கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

mohanakrishnan 350பொறியாளர் ஆ. மோகனகிருஷ்ணன் கட்டிய அணைகள் அவரின் அழியாத நினைவுச் சின்னங் களாகும்.  இவற்றையெல்லாம் விட அவர் எழுதிய நூல்களும் சிறந்தவையாகும்.  எதிர்வரும் காலத்தில் நீர் வளத்தையும் நில வளத்தையும் நிரந்தரமாகப் பாதுகாக்கும் வழிமுறைகளுக்கு வழிகாட்டும் அறிவுப்பெட்டகமாக விளங்குவன.

முனைவர் பொறியாளர் ஆ. மோகனகிருஷ்ணன் அவர்கள் அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசையில் மூன்று தலைப்புகளில் எழுதியுள்ளார்.  அம்மூன்று தலைப்புகளும் மிக முக்கியத்துவமானவை.  இந்திய நாடு முழுவதும் உள்ள நீர் பிரச்சினைகளைக் குறிப்பிட்டு, அதன் பின்னணியில் நீர் இயல், நீர் வளம், தமிழக நீர்வளம் என்ற மூன்று தலைப்பு களில் இரண்டு தொகுதிகளை எழுதியுள்ளார்.  நூலின் முன்னுரையில் ஆசிரியரே கீழ்க்கண்ட வரிகளை எழுதியிருக்கிறார்:

“மூன்று தொகுப்புகளை எழுத வேண்டு மென்று கட்டளையிட்டவர் என்னுடைய மதிப்பிற்குரிய ஆசிரியர் முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள்.

59 ஆண்டுகள் மேலாகத் தமிழக அரசின் நீர்ப் பொறியாளராகத் தொடர்ந்து பணி யாற்றிப் பெற்ற அனுபவம் கைகொடுக்கும் எனத் தெரிந்து தொடங்கினேன்.  நூலில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், புள்ளி விவரங்கள் யாவும் தக்க ஆதாரங் களைச் சார்ந்தவைகளே என்ற நம்பிக்கையுடன் படித்துப் பயன்பெற வேண்டுமென அன்பர் களைக் கேட்டுக் கொள்கிறேன்.”

இரண்டு தொகுதிகளையும் படித்தேன்.  பிரச் சினைகள் வரும்போது தெளிவுக்காக திரும்பவும் படிப்பேன்.  புயல், வெள்ளம், வறட்சி, நிலத்தடி நீர் குறைந்து வருவது, மண்வளம், நீர்வளம், நீர் மேலாண்மை போன்ற தலைப்புகளில் ஆழமான கருத்துக்களைத் தெளிவுபடுத்தியுள்ளார். 

எதிர் காலத்தைப் பற்றி எச்சரிக்கை விடும் கருத்துக்கள் படிப்போரைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.  முனைவர் ஆ. மோகனகிருஷ்ணன் எழுத்துக்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைகளைப் போக்கும் வழிமுறைகளைத் தெரிவித்திருக்கின்றன.

முனைவர் பொறியாளர் ஆ. மோகனகிருஷ்ணன் அவர்கள் தமிழக நீர்வளம் பற்றி தொகுதி ஐஐ-ல் ஆய்வு செய்துள்ளார்.  அதில் தமிழகத்தின் நில அமைப்பு, மலையும் கடலும் சூழ்ந்துள்ள இயற்கை அமைப்பு பற்றி பொறியாளர் என்ற முறையில் விரிவாக ஆய்வு செய்திருக்கின்றனர்.  ஒவ்வொரு அம்சமும் நமக்கு எவ்வாறு சாதகமாக அல்லது பாதகமாக உள்ளது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.  அவர் கருத்துக்களைக் காண்போம்.

தமிழ்நாடு வெப்ப மண்டலத்தைச் சேர்ந்தது.  மேற்கு தொடர்ச்சி மலை தமிழ்நாட்டின் மேற் கெல்லையில் ஓர் இயற்கை அரணாக அமைந்திருக்கின்றது. ஆயினும் அதனால் பாதகங்களையும் நாம் சந்தித்து வருகிறோம்.  இந்தியாவிற்கு மழை தரும் தென்மேற்குப் பருவக் காற்று மேற்கே அரபிக் கடலில் மே, ஜுன் மாதங்களில் உருவாகி இரு பிரிவுகளாக வீசுகின்றது.

