கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கூட்டாட்சி - ஒற்றை ஆட்சியாகும்; அதிபரே நாட்டை ஆள்வார்

‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு வந்தால் கூட்டாட்சி தத்துவத்தையே தகர்த்து விடும் என்று பிரபல அரசியல் விமர்சகர் - எழுத்தாளர் ஏ.ஜி. நூரானி எச்சரித்திருக்கிறார். ‘டெக்கான் குரேனிக்கல்’ ஏடு (ஜூன் 30, 2019) அவரது கட்டுரையை வெளியிட் டிருக்கிறது. கட்டுரையில் அவர் பதிவு செய்துள்ள கருத்துகள்:

modi 374பிரதமர் எந்த நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கிறாரோ, அப்போதே குடியரசுத் தலைவரிடம் நாடாளு மன்றத்தைக் கலைக்கச் சொன்னால், நாடு முழுதும் தேர்தல் நடத்தும் நிலை வந்துவிடும். மாநில முதல்வர்களுக்குள்ள அதிகாரங்கள் ஆளுநருக்குப் போய் விடும். குடியரசுத் தலைவர் - நாடாளுமன்றத்தைக் கலைக்கும்போது, மாநில ஆளுநர்களும் சட்டமன்றங்களைக் கலைத்து விடுவார்கள். 1948ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையிலேயே டாக்டர் அம்பேத்கர் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். 1948ஆம் ஆண்டு இது குறித்து மேலும் தெளிவான விளக்கங்களை முன் வைத்தார்.

“நமது அரசியல் சட்டத்தின் பிற மாநில அரசுகள், சட்டமியற்றுவதற்கோ, நிர்வாகத் துக்கோ, நடுவண் ஆட்சியை எந்த வகையிலும் சார்ந்திருக்கத் தேவையில்லை. இந்தப் பிரச்சினை யில் நடுவண் அரசும் மாநில அரசுகளும் சமமான அதிகாரங்களைப் பெற்றுள்ளன. (The states under our constitution are in no way dependent on the centre for their legilative or executive authority. The centre and the states are co-equal in this matter )

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இந்த உரிமைகள் மிகவும் முக்கியமானது; அதன் முக்கியத்துவத்தை உணரவே மறுக்கிறார்கள். பிரதமர் மோடி நினைத்தால் நாடு முழுதும் எந்த நேரத்திலும் தேர்தலை அறிவிக்கலாம். நாடாளு மன்றம் கலைக்கப்படும்போது இதன் இணைப்பு களாக மாற்றப்படும்; மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்படும். ஒரு தனி மனிதரின் விருப்பத் துக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் பணிந்து போக வேண்டும். கூட்டாட்சி முறை ஒற்றை ஆட்சி யாகவும் நாடாளுமன்ற ஜனநாயக முறை அதிபர் ஆட்சி முறையாகவும் இதன் வழியாக மாற்றப் படுகிறது. கூட்டாட்சி அமைப்பின் வலிமையே அதில் அடங்கியுள்ள மாநிலங்களின் பன்முகத் தன்மையை அங்கீகரிப்பதுதான். மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மாநில மக்களின் பிரச்சினைகள் அழுத்தம் பெறுகின்றன. ஒரே தேர்தல் முறை மாநிலங்களின் பிரச்சினை களையே காணாமல் போகச் செய்துவிடும்.

1971இல் பிரதமர் இந்திரா காந்தி மன்னர்களுக்கு தரும் மான்யங்களை ஒழிக்கும் சட்டம் கொண்டு வந்தார். உச்சநீதிமன்றம் அதை செல்லாது என்று கூறியது. உடனே உச்சநீதி மன்றத்துக்கு பாடம் புகட்டுவதற்காக நாடாளு மன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 1972இல் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தைப் பிரித்து தனி நாடாக்க படைகள் அனுப்பினார். அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றவுடன், மாநில சட்டமன்றங் களைக் கலைத்து தேர்தல் நடத்த உத்தர விட்டார். காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. மாநில முதல்வர்கள் டெல்லியில் முடிவு செய்யப் பட்டு, மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தும் முறை இதுபோன்ற ‘அதிகாரத்தைக் கைப்பற்றும்’ அரசியல் சாணக்கியத்தனத்துக்கே வழி வகுக்கும்.

