தொழில் நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இந்த காலத்தில் மனிதர்கள் சக மனிதர்களோடு விளையாடும் சூழல் மாறி மனிதர்களும் குழந்தைகளும் இயந்திரங்களோடு விளையாடி இயந்திரமாகவே மாறிவரும் நேரத்தில் நம் பழமையான விளையாட்டான தாயம் விளையாட்டைப்பற்றி தெரிந்துகொள்வோம். மகாபாரதக்கதை கேள்விப்பட்டிருக்கும் அனைவருக்கும் தாயம் என்ற விளையாட்டு ஒன்றும் புதிதில்லை. மகாபாரதத்தில் தருமன், பாண்டவர்களின் நாட்டையும், பாஞ்சாலியையும் பணையமாக்கிய சகுனியின் வஞ்சக விளையாட்டாக அல்லது சூது விளையாட்டாக அறிந்த ஒன்றே. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் விளையாட்டாக ஆரம்பித்த தாயம் என்னும் விளையாட்டு பின்நாளில் மிகப்பெரிய போருக்கு மூலமாக இருந்தது என்பதையும் மகாபாரதம் தெரிந்த எல்லோரும் அறிந்திருப்பீர்கள். தாயம் எனும் விளையாட்டை மகாபாரதத்தில் பாண்டவ மன்னர்கள் நாட்டையும், பாஞ்சாலியையும் இழக்கக் காரணமான விளையாட்டு என்று பார்ப்பதுபோல் துரியோதனன் -சகுனியின் பக்கம் நாட்டையும் பாஞ்சாலியையும் பெறுவதற்குக் காரணமான விளையாட்டாக இருந்திருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது மிகவும் பழமையான விளையாட்டு என்பதால் அது எப்போது யாரால் எங்கு தோன்றியது என்கிற ஆராய்ச்சிக் கேள்விக்கு இன்னும் பதில் காண முடியாமலேயே உள்ளது. இது நாட்டையும் மனைவியையும் வைத்து விளையாடும் அளவிற்கு உள்ள அரசர்களுக்கு மட்டுமோ அல்லது பணக்காரர்களுக்கு மட்டுமோ உரிய விளையாட்டு என்று சாதாரண மக்கள் ஒதுங்கவேண்டாம். பணையம் வைக்காமல் விளையாடினால் இது சாதாரண மனிதர்களும் விளையாடும் விளையாட்டுதான். அதை எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

தாயம் விளையாட்டைக் கடுமையான மழைக் காலங்களிலோ அல்லது கடுமையான வெயில் காலங்களிலோ பொழுது போக்கிற்காக விளையாடும் உள்விளையாட்டாகும். பெரும்பாலும் பெண்களே விளையாடுவார்கள். பிறகு பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் சேர்ந்து விளையாடுகின்ற விளையாட்டாகப் பரிணமித்தது.

தாயம் விளையாட விளையாட்டுக் களம் என்று நாம் எதுவும் பெரிதாக கட்டமைப்பு வசதிகள் எதுவும் வடிவமைக்கத் தேவையில்லை. வீட்டின் தரையில் கட்டம் வரைந்து மரம் அல்லது செம்பினால் ஆன நான்கு முகம் கொண்ட தாயக்கட்டையை தரையில் உருட்டி அதில் விழும் புள்ளிகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு காய்களை தாயக்கட்டத்தில் நகர்த்தி விளையாடலாம். தற்பொழுது ஆறுமுகம் கொண்ட தாயக்கட்டைகளும் குழந்தைகள் ஆடுவதற்கான கட்டங்களும் கடைகளில் விற்கப்படுகின்றன. ஒரு சில பகுதிகளில் தாயக்கட்டைக்கு பதில்   புளியங்கொட்டைகளை உருட்டியும் விளையாடுகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான கட்டங்கள் அமைத்து விளையாடினாலும், தமிழர்களைப்  பொறுத்தவரையில் இரண்டு வகையான கட்டங்களை அமைத்து விளையாடுகின்றனர். அதில் ஒரு வகை தாயக் கட்டத்தில் காய்களை உட்புறமாக ஒரு சதுரத்தில் வைத்து அதன் வெளிப்புறமாக நான்கு பக்கமும் 6 x 3 கட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் மற்றொரு வகை தாயக் கட்டத்தில் 7 x 7 சதுரமாக அமைக்கப்பட்டிருக்கும். சோழி, சொக்கட்டான், பாம்பு ஏணி போன்ற விளையாட்டுகளும் இந்த தாயம் விளையாட்டின் வகைகளேயாகும்.