இமயமலையை நோக்கி வீசும் பருவக்காற்று வட இந்தியாவில் பெருத்த மலையைத் தருகிறது.  கிழக்கு நோக்கி வீசும் பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி கேரளாவிற்கு அதிக மழையை கொடுக்கிறது.  இதனைத் தமிழ்நாட்டில் ஆடிக் காற்று மூலம் ஈரக்காற்றை உணர்கிறோம்.  வேனிற்கால வெப்பமும், சிறிது குறைகிறது.  மழை சிறிதளவே பெய்கிறது.

தமிழ்நாட்டின் எல்லையில் சுமார் 1074 கிலோ மீட்டர் கடல் எல்லையாகும்.  இந்தியக் கடற் பரப்பில் 13.04ரூ தமிழக கடல் எல்லையாகும்.  மனிதர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துகிற  இது நமக்கு ஒரு சொத்தாகிறது.

தமிழ்நாட்டின் வடகிழக்குப் பருவக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் இறுதிவரை நீடிக்கும்.  இதன் நம்பகத் தன்மையோ தென்மேற்கு மழையைப் போன்று இல்லாமல் தொடங்குவதிலும், முடிவிலும் கால தாமதம் மாறுதலும் உண்டாகலாம்.  இலங்கைத் தீவு மறைப்பதால் இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கு இப் பருவ மழை எள்ளளவும் பயன்தருவதில்லை.  மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கிளையாக நீலகிரி மலைகளும் கிழக்கு முகமாக நீண்டு கிழக்குத் தொடர்ச்சி மலையாக உள்ளன.  தொடர்ந்து இல்லாமல், விட்டு விட்டு இருப்பதால் திம்பம் மலைகள், சேர்வராயன் மலைகள், சவ்வாது மலைகள், ஏலகிரி மலைகளென கிழக்கு, வடகிழக்கு முகமாகக் காடுகள் நிறைந்த மலைகளாகக் குறிஞ்சி நிலப் பயன்பாடுகளைத் தமிழ்நாட்டிற்குச் சேர்க் கின்றன.  பல ஆறுகளும் பாய்ந்தோடுகின்றன.

ஒகேனக்கலை காவிரி ஆறு கடக்கும் போது தான் சமவெளியில் அமைதியாய் நீரோட்டம் பெருகி ஒடுவதால், அங்கெல்லாம் நிலத்தடி நீர் பெருகுவதால் பல அனுகூலங்கள்.  எல்லா உயிரினங் களும் உயிர் வாழச் சூழ்நிலை கிடைக்கின்றன.  காற்றும் அடுத்த வேளை உணவும் கிடைக்கச் செய்கிறது.  நீர்வளமும், நிலவளமும் ஒன்றுக் கொன்று தொடர்புடையன.  இவை இரண்டையும் ஒருங்கிணைத்தே நாம் சிந்தனை செய்திட வேண்டும்.  நிலவளக் குன்றில் நீர்வளம் இருந்தும் பயன் விளையாது.

மண்ணில் செம்மண், களிமண், வண்டல் மண், உவர்மண் எனப் பலவகை உள்ளது.  மாநிலத்தில் செம்மண் பூமி அதிக அளவில் உள்ளது.  கரிசல் மண் சில இடங்களில்தான் உள்ளது.  வண்டல்மண் டெல்டா மாவட்டம்.  உவர் மண் கடற்கரை சமவெளியில் காணப் படுகிறது.

தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பு 16 சதவிகிதம் மட்டுமே.  இது குறைவு.  20 சதவிகிதமாவது இருந்தால் தான் காடுகளினால் நாம் நன்மை அடைய முடியும்.  இனி காடுகளின் பரப்பு கூட்டுவது சாத்தியமில்லை.  குறையக் கூடாது என்பதுதான் முக்கியமாகக் கொள்ளல் வேண்டும்.  தமிழ்நாட்டில் 75ரூ பரப்பில் பாறைகள் அமைந்துள்ளன.  25ரூ நாளடைவில் உடைந்து மண் படிவுகளாகின்றன.

