ஒரு கோமாளி நடிகரின், கோமாளித்தனமான செயல் தமிழகப் பெண் ஊடகவியலாளர்களிடம் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பெண்ணியச்சிந்தனையாளர்களையும், பதவிகளில் இருக்கும் பெண்களையும், பணிகளில் இருக்கும் பெண்களையும் தட்டி எழுப்பியுள்ளது. கோமாளி நடிகர், தான் கோமாளித்தனமாக, திருமலை என்பவரது  முகநூலைப் படிக்காமலேயேப் பகிர்ந்தேன் என்று அட்மினைக் காரணமாக்காமல், சரணடைவுச் செய்தாலும், இதை வைத்து, பெண்களை இழிவாக, நான்காம் தரமாக, கேவலமாக, குற்றவாளிகளாகச் சித்தரிக்கும், சீரழிந்த சிந்தனையாளர்களுக்கு, செருப்படி தருகின்ற, தீர்ப்பை, உயர்நீதிமன்ற பெண் நீதிபதி ராமதிலகம் கொடுத்துள்ளார். அதில் சம்பந்தப்பட்ட கோமாளி நடிகரையும், அவரைப்போல எண்ணும் "கோணல் புத்திக்காரர்களையும்" தெருவுக்கு இழுத்து அடித்துள்ளார்.

ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைத்து, அதையே பணி உயர்வுக்கு  நிபந்தனையாக்கி, கேவலமாகச்செயல்படும் "ஆண் அதிகாரிகளோ, ஆண் முதலாளிகளோ, மானுடப்பிறவியே அல்ல என்றும், விலங்கினச் சிந்தனை கொண்டவர்கள்" என்றும் துணிந்து கூற, துப்பில்லாத இந்த உலகில், இரண்டு வாரம் கழித்து, கோமாளி நடிகரின் முன் பிணை மனு மீதுதான், இந்த பெண் நீதிபதி தனது கண்டனத்தைப் பதிவு செய்கிறார். கோமாளி நடிகரின் கூற்றுக்கு எதிராக, கிளர்ச்சி செய்த பெண் ஊடகவியலாளர்களும், ஆண் ஊடகவியலாளர்களும், கல்லெறிந்தார்கள் என வழக்குப்பதிவு செய்த காவல்துறையின் "திசை திருப்பும் திருப்பணி" கோமாளித்தனத்தின் மீதான குற்றத்தை மறைக்க முயன்றாலும், அதன் "கொடூரச் சிந்தனையை" வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் இந்தப்பெண் நீதிபதி.

மேலிடத்து ஆதரவோ, அனுதாபமோ, இருப்பதனாலேயே, "தேடப்படுவதாக" ஊடகத் தர்மங்கள் "திரைப்படம்" காட்டும்போது, தனது வட்டாரத்திலே, பகிரங்கமாகப் பவனி வரும் கோமாளிக்கு, சட்டப்படி "முன் பிணை எடுக்க" ஆதரவுச் சக்திகள் செயல்படும்போது, அதற்கு "சம்மட்டி அடி" அடித்திருக்கிறார் இந்தப் பெண் நீதிபதி.

ஆண் ஆதிக்கச் சக்திகள் அனைவருமே இதேபோலப் பெண்களை இழிவாக "உற்று நோக்கும் போது" அமைதி காக்கும் ஆண்களும், பெண்களுமே, ‘‘அநியாயமான இழிசொல் நாயகர்களுக்கு’’ என்றுமே மறைமுகமாக, ‘‘சாமரம்’’ வீசுகிறார்கள் என்று புரிந்ததால்தான், தன் மேசைக்கு வந்த மனு மீது, தீர்ப்பு கூறும் தருணத்தில், ஆணாதிக்கவாதிகளின் சிந்தனைகளுக்கு, ஒரு சவக்குழி தோண்ட பாதை அமைத்துக் கொடுத்துள்ளார், இந்தப்பெண் நீதிபதி.

"சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் என்பது, அதன் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதாகவும், அதை தானும் பரப்புவதாகவுமே பொருள்படும்" என்று தெரியாமல் செய்துவிட்டேன் என மன்னிப்புக் கேட்ட கோமாளிக்கு இந்தப்பெண் நீதிபதி பதில் கொடுத்துள்ளார்.

"படுக்கையைப் பகிர்வது மட்டுமே பெண்கள் வாழ்க்கையில் உயர் பதவிகளுக்கு வருவதற்கு ஒரே வழி என்றால், உயர் பதவிகளில் இருக்கும் அனைத்துப் பெண்களையுமே் அது உள்ளடக்குமல்லவா?" என நீதிபதி வினவியுள்ளார்.  "யாருக்குமே பெண்களை இழிவுபடுத்த உரிமையில்லை. அப்படிச் செய்வார்களானால், அது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல்" என்று இடித்து உரைத்துள்ளார்

மனுதாரரான கோமாளி நடிகர், மன்னிப்புக் கேட்டு விட்டார் என்று கூறப்பட்டதற்கு, "உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திய வடிவத்தில் காட்டுவதே தலைமைக்கான இலக்கணம். பொதுவாழ்வில் இருக்கின்ற மனிதர்களிடமிருந்து, வரும் சொற்கள் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வர வேண்டும். அவை வெறுப்பையும், பிளவுகளையும் கொண்டு வரக்கூடாது. நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பிறகு "மன்னிப்பு" எனச் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது." என்று நீதியரசர் கூறியுள்ளார்.

"முகநூல் பக்கத்தைப்படித்துப் பார்க்காமலேயே, பகிர்வு செய்து விட்டேன்" என்ற மனுதாரரின் நியாயப்படுத்தலுக்கு, "தவறுகளும், குற்றங்களும் ஒன்றல்ல. குழந்தைகள்தான்  தவறு செய்யும். அதை மன்னித்து விடலாம் அதுவே வயது வந்தவர்களால் செய்யப்படுமானால், அவை குற்றங்களாகத்தான் ஆகிவிடுகின்றன." என்று கூறியுள்ளார்.

"அந்த முகநூல் பக்கத்தில் எழுதப்பட்டுள்ள மொழி இழிவுபடுத்துவதாகவும், ஆபாசமாகவும் உள்ளது. மனுதாரர் அளவு பிரபலமும், வயதும் உடைய ஒருவருக்கு ஏற்புடையதல்ல.மனுதாரர் படித்தவர். நிறைய பின்பற்றுபவர்களைக் கொண்டுள்ளார் எனும் போது, இத்தகையச் செயலை, ஏற்க முடியவில்லை. தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழாமல், அவர் ஒரு தவறான முன்னுதாரணத்தைப் பதிவு செய்து விட்டார் என்றும் நீதியரசர் கூறியுள்ளார்.

மேற்கண்ட பெண் நீதியரசரின் சொற்கள், குறிப்பிட்ட அந்த நடிகருக்கு மட்டுமல்ல. நம்மைச்சுற்றி நிலவும் ஆணாதிக்கச் சமுதாயம் முழுமைக்குமே பொருந்தும்.

தொடரும்

Pin It