அரசியல் கட்சிகளின் நாணயத்தைப் பரிசோதிக்க ஓர் அரிய வாய்ப்பு

.
தேர்தல் நெருங்கிவிட்டது. அணி சேர்க்கைகளும் முடிந்து விட்டன. தேர்தல் அறிக்கைகளை வெளியிடக் கட்சிகள் தயாராகின்றன. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆளும் கட்சியும், இழந்த ஆட்சியைக் கைப்பற்ற எதிர்க்கட்சியும், ரத்தம் சிந்தவும் தயார் தான். ஆனால், மக்களின் வாக்குகளைக் குறிவைத்து வாக்குறுதிகளை மேடைகளில் அள்ளித் தெளிப்பவர்கள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் ஏற்கனவே உறுதியளித்தவற்றை நிறைவேற்றி இருக்கிறார்களா என்றால், இல்லை என்ற பதிலே மேலோங்கி நிற்கிறது. ஆனால், புதிய தேர்தல் வாக்குறுதிகளுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது.

தலித் இயக்கங்களும் அமைப்புகளும் பல ஆண்டுகளாக தங்களுக்குரிய சட்ட ரீதியான இடஒதுக்கீடு அரசுப் பணியிடங்களில் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பாத நாட்களே இல்லை. ஆனால், தலித் கட்சிகளுக்கு சில சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் கொடுப்பது என்பதைத் தவிர வேறு எதையும் அரசியல் கட்சிகள் செய்வதில்லை. ஜனநாயகத்தின் இன்னொரு முக்கிய தூணாகக் கருதப்படும் அரசு நிர்வாக எந்திரத்தில், போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்போதுதான் அரசியல் அதிகாரம் முழுமை பெறுகிறது. எனவேதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஆளும் வகுப்பினர் இத்துறையில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இடஒதுக்கீடு கோரிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அதுகுறித்த முதன்மையான செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டே வருகின்றன. இருப்பினும், மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவது இன்றியமையாத கடமையாகின்றது. இந்நாட்டு மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள், தங்களுக்கான தனித்த உரிமைகளை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப் போதுமான வாய்ப்பு இல்லாத நிலையில், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மக்கள் மன்றத்தில் முன்வைக்கின்றனர். தலித்துகள் தனித்ததொரு அரசியல் சக்தியாகப் பரிணாமம் பெறாதவரை சட்டமன்றம்/ நாடாளுமன்றம் தவிர்த்த அரங்குகளில்தான் உரிமைக் குரல் எழுப்ப முடியும். அரசியல் கட்சிகள் தலித்துகளுக்கு தேர்தலில் இடங்கள் ஒதுக்காததைச் சுட்டிக் காட்டும் பத்திரிகைகள் அவற்றை முதன்மைச் செய்தியாக்கி கட்சிகளுக்கு நிர்பந்தம் கொடுக்கும் பத்திரிகைகள், அரசு நிர்வாகத்தில் புறக்கணிக்கப்படும் தலித் மக்கள் நிலைகுறித்துப் போதிய கவனம் செலுத்துவதில்லை.

இந்நிலையில், ஒரு முன் முயற்சியாக ‘அம்பேத்கர் அனைத்துலகப் பணியாளர் சங்கக் கூட்டமைப்பு' ‘அம்பு', அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் 25.2.2006 அன்று மாபெரும் மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மு.வீரபாண்டியன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன், ம.தி.மு.க. வைச் சார்ந்த மல்லை சத்யா, பா.ம.க. சார்பில் செங்கை சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் கி. ஆறுமுகம், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோபண்ணா, தாம்பரம் நாராயணன், ஜெயக்குமார், பா.ஜ.க. சார்பில் ஜி. குமாரவேலு ஆகியோர் பங்கேற்றனர். முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க. வும் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாட்டை கிறித்துதாசு காந்தி, நெறியாள்கை செய்தார்; அய்.ஏ.எஸ். அதிகாரிகளான ஜி.ஏ. ராஜ்குமார், பி. சிவகாமி, குத்சியா காந்தி, சிவசங்கரன், சிதம்பரம் (அய்.எப்.எஸ்.) சிறப்புரை நிகழ்த்தினர். ‘அம்பு' நிர்வாகிகளான ஏ. ஞானசேகரன், ரா. தயாளன், பி. மணிவண்ணன் மற்றும் ஜி. அரவிரிந்தன் முன்னிலை வகித்தனர். இம்மாநாட்டில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினரும் தலித் மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கையின் நியாயத்தை வெகுவாக ஆதரித்துப் பேசினர். பழைய வரலாறுகளைச் சொல்லி தலித்துகளை சொந்தம் கொண்டாடினர். ‘அம்பு' முன்வைத்துள்ள கோரிக்கைகளை தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக உறுதி அளித்தனர். ‘அம்பு' முன்வைத்துள்ள மிக முக்கியமான கோரிக்கைகளை, இக்கூட்டத்தில் பங்கு பெறாத கட்சிகளின் பார்வைக்காகவும், பொதுமக்களின் சீரிய சிந்தனைக்காகவும் இக்கோரிக்கைகளை முன்வைத்து தலித் இயக்கங்கள் போராடுவதற்காகவும் அப்படியே வெளியிட்டுள்ளோம்.

