இனி வரப்போகும் மாகாணசுயாட்சி அமைப்பில், ஒவ்வொரு மாகாண சட்டசபைகளிலும், ஒவ்வொரு வகுப்பினருக்கும் தனித்தனியே எத்தனை ஸ்தானங்கள் இருக்க வேண்டும் என்னும் வகுப்புப் பிரச்சினை சம்பந்தமான முடிவு சென்ற 16-8-32ல் அரசாங்கத்தாரால் வெளியிடப்பட்டு விட்டது. இந்த வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக பல சமூகங்களும் ஒப்புக் கொள்ளும் படியான ஒரு முடிவு காண திரு. காந்தியுள்பட வட்டமேஜை மாநாட்டுப் பிரதிநிதிகள் இந்தியாவிலும் இங்கிலாந்துக்குச் செல்லும் வழியில் கப்பலிலும் இங்கிலாந்திலும் எவ்வளவோ முயன்றும் முடியாமற்போய் விட்டது. இவர்களால் முடியாமல் போன காரணத்தாலேயே இப்பொழுது பிரிட்டிஷ் பிரதம மந்திரியால் தீர்மானிக்கப்பட்ட முடிவை இந்திய அரசாங்கத்தார் வெளியிட் டிருக்கின்றார்கள்.

இப்பொழுது அரசாங்கத்தார் வெளியிட்டிருக்கும் தீர்ப்பின்படி முஸ்லீம்கள், சீக்கியர்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஜரோப்பியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முதலியவர்களுக்குத் தனித் தொகுதிகள் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையளிக்கப் பட்டிருக்கிறது. மற்றும் பெண்கள், தொழிலாளர்கள், நிலச்சுவான்தாரர்கள், வியாபாரிகள், சர்வ கலாசாலைகள் முதலிய பலருக்கும் ஸ்தானங்கள் ஒதுக்கப் பட்டிருக்கின்றன.periyar and maniamma 653இத்தீர்ப்பில் முக்கியமாகக் கவனிக்கக் கூடியன சில உள்ளன. முஸ்லீம் கள் பஞ்சாப் மாகாணத்திலும் வங்காள மாகாணத்திலும் தாங்கள் பெரும்பான்மையினராயிருப்பதால், தங்கட்கு அதிக ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் மற்ற மாகாணங்களில் தங்கள் ஜனத்தொகைக்குத் தக்க வாறு ஸ்தானங்கள் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டனர். ஏறக்குறைய அவர்கள் கேட்டவாறே கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆகையால் இத்தீர்ப்பைக் கொண்டு முஸ்லீம்கள் திருப்தியடைவதுதான் நியாயமே தவிர தங்களுக்கு அரசாங்கத்தார் காட்டியிருக்கும் சலுகை போதாதென்று குறை கூறுவது ஒழுங்கானதல்லவென்று நாம் கருதுகின்றோம்.

அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதியும், பொதுத்தொகுதியில் ஓட்டுக்கொடுக்கும் உரிமையும் அளித்திருப்பது பாராட்டத் தகுந்ததாகும். இதனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குச் சட்ட சபையின் மூலம் அவர்கள் விரும்பும் நன்மைகள் கிடைக்க இடமுண்டு. எப்படியெனில் பொதுத் தொகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கப் படும் பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் வாக்குகளையும் பெற்றே சட்டசபைக்குச் செல்ல வேண்டியிருப்பதால், அப்பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அவர்கள் சமூக முன்னேற்றத்தின் பொருட்டு கொண்டு வரும் தீர்மானங்களுக்கு ஆதரவளித்தே தீர வேண்டும். இன்றேல் அடுத்தத் தேர்தலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் வாக்குகளைப் பெறமுடியாமல் போய் விடுவார்கள்.