1943-அரசு விதிகள் பின்வருவன: ஆற்றின் கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவு வரை கிணறு அமைத்தல் கூடாது.  கால்வாய், ஏரி, நீர் ஆதாரங்களிலிருந்து 50 மீட்டர் தொலைவில் கிணறு தோண்டுதல் கூடாது.  மின் இணைப்பு வழங்கக்கூடாது.

நிலத்தடி நீரை பூமிக்கடியில் உள்ள கனிமப் பொருட்களைச் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்து, பூமியைச் சிதைத்து நமக்குப் பின் வரக் கூடிய சந்ததிக்குப் பயன்பாட்டிற்கு வழியில்லாமல் செய்து வருகிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.  2000-ல் நிலத்தடி நீர் 176.14 கன அடி ஆக நிலத்தடி நீர் நமக்கு கிடைத்துள்ள ஓர் அரிய கருவூலம் ஆகும்.  முறைப்படி பயன்படுத்த வேண்டும்.  அளவுக்கு மேல் இறைக்காமல் அதன் தூய்மை பாதுகாக்க வேண்டும். கிடைக்கும் நிலத்தடி நீரையும் மேற்பரப்பு நீரையும் சேர்த்து நாம் பயன்படுத்துவதுதான் நீர்வளம் என்று கொள்ள வேண்டும்.

உலகிலேயே ஒரு ஆற்றின் நீர் அதன் படுகையை கடந்து மற்றொரு ஆற்றின் படுகையில் பாயவழி செய்த பெருமைக்குரிய அணை முல்லைப் பெரியார் அணை.  இது 1924-1934 வரை கர்னல் எல்லிஸ் வடிவமைத்து 120 அடி உயர்ந்தது.

இன்றைய நிலையில் தமிழ்நாட்டின் நீர் வளத்தைக் காட்டி குறிப்பிடப் பெற்ற திட்டங்களின் மூலம் நமக்கு கிடைத்த நீரின் அளவு:

பெரியார் திட்டம்  - 22

பரபிக்குளம் ஆழியாறு  - 22

காவிரி - 217

மொத்தம் -  261 TMC         

இத்துணை முயற்சி சேர்ந்தாலும் தமிழ் நாட்டின் பற்றாக்குறை இருந்துதான் தீரும்.  இதற்கு நமக்கு நாமே திட்டத்தைப் போல கிணற்று நீரையும் கருத்தோடு அக்கறையோடு பயன்படுத்த பல உத்திகளை மேற்கொள்ளவேண்டும்.

முனைவர் மோகனகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தில் நீரியல், நிலவளம், நீர் மேலாண்மைத் திட்டம் ஆகிய மூன்று அடிப்படை நிலைகளை ஆய்வுசெய்து எழுதியிருக்கிறார்.  அரசுத்துறையில் இறுதிவரை பொறுப்பாளராகவும் செயல்பட்டிருக் கிறார்.

“நீரின்றியமையாது உலகு, உணவெனப்படுவது நீரே” என்று தமிழ்ப் புலவர்கள் கருத்துகளை ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.  எதிர்காலத்தைப் பற்றி எச்சரித்துமிருக்கிறார். ஆனால் மத்திய, மாநில ஆட்சிகளின் அணுகுமுறைகள் பற்றிய கருத்துக்கள் எவையும் சொல்லப்படவில்லை.

science techn book 350மத்திய, மாநிலத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு, திட்டத்தின் சாதனைகள் விளம்பரப்படுத்துவதுதான் பழக்கம்.  ஐந்தாண்டுகளுக்கு பின்னர் திட்டங்கள் பற்றி ஆய்வு செய் வதற்கு நிபுணர் குழு போடப்படும்.  அக்குழுக்கள் ஆய்வறிக்கையை வெளியிடும்.  இதுவே மத்திய, மாநில நிர்வாகத்தின் வாடிக்கையான செயல் களாகும்.

