அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டியை இந்திய அரசு தன் முதலில் 1965 ஆம் ஆண்டு அமைத்தபோது, அதன் முதல் தலைவராக இருந்தவர் எல். இளையபெருமாள். இவர், சிதம்பரத்திற்கு அருகில் உள்ள காட்டுமன்னார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சோதிடத்தில் வல்லுநராக இருந்த தன் தந்தையிடம் சோதிடம் பார்ப்பதற்காக வீட்டிற்கு வரும் பார்ப்பனர்கள், உள்ளே வராமல் தோட்டத்திலேயே நிற்பதைப் பார்த்த இளைய பெருமாள், ஏன் அவர்கள் உள்ளே வர மறுக்கிறார்கள் என தனது தந்தையிடம் தொடக்கக் கல்வி பருவத்திலேயே கேள்வி கேட்கத் தொடங்கினார். சாதிய வேறுபாட்டை நேரில் பார்த்து அதன் பொருளைப் புரிந்து கொண்டதுதான் பின்னாளில் அவரைப் போராளியாக மாற்றியிருக்கிறது. இந்திய அளவில் தெரியக்கூடிய ஒரு தலைவராகவும், அரசியல் முன்னோடியாகவும் அவரை அடையாளப்படுத்தியது.

Ilaiyaperumal
காட்டுமன்னார்குடி ம. குளக்குடியில் இருந்த தொழிலாளர் நலப்பள்ளியில், 1930 இல் தன் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர், பிறகு காட்டுமன்னார்குடி கழக நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1935 இல் சிதம்பரம் வட்டத்தில் இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் தான் இருந்தன. பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியும், ராமசாமி (செட்டியார்) பெயரில் இருந்த மற்றொரு பள்ளியும். இந்த இரண்டு இடத்திலுமே உயர்நிலைக் கல்வி பயிலுவதற்காக இளையபெருமாள் இடம் கேட்ட போது தர மறுத்துவிட்டார்கள். காரணம், அப்போதெல்லாம் அந்தப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக் கொள்வதில்லை என்கின்ற தீண்டாமையை நடைமுறையில் வைத்திருந்தனர்.

இருப்பினும், படிப்பில் ஆர்வம் கொண்ட இளையபெருமாள் சிதம்பரத்திற்கும், கடலூருக்கும் இடையே கிழக்கில் உள்ள பரங்கிப்பேட்டை என்னும் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்தார். பிறகு 1944 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்தார். ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக் காலங்களிலும் அவர் அனுபவித்த தீண்டாமைக் கொடுமைகள் மிக அதிகம். காட்டுமன்னார்குடி கடைவீதியில் நடந்து செல்வதற்கே அனுமதி மறுக்கப்பட்டும், செருப்பு அணிவதற்கும், சைக்கிள் ஓட்டுவதற்கும் தண்டனை கொடுக்கப்பட்ட அந்தக் காலத்தில், நடுநிலைப் பள்ளி பயிலும்போது அங்கே குடிதண்ணீர் வைத்திருந்த மண்பானையில் ‘பறையன் பானை' என எழுதி வைத்திருந்ததைப் பார்த்து அவர் கடும் கோபமுற்றார். பிறகு அதனை எதிர்க்கின்ற துணிச்சலை தனக்குள் உருவாக்கி, அதனை உடைத்தெறிந்து பறையன் பானை என்றிருந்ததை மாற்றி ‘எல்லோருக்கும் ஒரு பொதுப்பானை' என்கிற நிலையை ஏற்படுத்தினார்.

ஒரு முறை சாலையில் அவர் செருப்பு அணிந்து சென்றதற்காக அங்கு உள்ளவர்கள், செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக் கொண்டு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். செருப்புப் போட்டு நடந்ததற்காக அவரை அடிப்பதற்குக் கையை ஓங்கிய போதும், அதற்காகக் கொஞ்சமும் வருத்தப்படாமல், ‘‘வெயிலில் கால் சுடுகிறது. அதனால் செருப்பு அணிகின்றேன். நீங்கள் சொல்வதற்காக என்னால் கழற்ற முடியாது'' எனக் கூறி பணிய மறுத்தார். பரங்கிப்பேட்டை ராமசாமி வீரம்மாள் அவர்களின் மகளான தையல்முத்து அவர்களை 4.6.1944 அன்று வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக இருந்ததினால், 1945 ஆம் ஆண்டு நடந்த உலகப் போருக்கு ஆள் எடுக்கின்ற செய்தி அறிந்து, அதில் சிப்பாயாக சேர்ந்தார். தீண்டாமைக் கொடுமை அவரை ராணுவத்திலும் விட்டு வைக்கவில்லை.

