சர்க்கர் உத்யோகத்தில் கிருஸ்துவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பதவிகளில் ஒன்றைக் குறைத்து விட்டதற்காக ஈரோடு இந்திய கிருஸ்துவர் சங்கத்தில் ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்களாம்.
இதைப் படிக்க அப்புசாமி அய்யர் மகன் பின்வருமாறு கூறினான்:
“கிருஸ்துவாளும் எங்களைப் போலத்தானே அதிகமாய் படிச்சிருக்கா? அவாளுக்கு 14-க்கு 1-போறாதோ? எங்களவாளுக்கு மட்டும் ரொம்ப கொடுத்தூட்டாளோ? 14-க்கு 2-தானே? நாங்கள் 15 லட்சம் பேர்தான் இருக்கோம். கிருஸ்தவர்கள் 20 லட்சம் பேர் இருக்கான்கள். ஆனாலும் எங்களுக்குக் கொடுத்ததைக் குறைக்க முடியுமோ, இந்தச் சர்க்காராலே? குறைச்சுத் தான் பார்க்கட்டுமே, இந்த ரெட்டியார்? காந்திக்கு ஒரு தந்தி நேருவுக்கு ஒரு தந்தி, கொடுத்தா நடுங்கிப் போயிட மாட்டாரா, ஆசாமி?
ஏசுநாதர்தான் ஒரு கன்னத்திலே அடிச்சா, இன்னொரு கன்னத்தையும் காட்டணுமின்னு சொல்லியிருக்காரே? ஒரு பதவியைப் பிடுங்கீட்டா, இன்னொண்ணையுமல்லவா தூக்கி எறிஞ்சிட்டுப் போகணும்?
அது கிடக்கட்டும்; இவனையெல்லாம் யார் கிருஸ்தவனாகச் சொன்னது? கீழ் ஜாதிக்காரனாகவே இருந்தாலும் ஏதோ கொஞ்சம் உத்தியோகம் கிடைச்சாலும் கிடைக்குமே எங்களவா கொடுமை தாங்கலேண்ணு சொல்லிவிட்டு கிருஸ்துவராணாங்களாமே, ஏன்? நல்லாப் படிச்சு முன்னுக்கு வரலாமுண்ணுதானே? சரி இப்போ வேலையில்லாமே திண்டாடட்டும். நன்னா வேணும், இவாளுக்கு”
இந்த மாதிரிச் சொன்னதைக் கேட்டுச் சகிக்காத நான் கேட்டேன்:-
“ஏனப்பா? நீங்கள் மட்டும் சர்க்கார் உத்தியோகமென்றால் வாயைப் பிளக்கிறீர்களே மற்றவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்? உங்களில் ஒருவன்போய் ஒரு ஆபீசில் சாதாரண குமாஸ்தாவாக உட்கார்ந்து கொண்டால், அப்படியே பாதாள கரண்டி போட்டு இழுக்கிற மாதிரி உன் இனத்தையே தன் கிட்டே இழுத்து விடுகிறானே... அவர் கிருஸ்துவராயிட்டது தப்பு என்கிறாயே... நீ மட்டும் உன் ஜாதித் தொழிலை விட்டுட்டு செருப்புக் கடை, சோற்றுக் கடை, துணிக்கடை, மளிகைக்கடை வைக்கலாமோ?”
இதற்குச் சொல்கிறான் அந்தப் பையன், கேளுங்கள்:- “அது எங்களிஷ்டம். நாங்கள் கோயிலிலும் இருப்போம், குளத்தங்கரையிலுமிருப்போம், காங்கிரசிலுமிருப்போம், கம்யூனிஸ்ட் கட்சிலுமிருப்போம், காப்பிக் கடையிலுமிருப்போம், கச்சேரியிலுமிருப்போம். நாங்கள் எங்கேயிருந்தாலென்ன? நாங்கள் எந்தத் தொழிலைச் செய்தாலென்ன? பிராமணன் பிராமணன் தானே! சூத்திரன் சூத்திரன்தானே!” (பளார் என்று கன்னத்தில் அறை விழுந்தது.)
“ஓய்! ஏன் காணும் அடிக்கிறீர்? நீர் நன்னாயிருப்பீரா? கடவுள் தான் உமக்கு கூலி கொடுக்கணும். மறந்துட்டு வாயிலே வந்துடுத்து; அதற்காக அடிப்பீர் போலிருக்கே! உமக்கு இவ்வளவு ரோஷமிருந்தா உம்ம மனுஷாளுக்கு புத்தி சொல்றதுதானே? டில்லியிலே எங்கள் ஆச்சாரியார் காலிலே விழுந்து அவர் செருப்பை கண்ணிலே ஒத்திண்டபடியே படுத்திருக்கிறாரே, உங்களவா, அதுக்கு என்ன சொல்றீர்?”
இதைக் கேட்ட எனக்கு ஆத்திரம் தாங்கவில்லை. இந்தப் பையன் எதையே சொல்லிப் புளுகிவிட்டு ஆரம்பித்த பேச்சை விட்டுவிடப் பார்க்கிறான் என்று நினைத்தேன்.
“ஏனப்பா புளுகுகிறே! இந்தக் காலத்திலா? காலிலே விழுகிற மனுஷனா? எங்களவனா? இருக்கவே இருக்காது” என்று சொன்னேன்.
“இருக்காதா? ஹூம்! அது கூட சாதாரணப் பேர்வழி அல்ல. “க்ஷத்திரியர்” என்று சொல்றியளே, அவாளிலே ஒருத்தர்தான். யாரோ தூத்துக்குடி துரைசாமி நாடாராம் தெரிஞ்சுதா? நீங்களெல்லாம் அசல் சூத்திரர்தான்! அதில் ஆட்சேபனையே இல்லை,” என்று கூறிவிட்டு ஏதோ ஒரு பேப்பரை எறிந்துவிட்டு, பிடித்தான் ஒரே ஓட்டம்!
அவனைப் பிடிப்பதை விட்டு என் காலடியில் கிடந்த பேப்பரை எடுத்து விரித்தேன்! என்ன ஆச்சரியம்! அவன் சொன்னது அப்படியே சரி! ஹிந்துஸ்தான் - ராஜாஜி மலர்” (7-12-47) என்று போட்டிருந்தது, அந்தப் பேப்பரில்! ராமன் காலில் அனுமான் விழுகிற மாதிரியே இருந்தது! இராமாயணத்தை ஆரியர் போற்றும் இரகசியமும் நன்றாக விளங்கியது!
(குறிப்பு: குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார் அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)
நன்றி: வாலாசா வல்லவன்