Ambu
தமிழக அரசுப் பணியில் நிரப்பப்படாத 17,314 தலித் பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது (ஆணை எண் : wp-16087 of 1999 dt. 4.1.2000). ஆனால், ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு முழுவதும் நிரப்புவோம் எனக்கூறி, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது சம்பந்தமாக பணி நிரப்பக் கோரி கேட்டால், பணி நிரப்பும் வேலை தடை செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்தையே சொல்லி வருகின்றனர். ஆனால் இந்த ஆணை, நிரப்பப்படாத பணிகளுக்குப் பொருந்தாது என்பது, அவர்களுக்கு இன்றளவும் உரைக்கவில்லை.

1. தமிழ் நாட்டில் அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையாகச் செய்து தந்த சமூக நீதியைப் போன்று பட்டியல் இனத்தவருக்கும், பழங்குடியினருக்கும் முழுமையான இடஒதுக்கீடு நீதியைப் பெற்றுத் தர, அரசியல் கட்சிகள் உறுதி அளிக்குமா?

2. அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை தமிழ் நாட்டில் மட்டும் பட்டியல் இனத்தவர்க்கும், பழங்குடியினருக்கும் வழங்கப்படாத அநீதியை வேரறுத்து, பதவி உயர்வில் ஒதுக்கீடு வழங்குவதற்கு, ஒவ்வொரு கட்சியும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளும்?

3. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. ஆயினும், இன்னும் தமிழ் நாட்டு அரசுப் பணிகளில் பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடியினருக்கும் 20 சதவிகித நிறைவு கிட்டவில்லை. பின்னடைவுப் பணியிடங்களுக்குச் சிறப்பு நியமனங்கள் மேற்கொள்ள இதுவரை நான்கு முறை அரசாணைகள் மட்டும் வெளியிடப்பட்டு, 10 - 15 நியமனங்கள்கூட செய்யப்படாமல், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் கடந்த 21 ஆண்டுகளாக ஏமாளியாக்கப்பட்டு வந்துள்ளனர். இனியும் பட்டியல் இனத்தவர்/பழங்குடியினரை ஏமாற்றாமல் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கு, சிறப்பு நியமனங்களை செய்ய கட்சிகள் என்ன உடனடித் திட்டங்களைத் தரும்?

4. பட்டியல் இன அலுவலர் சங்கங்களுக்கு ஏற்பளிப்பை வழங்க மறுத்து, 60 ஆண்டுகளாக நிர்வாகிகள் கடைப்பிடித்து வரும் தீண்டாமையை ஒழித்து, பட்டியல் இன அலுவலர் சங்கங்களுக்கு ஏற்பளிப்பை வழங்க கட்சிகள் உறுதி வழங்குமா?

5. தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பட்டியல் இன / பழங்குடி இன உறுப்பினர்களே நியமிக்கப்படவில்லை. தமிழ் நாடு வரலாற்றில் இதுவரை பட்டியல் இனத்தவர் நிதிச் செயலராக நியமிக்கப்படவில்லை. கல்வித் துறை இயக்குநராக (பள்ளி, கல்லூரி, தொழில்நுட்ப இயக்குநர்கள் எவரும்) இதுவரை பட்டியல் இனத்தவர் அமர்த்தப்படவில்லை. இதுபோன்ற மறுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் துறைத் தலைமைப் பணியிடங்களில் பட்டியல் இனத்தவரை அமர்த்த, கட்சிகள் எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும்?