நான்முக தாயக்கட்டையை கொண்டு 3x6 கட்டத்தில் எப்படி தாயம் விளையாடுவது என்று பார்ப்போம்.

இரண்டு முதல் நான்கு பேர்வரை தாயம் விளையாடலாம். நான்கு பக்கமும் நாலு பேர் அமர்ந்து விளையாடலாம். எதிரெதிரே இருப்பவர்கள் கூட்டாகவோ தனியாகவோ விளையாடலாம். கூட்டுச் சேர்ந்து விளையாடுவதைக் கன்னை கட்டுதல் என்று சொல்லப்படும்.ஒவ்வொரு ஆட்டக் குழுவும் இருவேறுபட்ட (கற்கள், புளியங்கொட்டை) ஆறு காய்களைக் கட்டத்தின் மையப்பகுதியான மனைப் பகுதியில் வைத்து ஆட்டத்தைத் துவக்க வேண்டும்.

தாயக் கட்டையை உருட்டி தாயம் விழுந்தபின்தான் மனையிலிருந்து காய்களை  நடுவில் உள்ள முதற்கட்டத்தில் இறக்க வேண்டும். தாயம் என்பது ஒரு கட்டையில் ஒரு புள்ளியும் மறு தாயக்கட்டையில் பூஜ்ஜியமும் விழுவதாகும். தாயம் விழும் வரை 5, 6, மற்றும் 12 ஆகிய எண்கள் விழுந்தால் தாயக்கட்டையை உருட்டி மறுபடியும் விளையாடலாம். தாயக்கட்டையை உருட்டும் போது 2, 3, மற்றும் 4-ஆகிய புள்ளிகள் விழுந்தால் உருட்டியவர் மறுபடியும் ஆடக்கூடாது. ஒரு ஆட்டத்தில் முதல் காயை மனையில் இருந்து இறக்குவதற்கான தாயம் விழும் முன் விழுந்த அனைத்து மறு ஆட்டப் புள்ளிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு கட்டத்தில் ஒரு ஆட்டக்காரரின் காய்களே இருக்க வேண்டும். வேறு ஆட்டக்காரரின் காய்கள் அதே கட்டத்தில் நுழைந்தால் முதலில் அங்கிருந்த காய்களை வெட்டி  மனையில் வைக்கப்படும். மீண்டும் தாயம் போட்டுதான் அந்தக் காயை மனையிலிருந்து கட்டத்திற்குள் இறக்க வேண்டும். தாயக்கட்டங்களில் சில கட்டங்களில் மட்டும் குறுக்கே இரு கோடுகள்(x) போடப்பட்டிருக்கும் அதுக்கு ‘மலை’னு பேர். இந்த கட்டத்தில் காய்கள் வந்து நிற்பதற்கு மலையேறுதல் என்று பெயர். இந்த கட்டத்தில் ஒரு ஆட்டக்காரரின் காயை இன்னொரு ஆட்டக்காரரால் வெட்ட முடியாது. தாயக் கட்டையை உருட்டும்போது 1, 5, 6, அல்லது 12 ஆகிய புள்ளிகள் விழுந்தால் அவர்கள் மறுபடியும் ஆடலாம். பிறர் காய்களை வெட்டலாம்.

ஒரு ஆட்டக்காரரின் காய்கள் ஒரு முறை அனைத்து கட்டங்களையும் சுற்றி நடுவில் அடுத்த ஆட்டக்காரரின் காய்களையும் வெட்டி வந்த பின் திரும்பவும் மனைக்குள் செல்லும் காய்களை பழம் என்பார்கள். எதிர் ஆட்டக்காரரின் காய்களை வெட்டவில்லையென்றால் மனைக்குள் செல்ல முடியாது. அவ்விதம் மனைக்குள் செல்ல முடியாத காய்கள் கடைசிக் கட்டத்திலேயே தங்கி விடும். சிலர் வேண்டுமென்றே சில காய்களை வெட்டுக்கு  விட்டுக் கொடுத்து மறுபடியும் சுற்றி வரவைப்பதும் உண்டு.

