஒரு நவீன தேசமாக மாற்றுவது சாத்தியமல்ல என்று உணர்ந்தனர்.
எனினும் டமியோஸ்கள் தேசபக்த உணர்வால் உந்தப் பட்டும், தேசிய ஒற்றுமைக்குக் குறுக்கே நிற்கக்கூடாது என்ற ஆர்வத் தால் தூண்டப்பட்டும், தாங்கள் இதுவரை அனுபவித்துவந்த பிரத்தி யேக உரிமைகளையும் சலுகைகளையும் துறந்துவிடவும், தங்களை சாமானிய மக்களுடன் இதயபூர்வமாக இணைத்துக் கொள்ளவும் மனமுவந்து முன்வந்தனர். 1869 மார்ச் 5ஆம் தேதி சக்கரவர்த்தியிடம் சமர்ப்பித்த மகஜரில் பின்கண்டவாறு குறிப்பிட்டிருந்தனர் (அதே நூல், பக்கம் 233):
”நாங்கள் வசிக்கும் இடம் சக்கரவர்த்தியின் இடம். நாங்கள் உண்ணும் உணவு சக்கரவர்த்தியின் ஆட்கள் உழுது பயிரிட்ட தானியத்திலிருந்து கிடைத்தது. அப்படியிருக்கும் போது எங்களுக்குச் சொந்த சொத்து இருப்பதாக நாங்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும்? இப்போது எங்களது உடைமைகளையும் எங்களையும் (சமுராய்களையும் சாமானிய மக்களையும்) தங்களுக்குப் பயபக்தியுடன் அர்ப்பணிக் கிறோம். எங்களில் யார் வெகுமானத்துக்குரியவர்களோ அவர்களுக்கு வெகுமானம் அளிக்கும்படியும், யார் வெகு மானத்துக்குத் தகுதியற்றவர்களோ அவர்களை அபராதம் விதித்துத் தண்டிக்கும்படியும் சக்கரவர்த்தி அவர்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். பல்வேறு குல மரபுக் குழுக்களின் பிரதேசங்களை மாற்றியமைப்பதற்கும் திருத்தி யமைப்பதற்கும் பேரரசின் ஆணைகளை எதிர்ப்பார்க்கிறோம்.
சிவில் சட்டங்கள், குற்றவியல் சட்டங்கள், சீருடைகளுக் கான விதிகள் உட்பட ராணுவச் சட்டங்கள், போர் எந்தி ரத்தைக் கட்டி உருவாக்கும் சட்டங்கள் ஆகிய இவையாவும் சக்கரவர்த்தியிடமிருந்து வரட்டும். பேரரசு சம்பந்தப்பட்ட எல்லா பெரிய, சிறிய விவகாரங்களும் அவருடைய பார்வைக்கே செல்லட்டும்.”
இதில் ஜப்பானின் ஆதிக்க வர்க்கத்துடன் ஓப்பிடும்போது இந்தியாவின் ஆதிக்க வகுப்பு எந்த நிலையில் உள்ளது? முற்றிலும் எதிர்மாறானதாக இருக்கிறது. இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்புக்கு நாட்டின் சுதந்திரத்திற்காக எத்தகைய தியாகமும் செய்யும் எண்ண மில்லை. இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் தேசியத்தின் பொருட்டு தமது தனி உரிமைகளையும் சலுகைகளையும் கைவிடு வதற்குப் பதிலாக தங்களது சலுகைகளை தக்கவைத்துக் கொள்வதற் காக தேசியத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
சட்டமன்றங்களிலும், அமைச்சரவைகளிலும், அரசுப் பணித்துறை யிலும் தங்களுக்கு இட ஒதுக்கீடுகள் வேண்டுமென்று கேட்கும் போதெல்லாம் ஆதிக்க வகுப்பினர் ‘தேசியத்துக்கு அபாயம்’ என்று கூக்குரலிடுகின்றனர். நாம் தேச சுதந்திரத்தைப் பெற வேண்டுமென்றால், தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும், சட்டமன்றங் களிலும் நிர்வாகத்திலும் அரசுப் பணித்துறையிலும் இட ஒதுக்கீடு கள் கோருவது சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளும் தேச ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியவை, ஆதலால் நாட்டின் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எவரும் இத்தகைய இட ஒதுக்கீடுகளை ஆதரிப்பது பாவம், அது பிளவுகளையும் உட்பூசல்களையும்தான் தோற்றுவிக்கும் என்று மக்களிடம் கூறப்படுகிறது.
ஆதிக்க வகுப்பினரின் போக்கு இத்தகையதாக இருக்கிறது. ஜப்பானிலுள்ள ஆதிக்க வர்க்கத்தினருடன் ஒப்பிடும்போது இது எவ்வளவு முண்பாடானதாக இருக்கிறது என்பது புலனாகும். இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப் பினர்கள் தேசியத்திற்கான தங்களது சலுகைகளை தியாகம் செய் வதற்குப் பதிலாக அவற்றைப் பாதுகாப்பதற்காக அந்த தேசியத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர்கள் தங்களது அதி காரத்தைத் துறப்பதற்கு மறுப்பது மட்டுமன்றி கீழ்மட்ட வகுப்பினர் கள் முன்வைக்கும் அரசியல் கோரிக்கைகளைக் கண்டு எள்ளி நகை யாடவும் செய்கின்றனர். கீழ்மட்ட வகுப்பினர்களின் கோரிக்கை அபத்தமானது, நகைப்புக்கிடமானது என்று காட்டும் பொருட்டு அது குறித்த கீழ்த்தரமான வருணனைகளையும், நையாண்டிச் சித்திரங்களையும் படைக்கும் அளவுக்கு ஆதிக்க வகுப்புகளைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் சென்றுள்ளனர்.
[டாக்டர் ஆர்.பி. பராஞ்ச்பே எழுதிய நையாண்டிச் சித்திரம் 1926ஆம் ஆண்டு மே மாதம் குஜராத்தி பஞ்ச் என்னும் சஞ்சிகையில் “எதிர்காலம் குறித்த ஒரு கண்ணோட்டம்” என்னும் தலைப்பில் வெளியாயிற்று. வகுப்புவாரி ஒதுக்கீட்டுக் கோட்பாட்டின்கீழ் நடந்ததாகக் கற்பனை செய்யப்பட்ட சில சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு தீட்டப்பட்ட ஒரு கேலிச் சித்திரம் இந்தக் கட்டுரை. இந்த சஞ்சிகை எல்லோருக்கும் எளிதாக கிடைப்பது சாத்தியமில்லையாதலால் அதில் வெளிவந்த கட்டுரையை இங்கு தருகிறேன்:-
’எதிர்காலம் குறித்த ஒரு கண்ணோட்டம்’
1930-1950 ஆம் ஆண்டுகளுக்கு இடையே வெளியிடப்பட்ட கமிஷன்களின் அறிக்கைகள், காவல்துறை ஆவணங்கள், நியாயமற்ற விசாரணைகள், சட்ட மன்ற நட வடிக்கைகள், நிர்வாக அறிக்கைகள் முதலியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட பின் கண்ட பகுதிகள் குஜராத்தி பஞ்ச்சின் வாசகர்களுக்காகப் பிரத்தியேகமாக இங்கு வெளியிடப்படுகின்றன.
I
இந்தியா அரசாங்கம் பற்றிய ராயல் கமிஷன் அறிக்கை, 1930:
இந்தியாவிலுள்ள பல்வேறு வகுப்பினர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மகஜரை நாங்கள் மிக நுணுக்கமாகப் பரிசீலித்தோம். எங்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் சமீபத்திய சென்சஸின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஓரளவுதான் ஏற்கமுடியும். ஏனென்றால் பல்வேறு வகுப்பினர்கள் தரும் எண்ணிக்கை குறித்து ஒரு பொது உடன்பாடு இல்லாததால், இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவருமே அரசாங்கத்தில் இடம் பெற்றாலொழிய ஓர் அரசாங்க எந்திரத்தை உருவாக்கும் பிரச்சினைக்கு முற்றிலும் துல்லியமான தீர்வு காண்பது சாத்தியமல்ல. 2375ஐ அரசியலமைப்பின் அடிப்படை எண்ணாக நாங்கள் நிர்ணயிக்கிறோம்; எங்கள் அறிக்கையின் அட்டவணையில் காட்டப்பட்டிருக்கும் பல்வேறு வகுப்பினரிடையே இந்த எண்ணிக்கை பகுதி பகுதியாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
ஒவ்வொரு வகுப்பினரின் கோரிக்கைகளும் இனிமேல் அதன் முறையான எண்ணால் குறிப்பிடப்படும்; எல்லா நியமனங்களும், பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர் பதவிகளும், இன்னும் சொல்லப்போனால் நாட்டிலுள்ள சகலமுமே அட்டவணையில் காட்டப்பட்டிருக்கும் விகிதாச்சாரத்தின்படி முடிந்தளவு வழங்கப்படும். வைசிராயின் நிர்வாகக் குழு 475 உறுப்பினர்களைக் கொண்ட்தாக இருக்கும்; ஒவ்வொரு வகுப்பினருக்குமுரிய எண்ணிக்கையில் ஐந்திலொரு பங்கினர் வீதம் இவர்கள் பொறுக்கியெடுக்கப்படுவார்கள்; மூன்று உறுப்பினர்கள் வீதம் ஒராண்டுக்காலத்துக்குப் பதவி வகுப்பார்கள்; இதன் மூலம் ஒவ்வொரு வகுப்பினரும் ஐந்தாண்டுகளுக்குள் தங்கள் பங்கை எய்திவிடுவார்கள். உயர் நீதிமன்றத்தில் 125 நீதிபதிகள் இருப்பார்கள். ஒவ்வொரு நீதிபதியும் ஐந்தாண்டுக்காலம் பதவி வகிப்பார். ஆனால் இந்த ஏற்பாட்டின்படி ஒவ்வொரு பிரிவினரும் தமக்குரிய பங்கை அடைவதற்கு 19 ஆண்டுக்காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். இதர நியமனங்களும் இம்மாதிரியே நிர்ணயிக்கப்படும்.
