இலக்கிய வரலாறுகள்:

காவிரிக்கும் தமிழகத்திற்குமான பன்னெடுங் காலந்தொட்ட வரலாறுகளையெல்லாம் தமிழில் எழுதப்பட்ட கம்பராமாயணம், சிலப்பதிகாரம் பட்டினப்பாலை, நளவெண்பா, தனிப்பாடல் திரட்டு என ஒவ்வொரு இலக்கிய நூல்களாக வாசித்து அதிலே காவேரி குறித்த செய்திகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டு விட்டனவே என பெருமைகொள்ளலாம். இவ்வளவு ஏன் 1924ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே

“கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்”

என்ற முண்டாசுக்கவி பாரதி பாடிய காவிரியின்பெருமை மிக்க பாடல்களையும் மீண்டும் மீண்டும் வாயார பாடிக்கொள்ளலாம். இவையெல்லாம் இன்றும் தமிழ் புலவர்களுக்கும், தமிழ்த்துறை மாணவர்களுக்கும் ஆய்வு பட்டங்கள் வாங்குவதற்கு பயன்படுகிறதே தவிர இலக்கியத்திலுள்ள நமது காவிரி நதிநீர் உரிமையை இப்போதைய இணையதள மோகத்திலுள்ள இளம் தலைமுறையின் கவனத்திற்கோ, நீதிமன்ற கவனத்திற்கோ இவையெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை என்பதே எதார்த்தமான உண்மையாக உள்ளது.

இலக்கிய நூல்களில் சொல்லப்படுபவனற்றுக்காக மட்டும் நாம் காவிரி உரிமையை கோரவில்லை. மாறாக இலக்கியமும், வரலாறுகளும் நம் கடந்தகால உரிமைகளை ஆதாரமாக தெரிவிப்பதினால் நிகழ்கால போராட்டத்தின் தீவிரத்தை இன உணர்வுடன் கொண்டு செல்லுமே என்ற உயரிய நோக்கத்திற்காகவே காவிரி பற்றிய வரலாறுகளையும், இலக்கிய சான்றுகளையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வரலாறுகளை அறிந்தவர்களாலேயே வரலாறு படைக்கும் வண்ணமாக நிகழ்காலத்தில் வாழ முடியும் என்பது உண்மையே.

காவிரி அரசியல்

மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளெல்லாம் அரசியலாகிவிட்டால் தெருவில் நிற்பது மக்கள் தான்.  அரசியலுக்கு அப்பாற்பட்ட உரிமை முழக்கம் மட்டுமே மக்களுக்கான வாழ்வாதாரத்தை பெற்றுத்தரும் என்பது காவிரிக்கு முற்றாகப் பொருந்தும் தீர்வு.

ஈழம்பற்றி பேசினாலும், காவிரி பற்றி பேசினாலும் எப்போதும் எதனையும் திராவிட கட்சிகளினாலேயே இந்த நிலைமை என அடி நாதம் தெரியாத சிலர் பேசுவதை அன்றாடம் தேனீர் கடை தொடங்கி தொலைக்காட்சி விவாதம் வரை காணலாம். இதுபோன்ற நபர்களிடம் திராவிட கட்சிகள் என்ன செய்துவிட்டதற்காக இந்த குறைபாட்டு பாடுகிறீர்கள், என கேட்டால் அதற்கும் விடை கிடையாது. காரணம் இவர்கள் எதையுமே முழுதாக அறியாதவர்கள். இங்கே திராவிட கட்சிகள் என்றால் பெயரில் மட்டுமே திராவிடத்தை சூட்டியுள்ள எல்லோருமல்ல என்பதை குறித்துக்கொள்ளவும். காவிரி பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் 1971-இல் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரால் பலமுறை கடிதம் மூலமாக காவிரி பிரச்சனையை தான் தீர்ப்பதாக நம்பிக்கையுறுதி அளிக்கப்பட்டும், நேரடி சந்திப்புகள் மற்றும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தின்  முடிவு என அத்தனைக்கும் பிறகும் மன்னை நாராயணசாமி, முரசொலிமாறன் உள்ளிட்டோரின் தனிப்பட்ட காவிரி தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்க தமிழக அரசு மட்டும் மீண்டும் வழக்கு தொடுக்கும் உரிமையோடு வழக்கைத் திரும்பப் பெற்ற நிகழ்வை பற்றியெல்லாம் முழுவதுமாக தெரியாமல் அதிகாரத்திலுள்ளவர்களே    பொறுப்பற்ற முறையிலும், தரமற்ற வார்த்தைகளை பிரயோகம் செய்து, காவிரியை அரசியல் நோக்கோடு பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. இவர்கள் எல்லோரும் பிறரைக் குறைசொல்லி  காவிரி பிரச்சனையை அரசியலாக்கி சுயலாபம் தேடுகிறார்கள் என்பதைத் தமிழக மக்கள் அறிவர்.