6. அண்டை மாநிலமான கர்நாடகாவில் அமைச்சரவையில் 8 பட்டியல் இனத்தவர் அமைச்சராகி உள்ளனர். ஆந்திராவிலும் அப்படியே. உள்துறை, நிதி போன்ற செம்மாந்த அமைச்சர் பதவிகளைப் பட்டியல் இனத்தவர் வகித்து வருகின்றனர். ஆனால், தமிழ் நாட்டு வரலாற்றில் இதுவரை ஒப்புக்கு ஒருவர் இருவர் என்று மட்டுமே பட்டியல் இனத்தவர் அமைச்சராக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டிலுள்ள, ஆதி திராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் ஆகிய முப்பெரும் பிரிவினர்க்கிடையே போட்டியையும், பொறாமையையும் உருவாக்கும் வகையில் ஏதாவது ஒரு பிரிவினருக்கு மட்டும் அமைச்சர் பதவியைத் தருவது ஒரு தந்திரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முப்பெரும் பிரிவினர்க்கும், இவர்களைச் சாராத பிற பட்டியல் இனப் பிரிவினர்க்கும், பழங்குடியினர்க்கும் ஒவ்வொருவராக 5 பேருக்கும் குறையாமல் பட்டியல் இன/பழங்குடியினரை தமிழக அமைச்சரவையில் அமர்த்தி, பட்டியலினத்தினரிடையே ஒப்புரவை வளர்க்கும் பாங்கை கட்சிகள் தங்களுடைய குறிக்கோளாக அறிவிக்குமா?

7. தமிழ் நாட்டுப் பொறியியற் கல்லூரிகளில் 75,000 இடமுண்டு. ஒவ்வோராண்டும் 70,000 பேருக்கும் மேலான பட்டியல் இனத்தவர் +2 தேறி வருகின்றனர். ஆனால், பொறியியல் கல்லூரியில் 6 சதவிகிதத்திற்குக் குறைவாக, அதாவது 5000 இடங்களுக்குக் குறைவாகவே பட்டியல் இனத்தவருக்கு இடம் கிடைக்கிறது. இதற்கு மூலகாரணமே பட்டியல் இனத்தவருக்கு உரிய உதவித் தொகை கிட்டாமையே. பட்டியல் இனத்தவரின் தொழிற்கல்வி உட்பட, மேல்நிலைக் கல்விக்கு ரூ. 200 கோடிக்கும் குறையாத கல்வி உதவித் திட்டம் கொண்டுவரத் தங்களது கட்சி உறுதியான திட்டம் கொண்டு வருமா?

8. சிறப்பு உட்கூறுத் திட்டத்தையும் (special component plan), பழங்குடியினர் துணைத் திட்டத்தையும் (Tribal sub plan), பட்டியல் இன/பழங்குடியினரின் வாழ்க்கை ஆதாரமாக, உயிர் நாடியாகக் கருதுகிறோம். தமிழ் நாட்டிலும் சரி, மய்ய அரசிலும் சரி, சிறப்பு உட்கூறுத் திட்டம் கால் பங்குகூட நிறைவேற்றப்படவில்லை. தமிழ் நாட்டில் சிறப்பு உட்கூறுத் திட்டத்தில் வரவேண்டிய ரூ. 2000 கோடிக்குப் பதிலாக ரூ. 400 கோடிக்குக் கீழாகவும், மய்ய அரசில் வரவேண்டிய ரூ. 40,000 கோடியில் கால் மடங்கிற்குக் கீழாகவும் ஆண்டுத் திட்ட நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் நலத்துறை உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும், திட்டக் குழுவும் சிறப்பு உட்கூறுத் திட்டம் என்பதைப் பற்றி ஏதும் அறியாமலும், அறிந்திருந்தாலும் அறியாதது போலவும் கண்மூடி இருந்து வருகின்றனர். நிதித் துறையும், திட்ட வளர்ச்சித் துறையும் எதிர்மறையாகவே செயல்பட்டு வருகின்றன.

பட்டியல் இன/பழங்குடியினரை மதிப்பதற்கு அடையாளமாகச் சிறப்பு உட்கூறுத் திட்டத்தையும்/பழங்குடியினர் துணைத் திட்டத்தையும் பற்றிய ஆண்டு ஆய்வரங்கத்தையும் அரசியல் கட்சிகள் நடத்துமா? அரசு அளவிலும், திட்டக்குழு அளவிலும் இத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் வண்ணம் தொடர்கூட்டங்களை நடத்த, தங்கள் கட்சி அழுத்தம் தருமா? சிறப்பு உட்கூறுத் திட்டத்தில் ஒதுக்கப்பட வேண்டிய தொகையை முழுமையாக அளிக்கவும், இந்த சிறப்பு உட்கூறுத் திட்ட ஒதுக்கீடு, பிற துறைகளின் ஒதுக்கீட்டை வெட்டிவிடும் என்ற விதண்டாவாதத்தைக் கைவிடவும் கட்சிகள் பட்டியல் இனத்தவருக்கு வாக்கு அளிக்குமா?