இந்த எண்ணிக்கைகளின் அடிப்படையில் எல்லா அமைப்புகளும் முறைப்படி செயல்பட வேண்டுமானால், இதற்கேற்ற முறையில், தற்போதுள்ள கட்டிடங்களை இடித்துத் தள்ளி புதிய கட்டிடங்களைக் கட்ட வேண்டியிருக்கும்.
II
(இந்திய அரசாங்கத்தின் அறிவிப்பு, 1932)
1931 ஆம் வருட இந்திய அரசாங்கச் சட்டவிதிகளின்படி மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் பின்கண்ட 475 கனவான்களை கவர்னர் – ஜெனரலின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக நியமிக்கிறார்:
267. மத்தாதின் ராம்தின் (சாதி நாவிதர்) மருத்துவ இலாகாவின் அறுவைச் சிகிச்சைப்பிரிவுக்கப் பொறுப்பேற்கும் உறுப்பினர்.
372. அல்லாபக்ஸ் பீர்பக்ஸ் (முகமதியர் ஒட்டகம் ஒட்டுபவர்) படைத்துறையின் ஒட்டகப் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பாளர்.
433. ராமசாமி (சாதி. ஆந்திரா தோட்டி) பொதுப் பணித்துறையின் சாலை சுத்திகரிப்புப் பொறுப்பாளர்.
437. ஜகன்னாத் பட்டாச்சாரியா (குலின்பிராமணர்,புரோகிதர்) பத்திரப் பதிவுத் துறையின் உள்நாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பாளர்.
IV
(எல்லா ஸ்தலஸ்தாபன அரசாங்கங்களுக்கும் கடிதம், 1934)
இந்திய அரசாங்கத்தின் முழு ஒப்புதலுக்கு இணங்க சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தின்படி இனிமேல் ஒவ்வொரு அரசாங்கப் பதவியும் மனுதாரர்களின் தகுதிகள் எவ்வாறிருப்பினும் சுற்றுமுறையில் ஒவ்வொரு வகுப்புக்கும் கிட்டும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்குமாறு எனக்குப் பணிக்கப்பட்டுள்ளது.
V
(பம்பாய் அரசாங்க பதிவேட்டின் அறிவிப்பு, 1934)
பம்பாய் அரசாங்கம் பின்கண்ட நியமனங்களை டிசம்பரில் செய்ய முடிவு செய்துள்ளது. பல்வேறு நியமனங்களுக்கான மனுதாரர்கள் 1934 நவம்பர் 24ஆம் தேதியிட்ட ஆணை எண்... பிரகாரம் அரசாங்கம் நிர்ணயித்துள்ள அன்று முறைப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கும் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
1. நீர்ப்பாசனத் தலைமைப் பொறியாளர் (சிந்து): வட கனராவைச் சேர்ந்த குன்பி சாதி.
2. சமஸ்கிருதப் பேராசிரியர், எல்பின்ஸ்டன் கல்லூரி, பம்பாய்: சிந்துவைச் சேர்ந்த பலுச்சி பட்டாணியர்.
3. மேதைகைய ஆளுநரது மெய்க்காவற்படைத் தளபதி: வட குஜராத்தைச் சேர்ந்த மார்வாரி.
4. அரசாங்கக் கட்டிடக் கலை ஆலோசகர்: தக்காணத்தைச் சேர்ந்த வதாரி (சுற்றித் திரியும் ஜிப்ஸி).
5. இஸ்லாமியப் பண்பாட்டு இயக்குநர்: கர்ஹதா பிராமணர்.
6. உடல் உறுப்புகள் அமைப்பியல் பேராசிரியர்: (கிராண்ட் மருத்துவக் கல்லுரி), முகமதிய கசாப்புக் கடைக்காரர்.
7. எரவாடா சிறையின் கண்காணிப்பாளர்: கந்திச்சோர்.
8. இரண்டு மதுவிலக்கு அமைப்பாளர்கள்: தராலா (கைரா மாவட்ட பில்) (பஞ்ச்மஹால்).
VI
(ஓர் உயர்நீதிமன்ற வழக்கு பற்றிய விவரம், 1934)
ஏ.பி என்பவன் (சாதி தெலி) தன் தந்தை ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது அவரைப் படுகொலை செய்துவிட்டான் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தான். நீதிபதி குற்ற விவரங்களை எடுத்துரைக்க, ஜுரர்கள் அவன் குற்றவாளி என்று தீர்ப்பளித்தனர். நீதிபதி தீர்ப்பை அறிவிக்கும் முன்னர் குற்றவாளியின் வழக்குரைஞரிடம் அவர் ஏதேனும் கூ விரும்புகிறாரா என்று கேட்டார். வழக்குரைஞர் திருவாளர் பொம்மன்ஜி தீர்ப்பை தாம் ஏற்பதாகக் கூறினார். ஆனாலும் குற்றவாளியை சட்டப்படி எவ்வகையிலும் தண்டிக்க முடியாது, தூக்குதண்டனை அளிப்பது பற்றி சொல்லவே வேண்டாம் என்று அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இதற்கான காரணங்களையும் விளக்கினார்: அதாவது நடப்பு ஆண்டில் ஏற்கெனவே ஏழு தெலிகள் தண்டிக்கப்பட்டு விட்டனர்: இவர்களில் இரண்டு பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் சட்டப்படி இதர பல வகுப்பினர்கள் இன்னமும் தங்கள் கோட்டாவைப் பூர்த்தி செய்யாதபோது தெலிகள் ஏற்கெனவே தங்கள் ‘கோட்டா’க்களைப் பூர்த்தி செய்து விட்டனர். எனவே, இந்தக் குற்ற வாளியைத் தண்டிக்க முடியாது என்று வாதாடினார். எதிர்வாதி வழக்குரைஞரின் வாதத்தை ஏற்று குற்றவாளியை நீதிபதி விடுதலை செய்தார்.
VII
(’இந்தியன் டெய்லி மெயில்’ பத்திரிகையிலிருந்து ஒரு செய்தி, 1936)
அன்னாஜி ராமச்சந்திரா என்பவன் (சித்பவன பிராமணன்) கையில் ஒரு நீண்டகத்தியோடு புனாவின் தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தான்; எதிர்ப்பட்டோரை எல்லாம் தாக்கிப் காயப்படுத்திக் கொண்டிருந்தான். குற்றவியல் நடுவர் முன்னர் கொண்டுவந்து நிறுத்தப்பட்டபோது, அவன் அண்மையில் மனநல மருத்துவமனையிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டவன் என்று காவல் துறையினர் அவனை அடையாளம் காட்டினர். பின்னர் மனநலமருத்துவ மனை கண்காணிப்பாளர் சாட்சியம் அளிக்கும்போது, அன்னாஜி ஓர் ஆபத்தான மனநோயாளியாக மூன்ற வருடகாலம் மருத்துவ மனையில் இருந்தான் என்னும், அவனது சாதியான சித்பவன பிராமணர்களுக்காக ‘கோட்டா’ முடிந்து, மற்ற வகுப்பினர் இன்னமும் தங்கள் ‘கோட்டாவை’ பூர்த்தி செய்யாத காரணத்தால் இவனை மேற்கொண்டு மருத்துமனையில் தங்கியிருப்ல்பதற்கு அனுமதிக்க தன்னால் இயலவில்லை என்றும், சித்பவன பிராமணர்களுக்கு விசேட சலுகை எதுவும் தருவதற்கில்லை என்றும், எனவே, மருத்துவத் துறை சம்பந்தமான அரசாங்க ஆணை..... பிரகாரம் அவனை மருத்துவமனையிலிருந்து அனுப்பி விட்டதாகவும் கூறினார். இதன்பேரில் அன்னாஜியை விடுவிக்க குற்றாவியல் நடுவர் உத்தவிட்டார்.