இன உரிமைக்கான  குரல்

ஆறுகள் தோன்றுமிடங்களைவிடவும் அவை பாய்ந்தோடுகின்ற நிலப்பரப்பு பகுதிவாழ் மக்களுக்கே அவற்றின் மீதான உரிமை கூடுதலாக உள்ளது. ஏனெனில் அதிக வெள்ளப்பெருக்கினால் கூடுதலான பாதிப்புகனை சந்திக்கின்ற மக்கள் ஆறு பாய்ந்தோடுகின்ற பகுதி மக்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த நியதி உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்துகிறது. காவிரியின் மொத்த நீளமான 760 கி.மீ தூரத்தில் ஏறத்தாழ 65% சதவீத நீளம் தமிழகத்தில் தான் அமைந்துள்ளது. 35% சதவீத நீளம் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கும் அங்குள்ள மாண்டியா, ஹாசன் போன்ற பகுதிகளுக்கும் இருக்கும் காவிரி உரிமையை விட கூடுதலான உரிமை தமிழகத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் உண்டு.

காவிரி டெல்டா மாவட்டங்களையும் சேர்த்து தமிழகத்தில் 16 மாவட்டங்கள் காவிரி நதிநீரோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. காவிரியை விட கூடுதலான நீரை அளிக்கக்கூடிய கிருஷ்ணா நதிநீர் 734 ஆ.மி.க நீர் அரபிக்கடலில் கலக்க காரணமாக உள்ள கர்நாடகம் தமிழகத்திற்கு மட்டும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என அரசியல் பேதமின்றி ஒருமித்து கூச்சலிடுகிறது. ஆனால் இங்குள்ள இன உணர்வோ எழுச்சியின்றி உறக்க நிலையில் இருக்கிறது. சூதாட்டக் களமான மட்டைப்பந்து களத்திற்குக் கூடுகின்ற பேரார்வம், பொழுது போக்கிற்காக இன உணர்வைத் தள்ளி வைத்துவிடுகிறது. தன்மானத்தை கொடுத்தேனும் இனமானம் காக்க வேண்டும் என்ற புரிதல் ஏற்பாட்டாலொழிய இன உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்காது என்பதை எல்லோரும் உணரும் காலம் எப்போது?

நீதியின் தாமதம்

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும். இக்கூற்று காவிரிக்கு முற்றாகப் பொருந்தும். ஒற்றைச் சொல்லுக்கு விளக்கம் கேட்க ஆறு வார காலம், பின்னர் மீண்டும் ஒத்திவைப்பு என அடுக்கடுக்கான ஒத்தி வைப்புகளும் காலதாமதமும் தேர்தல் காரணமும் என கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட வழக்கு இப்படி காலதாமதம் செய்யப்படுகிறதே தவிர உடனடி நடவடிக்கை என்ற பேச்சிற்கே இடமில்லை வெறும் ஏட்டளவிலேயே 205 ஆயிரம் மில்லி கன அடி நீர் 192 ஆயிரம் மில்லி கன அடி நீராகக் குறைந்து, பின்னர் மீண்டும் 192 ஆயிரம் மில்லி கன அடி நீர் 177.25 ஆயிரம் மில்லி கன அடி நீராகச் சுருங்கிக் கொண்டே வருகிறது. காவிரி டெல்டா விவசாயிகள் விதைத்த பயிர்கள் கண்முன்னே கருகியது கண்டும், கால்நடைகள் மேய்ச்சல் நிலமற்று எலும்பும், தோலுமாய் மடிந்ததும் இதையெல்லாம் காணப்பொறுக்காத விவசாயி தன்னைத்தானே மாய்த்துக்கொண்டதும் சரிவர பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் ஆவணப்படுத்தப்படாத காரணத்தினாலேயே தான் நீதி அரசர்கள் பெங்களூரு நகர சொகுசு வாழ்விற்காக தமிழகத்திற்கு உரித்தான பங்கீட்டு நீரை அவர்களுக்குத் தாரைவார்த்துள்ளனர். ஏறத்தாழ 3 லட்சம் ஏக்கர் விவசாய தேவைக்கான நீரை இழந்துவிட்டோம். மீதமுள்ள நீரோ ஏட்டளவில் மட்டும் எப்போது வரும் என்ற உத்தரவாதமே இல்லாமல் காத்திருக்கிறது. நீதிமன்றம் எத்தனை கடுமையான உத்தரவு பிறப்பித்தாலும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என உறுதியாக நிற்கும்   கர்நாடகத்தின் நீதிமன்ற அவமதிப்பு செயல்பாடு மட்டும் நீதியின் பார்வைக்கு படுவதே இல்லை. அமைதியே உருவாகக் கொண்ட தமிழக விவசாயிகள் டெல்லியின்  வீதிகளில் அம்மணமாகவும் நின்றுவிட்டனர். ஆனால் நிலைமை மட்டும் மாறிவிடவில்லை.

அடுத்தக்கட்ட நகர்வு

தமிழகத்திலுள்ள 16 மாவட்டங்கள் நேரடியாக காவிரி நீர் பாசனப் பகுதியாகவும், எஞ்சியுள்ள மாவட்டங்கள் குடிநீருக்காகவும், பிற தேவைகளுக்காகவும் நம்பியிருக்கும் காவிரி நதிநீர் மீதான நம் மாநில உரிமையை எவ்வித சார்புகளுமின்றி ஒருங்கிணைந்து ஒருமித்தக் குரலாக ஒலித்தால் மட்டுமே கேட்காத காதுகளும், மிரண்டுபோய் செவிசாய்க்கும்.

“நடந்தாய் வாழி காவேரி”                        

Pin It