இந்தியாவில் முதல் முதலாக அரசியல் கிளர்ச்சி உண்டாக்கப்பட்டதின் உத்தேசமே, இந்திய ஆட்சி உத்தியோகம் முழுவதும் ஆங்கிலேயர் கையிலே இருப்பதால் இந்தியர்களுக்கும் இந்திய அரசாட்சியில் சரியான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டேதான் ஏற்படுத்தப்பட்டது என்பது எல்லா அரசியல்வாதிகளாலும் ஒப்பு கொள்ளப்பட்ட உண்மையாகும்.
யாராவது ஆக்ஷபிப்பதாயிருந்தால் 45´த்திய அரசியல் ஸ்தாபனங்கள் என்பவைகளின் தீர்மானங்களைப் பார்த்தால் நன்றாய் தெரிய வரும். இப்படி அவர்கள் கேள்க்க வேண்டிய அவசியம் எப்படி ஏற்பட்டதென்றால் ஆங்கில அரசாட்சியின் பயனாக இந்திய மக்களுக்கு சற்று கல்வி, அன்னிய நாட்டு வர்த்தமானம் முதலியவைகள் மூலம் அரசியல் விஷயங்கள் அறிய வசதி ஏற்பட்டதேயாகும்.
ஆகவே அவர்களது ஆசையானது அரசாட்சி உத்தியோகங்களில் புகுந்து அதை அடைவதற்கு அரசியல் ஸ்தாபனம் என்பதை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலமாய் தங்களுக்கு இன்ன இன்ன உத்தியோகங்களில் உரிமை கொடுக்க வேண்டுமென்றும், பிறகு அதில் இத்தனை இத்தனை ஸ்தானங்கள் தங்களுக்கே (இந்தியர்களுக்கே) வேண்டுமென்றும் அதற்கும் பிறகு அது இன்ன இன்ன மாதிரியில் கிடைக்கக் கூடியதாய் இருக்கவேண்டும் என்றும் கேட்கப்பட்டது போலவே அரசாங்கத்தாரும் இந்திய அரசாட்சியில் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க சம்மதித்து அக் கொள்கையின் பேரிலேயே நாளா வட்டத்தில் கொடுக்கப்பட்டும் வந்திருக்கின்றன. என்றாலும் இன்னமும் அவைகள் போராதென்றும் அப்பிரதிநிதித்துவத்திற்குக் கொடுக்கப் படும் சுதந்திரங்களும் அதிகாரங்களும் சவுகரியங்களும் போராதென்றும் கேள்க்கப்பட்டு வருகின்றது.
எனவே மேல்கண்ட மாதிரியான பிரதிநிதித்துவமும் சுதந்திரமும் மக்களுக்கு கிடைத்ததில் அவைகள் பெரும் பெரும் பதவிகளாகவும், பெரும் பெரும் சம்பள வருவாயுள்ளதாகவும், பெரும் பெரும் அதிகாரங்களுள்ளதாகவும் மக்களுக்கு அவை கவுரவமும் கீர்த்தியுமுடையவைகளாகவும் ஏற்பட்டு விட்டதால் அவைகள் மீது எல்லா மக்களுக்கும் ஆசை ஏற்பட்டு ஒவ்வொருவரும் அதை அடைய முயற்சி செய்ய வேண்டியதாய் ஏற்பட்டுவிட்டது.
இதன் பயனாய்ப் பதவிகள் எல்லாம் அரசியல் ஸ்தாபனங்களில் முன்னணியில் இருப்பவர்களுக்கே கிடைக்கக் கூடியவைகளாய் விட்டபடியால் அரசியல் ஸ்தாபனத்தின் மூலமாய் தங்களுக்கு கிடைக்காது என்று கருதினவர்களுக்கும் அந்த ஸ்தாபனங்களில் செல்வாக்குப் பெற முடியாமல் தடுக்கப்பட்டிருந்தவர்களுக்கும் தங்களுக்கென்று தனி ஸ்தாபனங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டு விட்டன.
ஆனதினால் அதற்காக பதவி - அதிகாரம் உத்தியோகம் ஆகிய ஆசை கொண்டவர்கள் ஒரே ஸ்தாபனத்தை நம்பிக் கொண்டிருக்க முடியாமல் தனித்தனியாகப் பிரிந்து போய் தனித்தனியாக ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவர்களானார்கள்.