VII
(பம்பாய் மாகாணத்தில் சிறை நிர்வாக அறிக்கையிலிருந்து சில பகுதிகள், 1937)
எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வகுப்புக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள ‘கோட்டா’வை எட்டவில்லை. இந்த ஏற்றத்தாழ்வை சரிசெய்யும் நேக்கத்தோடு சிறைக் கண்காணிப்பாளர் ஏற்கெனவே அரசாங்கத்துக்கு எழுதி அதன் ஆணைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அராசாங்கத்தின் தீர்மானம்: சிறைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரலது இந்தக் கடமைத் தவறுதலை அரசாங்கம் மிகவும் கவலையோடு நோக்குகிறது. பல்வேறு வகுப்பினர்களுக்கு நிர்ணயக்கப்பட்டிருக்கும் ‘கோட்டா’க்களை எட்டுவதற்கு ஏற்றப்படி அந்தந்த வகுப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கைது செய்து சிறையிலடைப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும். கைது செய்வதற்கு போதுமான எண்ணிக்கையில் நபர்கள் கிடைக்கவில்லை என்றால் அதற்கேற்ப சிறையிலிருந்து போதுமான எண்ணிக்கையில் கைதிகளை விடுதலை செய்து ‘கோட்டா’வை சமன் செய்ய வேண்டும்.
IX
(சட்ட மேலவையின் கூட்ட நடவடிக்கைகள், 1940)
திரு. சென்னப்பாவின் கேள்வி: அண்மையில் பாலியில் நடைபெற்ற எம்.ஏ.தேர்வுக்கான பட்டியலில் மாங் – கருடிகளுக்கான ‘கோட்டா’ முறையாகக் காட்டப்படவில்லை என்பது அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதா?
மாண்புமிகு திரு. தாகு ஷராப் (கல்வி அமைச்சர்): மாங்-கருடிஸ் சாதியைச் சேர்ந்த எந்த மாணவரும் எம்.ஏ.தேர்வு எழுத முன்வரவில்லை என்று பல்கலைக் கழகச் செயலர் அறிவிக்கிறார்.
திரு. சென்னப்பா: இத்தகைய ஒரு மாணவர் பரீட்சை எழுத முன்வரும்வரை இந்தத் தேர்வை அரசாங்கம் நிறுத்தி வைக்குமா? பல்கலைக் கழகம் அரசாங்கத்தின் இந்த ஆணையை மீறினால் பல்கலைக் கழகம் மான்யம் நிறுத்தப்படுமா? பல்கலைக் கழகச் சட்டம் திருத்தப்படுமா?
மாண்புமிகு அமைச்சர்: அரசாங்கம் இந்த பரிந்துரையை சாதகமான முறையில் பரிசீலிக்கும் (கரவொலி)
X
(”டைம்ஸ் ஆம் இந்தியா’ பத்திரிகையிலிருந்து ஒரு செய்தி, 1942)
ஜே.ஜே மருத்துவ மனையில் ஓர் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதன் விளைவாக ராம்ஜி சோனு இறந்தபோனது குறித்து விசாரணை செய்யும் பொருட்டு நேற்று மாலை பிண ஆய்வாளர் திரு........ அவசரமாக வரவழைக்கப்பட்டார். டாக்டர் தானு பாண்டவ் (சாதி நாவிதர்) தான்தான் அறுவைச் சிகிச்சை செய்ததாகக் கூறினார். இறந்தவரின் அடி வயிற்றில் காணப்பட்ட ஒரு கட்டியை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்ற தான் முயன்றதாகவும், ஆனால் தனது கத்தி அவரது இருதயத்தைத் துளைத்துவிட்டதாகவும், இதனால் நோயாளி இறந்து விட்டதாகவும் அவர் விவரித்தார்.
இத்தகைய அறுவைச் சிகிச்சையை இதற்கு முன்னர் எப்போதேனும் செய்தது உண்டா என்று கேட்கப்பட்டபோது, தனது வகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நிரப்புவதற்காக முன்தினம்தான் இந்த மருத்துவ மனையின் தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணராக தான் நியமிக்கப்பட்டதாகவும், சவரம் செய்ய சவரக்கத்தியைப் பயன்படுத்தியதைத் தவிர இதற்கு முன்னர் ஒருபோதும் அறுவைச்சிகிச்சை கருவியை தான் பயன்படுத்தியதே இல்லை என்றும் தெரிவித்தார். தற்செயலாக நிகழந்த மரணம் என்று ஜுரர்கள் தீர்ப்பளித்தனர்).]
இத்தகைய கேலிக் சித்திரங்களில் ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு தற்போது இந்திய ஹைகமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கும் டாக்டர் ஆர்.பி. பரஞ்ச்பேயின் கைவண்ணத் திலிருந்து தோன்றியதாகும். டாக்டர் பராஞ்ச்பே போன்ற ஒரு முற் போக்காளர் இத்தகைய கருத்துகளை எவ்விதம் வளர்த்துக் கொண்டுள்ளார் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.
இத்தகைய கோரிக்கைகளை முன்வைக்கும் கீழ்மட்ட வகுப்பினர்கள் மட்டிகளாக அல்லாவிட்டாலும் கோணல் புத்தி உடையவர்கள் என்ற கருத்தையே இந்தக் கேலிச் சித்திரங்கள் வழங்குகின்றன; அதேசமயம் கீழ்மட்ட வகுப்பினர்களின் கோரிக்கைகளை எதிர்க்கும் ஆதிக்க வகுப்பினர் நாட்டில் ஒரு திறமையான நிர்வாக அமைப்பை உருவாக்கப் பாடுபடுகின்றனர் என்றும், இதன் பொருட்டு ஒவ்வொரு இடமும், பதவியும் மிகச் சிறந்தவர்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர் என்றும் இவை படம் பிடித்துக் காட்டுகின்றன. மிகச் சிறந்தவருக்குப் பதிலாக அதற் கடுத்த சிறந்தவரும் அந்தச் சிறந்தவருக்குப் பதிலாக சுமாரானவரும், அந்த சுமாரானவருக்குப் பதிலாக மோசமானவரும் தேர்ந்தெடுக்கப் படும் விதத்தில் எதையும் செய்துவிடக்கூடாது என்ற கோட்பாடு குறித்து எவரும் ஆட்சேபம் எழுப்ப முடியாது.
ஆனால் இந்த வாதம் சரியானதென மெய்ப்பிக்க முற்றிலும் தவறிவிடுகிறது. ஏனென்றால் இந்தியாவின் பிரத்தியேக வரலாற்றுச் சூழ்நிலைகளில், நடை முறையில் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கப்படும் “மிகச் சிறந்த மனிதன்” எப்போதும் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்தவனாகவே இருப் பதைப் பார்க்கிறோம். ஆதிக்க வகுப்பினரின் கண்ணோட்டத்தி லிருந்து பார்க்கும்போது இது சரியானதாக இருக்கலாம். ஆனால் கீழ்ப்பட்ட வகுப்பினர்களின் கண்ணோட்டத்திலிருந்து நோக்கும்போது இது சரியானதாக இருக்க முடியுமா? “மிகச்சிறந்த” ஜெர்மன் “மிகச் சிறந்த” பிரேஞ்சுக்காரனாக இருக்க முடியுமா? “சிறந்த” துருக்கியன் ‘சிறந்த’ கிரெக்கனாக இருக்க முடியுமா? “சிறந்த” போலந்துக்காரன் யூதர்களால் “சிறந்த” வனாகக் கருதப்பட முடியுமா? இந்தக் கேள்விகளுக்கான சிறந்த பதில் எதுவாக இருக்க முடியும் என்பதில் எவருக்கும் எத்தகைய ஐயமும் இருக்க முடியாது. மனிதன் என் பவன் ஒரு வெறும் எந்திரம் அல்ல. சிலரிடம் அனுதாபமும் வேறு சிலரிடம் வெறுப்புணர்வும் கொள்ளக்கூடிய ஒர் மனித ஜீவன் அவன், மிகச் “சிறந்த” மனிதனுக்கும் கூட இது பொருந்தும். அவனிடமும் சில வகுப்பினரிடம் அனுதாப உணர்வும் வேறு சில வகுப்பினரிடம் வெறுப்பு உணர்வும் காணப்பட வாய்ப்பு உண்டு.
இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டு பார்க்கும்போது, ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த “மிகச் சிறந்த” மனிதன் கீழ்மட்ட வகுப்பினர்களின் கண்ணோட்டத்தில் மிக மோசமானவனாக கருதப்படக்கூடும். பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள மனப்போக்குகள் விஷயத்தில் ஆதிக்க வகுப்பினர் களுக்கும் கீழ்மட்ட வகுப்பினர்களுக்கும் இடையேயான வேறுபாடு ஒரு தேசத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு தேசத்தைச் சேர்ந்தவரிடம் காட்டும் மனப்போக்கில் காணப்படும் வேறுபாட்டை ஒத்ததாகும். கீழ்மட்ட வகுப்பினரின் கோரிக்கைகளை எள்ளி நகையாடும் ஆதிக்க வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை மறந்து விடுகிறார்கள்.
அதாவது இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர்களுக்கும் கீழ்மட்ட வகுப்பினர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு பிரெஞ் சுக்காரர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும், துருக்கியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் அல்லது போலந்தியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு போன்றதே என்பதையும், ஒரு வகுப் பினர் மற்றா வகுப்பைச் சேர்ந்த அரசாங்கத்தை அது எவ்வளவு மிகச் சிறந்தவர்களைக் கொண்டிருந்தாலும் ஏற்க ஒப்பாததற்கான கார ணங்கள் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியானவைதான் என்பதை யும் இவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறி விடுகிறார்கள்.