9. பட்டியல் இனத்தாருக்கான பெரும்பாலான திட்டங்கள் சேவகத் தன்மையை பட்டியல் இனத்தார் மீது தொடர்ந்து சுமத்துவதாகவும், அவர்களைக் கையேந்த வைப்பதாகவுமே இருக்கின்றன. அமெரிக்காவில் கருப்பர்களுக்கான திட்டத்தில், அவர்களை நிறுவனங்களின் தலைவராக்குதல், அமைச்சராக்குதல், செல்வக் கோடீஸ்வரராக்குதல், உடைமையாளராக்குதல் போன்ற ஆளுமை செறிந்த அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. அதுபோல, பட்டியல் இனத்தார் முன்னேற்றத்திற்குத் தற்போதுள்ள திட்டங்களின் அடுத்த முன்னேற்றமாக பெருந்தொழில் முதலீடு, கல்வி நிறுவனத்திற்கான முதலீடு, ஒப்பந்ததாராக்குதல், பேருந்து உரிமம் வழங்கல், வீடு கட்டுமானத் தொழில் முதலீடு போன்ற பெருந்திட்டங்களை வகுக்கத் தங்கள் கட்சி முனைந்து செயல்படுமா?

10. நாடாளுமன்றத்திலுள்ள பட்டியல் இன நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பாகுபாடின்றி பல பொதுச் செயல்பாடுகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். டாக்டர் கே.ஆர். நாராயணன் அவர்கள் குடியரசுத் தலைவராவதற்கு இவர்கள் காட்டிய ஒருங்கிணைப்பைத் தலைமையாகச் சுட்டிக் காட்டலாம். ஆனால், தமிழ் நாட்டுச் சட்டமன்ற பட்டியல் இன உறுப்பினர்கள், ஒரு கருத்தரங்கில்கூட அவ்வாறு ஒன்று கூடுவதைக் கட்சித் தலைமைகள் தடை செய்கின்றன என இக்கட்சி உறுப்பினர்கள் வாய்மொழியாகவே அறிகிறோம். மேலும், சட்டமன்றத்தில் பட்டியல் இனம் பற்றிய கேள்விகளை எழுப்பவோ, உண்மை நிலையை எடுத்துப் பேசவோ இவர்களைக் கட்சிக் கொரடாக்கள் ஊக்குவிப்பதில்லை என்றும் கட்சிப் பொது/செயற்குழுக் கூட்டங்களிலும் இவர்களுக்குப் பேச வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை எனவும் அறிகிறோம்.

கட்சியின் பொதுச் செயலராகவோ, மாவட்டச் செயலராகவோ பட்டியல் இனத்தவரைக் காண்பது, குதிரைக் கொம்பாக இருக்கிறது. இந்நிலைகளை மாற்றி, பட்டியல் இன உறுப்பினர்களை வாய்பேசாத மடந்தையாகவோ, வெறும் வாய்ப் பேச்சாளராகவோ ஆக்காமல் அவர்களை வாயுள்ளவராக, ‘வாய்ஸ்' உள்ளவர்களாகத் தங்கள் கட்சி உருவாக்கி உயர்வு தருமா?

சில முக்கிய விளக்கக் குறிப்புகள்

இனம் 1 : அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோரின் பங்கேற்பு, தற்போதைய ஒதுக்கீட்டு அளவான 50 சதவிகிதத்திற்கு மேல் 90 சதவிகிதம் வரை உள்ளது. அதாவது, பட்டியல் இனம், பழங்குடியினர் பங்கீட்டுக்குப் போக வேண்டிய 19 சதவிகிதத்தைக் கழித்தால், மீந்திருக்க வேண்டிய 81 சதவிகிதப் பணியிடங்களுக்கும் மிகையாகக்கூட பல பணிகளில் பிற்படுத்தப்பட்டோர் நிறைந்துள்ளனர்.

 பொதுப்பிரிவிற்கென்று விடப்படும் 31 சதவிகித இடங்களில், 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை பிற்படுத்தப்பட்டோருக்குப் போகின்றன.