அடுத்தபடியாகப் பெண்களுக்குக் கொடுத்திருக்கும் ஸ்தானங்கள் மிகவும் குறைவாகும். ஜனத்தொகையில் பாதிக்கு மேலுள்ள பெண் சமூகத்திற்கு மிகக்குறைந்த ஸ்தானங்களை அளித்திருப்பது அச்சமூகத்தை இழிவு படுத்துவதாகுமென்பதே நமது அபிப்பிராயமாகும். ஆனால் அவர்களுக் குள்ளும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்கியிருப்பது போற்றத்தக்க தாகும். இவ்வாறு பெண்களுக்குள்ளும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்கியிருப்பதைப் பலர் கண்டிக்கிறார்கள். தற்பொழுதுள்ள நிலையில் பெண்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் சட்டசபை களுக்குப் பொதுத் தொகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கும் எல்லாப் பெண் களும் அநேகமாக இந்துப் பெண்களாகவே இருப்பார்களென்பதில் ஐயமில்லை. மற்றய வகுப்புப் பெண்கள் ஸ்தானம் பெறுவதற்கு முடியாமல் போய் விடும். ஆகையால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளித்திருப்பதன் மூலம் எல்லா வகுப்புப் பெண்களுக்கும் ஸ்தானம் கிடைக்கும்படி செய்திருப்பதை நாம் பாராட்ட வேண்டுமே தவிர குறை கூறுவது தவறாகும்.

அடுத்தபடியாகத் தொழிலாளர்களுக்கு அளித்திருக்கும் ஸ்தானங் களும் மிக மிகக் குறைவானதாகும். தொழிலாளர்கள் இல்லாவிட்டால் நாட்டில் விவசாயமோ, கைத்தொழில்களோ, வியாபாரமோ பணக்காரர்களோ, அரசாங் கமோ ஒன்றும் நிலைத்திருக்க முடியாது என்பது அறிஞர்கள் கண்ட உண்மை யாகும். நாட்டின் செல்வத்தை வளர்க்கின்றவர்கள், நாட்டைப் பாதுகாத்து வருபவர்கள் தொழிலாளர்களே யாவார்கள். ஆகவே நியாயப்படிப் பார்த்தால் அவர்களுக்கு அரசாங்கத்திலும் சட்டசபையிலும் அதிக ஆதிக்கமிருக்க வேண்டியது ஒழுங்காகும். இப்படியில்லாமல் அவர்களை நசுக்கும் மனப் பான்மையுடையவர்களுக்கு அதிக ஆதிக்கமும், அவர்களுக்கு பேருக்கு மாத்திரம் சில ஸ்தானங்களும் ஒதுக்கி வைத்திருப்பது திருப்தியற்ற செயலாகு மென்று தான் நாம் கூறுவோம்.

ஆயினும் பிரதம மந்திரியவர்கள் வருணாச்சிரம தரும அரசியல் வாதிகளின் பயமுறுத்தல்களையும், முட்டுக்கட்டைகளையும் சிறிதும் லட்சியம் பண்ணாமல் தாழ்த்தப்பட்டோர், முஸ்லீம்கள், சிறுபான்மைச் சமூகத் தினர்கள் முதலியவர்கள் விரும்பியபடியே அவர்களுக்குத் தனித் தொகுதியும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளித்து வெளியிட்டிருக்கும் இத்தீர்ப்பை நாம் வரவேற்கின்றோம்.

இது சட்டமாகும் போது, இத்தீர்ப்பில் கண்டுள்ள தேர்தல் ஏற்பாட்டையும் மற்றும் பல ஏற்பாடுகளையும் 10 வருஷ காலத்திற்குப் பிறகு இதில் சம்பந்தப்பட்ட சமூகத்தினரின் சம்மதத்தின் பேரில் மாற்றுவதற்கு இடமிருக்கவும் மாற்றப்படாவிட்டால் 20 வருஷங்களுக்குப்பின் இந்த விசேஷ ஏற்பாடகள் தாமே முடிந்து விடுவதாகவும் சட்டத்திலேயே விதித்துவிட வேண்டுமென்பது அரசாங்கத்தாரின் உத்தேசமெனக் கூறப்பட்டிருக்கின்றதும் கவனிக்கத் தக்கதாகும்.

இந்த விதமான வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பு வெளியானவுடன், நமது நாட்டில் உள்ள சில நியாயபுத்தியுள்ள அரசியல்வாதிகளைத் தவிர பாக்கியுள்ள அதிதீவிர ஆவேச அரசியல்வாதிகளும், இந்து மகாசபைக் காரர்களும், வருணாச்சிரமத் தருமிகளும், அரசியல் வயிற்றுப் பிழைப்புக்காரர்களும் தேசீயப் பல்லவி பாடும் பத்திரிகை ஆசிரியர்களும் ஒரேடியாக இதைக் கண்டிக்கத் தொடங்கி விட்டார்கள் “இந்திய அரசியலில் வகுப்புவாத விஷயத்தை பிரதம மந்திரி புகுத்தி விட்டார்” என்று வகுப்புவாத விஷயத் திலேயே ஊறிப்போய் கிடக்கும் இவர்கள் கூச்சலிடுகிறார்கள். ஆனால் இவர்கள் இவ்வாறு புலம்புவதில் ஏதாவது அர்த்தமுண்டா என்றுதான் நாம் கேட்கின்றோம்.