கீழ்மட்ட வகுப்பினரின் கோரிக்கையை ஏளனம் செய்யும் தங்கள் முயற்சியில் எத்தகைய வழிகளில் தங்களது அதிகாரத்தைக் கட்டி வளர்த்துக் கொண்டவர் என்பதையும் ஆதிக்க வகுப்பினர் மறந்து விடுகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த மனு ஸ்மிருதியையே படித்துப் பார்க்கட்டும். டாக்டர் பராஞ்ச்பே கற்பனையாகத் தெரி வித்துள்ள தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழிகளிலேயே இவர்கள் தங்கள் அதிகாரத்தை கட்டமைத்துக் கொண்டதைக் காண் பார்கள். ஆதிக்க வகுப்பில் தலைமையான, பிரதானமான இடம் வகிக்கும் பிராமணர்கள் தங்களது அறிவாற்றலின் வலிமையால் - அறிவாற்றல் என்பது எவரது ஏகபோக உரிமையுமல்ல – அரசியல் அதிகாரத்தைப் பெறவில்லை, மாறாக முற்றிலும் வகுப்புவாதத் தின் அடிப்படையிலேயே அதனைப் பெற்றனர் என்பதை மனு ஸ்மிருதியே எடுத்துக் காட்டுகிறது.
மனுஸ்மிருதியின் விதிகளின்படி புரோகிதர், அரசரின் குடும்ப குரு, பிரதான அமைச்சர், தமைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் முதலான பதவிகள் எல்லாம் பிராமணர்களுக்கே ஓதுக்கப்படுகின்றன. பிரதம தளபதி பதவி பிராமணர்களுக்கு ஒதுக்கப்படாவிட்டாலும் இப்பதவிக்கு பிராமணன் முற்றிலும் தகுதியானவன், பொருத்தமானவன் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கேந்திரமான பதவிகள் யாவும் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்ட நிலைமையில், எல்லா அமைச்சர் பதவிகளும் அவர்களுக்கே ஒதுக்கப்பட்டன என்பதைக் கூறத் தேவையில்லை. இது மட்டுமல்ல, ஆதாயமும் அதிகாரமும் அளிக்கக்கூடிய பதவிகள் தனது வகுப்புகள் ஒதுக்கப்பட்டதுடன் பிராமணன் திருப்தியடைந்து விடவில்லை. வெறும் ஒதுக்கீடு மட்டும் போதாது என்பதை அவன் அறிவான். தன்னைப் போலவே இந்தப் பதவி களை வகிப்பதற்கு முற்றிலும் தகுதிபடைத்தவர்கள் இதர பிராமண ரல்லாத வகுப்பினரிடமிருந்து தோன்றி, இந்த ஒதுக்கீட்டு முறை யையே அவர்கள் தகர்த்தெறிந்து விடாதபடி அவன் தடுத்தாக வேண்டும்.
எல்லா அரசாங்க நிர்வாகப் பதவிகளும் பிராமணர் களுக்கு ஒதுக்கப்பட்டதோடு, கல்வி வசதி பெருவதை பிராமணர் களின் ஏகபோக உரிமையாக்குவதற்கு வகை செய்யும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. நாம் ஏற்கெனவே கூறியது போல் இந்த சட்டத்தின் பிரகாரம் இந்து சமுதாயத்தின் அடிமட்டத்திலுள்ள சூத்திரர்கள் கல்வி கற்பது ஒரு கடுமையான குற்றமாக்கப்பட்ட்து. இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் காட்டுமிராண்டித்தனமான, மனிதத் தன்மை யற்ற, குரூரமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்; அவர் களது நாக்குகள் துண்டிக்கப்பட்டன; அவர்களது செவிகளில் காய்ச்சிய ஈயம் ஊற்றப்பட்டது. இத்தகைய சலுகைகள் எல்லாம் இப் போது பிராமணர்களுக்கு இல்லை என்று குறி காங்கிரஸ்காரர்கள் தப்பித்துக் கொண்டுவிட முடியாது. இந்த சலுகைகள் இப்போது மறைந்து விட்டாலும் அவற்றின் மூலம் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக அவர்கள் அனுபவித்து வந்த அனுகூலங்கள் இன்னமும் நீடிக் கவே செய்கின்றன என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண் டும்; இதைத்தவிர வேறு வழியில்லை.
மிகவும் மோசமான வகுப்பு வாத முறைகளைக் கைக்கொண்டுதான் பிராமணர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்பதை முற்றிலும் அறிந்துள்ள காங்கிரஸ்காரர்கள் கீழ்மட்ட வகுப்பினர்கள் முன்வைக்கும் கோரிக்கையை வகுப்பு வாதம் என்று கூறி நிராகரிப்பது நேர்மையாகும்? மேலும், கீழ்த் தட்டு வகுப்பினர்கள் தங்களுக்குப் பாதுகாப்புகள் வேண்டும் என்று இன்று கோரும் நிர்ப்பந்த நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்றால் அதற்கு என்ன காரணம்? பிராமணர்கள் தாங்கள் அனுபவித்து வரும் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, கீழ்த்தட்டு வகுப்பினர் கல்வி கற்பதையும், சொத்துகள் வைத்திருப்பதையும் ஒரு குற்றமாக்கக் கூடிய சட்டங்களை இயற்றியதால்தான் கீழ்த் தட்டு வகுப்பினர்கள் தங்களுக்குப் பாதுகாப்புகள் கோரும் நிலைமைக் குத்தள்ளப்பட்டுள்ளனர் என்பதை மறுக்க முடியுமா, மறைக்க முடியுமா? தங்களது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கும், தங்களது ஆதிக்கத்தை நிரந்தரமாக நிலைநிறுத்திக் கொள்வதற்கும் பிராமணர்கள் செய்ததுடன் ஒப்பிடும்போது அடிமட்ட வகுப்பினர் களின் கோரிக்கைகள் எவ்விதம் நியாயமற்றவையாக முடியும்?
இதுவரை நாம் கூறியவற்றிலிருந்து ஆதிக்க வகுப்பினர் களின் தலைமையில் நடைபெறும் சுதந்திரப் போராட்டம் கீழ்மட்ட வகுப்பினர்களின் கண்ணோட்டத்தில் ஒரு மோசடி போராட்டமாக அல்லாவிட்டாலும் ஒரு சுயநலப் போராட்டமாகவே அமைந் துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகும். இந்தியாவிலுள்ள ஆதிக்க வர்க்கம் போராடும் சுதந்திரம் அடிமட்ட வகுப்பினர்களை ஆள் வதற்கான சுதந்திரமேயாகும். அடிமட்டத்திலுள்ள இனத்தை மேல் மட்டத்திலுள்ள இடம் ஆளும் சுதந்திரத்தையே அது விரும்பு கிறது. நலியுற்றவனை வலிமை மிக்கவன் ஆளும் நாஜி அல்லது நீட்ஷியன் சித்தாந்தமே தவிர இது வேறல்ல.
VIII
இந்திய அரசியலையும், அது செல்லும் திசைவழியையும் தெரிந்து கொள்ளவும், அதனால் எழக்கூடிய பிரச்சினைக்கு தீர்வு காண உதவவும் விரும்பும் அயல்நாட்டவர் இந்திய அரசியலுக்குப் பின்னாலுள்ள அடிப்படையான அம்சங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். இவற்றை அவர் முழு அளவுக்குக் கிரகித்துக் கொள்ளத் தவறினால் கடலில் திக்குதிசை தெரியாமல் தவிப்பவரைப் போல் ஆகிவிடுவார்; அவரைத் தனது வலைக்குள் வீழ்த்துவோரின் எடுப் பார் கைப்பிள்ளையாகி விடுவார்; ஆட்டுவித்தபடி ஆடும் தலை யாட்டிப் பொம்மையாகி விடுவார். இந்திய அரசியலின் அடிப் படையான அம்சங்கள் வருமாறு: (1) கீழ்மட்ட வகுப்புகள் சம்பந்த மாக ஆளும் வகுப்பினர் கடைப்பிடிக்கும் சித்தாந்தமும் கண் ணோட்டமும்; (2) ஆளும் வகுப்பினர்களுக்கும் காங்கிரசுக்முள்ள உறவு; (3) அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் வேண்டுமென கீழ்மட்ட வகுப்பினர்கள் முன்வைத்துள்ளா அரசியல் கோரிக்கைகளுக் கான மூல காரணங்கள்.
முதலாவது அம்சத்தைப் பொறுத்தவரையில், அயல்நாட் டவர் இது குறித்து தனது சொந்தக் கருத்தை உருவாக்கிக் கொள்ளும் அளவுக்கு போதிய விவரங்கள் ஏற்கெனவே தரப்பட்டுள்ளன. அவ சியமான தகவல்களுடனும் வாதங்களுடனும் இங்கே நான் முன் வைக்க முயலும் கோட்பாடு மிக எளிதானது. அஒது பின்வருமாறு கூறிகிறது: முழு அரசிரிமை படைத்த, சுதந்திர இந்தியா முற்றிலும் வேறுபட்டதொரு புதுமையான இந்தியாவாக, உலகமே வியந்து போற்றும் இந்தியாவாக இருக்க வேண்டுமானால், ஆதிக்க வகுப் பினருக்குத் தொண்டூழியம் புரியும் ஓர் அடிமைத்தனமான வகுப்பினர் இல்லாதிருக்கும் ஒரு புதுமையான இந்தியா பூத்து மலர வேண்டுமானால், ஆதிக்க வகுப்பினர் அதிகாரத்தைக் கைப்பற்று வதற்கான ஆற்றலை மட்டுப்படுத்தக் கூடிய, இது சம்பந்தமாக முறை யான பாதுகாப்புகளை அளிக்கக் கூடிய, ஆதிக்க வகுப்பினரின் கொள்ளைக்காரத்தனமான அதிகார வெறிக்கு லகான் போடக்கூடிய ஓர் அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும்.