இப்படி பிரிந்து தனியாக ஸ்தாபனங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் தங்கள் தங்கள் ஸ்தாபனங்களுக்கு ஏதாவது ஒரு கொள்கையையும் கண்டுபிடிக்க வேண்டியவர்கள் ஆனார்கள். இதனால் அவசியமில்லாத கொள்கைகளை உண்டாக்கவும் அவசியமான கொள்கைகளை மறுக்கவும், மறைக்கவும் வேண்டிய அவசியம் அரசியல்வாதிகளுக்கு ஏற் பட்டது.
ஆகவே இந்த வேலைகள் சற்று படித்தவர்களுக்கே வேண்டியிருந்ததாலும் படித்தவர்கள் பெரும்பாலோர் பார்ப்பனர்களாகவே இருந்ததாலும் பார்ப்பனரல்லாத படித்தவர்கள் மிகச் சுருக்கமாயிருந்ததாலும் பார்ப்பனரல்லாத பொது மக்கள் பாமரர்களாயிருந்ததாலும் பார்ப்பன சூழ்ச்சியை ஜெயித்து அரசியல் ஸ்தானத்தின் உத்தியோகங்களிலும் பதவிகளிலும் பங்கு பெற முடியாத பார்ப்பனரல்லாதார்கள் அரசியல் துறையை விட்டு சமூகத் துறையின் பேரால் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் மக்களை தங்கள் வசப்படுத்தி அரசியலில் பங்கு பெற முயற்சிக்க வேண்டியவர்களானார்கள்.
இந்தக் காரணத்தால் ஏற்பட்டதுதான் பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனம் என்பதாகும். இந்த ஸ்தாபனக்காரர்கள் முன் கூறியதுபோல் தங்களுக்கும் ஏதாவது ஒரு கொள்கையை கண்டு பிடிக்க வேண்டியிருந்ததால் தங்களுக்கு கிடைக்கும் உத்தியோகத்தையும் பதவியையும் எல்லா வகுப்பு மக்களுக்கும் எண்ணிக்கைப்படி பங்கு போட்டுக் கொடுப்பதாகவும் தங்களுடன் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்றும், சொன்னதோடு புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனமானதால் அதற்கு சற்று பலம் வேண்டு மென்றுங் கருதி பிரிட்டிஷ் ஆக்ஷிக்கு உள்பட்ட சுயராஜ்ஜியம் அடைவது என்கின்ற பேரையும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு கூட்டத்திலும் ராஜவிசுவாச பல்லவியும் பாடிவர வேண்டியதாயிற்று. ராஜ விசுவாசம் என்பது காங்கிரஸ் ஆரம்பித்த காலம் முதல் கொண்டு எந்தக் கூட்டத்திலும் முதல் முதல் செய்யும் தீர்மானமும் கூட்டமுடிவில் பாடும் ராஜ வாழ்த்துப் பாட்டுமாகும். ஆகையால் பார்ப்பனரல்லாதார் கக்ஷியாரும் அதையே பின்பற்ற வேண்டியதாயிற்று.
எனவே இந்தப் புதிய கக்ஷி எல்லோருக்கும் பங்கு கொடுக்க சம்மதித்துப் பார்ப்பனர்களை விலக்கியதாக தெரிவித்தவுடன் பாமர மக்களும் படித்த பார்ப்பனரல்லாதார் எல்லோரும் இதில் சேர ஆரம்பித்தார்கள்.
இதைக் கண்ட பார்ப்பனர்கள் இக்கக்ஷியை ஒழிக்கக் கருதி இது வகுப்புத் துவேஷக் கக்ஷியென்றும், தேசத்துரோகக் கக்ஷியென்றும், உத்தி யோக வேட்டைக் கக்ஷியென்றும் தூற்ற ஆரம்பித்தார்கள். என்ன தூற்றியும் புதுக்கக்ஷிக்குக் கூட்டம் அதிகமாகி விட்டதால் அதை வேறு விதத்தில் ஒழிக்கக் கருதி பார்ப்பனரல்லாதாரிலே சிலர் அவர்களை அதாவது உத்தி யோகத்திற்குத் தகுதி இல்லாத ஆள்களையும் தனி சுயநலவாதிகளையும் போதுமான புத்தியில்லாத ஆள்களையும் பிடித்து மற்றொரு பார்ப்பனரல்லாதார் கக்ஷி ஒன்றை ஸ்தாபித்து அதாவது அவர்கள் தென் இந்தியர் நல உரிமைச் சங்கம் என்று பேர் வைத்தால் இவர்கள் அதை வேறு வார்த்தையில் சென்னை மாகாண மக்கள் சங்கமென்று வைத்து இதிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுப்பதாயும் பார்ப்பனர்களை சேர்ப்பதில்லையென்றும், கொள்கைகள் வைத்து ராஜ விசுவாசத்தை மாத்திரம் மாற்றி சங்கத்தை நடத்தினார்கள். கடைசியாக அந்தப் புதிய அதாவது சென்னை மாகாணச் சங்கத்தில் உள்ள பார்ப்பனரல்லாதார்களில் சிலர் வகுப்புவாரி பிரதிநிதித்து வத்தைப் பலமாக வலியுருத்த ஆரம்பித்தவுடன் அச்சங்கத்தைப் பார்ப்பனர்கள் தாங்களாகவே அழித்து விட்டு அதிலிருந்த சில ஆள்களைக் கொண்டே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தார்கள். இதிலிருந்துதான் காங்கிரசில் ஒத்துழையாமை யில் இருந்த பார்ப்பனரல்லாதாருக்குள்ளும் அபிப்பிராய பேதம் வளரத் துடங்கிற்று.