 தேர்வாணைய உறுப்பினர், பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், தேர்தல் ஆணையர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள், பேருந்து உரிமம் பெறுவோர், பற்பல தொழில் வணிக நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் போன்ற பல்வேறு நிலைகளிலும், துறைகளிலும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு, அளவிற்கு மேல் காணப்படுகின்றனர். ஆனால், ஒதுக்கீட்டு அளவிற்கு உட்பட்டாவது பட்டியல் இனத்தவரையோ, பழங்குடியினரையோ காண முடிவதில்லை.

 50 சதவிகிதத்திற்கு மேல் மொத்த ஒதுக்கீடு கூடாது என உச்ச நீதிமன்றம் உரைத்த பின்னும், பிற்படுத்தப்பட்டோரின் ஒதுக்கீட்டைப் பாதுகாக்க, 60 சதவிகித ஒதுக்கீட்டைச் சட்டமாக்கியது தமிழ் நாட்டு அரசியல். ஆனால், 1990 கணக்கெடுப்பின்படி, பட்டியல் இனத்தாருக்கு 18 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதமாக உயர்த்த வேண்டிய ஒதுக்கீட்டை இதுவரை மறுத்து வருகிறது தமிழ் நாட்டு அதிகாரி வர்க்கமும், அரசியலும். மத்திய அரசுத் துறைகள் தமிழ் நாட்டில் பட்டியல் இனத்தாருக்கு 19 சதவிகிதம் வழங்கி வருகிறது என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.

இனம் 2 : அனைத்து மத்திய அரசுத் துறைகளிலும், பொது நிறுவனங்களிலும், மேல் மட்டப் பணியிடங்கள் தவிர, பிற எல்லா பணியிடங்களுக்கும் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி உயர்வில் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

 1995இல் 16(4அ) அரசியல் சட்டப் பிரிவும், பின்னர் அரசியல் சட்டம் 16 (4ஆ)வும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆயினும் பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாட்டில் இவை கடைப்பிடிக்கப்படுவதில்லை (6 பதவிகள் தவிர).

 1995க்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர்க்கு அரசியல் சட்ட வழியாகப் பதவி உயர்வில் ஒதுக்கீடு வழங்க வகையில்லை என்றபோதும், 2004 வரை தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இது சலுகையாக வழங்கப்பட்டது. ஆனால், பட்டியல் இனத்தாருக்கு அரசியல் சட்ட அடிப்படை உரிமையாக அமைந்துள்ள இந்தப் பதவி உயர்வில், இடஒதுக்கீட்டை அனைத்துத் துறைகளிலும் வழங்க தலைமைச் செயலர் முதற்கொண்டு பல அதிகாரிகள் மறுத்து எதிர்வாதம் செய்து வருகின்றனர்.

 1996இல் ஆட்சியை இழக்கும் முன்னும், 2001இல் மீண்டும் ஆட்சிக்கு வரும் முன்னும் பதவி உயர்வில் பட்டியல் இனத்தவர்க்குப் பதவி உயர்வு அளிக்க அ.தி.மு.க. கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. 1998இல் ஆட்சியில் இருந்த தி.மு.க. கட்சி முதல்வர், இதே உரிமை வழங்கப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பு செய்தித் தாள்களில் வந்தது. ஆனால், இதுவரை பட்டியல் இனத்தவர் இந்தப் பலனைப் பெற்றாரில்லை.

 பிற்படுத்தப்பட்டோர்க்குப் பதவி உயர்வில் ஒதுக்கீடு அளிக்க முடியாது என 2004இல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டதால், பட்டியல் இன/பழங்குடியினருக்கு மட்டும் இந்த உரிமையை வழங்குவதை இரண்டு ஆண்டுகளாக அரசு நிறுத்தி வைத்துள்ளது (கடித எண். 3624-BCC 2005 - 2 நாள் : 12.4.2005).