இதைத்தான் தீண்டாப்படாதவர்கள் நெடுகிலும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்; இதைத்தான் காங்கிரஸ் விடாப்பிடியாக எதிர்த்து வருகிறது. காங் கிரசுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையேயான சர்ச்சை முழு வதுமே அரசியல் சட்டப் பாதுகாப்புகள் பிரச்சினையைத்தான் மைய மாகக் கொண்டிருக்கிறது. இங்குள்ள பிரச்சினை இதுதான்: இந்தியாவின் அரசியலமப்புச் சட்டம் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு பாதுகாப்பு களுடன் கூடியதாக இருக்க வேண்டுமே, பாதுகாப்புகள் இல்லாததாக இருக்க வேண்டுமா? அயல்நாட்டவர் இதுதான் பிரச்சினை என்பதை உணர்ந்திருக்கவில்லை; காங்கிரசின் பிரதிநிதித்துவத் தன்மை இந்தப் பிரச்சினைக்கு முற்றிலும் சம்பந்தமில்லாதது என்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை.
காங்கிரஸ் பிரதிநிதித்துவமுள்ள அமைப்பாக இருக்கலாம்; ஆனால் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஷெட் யூல்டு வகுப்பினருக்கு பாதுகாப்புகளைக் கொண்டதாக இருக்க வேண் டுமா, வேண்டாமா என்ற பிரச்சினையைத் தீர்மானிப்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் பிரச்சினையைத் தீர் மானிக்கும் விஷயம் காங்கிரசின் பிரதிநிதித்துவத் தன்மைக்கு முற்றி லும் அப்பாற்பட்டதொன்று. இந்த முடிவு தேவைகளை அடிப்படை யாகக் கொண்டதாகவே இருக்க முடியும்; இங்கு எழும் கேள்வி இது தான்: ஷெட்யூல்டு வகுப்பினர் கோரும் பாதுகாப்புகள் அவர்களுக்குத் தேவைதானா, அவசியம்தானா? காங்கிரஸ் பிரதிநிதித்துவம் வாய்ந்த அமைப்பு என்ற காரணத்துக்காக ஷெட்யூல்டு வகுப்பினருக்கு எதிராக காங்கிரசை அயல்நாட்டவர் ஆதரிப்பது நியாயமல்ல.
பாதுகாப்புகள் தங்களுக்குத் தேவை என்பதை நிரூபிக்குமாறு அயல்நாட்டவர் ஷெட்யூல்டு வகுப்பினரைக் கேட்டால் அதில் நியாயமிருக்கிறது. இந்தியாவில் ஆதிக்க வகுப்பு இருந்து வருவதாகக் கூறுவது மட்டும் போதாது, மாறாக வயதுவந்தோர் வாக்குரிமை சக்திகளுக்கும் அடி பணிந்து போகாத அளவுக்கு தன்மை வலுப்படுத்திக் கொண்டுவிட்ட இழிந்த, வெறுக்கத்தக்க, பழிபாவத்துக்கு அஞ்சாததாக இந்த ஆதிக்க சக்தி விசுவரூபம் எடுத்துள்ளது என்பதை மெய்ப்பித்துக் காட்ட வேண் டும் என்று அவர் கோருவதிலும் கூடத் தவறில்லை. இத்தகைய நிலையை அயல் நாட்டவர் மேற்கொள்வது முறையானதே: ஷெட் யூல்டு வகுப்பினர்கள் இதனை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.
உண்மையில், உலகின் இதர நாடுகளில் ஆதிக்க வகுப்பினர் வகிக்கும் நிலைக்கு மாறுபட்டதொரு நிலையை இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் வகித்து வருகிறார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஏனைய நாடுகளில் ஆதிக்க வகுப்பினருக்கும் மற்ற வர்களுக்கும் இடையே நிலவுவது அதிகப் பட்சம் பிரிவினை; இரு சொற்களைப் பிரித்துக் காட்டுவதற்கு ‘ஹைபன்’ என்னும் கோடு போடுகிறோமோ அது போன்றது இது. ஆனால் இந்தியாவிலோ இவ்விரு தரப்பினருக்குமிடையே வானெட்டும் ஒரு தடை மதிலே, தடுப்பே எழுந்து நிற்கிறது. ‘ஹைபன்’ என்பது பிரிவினை மட்டும்தான்; ஆனால் தடுப்பு என்பதோ நலன்களும், உணர்ச்சி ஒருமைப்பாடும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட ஒன்று.
மற்ற நாடுகளில் ஆதிக்க வர்க்கம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது; அந்த வர்க்கத்தில் ஏற் கெனவே இருந்திராதவர்கள் ஆனால் அதற்கு இணையாக உச்ச நிலையை அடைந்திருப்பவர்கள் இப்போது அதில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால் இந்தியாவில் ஆதிக்க வகுப்பினர் மற்றவர்களுக்குக் கதவு மூடப்பட்டுவிட்ட அமைப்பினராவர்; அந்த வகுப்புக்குள் பிறக்காத எவரும் அதில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த வேறுபாடு மிக முக்கியமானது. ஆதிக்க வகுப்பு எங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமே உரித்தானதாக இருக்கிறதோ அங்கு பாரம்பரியமும், சமூக சித்தாந்தமும், சமூகக் கண்ணோட்டமும் உடைபடாதவையாக இருக்கும்; எசமானர்களுக்கும் அடிமை களுக்கும், சலுகை பெற்றவர்களுக்கும் சலுகை பெறாதவர்களுக் கும் இடையேயான வேறுபாடு வடிவத்தில் மாறாததாகவும், சாராம் சத்தில் வலுமிக்கதாகவும் இருந்து வரும்.
ஆனால் அதேசமயம் ஆதிக்க வகுப்பினர் எங்கு ஒரு மூடப்பட்ட காப்பிடம்போல் இல்லாமல், எங்கு அவர்களுக்கும் ஏனையோருக்கும் இடையே சமூக ஒத்துணர்வு நிலகிறதோ அங்கு ஆதிக்க வகுப்பினர் பெரிதும் வளைந்து கொக்கக் கூடியவர்களாகவும் அவர்களது சித்தாந்தம் குறைந்த சமூக விரோதப் போக்குடையாதாகவும் இருக்கும். இந்த வேறுபாடுகள் பற்றிய உண்மையை உணர்ந்து கொண்ட அயல்நாட்டவர் இதர நாடுகளில் ஆதிக்க வர்க்கத்தினரை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு வெறும் வயதுவந்தோர் வாக்குரிமையே போதுமானதாக இருப்பதையும் ஆனால் இந்தியாவில் வயதுவந்தோர் வாக்குரிமையால் அத் தகைய பலனை ஏற்படுத்த இயலாமற் போவதையும் காண்பார்கள். இதனால் சுதந்திர இந்தியாவை ஜனநாயகத்துக்குப் பெரிதும் பாது காப்பானதாக ஆக்கும் ஆர்வத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் கூடுதல் பாதுகாப்புகளைக் கோரிவரும் தீண்டப்படாதவர்கள் போன்ற வர்கள் இந்தப் பாதுகாப்பை எதிர்த்து வருபவர்களும், சுதந்திர இந்தி யாவை ஆதிக்க வகுப்பினர் கைகளில் தாரை வார்த்திட எண்ணியுள்ள காங்கிரசை விடவும் அதிக ஆதரவு பெற வெகுவாகத் தகுதியுடைய வர்களாகின்றனர்.
அடுத்து, இரண்டாவது அம்சம் குறித்து குழு விவரங்களும் அயல் நாட்டவர் கண்முன்னே இருக்கின்றன. இவற்றிலிருந்து காங் கிரசுக்கும் ஆதிக்க வகுப்பினருக்கும் இடையே எவ்வளவு நெருங்கிய ஒட்டும் உறவும் உள்ளது என்பதை அவர் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். இதேபோல், இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் தங்களை காங்கிரசின் முன்னணிப்படையினராக ஏன் கருதுகின்றனர் என்பதற்கும், எல்லோரையும் காங்கிரசின் அரவணைப் பிற்குள் கொண்டு வருவதற்கு அவர்கள் ஏன் அயராது பாடுபட்டு வருகின்றனர் என்பதற்கும் இதில் விளக்கம் காணமுடியும். இரத்தினச் சுருக்க மாகக் கூறினார், வகுப்பு சித்தாந்தம், வகுப்பு நலன்களை, வகுப்புப் பிரச்சினைகள், வகுப்பு மோதல்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் தனக்கு சாவுமணி அடிக்கும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு உணர்ந்துள்ளது.