சுருக்கமாகச் சொல்லுமிடத்து வகுப்புவாரி பிரதிநிதித்துவக் காரணத்தாலேயே காஞ்சீபுரம் மாகாண காங்கிரஸ் கான்பரன்சில் இருந்து நாமும் திரு எஸ். ராமனாதன் முதலியவர்களும் சண்டை போட்டுக் கொண்டு வெளியேறி வந்ததாகும்.
அது முதல் இன்று வரை அவ்வகுப்பு வாதத்தை வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இதற்கு ஏற்பட்ட இடையூறு எவ்வளவு என்பது பொது ஜனங்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை என்றே சொல்லுவோம். திருவாளர்கள் திரு. வி. கல்யாணசுந்திர முதலியார், பி. வரதராஜுலு, ஆதி நாராயண செட்டியார் முதலியவர்கள் கிருஷ்ணசாமி பாவலர், குப்புசாமி, அண்ணாமலை கூட்டம் முதலாகியவர்கள் போன்றவர்களுமான பார்ப்பன ரல்லாதார்களும், “நவசக்தி” “தமிழ்நாடு” “ஊழியன்” “லோகோபகாரி” முதலிய பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும், “சுதேசமித்திரன்” “இந்து” “சுய ராஜ்யா” முதலாகிய எல்லா பார்ப்பன பத்திரிகைகளும் சேர்ந்து செய்து வந்த எதிர்ப்பிரசாரமும் பழி சுமத்தியதும் இவ்வளவு அவ்வளவல்லவென்றே சொல்லி ஆக வேண்டும்.
இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேச முன்னேற்றத்திற்கும் மக்கள் ஒற்றுமைக்கும் சமத்துவத்திற்கும் மிக்க அவசியமென்று நாம் கருதியதா லேயே அதை முக்கியமாய்க் கொண்டு காங்கிரசை விட்டுப் பிரிந்து அதற் காக இந்த பத்திரிகையும் ஏற்படுத்தி, விடாமல் நாம் உழைத்து வந்ததாகும். இதற்காக வேண்டியே ஜஸ்டிஸ் கட்சியையும் ஆதரித்தோம். சைமன் கமிஷனையும் ஆதரித்தோம். அரசியல் கொள்கைகள் என்பது எதுவானா லும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லையானால் வேண்டியதில்லை என்று எதையும் கண்டித்தோம்.
கடசியாக ஒரு வழியில் அதை அடைந்தோம். அதாவது தேர்தல்களில் மகமதியர், கிருஸ்தவர், மகமதியரல்லாதவர்களில் (“இந்து”க்களில்) ஜாதி இந்துக்கள் தீண்டப்படாத இந்துக்கள் என்கின்ற பிரிவுகளுக்கும் நாம் கேட்டதற்கு மேலாகவே பெண்கள் என்கின்ற பிரிவுக்கும் சேர்த்துக் கிடைக்கப்பட்டிருப்பதோடு சர்க்கார் உத்தியோகங்களிலும் மேல் கண்ட வீதம் கிடைத்தும் வருகின்றது. இந்த பிரிவுகளில் விகிதம் சற்று கூடுதல் குறைச்சல் இருந்தாலும் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டாய் விட்டன.
ஆனால் எதிரிகளிடமிருந்து ஒரு வழியில் வெற்றி பெற்று விட்ட சந்தோஷம் அடைவதற்குள் இப்போது இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவமானது பார்ப்பனரல்லாதார் என்கின்ற கட்சியாராலேயே எங்கு அழிக்கப் பட்டு விடுமோ என்கின்ற பயம் நமக்கு பலமாய்த் தோன்றி கவலைப்பட வேண்டியதாய் இருக்கின்றது.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கண்டு பார்ப்பனரல்லாதாரின் கட்சி முன்னணியில் இருப்பவர்களும் செல்வாக் குள்ளவர்களிலும் கல்வியுள்ளவர்கள் நடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.