உலகப் போர் முடிந்தவுடன், தற்காலிகப் பணிக்கு சிப்பாயாக எடுத்த ஆட்களை அரசு திருப்பி அனுப்பியது. அதனால் 1946 சனவரி 16 அன்று, ராணுவத்திலிருந்து வீடு திரும்பினார். காட்டுமன்னார்குடியில் 30.10.1946 அன்று, ஆதிதிராவிடர் நலச் சீர்திருத்த சங்கம் தொடங்கப்பட்டது. பிறகு 17.1.1947 அன்று இச்சங்கத்தின் பொங்கல் விழா பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்தபோது, அதில் பங்கேற்க வந்த சுற்றியுள்ள கிராம மக்கள் இளையபெருமாளை தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

ராணுவத்திலிருந்து வந்த பிறகு அவர் பொறுப்பு வகித்த முதல் பதவி இதுவே. 1947 ஆம் ஆண்டு, கூலி உயர்வு கேட்டு கடலூர் மாவட்டங்களில் இளையபெருமாள் போராட்டங்களைத் தொடங்கிய போது, பண்ணையார்கள் மத்தியில் பெருத்த எதிர்ப்பு உருவாகியது. ஆனால், அதைப்பற்றி அவர் சற்றும் கவலைப்படவில்லை. காட்டுமான்னார்குடி அருகில் உள்ள மா. உடையூர் கிராமத்தில் ஏகாம்பரம் என்ற பண்ணையார், தாழ்த்தப்பட்ட ஒருவரைக் கட்டி வைத்து அடித்துக் கொடுமைப்படுத்தினார். கூலியை உயர்த்திக் கேட்டதற்காக கொடுமைப்படுத்தப்பட்ட இந்நிகழ்வைக் கண்டித்த இளையபெருமாள், தன் சங்க நிர்வாகிகளுடன் கிராமத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஏகாம்பரம் பண்ணையார் செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்க வைத்தார். அப்போதே கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதே போன்று 1947 இல் புளியங்குடியில் மாரிமுத்து மகன் வடமலை என்ற ராணுவ வீரன் மீசை வைத்திருந்தார் என்பதற்காக, அவரைக் கட்டி வைத்து வன்னியர்கள் அவரது மீசையை நெருப்பு வைத்துக் கொளுத்தினர். அந்த ஊரில் ஆண்கள் நல்ல உடை உடுத்தக்கூடாது, கிராப் வெட்டிக் கொள்ளக்கூடாது, பெண்கள் ரவிக்கை போடக்கூடாது, நகை அணியக்கூடாது என்றெல்லாம் தீண்டாமைக் கொடுமைகள் இருந்தன. அம்மக்கள் அமைதியாக வாழ விரும்பிய காரணத்தினால், அங்கிருந்த ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பைக் காலி செய்து அருகில் உள்ள பிள்ளையார்தாங்கலில் குடி அமர்த்தினார்.

கீழ்வெண்மணி படுகொலையின் (1968) போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த அவர் செய்தி அறிந்த உடன் தஞ்சைக்கு வந்து, அரசு அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கக் கோரினார். பிறகு அவர் கீழ்வெண்மணி சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த வழக்கினைப் பற்றி இளையபெருமாள் கூறும்போது, ‘‘தமிழக அரசானது குற்றவாளிகளை விடுதலை செய்த செயல், எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. அதனால் 1980 இல் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரான பிறகு, அந்த வழக்கை மீண்டும் தொடரச் செய்து குற்றவாளிகள் சிலருக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தேன்'' என்றார்.

விழுப்புரம் கலவரத்தின் போதும், சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர், இந்தக் கொலைக்கு நியமிக்கப்பட்ட சதாசிவம் கமிஷனுடன் இரண்டு மாத காலம் தங்கிப் பணியாற்றி, அதன் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார். இதே போன்று பல பெரிய கலவரங்களிலும் நேரடியாகத் தலையிட்டு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அரசிடம் முறையிட்டு, நிவாரணங்கள் வழங்க வலியுறுத்தினார். குற்றவாளிகளுக்கு முடிந்த வரை தண்டனையும் வாங்கித்தர முயற்சி செய்தார். பறையடிப்பதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று போராடிய அவர், 1949 இல் காட்டுமன்னார்குடி நாட்டு சின்ன பண்ணையத்தார் வீட்டில் நடந்த சாவுக்குப் பறையடித்ததை தன்னுடைய தலைமையில் தடுத்து நிறுத்தினார். இதனால் ஏற்பட்ட கலவரத்தில், இளையபெருமாள் உட்பட 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. பிறகு திட்டக்குடி, காட்டுமன்னார்குடி, பெண்ணாடம், விருத்தாச்சலம் ஆகிய ஊர்களில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 10 மாத காலம் வழக்குத் தொடரப்பட்டு, பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது.

Ilaiyaperumal with Indra gandhi
1998 இல் தி.மு.க. அரசு இளையபெருமாளுக்கு அம்பேத்கர் விருது கொடுத்து, அவரின் சமூக உழைப்பைக் கவுரவித்தது. இருந்தாலும், அதற்காக ஒருபோதும் தி.மு.க. அரசைக் கண்டிக்க அவர் தவறியதில்லை. விருது கொடுக்கப்பட்டவுடன் தாழ்த்தப்பட்ட மக்களுக்குரிய இடஒதுக்கீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; கைது செய்யப்பட்ட சேரி மக்களை விடுதலை செய்ய வேண்டும் என கருணாநிதி அரசிடம் கோரிக்கை வைத்தார்.