கீழ் வகுப்புகளைத் திசை திருப்புவதற்கும் அவற்றை ஏமாற்றுவதற்கும் மிகச் சிறந்த வழி தேசிய உணர்வையும், தேச ஒற்றுமையையும் நன்கு பயன்படுத்திக் கொள்வதுதான் என்பதை அது நன்கு அறியும். ஆதிக்க வகுப்பின் நலன்களைப் பெரிதும் பயனுள்ள முறையில் பாதுகாப்பதற்கு ஒரே மேடை காங்கிரஸ் மேடைதான் என்பதையும் அது தெரிந்து வைத் துள்ளது. பணக்காரனுக்கும் ஏழைக்கும், பிராமணனுக்கும் பிராமண னல்லாதவனுக்கும், நிலப்பிரபுவுக்கும் குத்தகைக்குப் பயிர் செய் பவனுக்கும், லேவாதேவிக்காரனுக்கும் கடன்பட்டவனுக்கும் இடையே உள்ள மோதல்களைப் பற்றிப் பேசுவது ஆதிக்க வகுப் புக்குப் பிடிக்காத விஷயம்.
இவற்றைப் பற்றி எல்லாம் பேசமுடியாத ஒரு மேடை இருக்க முடியுமானால் அது காங்கிரஸ் மேடையாகத் தான் இருக்க முடியும். இத்தகைய மேடையில் தேசியத்தையும் தேச ஒற்றுமையையும் பற்றித்தான் பிரசாரம் செய்ய முடியும். இதன் மேடையிலிருந்து தேசியத்துக்கு முரண்பாடான வேறு எதையும் பிர சாரம் செய்ய முடியாது. இதைத்தான் ஆதிக்க வகுப்பு விரும்புகிறது. இதில்தான் அதன் பாதுகாப்பு முழுவதுமே அடங்கியுள்ளது.
இந்த இரண்டு அம்சங்களையும் கிரகித்துக் கொண்டு விட் டால் மூன்றாவது அம்சத்தை அதாவது கீழ்த்தட்டு வகுப்புகளின் அரசியல் கோரிக்கைகளுக்கான மூல காரணங்களைப் புரிந்து கொள் வதில் அயல்நாட்டவருக்கு எந்தச் சிரமமும் இருக்காது.
கீழ்த்தட்டு வகுப்புகள் கோரும் தனி இட ஒதுக்கீடுகள் ஆதிக்க வகுப்பார்களின் அதிகாரத்தை உண்மையில் கட்டுப்படுத்துகின்றன. ஐரோப்பிய நாடுகளில்கூட சமுதாயத்தில் சில பிரிவினரது அதிகாரங் களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கை இருந்து வருகிறது. உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், லேவாதேவிக் காரர்கள், நிலப்பிரபுக்கள் போன்றோர் மீது கட்டுப்பாடு இருக்கிறது. இந்தியாவில் இருப்பதைவிட நலன்கள் பெரிதும் ஒருபடித்தானவை யாகவும், ஒரே மாதிரியானவையாகவும் இருக்கும் நாடுகளில் சில வர்க்கங்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை பாராட்டுவதில் அயல்நாட்டவ ருக்கு சிரமம் ஏதும் இருக்காது. இத்தகைய பாதுகாப்புகள் அரசியல் அதிகாரம் ஆதிக்க வகுப்பாரின் கைகளில் சிக்கிவிடுவதைத் தடுக்கும் பொருட்டு அரசியலமைப்பை சமூக அமைப்புகளுடன் பரஸ்பரம் தொடர்புடையதாக்க வகை செய்கின்றன.
இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள கண்ணோட்டத்தை அயல் நாட்டவர் ஏற்கத் தயாராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இவ்வளவு விளக்கங்களும், விவரங்களும், வாதங்களும் முன்வைக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் பிரசாரத்திற்கு மற்றோரு பக்கம் இருக்கிறது என்பதையாவது குறைந்தபட்சம் ஏற்பதில் அயல் நாட்ட வருக்கு எந்தச் சிரமமும் இருக்கும் என்று நான் நம்பவில்லை. மேலே தெரிவித்த உண்மைகளையும் புள்ளி விவரங்களையும் தெரிந்து கொண்ட பிறகும் காங்கிரஸ் கண்ணோட்டத்தை ஏற்காதவர்கள் பால் அமைதியான, உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காத நடுநிலை உணர்வு கொண்ட ஒரு போக்கை அயல் நாட்டவர் கைக்கொள்ள இயலவில்லை என்றால் அவரது இயல்பையும் விவேகத்தையும் பற்றித் தவறான கருத்தையே மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
IX
இந்திய அரசியல் குறித்த அயல்நாட்டவரின் கண்ணோட்டத்தில் ஒரு வருந்தத்தக்க அம்சம் இருக்கிறது; அதனை இங்கு குறிப்பிடாமல் இருப்பது சாத்தியமல்ல, இந்திய அரசியலில் ஆர் வமும் அக்கறையும் கொண்டிருக்கும் அயல் நாட்டினரை மூன்று பகுதியினராகப் பிரிக்கலாம். முதல் பகுதியினர் இந்திய அரசியலை அதலகுதலப்படுத்தும் சமூக பிளவுகளையும், பெரும்பான்மையின ருக்கும் சிறுபானமையினருக்கும் இடையேயான பிளவுகளையும், இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையேயான பிளவு களையும் நன்கு அறிந்தவர்கள்.
தகுந்த அரசியல் சட்டப் பாதுகாப்புகள் மூலம் இந்தப் பிளவுகளைச் சரிசெய்துவிடக்கூடாது, அரசியல் சட்ட ரீதியில் இந்தியா முன்னேறுவதற்கு வழி திறந்து விட்டு விடக் கூடாது, மாறாக அரசியல் சட்ட முன்னேற்றத்தை இந்தப் பிளவு களைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதே இவர் களது பிரதான நோக்கம். இரண்டாவது பகுதியினர் இந்தப் பிளவுகள் குறித்து எத்தகைய கவனமும் செலுத்தாதவர்கள்; சிறுபான்மை யினருக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் என்ன நேர்ந்தாலும் அதைப் பற்றி அணுவளவும் கவலைப்படாதவர்கள். அவர்கள் காங் கிரஸ் கோரிக்கையை முற்றிலுமாக ஆதரிப்பவர்கள்; பாதுகாப்பு களைப் பற்றி எவ்வகையிலும் அலட்டிக்கொள்ளாமல் காங்கிரஸ் கோரிக்கையை நிறைவேற்ற சித்தமாக இருப்பவர்கள்.
மூன்றாவது பகுதியினர் இந்தியாவைப் பற்றி ஏதேனும் தெரிந்து கொள்வதற் காக வரும் பயணிகள்; ஒரே நாளில் இந்திய அரசியலைக் கரைத்துக் குடித்து விட்டதாகக் கற்பனை செய்து கொள்பவர்கள். இந்த மூன்று வகையினருமே அபாயகரமானவர்கள். ஆனால் இந்திய மக்களின் இறுதி நலன்கள் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது மூன்றாவது பகுதியினர் மிகவும் அபாயகரமானவர்கள்.
வழிப் போக்கர்கள் போன்ற அயல்நாட்டினரால் இந்திய அரசியலின் நுட்பங்களைப் புரிந்து கொள்ள முடியாது; எனவே, சாம்வெல்லருக்கு திரு. பிக்விக் அறிவுரை கூறியதுபோல் மிகப் பெரும் கும்பலோடு சேர்ந்து கூச்சல் போடும் வகையில் அவர்கள் காங் கிரசை ஆதரிக்கிறார்கள்; இது முற்றிலும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் அடக்கப்பட்டவர்களின் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக் காகப் பாடுபடுவதாகக் கூறிக் கொள்ளும் லாஸ்கி, கிங்ஸ்லே மார்ட்டின், பிரெய்ல்ஸ்போர்டு போன்ற பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர்களும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள இடது சாரிக் குழுக்களின் தலைவர்களும், அமெரிக்கவில் நேஷன், இங்கி லாந்தில் நியூ ஸ்டேட்ஸ்மேன் போன்ற பத்திரிகைகளின் ஆசிரியர் களும் கடைப்பிடிக்கும் போக்குதான் மிகுந்த கவலை தருவதாகவும், அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. இவர்கள் எவ்வாறு காங்கிரசை ஆதரிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிய வில்லை.
காங்கிரஸ் என்றால் ஆதிக்க வகுப்பினர், ஆதிக்க வகுப் பினர் என்றால் காங்கிரஸ் என்பது அவர்களுக்குத் தெரியாதா? இந்தி யாவில் ஆதிக்க வகுப்பினராக இருப்பது பிராமணன் – பனியா கூட்டு தான் என்பது அவர்களுக்குத் தெரியாதா? காங்கிரசில் ஈர்க்கப்படும் மக்கள் ‘காந்திக்கும் காங்கிரசுக்கும் ஜே’ போடும் வெறும் தொண்டர் திருக்கூட்டத்தினரே தவிர காங்கிரஸ் கொள்கையை வகுப்பதில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாதா? எந்தக் காரணங்களால் சுல்தானால் இஸ்லாமை ஒழித்துக் கட்ட முடியாதோ, எந்தக் காரணங்களால் போப்பாண்டவரால் ரோமன் கத்தோலிக்க சமயக் கோட்பாடுகளை மறுதலிக்க முடியாதோ அதே காரணங்களால் இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர்கள் பிராமணீயத்தை ஒழித்துக் கட்ட முன்வர மாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா?
