திராவிட இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவானது என்றும், ஆர்.எஸ்.எஸ். தேச பக்தர்கள் இயக்கம் என்றும் சங்கிகள் பேசி வருவது வரலாற்றுப் புரட்டு.

முந்தைய பகுதி: அரசின் கங்காணிகளே ஆளுநர்கள்

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர், பெரியார் இயக்கத் தின் மீது தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டைச் சுமத்து வது வழக்கமாகிவிட்டது. திராவிட இயக்கம், பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தது அவர்கள். தேச விரோத சக்திகள் பிரிட்டிஷ் விசுவாசி என்று பேசி வருகிறார்கள். இது குறித்து இளைய தலைமுறைக்கு தெளிவான புரிதலை உருவாக்க சில வரலாற்றுக் குறிப்புகளை சுருக்கமாகப் பதிவிடுகிறோம்.

first indian national congress

  • பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்த போராட்டமே சுதந்திரத்துக்கான போராட்டமல்ல; பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர் போராட்டம் என்பதே சரியான பார்வை. காங்கிரஸ் ஏன் துவக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? பார்ப்பபனரல்லாதார் இயக்கமான நீதிக் கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைக் கழகம் ஏன் தோன்றியது? பெரியார் - அம்பேத்கர் அந்தச் சூழலில் சமூக விடுதலையை பேச வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது? இந்த சமூக வரலாற்றுச் சூழலின் பின்புலத்தைப் பற்றிய புரிதல் அவசியமாகிறது. 1885இல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியதே ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் அய்.சி.எஸ். அதிகாரி தான்.
  • தொடங்கப்பட்டதன் நோக்கம் ஆங்காங்கே பிரிட்டிஷாருக்கு எதிரான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதே; பிரிட்டிஷாரை எதிர்த்தவர்களுடன் அப்போது ‘உயர் கல்வி பயின்ற’ படித்த கூட்டம் இணைந்து விடாமல் தடுப்பதற்காகவே காங்கிரஸ் உருவாக்கப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.            (ஆதாரம்: ஆய்வாளர் பெ.சு. மணி எழுதிய காங்கிரஸ் வினா-விடை)
  • காங்கிரஸ் கட்சி மாநாடுகளிலே பிரிட்டிஷ் அரசுக்கும் பிரிட்டிஷ் ராணிக்கும் விசுவாசமாக இருப்போம் என்பதே எட்டு மாநாடுகளில் 1886 லிருந்து 1914 வரை முதல் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. பம்பாய் - கல்கத்தா - சென்னை காங்கிரஸ் மாநாடுகளின்போது பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் காங்கிரசாருக்கு விருந்து வைப்பது வழக்கம். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவர் தான் - 20 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்.
  • 1885இல் காங்கிரசின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தவர் தமிழ்நாட்டைச் சார்ந்த ஜி.சுப்ரமணிய அய்யர். இதை வரலாற்றுப் பெருமையாக தங்கள் ‘இனத்துக்கு’ பார்ப்பனர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இவர் ‘சுதேசமித்திரன்’, ‘இந்து’ பத்திரிகையில் ஆசிரியராக இருந்தவர். ‘தேச பக்தராக’ப் போற்றப்படும் அவர் கொண்டு வந்த முதல் தீர்மானத்தின் வாசகம் என்ன?

“பல நூற்றாண்டுகளாக இந்தியா கொலை, கொள்ளை, ஆக்கிரமிப்பு முதலான பயங்கர குழப்பங்களால் தாக்கப்பட்டு வந்தது. இறைவனின் கருணை மிக்க அருளாட்சி நோக்கால் ஆங்கிலப் பேரரசு இந்தியாவை ஆட்கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் அளித்தது” என்று கூறி இந்த ஆட்சியின் பயன்களைப் பட்டியல் போட்டுக் காட்டினார். (ஆதாரம்: பெ.சு. மணி எழுதிய இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்)

            பிரிட்டிஷ் ஆட்சியை “கடவுள் அருளாட்சியின் விளைவு” என்பதே காங்கிரஸ் மனப்பான்மையாக இருந்தது.

  • 1929இல் நேரு தலைமையில் லாகூரில் கூடிய காங்கிரஸ் தான் முதன்முதலாக முழுமையான ‘சுதந்திரப்’ போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. காங்கிரஸ் தொடங்கிய 33 வருடங்களுக்குப் பிறகு தான் முழு சுதந்திரம் என்ற கோரிக்க்கையே முன் வைக்கப்பட்டது.
  • அப்போது எல்லாம் காங்கிரசில் இந்து மகாசபையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். காலையில் காங்கிரஸ் மாநாடு நடந்த அதே மேடையில் மாலையில் இந்து மகாசபை மாநாடு நடக்கும். ‘சமூக சீர்திருத்தம்’ பற்றி காங்கிரஸ் பேசவே கூடாது என்று காங்கிரஸ் கட்சிக்கு பார்ப்பனர்கள் கடிவாளம் போட்டு வைத்திருந்தனர்.
  • காங்கிரசைத் தொடங்கிய ஹியூம் பார்ப்பனர்களுக்கு ஒரு வாக்குறுதியைத் தந்தார்.