உதாரணமாக ஒரு கிருஸ்தவர் தங்களுக்கு உள்ள வகுப்புவாரி பிரதி நிதித்துவத்தைப் பற்றிக் கண்டித்துப் பேசி எம்மையும் வைதார். ஏனையா? என்றோம். அதற்கு அவர் “கிருஸ்தவர்களில் அநேகர் படித்து இருக்கின் றோம், எங்களின் மொத்த ஜனத்தொகை மிகக் குறைவு.
ஆகவே எங்கள் பங்குக்கு மிகக் குறைவான ஸ்தானங்கள் தான் கிடைக்கும். ஆதலால் உத்தி யோகங்களில் இந்த முறையானது எங்களைக் கெடுத்துவிடும். வகுப்புவாரி கணக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்திருந்தால் கிருஸ்தவர் என்கின்ற சலுகையில் அதிகப் பலன் அடையலாம் என்றார்.
பார்ப்பனர்களுக்கு அவர்கள் மதம் படிக்க சௌகரியம் செய்து கொடுத்திருப்பது போல், கிருஸ்தவர்களுக்கும் அவர்கள் மதம் படிக்கச் சௌகரியம் செய்திருப்பதால் மத மாற்ற பலனாகவும் பாதிரிகள் பள்ளிக்கூட பலனாகவும் தாராளமாய் படித்து விடுகின்றார்கள். ஆதலால் அவர்களுக்கும் இது விரோதமாய் காணப்படுகின்றது.
அது போலவே ஒரு பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவரைக் கண்டு ஏனையா வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் தலையில் கையை வைக்கப் பார்க்கின்றீர்? என்றதற்கு அவரும் மிக்க வருத்தத்துடன் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் தங்களுக்கு மிக்க கெடுதி ஏற்பட்டதாகச் சொன்னார்.
என்ன வென்றதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வந்து எங்கெங்கோ சந்து பொந்தில் இருக்கின்ற வகுப்பாருக்கெல்லாம் பங்குபோய் விட்டது என்றும் “உதாரணமாக மந்திரி கனம் முத்தயா முதலியார் உத்திரவுப்படி 12 ஸ்தானத் தில் 2 பார்ப்பாருக்கு, 2 மகம்மதியருக்கு, 1 தீண்டதாருக்கு, 1 கிருஸ்தவர் முதலியவருக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு என்று ஏற்பட்டிருப்பதில் 6. பார்ப்பனரல்லாதார் பங்குக்கு பல வகுப்புக்காரர்கள் பங்குக்கு வந்து விடுகின்றார்கள், வன்னியர், வேளாளர், நாடார், நாயக்கர், பிள்ளை, செங் குந்தர், செட்டியார், வண்ணான், நாவிதன், குயவர் என்று அநேகர் கிளம்பி ஜாதி மகாநாடு கூட்டி ஒவ்வொருவரும் பங்குக்கு வரும் போது நமக்கு எங்கே இடமிருக்கின்றது? எங்கள் வகுப்பில் படித்த பிள்ளைகள் எவ்வளவோ இருக்கின்றனர்.
ஆதலால் இது நமக்கு பெரிய ஆபத்தாய் இருக்கின்றது. இதை எப்படியாவது ஒழிக்க வேண்டும்” என்றார். ஆகவே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டாம் என்கின்றவர்கள் எவ்வளவு யோக்கியர்களாக இருக்க முடியும்? என்பதை யோசித்தால் இதிலிருந்து விளங்காமல் போகாது. இந்தக் கருத்தைக் கொண்டு தான் ஜஸ்டிஸ் கக்ஷி யில் செல்வாக்கிலுள்ள ஜாதித் தலைவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தை ஒழிக்கக் கருதி “தகுதியானபடியும் பலன் தரத் தக்கபடியும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்” என்று மாற்றி விட்டார்கள். இதன்படி தகுதியும் பலனும் தரத்தக்க ஒரே ஜாதியார் பிரதிநிதிகளாக இருக்கலாம்.
மற்ற ஜாதியாரை தகுதியும் பலனும் உடையவர்களாகக் கூட ஆக்க வேண்டியது அனாவசியமாகும் என்றே ஏற்படும். இந்த சூக்ஷி வார்த்தை உண்டாக்கப்பட்ட கதையைப் பற்றி இங்கு ஒரு சிறு விபரம் சொல்லி இதை முடிக்கின்றோம்.