வட்டமேஜை மாநாடு ஆரம்பமானது முதல் இந்த வகுப்புப் பிரச்சினை விஷயம் முதன்மையானதாக இருந்து கொண்டிருந்தது யாருக்கும் தெரியாததல்ல, பிரிட்டிஷ் அரசாங்கமும் பிரதம மந்திரியும் “நீங்களே இவ்விஷயத்தை முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லி இந்தியப் பிரதிநிதிகளிடமே ஒப்படைத்து விட்டு ஆரம்ப முதல் கடைசிவரையிலும் இதில் தலையிடாமலே இருந்து விட்டார்கள்.

இந்தியப் பிரதிநிதிகளும் கூடிக்கூடிப் பேசிப் பார்த்தார்கள்; திரு. காந்தியவர்களும் வகுப்புப் பிரச்சினை தீர்ந்தால்தான் வட்ட மேஜை மாநாட்டுக்குப் போவேன் என்று சொல்லிப் பார்த்தார்; இங்கிலாந்திலும் என்னென்னமோ செய்து பார்த்தார். கடைசியில் ஒன்றும் முடியாமல் போய்விட்டது. வட்டமேஜை மகாநாட்டு முஸ்லீம் பிரதிநிதிகளோ வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாகச் சமரசமான முடிவு ஏற்பட்டால்தான் தாங்கள் மகாநாட்டுடன் கலந்து உழைக்க முடியும்; இன்றேல் கலந்து உழைக்க முடியாது என்று கூறி ஒதுங்கிவிட்டார்கள். இக்காரணத்தால் மேலே நடத்த வேண்டிய அரசியல் வேலை தடைப்பட்டு விட்டது என்னும் விஷயங்கள் இதைத் தேசீயக் கூச்சல்காரர்கள் அறியாததல்லவே.

ஆகவே இவர்களால் முடிவு செய்யமுடியாமல் கைவிடப்பட்ட ஒரு விஷயத்தையே பிரதம மந்திரி முடிவு செய்திரக்கும் போது, அது சரியாயிருந்தாலும், தப்பாயிருந்தாலும் அதைப்பற்றிப் பேச இவர்களுக்கு வாயுண்டா என்றுதான் நாம் கேட்கின்றோம்.