“நாம் அரசியல் ரீதியாகக் கூடுகின்றோமே தவிர, சமூக சீர்திருத்தம் பேசுவதற்கு காங்கிரஸ் இல்லை. ஜாதி ஒழிய வேண்டும் என்பது போன்ற பிரச்சினைகளை நாங்கள் பேச மாட்டோம். மதப் பிரச்சினைகளில் தலையிட மாட்டோம். ஆச்சாரம், வர்ணாஸ்ரம தர்மம், அனுஷ்டானம் இவை பற்றியெல்லாம் கண்டித்தோ, எதிர்த்தோ, மாற்றியோ நாம் பேச மாட்டோம்” என்று திட்டவட்டமாக அறிவித்தார். (ஆதாரம்: அம்பேத்கரின் சாதியை ஒழிக்க வழி நூல்)

  • 1925இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்ன செய்தது? ‘தேசபக்தி’ இயக்கமாகவா செயல்பட்டது?

1940 ஆம் ஆண்டு, கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸ். தலைவராகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கம்யூனி சத்துக்கும் சோஷலிசத்துக்கும் எதிர்ப்பு அணியாகப் பிரகடனப்படுத்துகிறார்; இந்து பிற்போக்காளர்களை சேர்த்துக்கொண்டு, முஸ்லீம்களின் மீது தாக்குதல் நடத்துவது என்பது இவர் போட்ட திட்டம்.

1942 ஆம் ஆண்டில் வெள்ளையேன வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. பல காங்கிரசார் கைது செய்யப்படுகின்றனர். அப்போது கோல்வாக்கர் பல பார்ப்பன இளைஞர்களையும், இந்து இளைஞர்களையும், ஆர்.எஸ்.எஸ்..க்கு இழுக்கும் முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். பல நடுத்தரக் குடும்பங்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் இந்த அமைப்பில் சேருகிறார்கள். பல பார்ப்பன பெற்றோர்களே, தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்த்தனர்; அதற்குக் காரணம், எங்கே காங்கிரஸ் கட்சிப் போராட்டத்திலே பங்கேற்று இந்த இளைஞர்கள் சிறைக்குப் போய்விடுவார்களோ என்று அஞ்சியது தான்.

பிரிட்டிஷார் ராணுவத்துக்கு ஆள்கள் சேர்த்த போது, அதற்கு பேருதவி செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள். பல இந்து இளைஞர்களை பிரிட்டிஷார் ராணுவத்தில் இவர்கள் சேர்த்ததோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் நேரடிப் பங்கு கொண்டிருந்தவர்கள் கூட, ராணுவத்தில் சேர்ந்தனர். “அரசியலை இந்துமயமாக்கு இந்துக்களை ராணுவ மயமாக்கு”என்பன அப்போது இவர்கள் போட்ட கோஷம்.

அது மட்டுமல்ல; அதைப் பயன்படுத்திக்கொண்டு சொந்த வியாபாரத்தையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.

டிரேவர் டிரய்பர்க் என்ற பத்திரிகையாளர் அதுபற்றி கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்;

பல ஆர்.ஏஸ்.ஏஸ். தலைவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்துக்கு வேண்டிய இராணுவ எந்திரங்களை சப்ளை செய்யும் “காண்ட்ராக்ட்” டுகளை எடுத்தனர். 1943 ஆம் ஆண்டு கிழக்கு வங்கத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, இருந்த உணவுப் பொருள்களை எல்லாம் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வாரிக் கொண்டு போய் பிரிட்டிஷ் ராணுவத்தினருக்குக் கொடுத்தனர். பஞ்சத்தால் பரிதவித்த மக்கள் மேலும் கொடுமைக்குள்ளாயினர். இந்த காண்ட்ராக்ட்காரர்களிடம் பணம் ஏராளமாக வர ஆரம்பித்தது; பிரிட்டிஷ் ராணுவ நிதிக்குப் பணத்தை அள்ளி வீசினர். (அப்போதுதானே காண்ட்ராக்ட் கிடைக்கும்) ஆர்.எஸ்.எஸ். செய்தித்தாள்களுக்கும் பத்திரிகைகளுக்கும், அரசாங்கம் பேருதவி செய்தது. ஏராளமான அரசு விளம்பரங்கள் தரப்பட்டன. இந்த நடவடிக்கைகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ற மாயையை உடைத்துக் காட்டுகிறது” - என்று எழுதுகிறார், டிரேவர் டிரய்பர்க் (Drever Drieberg) தமது “Four FacesFour Facesof subversion” என்ற நூலில் (பக்கம் 27)