காய்கள் மனைப் பகுதியில் இருந்து எல்லாக் கட்டத்தையும் சுற்றி பின் மீண்டும் மனைக்குள் புகுந்த காய்களை ஆட்டத்தில் இருந்து எடுத்துவிடுவார்கள், அதற்கு பழம் எடுத்தல் என்று பெயர். முதலில் எந்த ஆட்டக்காரர் தனது ஆறு காய்களையும் பழமாக மாற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவர்.

நான்கு பேர் கொண்ட ஆட்டத்தில், எதிரெதிரே அமர்ந்திருப்பவர்கள் ஓரணியாகச் சேர்ந்து,  ஈரணியாக ஆடும் போது ஆட்டம் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் முடியும்.

இந்த விளையாட்டைச் சோழிகளை உருட்டியும் ஆறுமுக தாயக்கட்டையை உருட்டியும் புளியங்கொட்டையை உருட்டியும் சிலர் விளையாடுவதுண்டு.

இந்தத் தாய விளையாட்டு அப்படி என்ன நமக்கு நன்மை பயக்கிறது அதை ஏன் அடுத்த தலைமுறைக்கு நாம் சொல்லித்தரவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.

இந்தத் தாயம் விளையாட்டு அற்புதமாகக் கணிதத்தைக் கிராமப்புற பெண்களுக்கு சொல்லித்தருகிறது. தாயத்தில் காய்களை நகர்த்த தேவையான அறிவுத் திறனும் எதிரியின் காய்களை வெட்டுவதற்கான சிந்தனைத் திறனையும் வளர்க்கிறது. தாய விளையாட்டு போரில் வீரர்களை எவ்வாறு வழிநடத்துவது என்கிற யுக்தியை அழகாகச் சொல்லிக் கொடுப்பதில் தாயத்திற்கு நிகர் தாயமே. இதை சதுரங்க ஆட்டத் தின் முன்னோடி எனலாம்.

இந்த விளையாட்டு தனிமனித வாழ்வில் வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்லிக்கொடுக்கிறது. மனிதனாக தோன்றிய எவனும் வாழ்வின் எல்லாக் கட்டங்களையும் கடந்து முன்னேறினால் தான் பழம் என்னும் உயர்ந்த நிலையை அடைய முடியும். வாழ்வின் சில கட்டங்கள்தான் மலையின் மேல் இருப்பது போன்று பாதுகாப்பானது மற்ற கட்டங்களில் எல்லாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அடுத்தவரால் எந்த நேரமும் வெட்டப் படலாம் அல்லது வேட்டையாடப்படலாம். எப்போதும் ஆறுபோல் முன்னோக்கியே நகரவேண்டும் என்பதை காய்களின் முன்னோக்கிய நகர்வு நமக்கு உணர்த்துகிறது. வாழ்வின் எந்த ஒரு கட்டத்தில் நாம் வீழ்த்தப்பட்டாலும் மன உறுதியோடு மீண்டும் முதலில் இருந்து கவனமாக நம் பயணத்தைத் தொடங்கினால் நிச்சயம் வாழ்வில் பழம் என்னும் வெற்றி நிலையை அடையலாம். இந்த ஆட்டத்தில் ஏதோ ஒரு காயை பழமாக்குவதல்ல வெற்றி, எல்லாக் காய்களையும் பழமாக்குவதே வெற்றி என்கிறது தாயம் என்னும் விளையாட்டு. இதன் பொருள் என்னவென்றால் மனிதனின் வாழ்வில் ஏதோ ஒன்று மிகுந்து இருப்பதல்ல வெற்றி எல்லா நல்ல பண்புகளின் மிகுதிதான் வெற்றி என்கிற வாழ்க்கைப் பாடத்தை இதைவிட யார் நமக்கு சொல்லிக் கொடுக்க முடியும்.

எனவே பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் எல்லாம் வெறும் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டும் வெற்றியல்ல எல்லா நல்ல பண்புகளையும் பெறுவது தான் வெற்றி என்று சொல்லும் தாயம் விளையாட்டை உங்கள் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையிலேயே சொல்லிக்கொடுங்கள். அவர்களும் வாழ்வில் அனைத்து பண்புகளையும் பெற்று வெற்றி வாகை  சூடட்டும்.

இன்னும் விளையாடலாம்

Pin It