சட்ட மறுப்பு

காலகிரமத்தில் சட்ட மறுப்பு இயக்கத் தலைவர்கள் பயனற்ற தடை வேலை, நாசவேலை ஆகியவைகளைக் கைவிட்டு விடுவார்கள் என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். நான் முன் ஒரு தடவை அதைப் பற்றிப் பேசியபோது சட்ட மறுப்பு உயிருக்கு ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. மகா ஜனங்கள் அதை வேண்டவில்லை யென்பது தெளிவுபட ஆரம்பித்துவிட்டது. சென்ற 12 மாத காலத்திய சம்பவங்களிலிருந்து, அவ்வுணர்ச்சி இன்னும் வலுத்து, கடைசியாக சென்ற ஏப்ரல் மாதம் அப்புரட்சி இயக்கத்தின் மூல புருஷரே சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்தி வைக்கும்படி எல்லா காங்கிரஸ்காரர்களுக்கும் யோசனை சொல்லப் புறப்பட்டார்.periyar 440ஸ்வராஜ்யத்திற்காக சட்டமறுப்புச் செய்வதை நிறுத்தும்படி அவர் சொன்னார். இப்பால் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, அதை ஊர்ஞ்ஜிதம் செய்ததுடன், சட்ட சபைப் பிரவேசம் செய்ய வேண்டுமென்றும் முடிவு செய்தது. ஒரு காலத்தில் அது பயனற்ற முறையென்று பல காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தது ஞாபகமிருக்கும். இவ் விஷயங்களைப்பற்றி சமீப காலத்தில் விவாதங்கள் நடந்து முடிவு செய்யப்பட்டபோது நான் இந்தியாவில் இல்லை. ஆனால் 1934 ஜூன் 6ந் தேதி இந்தியா கவர்ன்மெண்டார் தங்களுடைய முறை இன்னதென்று வெளியிட்ட அறிக்கை எனது பூரணமான சம்மதத்தைப் பெற்றிருந்தது. அரை மனதாகவும், பெருந்தன்மை யில்லாமலும் அவ்வறிக்கை வெளியிடப்பட்டதாக சிலர் கண்டித்திருக்கிறார்கள். ஆனால் 1932ல் நான் சொல்லியது போல் சட்ட மறுப்பை ஒருவிதமாக முடிவுக்குக் கொண்டுவர நம்மாலானதைச் செய்யாவிடில் நமது கடமையில் தவறியவர்களாவோம். அவ் வியக்கம் திரும்பவும் தலையெடுக்க விடக்கூடாது. இப்போது காங்கிரஸ் ஸ்தாபனங்கள் மீதுள்ள தடையை நீக்கி விட்டோம்.

சட்டமறுப்பு இயக்கம் முடிவாக நின்று விட்டதாகவே நான் நம்புகிறேன். 1932ல் நான் கையாளப் போவதாக வெளியிட்ட முறை பயனளித்து விட்டது. கவர்ன்மெண்டு மாத்திரம் இந்த சந்தோஷமான முடிவுக்குக் காரணமல்ல; நீங்கள் யாருடைய அபிப்பிராயங்களை இங்கு வந்து தெரிவிக்கிறீர்களோ! அம் மகாஜனங்களின் நல்ல புத்தியும், உறுதியுமே அதற்கு வெகுதூரம் காரணமாகும். புரட்சித் தனமாகவும், அர்த்தமில்லாத பயனற்ற வழியிலும் அதிகாரிகளுடன் போராடுவதால் அபிவிருத்தியுண்டாக்கி விடாதென்று ஜனங்கள் உணர்ந்து விட்டார்கள். பலவந்தம், அல்லது பெருவாரியான மகாஜன இயக்கம் சரியான முறையல்ல வென்ற உண்மை நாடெங்கும் ஜனங்களுக்குப் புலப்பட்டு விட்டது. இது பற்றியே நான் சட்ட மறுப்பு இயக்கம் இனிப் பிளைக்காது, தலையெடுக்க முடியாது என்று நம்புகிறேன். நாம் கவனிக்க வேண்டியிருக்கிற சமூக ராஜீயப் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவிருப்பதால், எல்லா வகையான ராஜீய வாதிகளும் நேசபாவத்துடன் ஒத்துழைத்தால் தான் அக் கஷ்டமான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

(பகுத்தறிவு கட்டுரை 02.09.1934)

Pin It