அன்றியும் இவ்விஷயத்தை முடிவு செய்யக் கூடிய யோக்கியதை யாவது இந்த தேசீயக் கூச்சல்காரர்களுக்கு இருக்கிறதா என்று கொஞ்சம் ஆலோசனை செய்து பாருங்கள்! முஸ்லீம்களும், தாழ்த்தப்பட்டவர்களும் மற்ற சிறுபான்மையினரும் தங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், தனித் தொகுதியும் தான் வேண்டுமென்று பிடிவாதம் செய்தனர்; காங்கிரசின் சார்பாகத் திரு. காந்தியவர்கள் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் மாத்திரம் தனித் தொகுதியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் கொடுக்க சம்மதிக்கிறேன்; மற்றச் சிறுபான்மை வகுப்பினருக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தி னருக்கும் ஒருக்காலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், தனித்தொகுதியும் கொடுக்க சம்மதிக்க மாட்டேன் என்றார்; மற்றும் ஒரு வருணாச்சிரம தரும இந்துக் கூட்டம், இந்திய அரசியலில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமோ, தனித் தொகுதியோ எதுவும் இருத்தல் கூடாது; எல்லாம் பொதுப் பிரதிநிதித்துவமாகவும், பொதுத் தொகுதியாகவுமே இருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தது. இந்த வகையாக மூன்றுவித அபிப்பிராயங்களை பிடிவாதமாக உடைய பிரதிநிதிகள் எவ்வாறு ஒன்று கூடி ஒரு ஏகோபித்த முடிவுக்கு வர முடியும் என்றுதான் கேட்கிறோம். ஆகவே இத்தகைய கூட்டத்திற்கு ஒரு முடிவைக் கட்டுவதற்கு இவர்களல்லாத வேறொருவர்தானே வந்து தீர வேண்டும். வேறொருவரால் தானே ஏதேனும் ஒருவகையான முடிவையும் ஏற்படுத்த முடியும் என்பது உண்மையா அல்லவா என்று யோசனை செய்து பாருங்கள்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், தனித் தொகுதியும் தேசீய அபி விருத்திக்கு இடையூறு விளைவிக்கக் கூடியது, இவைகளால் எந்தக் காலத்திலும் தேசம் ஒன்றுபட முடியாது, வகுப்புத் துவேஷமும் கலகமும் இன்னும் அதிகப்பட்டு அவை எப்பொழுதும் அழியாமல் நிலைத்து நிற்கவே இடமேற்படும் என்றெல்லாம் கூறி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், தனித் தொகுதியையும் நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி ஆரம்பமான நாள் முதல் இன்றுவரையிலும் ஒரு கூட்டத்தார் கண்டித்து வருகின்றார்கள். இவர்கள் கண்டிப்பது சரியானதாகவும், நமது நாட்டின் நிலைமகளுக்குப் பொருத்த மானதாகவும், தேசத்துக்கு நன்மையளிக்கக் கூடியதாகவும் இருக்கிறதா என்பதைச் சிறிது கவனிப்போம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், தனித் தொகுதி தேர்தல் முறையையும் கண்டிக்கின்ற இக் கூட்டத்தாரோ வென்றால், தாம்தான் அரசியல் சுதந்திரங்களையெல்லாம் அனுபவிக்க உரிமை யுடையவர்களென்றும், தமக்கே பரம்பரையாக அதிகாரம் செலுத்தும் உரிமை “கடவுள்” என்பவராலேயே கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும், மற்ற சமூகத்தார்கள் - அதிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தார்கள் எப்பொழுதும் சுதந்திரமில்லாமல் அடிமைகளாக இருந்து உழைத்துக் கஷ்டப்படுவதற்கே உரியவர்களென்றும், அவர்களை எந்த வகையிலும் முன்னேற வொட்டாமல் பரம்பரையாக அவர்கள் அனுபவித்து வந்த கொடுமைகளையே அனுபவிக்கச் செய்வதுதான் நமது கடமை என்றும் நம்பிக்கொண்டும் இவ்வாறே செய்து கொண்டும் இருக்கின்றவர்கள் என்பது அறிவுள்ள மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமேயாகும்.

ஆனால் பெரும்பாலோராக இருக்கின்ற மேற்கூறிய கூட்டத்தாரால், நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் கிடக்கும், செல்வமும் செல்வாக்கும் அற்ற கூட்டத்தார் ஜனசமூகத்தில் மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை களை அரசியல் மூலம் நீக்கிக் கொண்டு முன்னேற்றமடையும் பொருட்டு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், தனித் தொகுதியும் இருந்தாலொழிய சட்டசபைகளில் தாங்கள் ஸ்தானம் பெற்று தமது காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியாது என்று அறிந்து தங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே வேண்டும் என்று கேட்டு வந்தனர் என்பதும் அறிவுள்ளவர்கள் அறியாததல்ல.

இவ்விரு சார்பார்களின் கோரிக்கைகளில் உண்மையில் அனுதாபத்திற்குரிய கோரிக்கை பிற்கூறிய ஒடுக்கப்பட்ட சிறுபான்மையோருடைய கோரிக்கையேயாகும் என்பதை அறிவுடைய எவராவது மறுக்க முடியுமா? இந்த அனுதாபத்திற்குரிய கோரிக்கையையுடைய மக்களையும் கவனிக்காமல் உயர்ந்த - அறிவுடைய - செல்வமுடைய ஜாதி ஆணவமும், அதிகாரச் செருக் கும் உடைய கூட்டத்தார் கோரிக்கையாகிய பொதுப்பிரதிநிதித்துவமும், பொதுத் தேர்தலும் உள்ள அரசியல் அமைப்பை அளித்தால், இதன் மூலம் திக்கற்ற- தாழ்த்தப்பட்ட-சிறுபான்மை சமூகத்தாரை என்றென்றும் தலைதூக்க முடியாதபடி பாதகஞ் செய்ததாகாதா? என்னும் விஷயத்தை நன்றாய் யோசனை செய்து பார்க்கும் படி வேண்டுகின்றோம். இச்சமயத்தில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம், தனித்தொகுதி தேர்தல் முறை சம்பந்தமாகவுள்ள நமது அபிப்பிராயத்தை முன்பு பல தடவைகளில் வெளியிட்டிருந்தாலும் இப்பொழுதும் அதுபற்றிச் சிறிது கூறிவிடுகின்றோம்.