பிரதமர் மோடி இது குறித்து ஆலோசிக்க ஜூன் 19ஆம் தேதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட 11 கட்சிகள் பங்கேற்கவில்லை. 21 கட்சிகள் மட்டும் பங்கேற்றன. பங்கேற்ற கட்சிகளும் வெளிப் படையாக ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. தேசிய அளவில் இதற்கு ஆதரவாக ஒருமித்த கருத்து இல்லை என்பதையே இவை வெளிப் படுத்துகின்றன என்ற கருத்துகளை பதிவு செய்திருக்கிறது, ஏ.ஜி.நூரானியின் கட்டுரை.

கருநாடகத்தில் பார்ப்பனத் திமிர்

கருநாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணா மடத்துக்கு மணிப்பாலைச் சார்ந்த வனிதா ஷெட்டி என்ற பெண் உதவிப் பேராசிரியர் கடந்த ஏப்.15ஆம் தேதி சென்றிருக்கிறார். அப்போது மடத்தில் இலவச உணவு பரிமாறப்பட்டது. பந்தியில் அமரச் சென்ற பேராசிரியரை சிலர்  தடுத்து நிறுத்தி மேல் தளத்துக்குப் போய்ச் சாப்பிட கட்டளையிட்டுள்ளனர். கீழ்தளத்தில் நடக்கும் பந்தியில் ‘பிராமணர்கள்’ மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியவுடன், வனிதா ஷெட்டி அவமானப்பட்டு சாப்பிடாமலேயே வெளியேறி விட்டார். இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடுப்பி மடத்தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

‘பிராமணர்-பிராமணரல்லாதார்’ என்ற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்று “கருநாடக சோமு சவுதார்தா வேதிகா சங்கம்” என்ற அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மைகள் அம்பலமான நிலையில் உடுப்பி கிருஷ்ணா கோயில் மடாதிபதி ‘வல்லப தீர்த்த சாமிஜி’ என்ற பார்ப்பனர், ஏனைய ஏழு மடாதிபதிகளுடன் கலந்து பேசி இப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று இறங்கி வந்திருக்கிறார்.

கடவுளுக்கு சக்தி இல்லை என்பது அர்ச்சகர்களுக்கு புரியும்

கர்ப்பகிரகத்துக்குள் ஒவ்வொரு நாளும் ‘கடவுள்கள்’ அருகே நின்று வேத மந்திரம் ஓதி பூஜை சடங்குகளை செய்யும் ‘அர்ச்சகர்’களுக்கு கடவுளுக்கு எந்த சக்தியும் இல்லை என்பது நன்றாகவே தெரியும். சான்றாக அண்மையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. காஞ்சிபுரம் ‘ஏகாம்பரேசுவர்’ கோயிலில் சோமாஸ்கந்தன் மற்றும் ஏலவார்குழலி சாமி சிலைகள் சேத மடைந்துவிட்டதாகக் கூறி, புதிய அய்ம்பொன் சிலைகள் செய்வதற்காக பக்தர்களிடமிருந்து

8.7 கிலோ தங்கம் (ரூ.2.82 கோடி மதிப்பு) நன்கொடையாகப் பெறப்பட்டது. ஆனால், தங்கத்தைப் புதிய சிலைகளுக்குப் பயன்படுத்தாமல் மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதற்கு மூளையாக செயல்பட்டவர் ‘பிராமண’ புரோகிதரான ராஜப்பா குருக்கள் (வயது 84). இந்தக் கோயிலில் எந்த மாற்றங்கள் செய்ய வேண்டுமானாலும், இந்த பார்ப்பன புரோகிதர் மட்டுமே ஆலோசனை கூறுவார். கோயிலை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். புதிய சிலைகள் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறியவரும் இவர்தான். சில  அறநிலையத் துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப் பட்டனர். ஆனால் ‘பிராமணர்’ ராஜப்பா மட்டும் கனடாவுக்கு தப்பி ஓடி விட்டார். ‘பிராமணர்’ கடல் தாண்டக் கூடாது என்பது சாஸ்திரம். தேவைப்பட்டால் ‘அவாள்’ மீறிக் கொள்வார்கள்.