பம்பாய் பிரிட்டிஷ் கவர்னரிடமிருந்து 1942ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் நன்னடத்தை சர்டிபிகேட்டுகளை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்கின்றனர். புதுடில்லியில் உள்ள மத்திய அரசுக்கு பம்பாய் பிரிட்டிஷ் கவர்னர் கோல்வாக்கரைப் பற்றி ஒரு அறிக்கை கொடுத்தார். அதில் கோல்வாக்கர் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையாக இருக்கும் இயல்பு கொண்டவர் (Wary), தந்திர நுட்பமுடைய கூர்மதியாளர் (Astute). காங்கிரஸ் நடத்திய ஆகஸ்ட் போராட்டத்தில் ஜாக்கிரதையாக ஒதுங்கி இருந்தவர். (Scrupulously kept away)” என்று குறிப்பிட்டிருந்தார். ஆதாரம்: மேற்குறிப்பிட்ட நூலில் பக். 27)

அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் போட்ட உத்தரவுகளை எல்லாம், கோல்வாக்கர் கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தார். அப்போது ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்த ராணுவப் பிரிவை (militarisation Department) ஒழித்துவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டவுடன், உடனே அந்த உத்தரவை ஏற்று அந்தப் பிரிவை ஒழிக்க முன்வந்தார். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ராணுவப் பயிற்சியையும் நிறுத்தியதோடு சீருடையையும் மாற்றிக் கொண்டனர்; காக்கி சட்டைக்குப் பதிலாக வெள்ளை சட்டையும், தோல் பூட்ஸ்களுக்குப் பதிலாக கேன்வாஸ் செருப்புகளும் அணிந்தனர்; பெரிய பெல்ட் போடுவதையும் எடுத்து விட்டனர்; இத்தனையும், பிரிட்டிஷார் உத்தரவை ஏற்று செய்யப்பட்டதாகும்! ராணுவத்தினர் போலவே, உடையணிந்து, ராணுவப் பயிற்சியையே இவர்கள் - பிரிட்டிஷார் தடை உத்தரவு வரும்வரை ‘இந்து ராஜ்யம்’ நடத்தி வந்திருக்கிறார்கள்.

அந்த நேரத்தில், வாஜ்பாய் காட்டிக் கொடுக்கும் துரோக வேலையையும் செய்தார்.

1942 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் “தேசபக்த திலகம்” வாஜ்பாய் செய்த வேலை என்ன தெரியுமா?

காட்டிக் கொடுக்கும் வேலை. ஆம். அந்த வேலையைத்தான் வாஜ்பாய் செய்தார்!

1942ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் வாஜ்பாய் கலந்து கொண்டார். அவரோடு அவரது “புரட்சி” சகாக்களும் கலந்து கொண்டு சிறையேகினர். வெள்ளையனே வெளியேறு போராட்டம் தொடர்பாக நடந்த ஒரு வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. சிறைக்குப் போன வாஜ்பாய் என்ன செய்தார் தெரியுமா? இந்த சம்பவத்தில் கலந்துகொண்டு சிறைப் பிடிக்கப்படாத தனது புரட்சி நண்பர்களின் பெயர்ப் பட்டியலை எல்லாம் போலீசாரிடம் கொடுத்து விட்டு தான் மன்னிப்புக் கேட்டுச் கொண்டு விடுதலை ஆகிவிட்டார்.

இந்த சம்பவம் பற்றி பம்பாயிலிருந்து வெளிவரும் “பிளிட்ஸ்” பத்திரிகை (ஜன. 26, 1974) ஒரு நீண்ட கட்டுரை வெளியிட்டது. அந்த வழக்கின் முழு விவரம், நீதிமன்ற நடவடிக்கைகள் எல்லாவற்றையும், அந்தக் கட்டுரை தெளிவாக விளக்குகிறது.

வாஜ்பாயின் சகோதரர் பிரேம் பிகார் லால் பாஜ் பாய், என்பவர் மத்திய பிரதேச அரசாங்கமே நடத்தும் சந்தேஷ்' (Sandesh) என்ற பத்திரிகையில் (12.5.1973 இதழில்) இதுபற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அந்தக் கட்டுரையில் தானும் தனது சகோதரர் வாஜ்பாயும் பட்டேஸ்வர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டோர் என்பதையும் வாஜ்பாய் இழைத்த துரோகத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அது மட்டுமா? கிரிஜாஷங்கர் பாஜ்பாய் என்ற பார்ப்பனர் அப்போது வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினர். அவரது தலையீட்டின் பேரில் தான் நாங்கள் இருவரும் சிறையிலிருந்து விடுதலை பெற்றோம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரும், தீவிர ஆர்.எஸ்.எஸ். காரருமான நானாஜி தேஷ்முக் என்பவரும், வேறு சில ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் ‘பிளிட்ஸ்’ ஏடு மீது வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்ட வாஜ்பாய், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவோ, அல்லது ‘பிளிட்ஸ்’ ஏடு மீது மான நஷ்ட வழக்கு தொடரவோ முன்வரவில்லை.

வழக்கு விசாரித்த நீதிமன்றம், வழக்கையே தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துவிட்டது.

1942ஆம் ஆண்டில் கோல்வாக்கரும், வாஜ்பாயும் தேசத்துக்கு செய்த 'தியாகங்கள் இப்படித்தான் இருந்தது.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

Pin It