நாமும் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் பிரதிநிதித்துவம் பெற்று அவைகளின் மூலம் நடைபெறும் அரசியலினால் நாட்டில் சமதர்மம் உண்டாக்க முடியாது. மதங்களின் பாதுகாப்புக்காகவும், தனித்தனி ஜாதிகளின் பாதுகாப்புக்காகவும் அரசியல் உரிமை பெறுகிறோம் என்று இல்லாமல் நாட்டு மக்களின் பாதுகாப்புக்காகவே அரசியல் உரிமை பெறுகிறோம் என்னும் எண்ணமுடைய பிரதிநிதிகளைக் கொண்டு நடைபெறும் அரசாங்கத்தின் மூலமே தேசத்தில் சமதர்மம் தோன்ற முடியும்; மக்கள் சுகமடைய முடியும் என்னும் உறுதியான நம்பிக்கையுடையோம்.

ஆனால் இத்தகைய சமதர்ம நோக்கம் சட்டசபைகளிலும், அரசியல் அதிகாரங்களிலும் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளிடம் உண்டாக வேண்டு மானால் முதலில் மதங்களும், ஜாதிகளும் அழிந்து தீர வேண்டும். மதங்களும் ஜாதிகளும் அழிய வேண்டுமானால் முதலில் ஒரு மதத்தினரை ஒரு மதத்தினர் தாழ்வாக மதிப்பதும், துன்பப்படுத்துவதும், ஒரு ஜாதியினரை ஒரு ஜாதியினர் கொடுமைப்படுத்துவதும், அடிமைப் படுத்துவதும், அடக்கியாள்வதும் ஆகிய தற்போது நிகழும் காரியங்கள் அடியோடு அழிய வேண்டும்; ஒரு மதத்தினர்க்கு ஒரு மதத்தினர் ஒரு ஜாதியினர்க்கு ஒரு ஜாதியினர்; எந்த வகையிலும் குறையாத அதிகாரம் படைத்தவராயும், கல்வியறிவு பெற்றவ ராகவும், செல்வம் பெற்றவராகவும், சுதந்திரம் பெற்றவராகவும் ஆகி விட்டால் மதக் கொடுமைகளும், ஜாதிக் கொடுமைகளும் மாண்டொழிந்து போகும்; மதக் கொடுமைகளும், ஜாதிக் கொடுமைகளும் மாண்டொழிந்தால் மதங்களும், ஜாதிகளும் தாமே மாண்டொழியும். மதங்களும் ஜாதிகளும் கொடுமை யான காரியங்களைச் செய்து கொண்டிருப்பதன் மூலமே நிலைத்து நிற்கின்றன என்னும் உண்மையை அறிந்தவர்களுக்கு இது விளங்காமற் போகாது.

ஆகவே இவ்வாறு ஆவதற்கு எல்லா மதத்தினரும், எல்லா வகுப்பினரும் அரசியலில் சமபங்கு பெற்றாக வேண்டியது அவசியம்; அரசியலில் சமபங்கு பெறாவிட்டால் ஒரு ஜாதியினருக்கு ஒரு ஜாதியினர், ஒரு மதத்தினருக்கு ஒரு மதத்தினர் இழைத்துவரும் கொடுமைகளை எந்த வகையிலும் நீக்கிக் கொள்ள முடியாது. இவ்வாறு எல்லா வகுப்பினரும், மதத்தினரும் அரசியலில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு தற்கால நிலைமையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், தனித்தொகுதி தேர்தல் முறையும் இல்லாவிட்டால் முடியவே முடியாது என்பது நீண்ட நாளைய நமது உறுதியான அபிப்பிராயமாகும். ஆகையால் நாம் ஆதி முதல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் தனித் தொகுதி தேர்தல் முறையையும் ஆதரித்து வருகின்றோம்.