இனம் 3 : இதுவரை பின்னடைவுப் பணியிடங்களை நிறைவேற்றுவது குறித்து வெளியிடப்பட்டு, அதிகாரிகளால் செயல்படுத்தப்படாத ஆணைகள் : 1989இல் அரசு ஆணை 1352 (ஆதிந) நாள் : 27.7.1989 . 1993இல் அரசு ஆணை 167 (ஆதிந) நாள் : 20.7.1993 . அரசு ஆணை எண். 2 (ஆதிந) நாள் : 2.1.1997 . அரசு ஆணை எண். 44 (ஆதிந) நாள் : 20.5.1998 . அரசு ஆணை எண். 91 . அரசு ஆணை எண். 1352 (ஆதிந) நாள் : 27.7.1989 . அரசு ஆணை எண். 162 (ஆதிந) நாள் : 21.9.1999 . அரசு கடித எண். 56752/R/993 நாள் : 28.10.1999

 தற்போதைய மத்தியிலுள்ள கூட்டணி அரசு, பட்டியல் இன/பழங்குடியினருக்குச் சிறப்பு நியமனங்கள் வழங்க கொள்கை முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது. ஆனால், கூட்டணியிலுள்ள தமிழ் நாட்டுக் கட்சிகள் தமிழ் நாட்டில் இதை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரை வலுவான குரல் கொடுக்கவில்லை.

இனம் 4 : மத்திய அரசிலுள்ள பல துறைகளில் பட்டியலினப் பணியாளர் சங்கங்களுக்கு முறையான சங்க ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கமாக ஏற்பளிப்பு வழங்கப்படா இடங்களிலும், இச்சங்கங்கள் முறையாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான துறைகளில் இச்சங்கங்களுக்குக் கட்டட வசதி, விடுப்பு வசதி, பயண வசதி ஆகியவை செய்து தரப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் தமிழ் நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், தமிழ் நாடு தகவல் தொகுப்பு விவர மய்யம் ஆகிய இரு துறைகளைத் தவிர, வேறெங்கிலும் பட்டியலினப் பணியாளர் சங்கங்களுக்கு முறையான ஒப்பளிப்பு வழங்கப்படவில்லை.

பட்டியலினம் என்ற பெயரிலோ, அம்பேத்கர் என்ற பெயரிலோ உருவாக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கும், பதிவு சங்கங்களுக்கும் அந்தப் பெயரில் பதிவு செய்யப்பட மறுக்கப்பட்ட கொடுமைகள், தமிழகத்தில் அரங்கேறியுள்ளன. இன்னும் பல இடங்களில் இது தொடர்கிறது. நூற்றுக்கணக்கில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு பணியாளர் சங்கங்களுக்கு நிலம், கட்டடம், அலுவலக அறை போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், பட்டியல் இனச் சங்கங்களுக்கு என்று எந்த ஒரு துறையிலும் இதுவரை இந்த வசதிகள் அளிக்கப்படவில்லை.

 பட்டியல் இனச் சங்கங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு 1975க்குப் பிறகு எந்தவொரு தலைமைச் செயலரும், பட்டியல் இனம் அல்லாத செயலரும், ஒரு சிலர் தவிர பிற பட்டியல் இனச் செயலரும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கலந்து கொண்டதில்லை.

 தலைமைச் செயலகத்திலோ, துறைத் தலைவர் அலுவலகங்களிலோ, ஆதி திராவிடர் நலச் செயலர்/இயக்குநர் அலுவலகங்களிலோ, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் தவிர்த்த பிற மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலோ, அண்ணல் அம்பேத்கர் படத்தை வைக்கக்கூட இசைவளிக்கப்படவில்லை.

இனம் 6 : அமைச்சரவையில் கையாளப்படும் மதிப்புரு வரிசையில், இதுவரை எந்தவொரு பட்டியலின அமைச்சரும் முதல் அய்ந்து இடங்களுக்குள் வந்ததில்லை. கடந்த 25 ஆண்டுகளாக கடைசி மூன்று இடங்களுக்கு மேல் எந்தவொரு பட்டியல் இன அமைச்சருக்கும் இடம் தரப்படவில்லை. இதுவரை எந்தவொரு பழங்குடியினரும் அமைச்சராக்கப்படவில்லை.

இனம் 7 : சிறப்பு உட்கூறுத் திட்டம் பற்றி எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரை சிந்தித்து அறிக்கை வெளியிட்டதில்லை. பட்டியல் இனத்தவருடன் எந்தவொரு ஆட்சியும் இதுகுறித்து ஆய்வு நடத்தவோ, கலந்துரையாடவோ, குழு அமைக்கவோ முன்வரவில்லை. ஒரே மாநிலத்தில் மட்டும் ஒரே அய்ந்தாண்டுத் திட்டத்தில் பட்டியல் இனத்தாருக்கு வராமல் போகும் திட்ட ஒதுக்கீடு, சில ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டும். மத்திய அரசின் ஒதுக்கீட்டு இழப்போ சில லட்சங்களைத் தொடும்.