1952 இல் அரசியல் பணியில் ஈடுபட்ட அவர், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதனைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டில் மரகதம் சந்திரசேகர் ஒத்துழைப்போடு, நேரு அமைச்சரவையில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் குழுத் தலைவர் பதவியை ஏற்றார். இக்கமிட்டியின் மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கையை, 1969 சனவரி 30 அன்று இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது வெளியிடப்பட்டு, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதுபற்றி இளையபெருமாள் கூறும் போது, ‘‘நான் தயாரித்துக் கொடுத்த கமிட்டி அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்ட பிறகு, அதில் இருந்து சில பிரிவுகளை நீக்கிவிட்டு அரசுக்கு ஏற்றார் போல் அதனை வெளியிட்டிருக்கிறது'' என்றார். மேலும், இந்த கமிட்டி அறிக்கையை வெளியிடுவதற்கு முதல் நாள் இவர் தங்கியிருந்த அறையிலிருந்து இந்த அறிக்கையை எடுத்து கொளுத்துவதற்கு, சிலர் ஈடுபட்ட தாகவும், இப்படி நடக்கும் என முன்பே தெரிந்திருந்த அவர் இதனை நண்பர் வீட்டில் மறைவாக வைத்திருந்து மறுநாள் வெளியிட்டதாகவும் மிகவும் வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வறிக்கையில் தீண்டாமை (பகுதி. 1, இயல் 1) 1.2 இல், சாதிய அமைப்பு என்பது இந்து சமயத்தின் புனிதமான அங்கம் என்றும், சாதி தெய்வீகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டது என்றும், அந்த அடிப்படையைக் கொண்ட சமூக முறையைப் புனிதமானது என்றதுமான நம்பிக்கையின் இன்றியமையா உடன் நிகழ்வே தீண்டாமை எனக் குறிப்பிட்டுள்ளார். சமூக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் தீண்டாமையை ஒருபோதும் ஒழிக்க முடியாது. மேலும், தாள்களிலும், சுய விருப்பத்தினாலும், மேலோட்டமான அறிவுரைகளாலும், முழக்கங்களினாலும் சாதி முறைமையையும், தீண்டாமையையும் ஒழிக்க நினைப்பது அடி முட்டாள்தனம் அல்லது திசை திருப்பும் செயல் என்றும் ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்.

1.7 இரண்டாவது பத்தியில், சமுதாயக் குற்றமான தீண்டாமையை வேறு வேறு தீய நோக்கங்களுக்காக கடைப் பிடிப்போருக்கு நிதி உதவி, கடன் வழங்குதல் போன்றவை உறுதியாக மறுக்கப்படும் என்கிற அச்சுறுத்தலை அரசு கைக்கொள்ள வேண்டும். அவ்வாறு குற்றவாளிகள் என்று அறியப்பட்டோருக்கு உதவித் தொகை போன்ற கல்விச் சலுகைகள் மறுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். கல்விப் பணியின் மூலம் சமூக மேம்பாட்டையும், பொருளாதார வளர்ச்சியையும் அடைய முடியும் என்கிற நம்பிக்கை கொண்ட அவர், சுவாமி சகஜானந்தாவால் 1914 இல் உருவாக்கப்பட்ட நந்தனார் கல்விக் கழகத்தை, 30.4.1959 அன்று சகஜானந்தா இறந்த பிறகு, அதன் முழு பொறுப்பேற்று நடத்தி வந்தார். 1976 முதல் மூன்றாண்டுகள் தமிழ் நாடு காங்கிரசின் ‘அரிஜன செல்' தலைவர் பதவி வகித்த அவர், 1979 இல் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரானார். பிறகு, 1980 இல் எழும்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் இருந்து வெளியேறிய பிறகு 1989 இல் இந்திய மனித உரிமைக் கட்சியைத் தொடங்கிய அவர், 2003 இல் காங்கிரசில் மீண்டும் இணைந்தார்.

சேரி மக்களின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும், போராடிய பெரியவர் இளையபெருமாள், பல்வேறு கட்சிகளுடன் தொடர்பும் கூட்டணியும் வைத்திருந்தாலும் அவர்களோடு சமரசமாகாமல் எதிர்க்கின்ற நேரத்தில் அவர்களை எதிர்க்க வேண்டிய பண்பையும் பெற்றிருந்தார். இவர் கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாததால், சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 8.9.2005 அன்று இறந்து போனார். மண்டல் குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கப்பட்ட அளவுக்கு, இளைய பெருமாள் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆதரவுக் குரல் கொடுக்கப்படவில்லை. தலித் மக்களுக்கான புரட்சிகர செயல் திட்டங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த இளைய பெருமாள் அறிக்கை, அவர் காலத்திலேயே மறைந்து விட்டது என்பதுதான் கசப்பான வரலாற்று உண்மை.
Pin It