ஆகவே தற்காலத்தில் நமது நாடுள்ள சிக்கலான நிலையில் எல்லா வகுப்பினரும் எல்லா மதத்தினரும் அரசியலில் சிறிது அதிகாரம் பெறும்படியான ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டுமானால், தற்பொழுது பிரதம மந்திரியால் செய்யப்பட்டிருக்கும் முடிவைத்தவிர வேறு எந்த விதமான முடிவையும் செய்ய முடியாது; செய்வதற்கும் வழியில்லை என்பதே நமது கருத்தாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

தேசமக்களுக்குக் கடுகளவாவது நன்மை செய்ய வேண்டும் என்னும் அரசியல்வாதிகள் இம்முடிவை ஒப்புக் கொண்டு இதற்குமேல் ஆகவேண்டிய அரசியல் காரியங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டியதே யோக்கியமான செயலாகும்.

அன்றியும் இத்தீர்ப்பின்மேல் பிரிட்டிஷ் பிரதம மந்திரி வெளி யிட்டிருக்கும் அறிக்கையையும், இந்திய அரசாங்கத்தார் வெளியிட்டிருக்கும் அறிக்கையையும் கவனிப்போர் பிரதம மந்திரியின் மீதோ, இந்திய அரசாங்கத்தின் மீதோ, சிறிதும் குறைகூற இடமில்லை யென்பதையும் அறியலாம். பிரதம மந்திரியின் அறிக்கையில்

“இம்முடிவு கூடிய விரைவில் பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படும். இதற்குள் எல்லாச் சமூகங்களும் ஒற்றுமைப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தால் அரசாங்கத்தார் செய்திருக்கும் இத் தீர்ப்பைப் பாராளுமன்றத்தின் முன் வைக்கமாட்டார்கள். சமூகங்கள் ஒரு முடிவுக்கு வராவிட்டால் தான் இம்முடிவு பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படும்.”

என்றும், இந்திய அரசாங்கத்தாரின் அறிக்கையில்

“எல்லா சமூகத்தினரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரும் சந்தோஷகரமான நிலைமை ஏற்படுவதாயிருந்தால் அதற்கு இடமில்லாமல் செய்துவிட பிரிட்டிஷ் அரசாங்கம் விரும்பவில்லை. ஆகையால் புதிய இந்திய அரசாங்கச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறும் முன் தனிப்பட்ட மாகாணங்களைப் பொருத்தோ அல்லது பிரிட்டிஷ் இந்தியா முபவதையும் பற்றியோ சம்பந்தப் பட்ட எல்லாச் சமூகத்தினரும் சேர்ந்து ஒரு ஒற்றுமையான வேறு முடிவுக்கு வந்து விடுவார்களாயின் அம்முடிவை, இந்தத் தீர்ப்புக் குப் பதிலாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் பாராளு மன்றத்திற்குச் சிபார்சு செய்வார்கள்.”

என்றும் குறித்திருப்பதைக் காண்பவர்கள் அரசாங்கத்தார் மீது குறை கூற இடமுண்டா என்றுதான் கேட்கின்றோம்.

இனிமேலாவது இம்முடிவு இந்தியாவுக்குப் பொருத்தமில்லாததாக இருந்தால் இந்தியமக்களால் விரும்பப்படாதது என்பது உண்மையாக இருந்தால் இதன் மூலம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், தனித்தொகுதி தேர்தல் முறையும் பெற்றிருக்கிற மக்களால் ஒப்புக்கொள்ளப்படாததாக இருந்தால் காங்கிரஸ்காரர்களும், வகுப்புவாதத்தை விரும்பாத மிதவாதி களும், மற்ற வயிற்றுப்பிழைப்புத் தேசாபிமானிகளும் தங்கள் செல்வாக்கைக் கொண்டு இந்தியாவில் உள்ள சமூகங்களை ஒற்றுமைப் படுத்தி வேறு இவர்கள் விரும்புகின்ற மாதிரியான முடிவைச் செய்து அம்முடிவை எல்லாச் சமூகத்தினரையும் ஒப்புக் கொள்ளச் செய்து பிறகு பிரிட்டிஷ் அரசாங் கத்தாரின் முன் கொடுக்கட்டுமே. இப்படிச் செய்தால் இப்பொழுது பிரதம மந்திரியின் தீர்ப்பு தானே அழிந்து போய்விடுகிறது. இதையும் செய்யாமல் தீர்ப்பையும் ஒப்புக் கொள்ளாமல் கூச்சலிடுவது கையாலாகாத்தனமும், சுயநலத்தனமும், ஏதாவது கிளர்ச்சி பண்ணிக் கொண்டிருக்க வேண்டும் என்னும் மனப்பான்மையும், வீண் ஆர்ப்பாட்டமும் ஆகும் என்று நாம் கூறுவதில் எள்ளளவாவது தவறுண்டென்று யாராவது சொல்ல முடியுமா? இது நிற்க நமது நாட்டின் உண்மை நிலையை அறிந்தவர்களும், நிதானமான அரசியல்வாதிகளும் ஆகிய திருவாளர்கள் சர். சாப்ரூ, சர் ரபீந்திரநாத் டாகூர், ஜார்ஜ் ஜோசப், ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி முதலியவர்கள் இத்தீர்ப்பின் மேல் வெளியிட்டிருக்கும் அபிப்பிராயத்தைக் காண்பவர்களுக்கும் நாம் கூறுவதன் உண்மை விளங்காமற்போகாது. ஆகையால் அவர்கள் கருத்துக்களையும் கீழே வெளியிடுகின்றோம்.