மக்களுக்கான திட்டத்தை நிறைவேற்றுவதில் மக்களை ஈடுபடுத்த நிர்வாகம் தவறிவிட்டன.  குறிப்பிட்ட திட்டத்தை அரசு நிறைவேற்றுவதில் கொள்கை உறுதிப்பாடு இல்லை.  அரசுகளின் பரிசீலனை இத்துடன் முடிக்கப்பட்டுவிடும்.  குறிப்பாக நீர் மேலாண்மைத் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுவதில்லை.  அத்துடன் மட்டு மில்லாமல் நேர் எதிராக வேளாண்மை வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துவிடுகின்றன.

நீர்ப்பாசனத் துறையில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நேரிடையான பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டுமென்று மத்திய அரசின் சட்டவிதிகள் சொல்கின்றன.  ஆனால் பங்கேற்பைத் தடுத்து, அதிகாரிகளும் ஒப்பந்தக்காரர்களும் இணைந்தே மோசடி நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் 39052 ஏரி, குளங்கள் இருந்தன.  இதில் ஐயாயிரம் நீர் நிலையங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.  அரசுக் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.  தனியார் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன.  விளைநிலங்களோ, வீட்டு மனைகளாக விற்கப்படுகின்றன.

“தொட்டணைத் தூறும் மணற்கேணி” எனும் வள்ளுவர் வாக்கு நிர்வாகத்தால் மறக்கப்பட்டு, நீரோடைகள் உள்ளிட்ட அத்துணை நீர் நிலை களிலும் மணல்கொள்ளை நடத்தப்படுகிறது.  விதிகளுக்கு மாறாக மணல் கொள்ளை நடப்பதால் ஆறுகள் வறண்டுவிட்டன.  ஆற்று மணல், தாது மணல், பாறைகள், வளங்கள் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன.

முனைவர் மோகனகிருஷ்ணன் அவர்களின் மூன்று தொகுப்பு நூல்களின் கருத்துக்களோடு அரசுகளின் தவறான நடவடிக்கைகளையும் இணைத்து சிந்தித்தால் தமிழ்நாட்டின் எதிர்காலம் பாலைவனமாகும் பேராபத்தை உணர முடியும்.

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும், முன்னாள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான முனைவர் வா.செ. குழந்தை சாமி அவர்கள், இத்தொகுப்புகளின் பதிப்பாசிரியர் என்ற பொறுப்பில் முகவுரை எழுதியிருக்கிறார்.  முகவுரையே இத்தொகுப்பின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

“நீர்வளம் பற்றிய ஓர் உலகப்பார்வையை ஆசிரியர் தந்திருப்பது ஓர் அரிய பங்களிப்பாகும்.  தமிழகத்தின் ஆறுகளையும், அவற்றின் உபநதி களையும் பாசனத் திட்டங்களையும் வேர் முதல் விழுதுவரை நேரடியாக அறிந்த அரிய அனுபவ முடையவர் முனைவர் ஆ. மோகனகிருஷ்ணன்.  அந்தப் பின்னணியில் தமிழக வளம் பற்றி அவர் சேகரித்துத் தந்திருக்கும் தகவல்கள், பொது மக்களுக்கும் பயன்படும்; பொதுப்பணித்துறையைச் சார்ந்த ரீதியில் வல்லுநர்கட்கும் பயன்படும்; நீர் வளத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாகக் கொள்கை வகுக்கும் அரசியல் தலைவர்கட்கும் பயன்படும்; கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கற்கும், கற்பிக்கும் நீரியல் துறை மாணவர்கள், ஆசிரியர் ஆகியோருக்கும் பயன்படும்.  இச்சிறந்த நூலைப் படைத்து அளித் துள்ள முனைவர் ஆ. மோகன கிருஷ்ணன் அவர்களுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் எனது பாராட்டுதல்களையும், நன்றியையும் பதிவு செய் வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவு செய்திருக்கிறார்.

அறிவியல் தொழில்நுட்ப வரிசை நூல்கள்

தொகுதி 1 நீர் இயல், நீர் வளம்  - ரூ. 200/-

தொகுதி 2 தமிழக நீர்வளம் -  ரூ. 300/-

ஆசிரியர்: ஆ.மோகனகிருஷ்ணன்

வெளியீடு: தமிழ் வளர்ச்சித்துறை