1920ம் வருஷம் திருநெல்வேலியில் திரு. எஸ். சீனிவாசய்யங்கார் தலைமையில் கூடிய மாகாண காங்கிரஸ் கான்பரஸ்சின் போது நாமும் திரு. ஏ.டீ. சிதம்பரம் பிள்ளையும் திரு. தண்டபாணிபிள்ளையும் கலந்து தயாரித்து விஷயாலோசனை சபையில் வகுப்புவாரி தீர்மான மொன்று கொண்டுவந்து பிரேரேபித்தோம். அதை திரு. ஏ.டீ. சிதம்பரம் பிள்ளை ஆமோதித்துவிட்டார்.
அப்போது அவருக்கிருந்த செல்வாக் கினால் அதை சுலபத்தில் தள்ளி விட முடியாமல் அவருக்கு லோக மான்ய திலகர் பேரால் திரு. கஸ்தூரி ரங்கய்யங்கார் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் நாங்கள் ஒப்புக்கொள்ளாததால் அது நிறைவேறி விடும் போல் தோன்றிற்று.
உடனே திவான் மாதவறாவ் என்கின்ற ஒரு பார்ப்பனரை விட்டு அப்பொழுது தான் இந்த சங்கதி தெரிந்ததாக பாசாங்கு செய்யச் செய்து இது நிறைவேறினால் சில பார்ப்பனர்கள் காங்கிரசில் றாஜீனாமா செய்து விடுவார்கள் என மிறட்டச் செய்தார்கள். என்ன செய்தும் நாங்கள் சம்மதிக்காததால் பார்ப்பனர்கள் எல்லோரும் கூடி யோசித்து வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் என்பதற்கு பதிலாக தகுதியுள்ள பிரதிநிதித்துவம் என்று திரு. ராஜ கோபாலாச்சாரியார் திருத்தம் கொண்டு வந்து திரு.சத்தியமூர்த்தி ஆமோதித்தார். நாங்கள் எவ்வளவு பேசியும் எல்லா மகமதிய கனவான்களும் கைதூக்கி விட்டதால் திருத்தம் நிறைவேறிவிட்டது.
பிறகு தலைவர் திரு. சீனிவாசய்யங்கார் காஞ்சிபுரத்தில் கல்யாண சுந்தர முதலியார் செய்தது போலவே நாங்கள் மறுபடியும் பொது மகாநாட்டில் ஆக்ஷபிப்போம் என்று கருதி மற்ற தீர்மானங்கள் எல்லாம் முடிந்ததும் “இது பொதுநலத்திற்கு விரோதமான தீர்மானமானதால் அதை நான் தள்ளி விட்டேன்” என்று சொல்லி முடிவுரை ஆரம்பித்து விட்டார். நாங்கள் வைதுகொண்டே வெளியேறிவிட்டோம். இப்போது பார்ப்பனரல்லாத தலைவர்களும் அதையே பின்பற்றி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தில் சூக்ஷி செய்து அதை ஒழிக்க முன் வந்து வெற்றி பெற்று விட்டார்கள்.
அரசியல் கொள்கைகள் எது கேடுகெட்டாலும் வகுப்புவாரி பிரதி நிதித்துவ உரிமையைக் காக்கவாவது பார்ப்பனர்களை சேர்க்க மறுப்பதுடன் இத்தலைவர்களையும் கக்ஷியிலிருந்து நீக்க வேண்டியது பார்ப்பனரல்லாத பாமர மக்கள் நன்மையைக் கோரி மிக்க அவசியமென்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.
தஞ்சையில் 2 தீர்மானம் முக்கியமானதாக இருக்க வேண்டும். ஒன்று முன் உள்ளபடியே எல்லா வகுப்புக்கும் எண்ணிக்கையின் பேரில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பது.
மற்றொன்று சுயநலத் தலைவர்கள், சூழ்ச்சித் தலைவர்கள் ஆகியவர் களின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவர்களை கட்சி யில் இருந்து விலக்குவது என்பது. பிறகு தான் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாது என்கின்ற தீர்மானத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பது நமது அபிப்பிராயமாகும். இது சமயம் ஏமாந்தால் பிறகு பார்ப்பன ரல்லாத சாது மக்கள் சுலபத்தில் தலையெடுக்க முடியாது என்பதை பொது ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
(குடி அரசு - தலையங்கம் - 13.07.1930)