“நாமே நமக்குள் ஒரு சமரசம் செய்து கொண்டிருக்கலாம்; ஆனால் அவ்விதம் செய்து கொள்ளவுமில்லை; செய்துகொள்ளவும் முடியவில்லை. ஆனால் தற்போதைய காலதேச வர்த்தமானத்தை மனத்தி லிருத்தி தீர்ப்பின் அமைப்புகள் முழுவதையும் பொதுவாக நான் ஆராய்ந்து பார்த்ததில் இத்தீர்ப்பைக் கண்டிக்கவோ அல்லது மிகவும் சங்கடமான இவ்வேலையில் முதன் மந்திரி நல்லெண்ணங் காட்ட வில்லை என்றோ கூற நான் துணியமாட்டேன்.”

- சர். சாப்ரூ.

“நமது சமூகத்தினர் தக்க முறைகளைக் கொண்டு தற்போதுள்ள கொஞ்ச சுதந்திரத்தையும், மேலான வகையில் உபயோகப் படுத்திக் கொள்ளவேண்டும்.”

- சர். ரபீந்திரநாத் டாகூர்.

“வகுப்புத் தீர்ப்பைச் சிலர் விரும்பலாம்; வேறுசிலர் விரும்பா திருக்கலாம்; ஆனால் தற்போதைக்கு இதுவே முடிவான தீர்ப்பாகும். வேறுவழியில்லை என்பதை உத்தேசித்து இதனை ஒப்புக்கொண்டு விடுவதே புத்திசாலித்தனமாகும்.”

- ஜார்ஜ் ஜோசப்.

“பல வகுப்பினரும் தங்களுக்குள் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள தவறிப்போய் அரசாங்கத்தின் கழுத்தில் இச்சங்கடமான கடமையை கட்டிவிட்டுத் தற்போது அதைப் பற்றிக் குறை கூறப்படுவது அழகல்ல .... சமாதானம் வேண்டுவோர் இத்தீர்ப்பைக் கண்ணியமாக ஒப்புக் கொள்ள வேண்டும்.”

- ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி.

மேற்காட்டிய அபிப்பிராயங்களை நிதான புத்தியுள்ள யாராவது தவறு என்று கூறமுடியுமா? ஆகையால் வீண் ஆர்ப்பாட்டக் காரர்களின் பேச்சுகளுக்குச் செவிசாய்க்காமல் முதலில் வகுப்புக்களும், மதங்களும் ஒழிவதற்கான வேலையைச் செய்ய வேண்டும் என்றும், இவ்வேலைதான் வகுப்பு மத அரசியல் ஒழிவதற்கு வழியென்றும், இதற்குத் தற்சமயம் அரசியல் அமைப்பில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், தனித்தொகுதியும் அவசியம் என்றும் இவைகளைப் பெறுவதன் மூலம் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மக்கள் கொஞ்சமாவது அரசியல் அதிகாரம் பெற்றுத் தங்கள் சுயமரியாதைக்காக வேலை செய்ய முடியுமென்றும், ஆதலால் பிரதம மந்திரியின் வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பை ஆதரிப்பதே ஒழுங்கு என்றும் கூறுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 28.08.1932)

Pin It