இந்தியாவின் ஆதிக்க வகுப்பினர்கள் இப்போதிருப்பதுபோல் தொடர்ந்து இருந்தால், பிராமணர்களின் மற்றும் அவர்களை ஒத்தவர்களின் மேலாதிக்கத்தைப் பறைசாற்றும் பிராமணீயம், சூத்திரர்களையும் தீண்டப்படாதவர்களையும் அடக்கி ஒடுக்குவதையும் அவர்களை இழிவுப்படுத்துவதையும் அரசின் புனித மான கடமையாக அங்கீகரிக்கும் பிராமணீயம் இந்தியா சுதந்திர மடைந்த பிறகும் அரசின் சித்தாந்தமாகத் தொடர்ந்து இருந்து வரும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?
இந்தியாவின் இந்த ஆதிக்க வகுப்பினர் இந்திய மக்களின் ஒரு பகுதியினர் அல்லவென் பதும், அவர்களிடமிருந்து அறவே தனித்தொதுங்கி இருப்பதோடு, அவர்களால் தங்களுக்குத் தூயமைக் கேடு ஏற்பட்டு விடாதபடித் தனித்தொதுங்கி இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள் என்பதும், அவர்களது அரவணைப்புக்கு வெளியே உள்ளவர்களுக்கு எதிரான நோக்கங்களையும் கருத்துகளையும் பிராமணீய சித்தாந்தத்தின் துணை கொண்டு மக்கள் மனத்தில் திணித்து வருகிறார்கள் என்பதும், தாங்கள் மிதித்துத் துவைத்த அடிமட்ட வகுப்பினர்களிடையே செயல்பட்டு வரும் ஜீவ சக்திகளிடம் எத்தகைய பரிவையும் காட்டுவதில்லை என்பதும், தங்களது ஆர்வ விருப்பங்களுக்கு விரோதமான அவர்களது தேவைகளிலும் கஷ்ட நஷ்டங்களிலும், ஏக்கங்களிலும், விருப்பங் களிலும் ஆதிக்க வகுப்பினர் எத்தகைய அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லை என்பதும் இந்த அயல்நாட்டுத் தலைவர்களுக்குத் தெரியாதா?
அது மட்டுமல்ல, கீழ்தட்டு வகுப்பினர் கல்வித் துறை யில் முன்னேறுவதையும், பதவி உயர்வுகள் பெறுவதையும் ஆதிக்க வகுப்பினர் விரும்பவில்லை என்பதும், தங்களது கௌரவத் தையும் சுயமரியாதையையும் உயர்த்திக் கொள்ளும் நோக்கங்கள் கொண்டு அவர்களது எந்த இயக்கத்தையும் ஆதிக்க வகுப்பினர் எதிர்க்கின்றனர் என்பதும் இந்த அயல்நாட்டினருக்குத் தெரியாதா?
இந்தியாவின் சுயராஜ்யத்தில் 6 கோடி தீண்டப்படாதவர்களின் கதிப் போக்கும், எதிர்காலமும் அடங்கியுள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாதா? சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பற்றி உள்ளம் உருக, உணர்ச்சி பொங்க, ஆவேசமிக்க முறையில் எழுதி, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஊக்கமும் உத்வேகமுமளித்த பிரிட் டிஷ் தொழிற்கட்சித் தலைவர்களுக்கும், கிங்ஸ்லே மார்ட்டினுக் கும், பிரெய்ல்ஸ்போர்டுக்கும் இந்த உண்மைகள் எல்லாம் தெரியாது என்று எவரும் கூற முடியாது. அப்படியிருக்கும்போது அவர்கள் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதைப் பற்றியே எப்போதும் பேசுகிறார்கள்.
தீண்டப் படாதவர்களின் பிரச்சினை பற்றி அவர்கள் விவாதிப்பது மிக மிக அரிது; இத்தனைக்கும் அனைத்து முற்போக்காளர்களும் ஜனநாயக வாதிகளும் தீவிர அக்கறை காட்ட வேண்டிய பிரச்சினை இது. காங் கிரஸ் நடவடிக்கைகளில் அவர்கள் முழுமுதல் அக்கறை காட்டி வருவதும், இந்தியாவின் தேசிய வாழ்வில் இடம் பெற்றுள்ள ஏனைய சக்திகளை அலட்சியம் செய்து வருவதும் அவர்கள் எந்த அளவுக்கு தவறான வழியில் சென்று வருகிறார்கள் என்பதையே காட்டுகிறது. அரசியல் ஜனநாயகத்துக்காக காங்கிரஸ் போராடி வருகிறது என் றால் அவர்கள் காங்கிரசை ஆதரிப்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறுதான் உண்மையில் நடைபெறுகிறதா? காங்கிரஸ் தேசவிடுதலைக்காகப் போராடி வருகிறதே தவிர அரசியல் ஜன நாயகத்தில் அதற்கு அக்கறை இல்லை என்பதை அனைவருமே அறிவர்.
இந்தியாவில் அரசியல் ஜனநாயகத்துக்காகப் பாடுபட்டு வரும் கட்சி தீண்டப்படாதவர்களின் கட்சியேயாகும். பலவீனமான வர்களும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும் மிதித்துத் துவைக்கப்பட்ட வர்களும் அரசியல் சட்டப்பாதுகாப்புகள் அளித்துப் பாதுகாக்கப் பட வேண்டும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் காங்கிரசின் இந்த சுதந்திரப் போராட்டம் வெற்றிபெறுமானால், இந்தப் பரிதாபத்துக் குரிய, நிராதரவான மக்களை மேலும் நசுக்குவதற்கு வலிமையும் அதிகாரமும் கொண்டவர்களுக்கு சுதந்திரமளிப்பதாகவே முடியும் என்று தீண்டப்படாதோர் அஞ்சுகின்றனர். அவர்கள்தான் இந்த முற்போக்கான தலைவர்களின் ஆதரவைப் பெற உரிமை பெற்றிருப் பவர்கள். இவர்களிடமிருந்து ஒரு சிறு நல்லெண்ண சமிக்ஞை வராதா, ஆதரவு கிட்டாதா என்று இவர்கள் இத்தனை ஆண்டுகளாக வீணே காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். காங்கிரசுக்குப் பின்னாலுள்ள சக்திகள் யாவை என்று தெரிந்து கொள்வதற்குக் கூட ஐரோப் பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள இந்த முற்போக்காளர்களும் இடது சாரிகளும் அக்கறை எடுத்துக் கொண்டதில்லை.
இதற்குக் காரணம் அறியாமையா அல்லது அக்கறையின்மையா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது: முத லாளிகள், நிலப்பிரபுக்கள், லேவாதேவிக்கார்கள், பிற்போக்காளர் கள் போன்றோரால் நடத்தப்படும் ஸ்தாபனம் காங்கிரஸ்; இத்தகைய தோர் அமைப்புக்கு இவர்கள் கண்ணை மூடிக்கொண்டு, எதிர்ப்போ மறுப்போ இன்று ஆதரிவளித்து வருகின்றனர். இதற்கு ஒரே காரணம் காங்கிரஸ் தனது செயல்பாடுகளை “சுதந்திரப் போராட்டம்” என் னும் ஆடம்பர ஆர்ப்பாட்ட பெயரால் அழைப்பதே ஆகும். சுதந் திரத்திற்கான எல்லாப் போராட்டங்களுமே தார்மீக அடிப்படை யில் அமைந்தவை என்று கூற முடியாது; ஏனென்றால் இந்தப் போராட்டங்களுக்கான குறிக்கோள்களும் நோக்கங்களும் எப்போதும் ஒரே மாதிரியானவையாக இருப்பதில்லை. பிரிட்டிஷ் வரலாற்றிலிருந்து இதற்கு ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கு கூறுவோம்.
பிரிட்டனின் ஜான் மன்னனை எதிர்த்து பரோன்கள் நடத்திய கிளர்ச்சியை சுதந்திரப் போராட்டம் எனக் கூறுவது தகும்; இந்தக் கிளர்ச்சியின் விளைவாகத்தான் மாக்னகார்ட்டா என்னும் அரசியல் உரிமை சாசனம் உதயமாயிற்று. ஆனால், அதே சமயம் இங்கிலாந் தின் வராலாற்றில் இடம் பெற்ற லெவல்லவர்களின் கலகத்துக்கோ அல்லது குடியானவர்கள் கலகத்துக்கோ இன்றைய ஜனநாயக வாதி எவரும் இதே போன்ற ஆதரவை அளிக்க முடியுமா? இவற்றைச் சுதந்திரப் போராட்டம் என்று வருணிக்க முடியுமா? இவ்வாறு செய்வது ஒரு போலி சுதந்திரக் கோஷத்துக்கு ஆதரவளிப்பதாகவே இருக்கும்.
வாழுவதற்கான சுதந்திரத்திற்கும் ஒடுக்குவதற்கான சுதந்திரத்துக்கு முள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ளும் அறிவுக்கூர்மை இல் லாதவர்கள் இவ்விதம் பண்பற்ற முறையில் நடந்து கொண்டால் அதனை மன்னித்துவிடலாம். ஆனால் லாஸ்கி, கிங்ஸ்லே மார்ட்டின், பிரெய்ல்ஸ்போர்டு, லூயி பிஷர் போன்ற புகழ்பெற்ற ஜன்நாயக வாதிகளைக் கொண்ட முற்போக்கான, இடதுசாரிக் குழுக்கள் விஷ யத்தில் இது எவ்வகையிலும் மன்னிக்க முடியாததாகும்.