தலைமறைவாகி விட்ட அர்ச்சகர் இந்தியாவுக்கு திரும்பினால் உடனே பிடித்து ஒப்படைக்குமாறு குடியேற்ற அதிகாரி களுக்கு முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது. கடந்த ஜூன் 22ஆம் தேதி மும்பை விமான நிலையம் வந்திறங்கிய பார்ப்பன அர்ச்சகர் கைது செய்யப்பட்டார். திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட இந்த ‘மோசடி’ அர்ச்சகருக்கு அடுத்த இரு நாள்களிலேயே பிணை கிடைத்து விட்டது. அரசு தரப்பிலும் அவரை பிணையில் விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ‘சாமி’ சிலைகளுக்கு சக்தி ஏதும் இல்லை என்பது அர்ச்சகர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் பல கோடி மோசடி செய்வதோடு தண்டனையிலிருந்தும் தப்பித்து விடுகிறார்கள். ‘சூத்திர’ பூசாரி ஒருவர் இதே திருட்டை செய்திருந்தால் இத்தகைய சலுகைகள் கிடைக்குமா? இரண்டே நாளில் பிணை கிடைத்திருக்குமா? மட்டுமல்ல; ஏடுகளும் இந்தச் செய்தியை பெரிதுபடுத்தி வெளியிடாமல் அடக்கி வாசித்தன. சில ஏடுகள் செய்திகளை வெளியிடவே இல்லை.

வேத மதமும் கத்தோலிக்க கிறிஸ்தவமும்

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுதிக்க மறுக்கிறது பார்ப்பன வேத மதம். பாகுபாடுகள் கூடாது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தாலும் தீர்ப்பை மதிக்க முடியாது என்று கேரளாவில் பா.ஜ.க.வினர் மட்டுமல்ல; காங்கிரசாரும் சேர்ந்து கொண்டு போர்க் கொடி தூக்கினர். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்களை அனுமதிப்பதில் உறுதியாக இருந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும் காங்கிரசும் இதையே தேர்தல் பிரச்சாரமாக முன் வைத்தன.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு. “உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று பல இலட்சம் பெண்களைத் திரட்டி, ‘மதில் சுவர்’ நடத்திய அடுத்த நாளே இரண்டு பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தனர். இந்தப் பெண்கள் நுழைவுதான் தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது. எதிர்க் கட்சிகள் இதை மய்யமாக்கிப் பிரச்சாரம் செய்தன” என்று கட்சி முடிவுக்கு வந்துள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வமான ஏடான ‘தேசாபிமானி’ இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

வேத பார்ப்பன மதம் இந்த நூற்றாண்டிலும் மதம் - பழக்க வழக்கம் என்ற பெயரால் ‘சூத்திரர்’ மற்றும் ‘பெண்’களைப் பாகுபடுத்தி அவமதிக்கிறது. அதே நேரத்தில் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் காலத்துக்கேற்ப மாறுதலுக்கு தயாராகி வருகிறது. கடந்த ஜூன் 15ஆம் தேதி, கத்தோலிக்க தலைமையிடமான வாடிகனிலிருந்து போப் ஓர் ஆவணத்தை வெளியிட்டுள்ளார். கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும் என்ற சம்பிரதாயத்தை மாற்றி நல்ல ஒழுக்கமுள்ள திருமணமானவர்களை பாதிரியார்களாக நியமிக்க முடிவு செய்திருக்கிறது.

அதேபோல் ‘சர்ச்சு’களை நிர்வகிக்கும் நிருவாக சபையிலும் பெண்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளதாக அந்த ஆவணம் கூறுகிறது. அமேசான் போன்ற பகுதிகளில் திருமணமாகாத கத்தோலிக்கர்கள் பாதிரியாராக பணி செய்வதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வாடிகன் இந்த மாற்றத்துக்கு முன் வந்துள்ளதாக  ‘வாடிகன்’ வெளியிட்ட ஆவணம் கூறுகிறது. திருமணமானவர்கள் மூத்தவர்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.