உண்மையான ஜனநாயகத்துக்காகப் பாடுபடும் இந்தியக் கட்சிகளை நீங்கள் ஏன் ஆதரிக்கவில்லை என்று அவர்களிடம் கேட் டால் அவர்கள் ஓர் எதிர்க்கேள்வியைத் தொடுக்கிறார்கள்: இத் தகைய கட்சிகள் எவையும் இந்தியாவில் இருக்கின்றனவா? இப்படிப் பட்ட கட்சிகள் இருந்துவரவே செய்கின்றன என்று வலியுறுத்திக் கூறினால், அக்கட்சிகளின் செயற்பாடுகளைப் பற்றி பத்திரிகைகள் ஏன் வெளியிடவில்லை என்று கேட்கிறார்கள். பத்திரிகைகள் எல்லாம் காங்கிரசுக்கு துதிபாடும் காங்கிரஸ் பத்திரிகைகள் என்று கூறினால் அதற்குப் பின்வருமாறு எதிர்வாதம் செய்கிறார்கள்: சரி, அவைதான் காங்கிரஸ் பத்திரிகைகள் என்றால் அயல்நாட்டுப் பத்திரிகைகளின் நிருபர்களாவது வெளியிடலாம் அல்லவா, அதை அவர்கள் ஏன் செய்யவில்லை? இந்த அயல்நாட்டு நிருபர்களிடமிருந்து நல்லது எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நான் எடுத்துக்காட்டி னேன். இது விஷயத்தில் அயல்நாட்டுச் செய்தி நிறுவனம் இந்தியப் பத்திரிகைகளைவிட எவ்வகையிலும் மேம்பட்டதல்ல; உண்மை யில் அவ்வாறு மேம்பட்டதாகவும் இருக்க முடியாது. அயல்நாட்டு நிருபர்கள் எனப்படுவோர் பலர் இந்தியாவில் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் இந்தியர்களே; ஒரு சிலர்தான் அயல் நாட்டினர்.
அயல் நாட்டு நிருபர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவோரில் அநேகர் கிட்டத்தட்ட எப்போதுமே காங்கிரஸ் முகாமைச் சேர்ந்த வர்களாகவே இருக்கின்றனர். அயல்நாட்டு நிருபர்களாக உள்ள அயல்நாட்டவர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவர்கள் அமெரிக்கர்களாக இருந்தால் பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களாக இருக் கின்றனர். இந்தக் காரணத்தால் அவர்கள் காங்கிரஸ் ஆதரவாளர் களாக உள்ளனர். வெறித்தனமான பிரிட்டிஷ் எதிர்ப்பைக் காட்டாத இந்தியாவிலுள்ள எந்த அரசியல் கட்சியும் அவர்களது கவனத்தை ஈர்ப்பதில்லை.
1941-42ல் அமெரிக்க யுத்த நிருபர்கள் ஏராளமானோர் இந்த நாட்டில் குவிந்திருந்தனர்; காங்கிரஸ் ஒன்று மட்டுமே இந்தியா விலுள்ள ஒரே அரசியல் கட்சி அல்ல என்று அவர்களை நம்ப வைப்பதற்கும் இன்னும் சொல்லப்போனால் இதர அரசியல் கட்சிகள் பால் அவர்களது கவனத்தைத் திருப்புவதற்கும் எவ்வளவு மிகுந்த பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது என்பதை காங் கிரசில் இல்லாதவர்கள் நன்கு அறிவார்கள். இந்த நிருபர்களுக்கு நல்லறிவு திரும்புவதற்கு நீண்டகாலம் ஆயிற்று. அவ்வாறு அவர் களுக்கு விவேகம் திரும்பியபோது ஒன்று எதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாதவர்களால் தலைமைதாங்கி நடத்தப்படும் கட்சி என்று அவர்கள் காங்கிரசை சாடினர் அல்லது இந்திய அரசியலிலேயே அக்கறை காட்டுவதை அடியோடு விட்டு விட்டனர். இதேபோன்று இந்தியாவிலுள்ள இதர கட்சிகள் பாலும் அவர்கள் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை; அவர்களது கண்ணோட்டம்தான் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள சிரத்தை எடுத்துக்கொள்ளவும் இல்லை.
பிரிட்டிஷ் நிருபர்களது நிலையும் அப்படி ஒன்றும் சிலாகிக்கத் தக்கதாக இல்லை. பிரிட்டிஷ் எதிர்ப்பு வகையைச் சேர்ந்த அரசியலில் மட்டுமே அவர்களும் ஆர்வம் காட்டினர். சுதந்திர இந்தியாவை ஜனநாயகத்துக்குப் பாதுகாப்பானதாக்குவதில் பிரதான கவனம் செலுத்தும் இந்தியாவிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளிடம் அவர்கள் எத்தகைய அக்கறையும் காட்டவில்லை. இதன் விளைவாக இந்திய அரசியலைப் பற்றி இந்தியப் பத்திரிகைகள் எத்தகைய செய்திகளை வெளியிடுகின்றனவோ அதே போன்ற செய்திகளையே அயல்நாட்டுப் பத்திரிகைகளும் வெளியிடுகின்றன. இதற்கான காரணங்கள் இந்த முற்போக்காளர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.
நிருபர்களோ, நிருபர்கள் இல்லயோ இந்த முற்போக்காளர் கள் உலகின் ஏனைய பகுதிகளிலுள்ள தம்மையொத்த மனேபாவ முடையவர்களுடன் தொடர்பு கொண்டு எங்கெங்கும் உண்மை ஜன நாயகம் தழைத்தோங்க அவர்களுக்கு உதவுவதும் அவர்களை ஊக்கு விப்பதும் கடமை அல்லவா? இங்கிலாந்தையும் அமெரிக்காவையும் சேர்ந்த முற்போக்காளர்கள் எந்த வர்க்கத்துக்கு உதவி செய்யத் தாம் கடமைப்பட்டிருக்கிறார்களோ அவர்களை மறந்து, உலகை ஏமாற்றவும் அதன் கண்களில் மண்ணைத் தூவவும் சுதந்திரக் கோஷத் தைத் தவறான முறையில் பயன்படுத்தி வரும் இந்திய டோரிகளின் பிற்போக்காளர்களின் விளம்பரத் தரகர்களாக, ஏஜண்டுகளாக மாறியிருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். பெரிதும் துரதிர்ஷ்டவச மானதாகும்.
காங்கிரஸ் விரித்துள்ள மாய வலையிலிருந்து இவர்கள் விரை விலேயே விடுபடுவதும், சுதந்திரம் அனைவருக்கும் நடைமுறை யில், செயலளவில் உரித்தானதாகும் வரை, இந்திய மக்களுக்கு மேம் பட்டதாக, உகந்ததாக ஆகும் வரை இந்தியாவில் ஜனநாயகமும் தன்னாட்சியும் உண்மையானதாக இருக்க முடியாது என்று இவர் கள் உணர்ந்து கொள்வதும் மிக அவசியம். ஆனால் அதற்கு மாறாக, எதார்த்த உண்மைகளுடனும் நோக்கங்களுடனும் சிறிதும் சம்பந்த மில்லாத வெற்று ஆரவாரக் கோஷத்தின் அடிப்படையில் காங்கிர சுக்கு கண்மூடித்தனமான ஆதரவளிக்கத்தான் செய்வோம் என்று அவர்கள் பிடிவாதம் பிடிப்பார்களேயானால், இவர்களை இந்தியாவின் நண்பர்கள் என்று கூறுவதைவிட இந்திய மக்களது சுதந்திரத்தின் விரோதிகள் என்று கூறுவதற்கு எவ்வகையிலும் தயங்க மாட்டேன்.
மற்றவர்களை ஒடுக்குவதற்கு தனக்குள்ள அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக சுதந்திரக் கோஷத்தை முன்வைக்கும் ஒரு கொடுங்கோலனுக்கும் அந்தக் கொடுங்கோலனின் அடக்கு முறை யிலிருந்து விடுபடுவதற்குப் பாடுபடும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக் கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் கண்டறிய இயலாது போனது உண்மையிலேயே பரிதாபத்திலும் பரிதாபமானதாகும். இந்தியா வுக்குச் சுதந்திரம் கிட்ட வேண்டுமென்ற அவசரத்தில் காங்கிரசை ஆதரிப்பது இந்தியாவை ஜனநாயகத்துக்குப் பாதுகாப்பானதாக்காது, மாறாக கொடுங்கோலன் தனது கொடுமைகளை, அட்டுழியங்களை, அக்கிரமங்களை தட்டுத்தடையின்றிச் செய்வதற்கான சுதந்திரத்தைத்தான் அவனுக்கு வழங்கும் என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டார்கள். காங்கிரசை ஆதரிப்பது என்பதற்கு மற்றவர்களை அடிமைப்படுத்த கொடுங்கோன்மைக்கு சுதந்திரமளிப்பதையே குறிக் கும் என்பதை அவர்களுக்குச் சொல்லவும் வேண்டுமா?
("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 9)