தற்காலம் நமது நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல்களில் வெற்றி பெறுவோர்களில் பலருக்கு மந்திரி, தலைவர் முதலிய கொழுத்த சம்பளமுள்ள உத்தியோகங்களும், தங்களுக்கு வேண்டிய பலருக்கு 1,000,  500 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகங்கள் கொடுக்கக் கூடிய அதிகாரங்களும் கிடைக்க வசதியிருப்பதால், இத்தேர்தலுக்குப் பெரிய மதிப்பு ஏற்பட்டிருப்பதோடு, இவ்வுத்தியோகங்கள் அடைய எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு சட்டசபையில் ஆள் பலமும் கட்சிப் பெயர்களும் வேண்டியிருக்கிறபடியால் தேசத்தின் பெயராலும் சமூகத்தின் பெயராலும் பலர் பல கட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு, ஒவ்வொன்றிற்கும் ஜனங்கள் ஏமாறத்தக்க வண்ணம் ஒவ்வொரு பெயரை வைத்துத் தங்களைப் போன்ற சுயநலவாதிகளாகப் பலரைச் சேர்த்துக் கொண்டு கூட்டுக் கொள்ளை அடிப்பது போல் பலவித மோச வார்த்தைகளையும், பொய் வாக்குத் தத்தங்களையும் ஓட்டர்களிடம் சொல்லி அவர்களை ஏமாற்றி ஓட்டுப் பெற பலவித முயற்சி செய்து வருகிறார்கள். நாட்டில் எங்கு பார்த்தாலும் சில வகுப்பினர் இதே வேலையாகத் திரிந்து வருகின்றனர். இதனால் தேசத்திற்கும் ஏழை மக்களுக்கும் திருத்த முடியாத கெடுதிகள் ஏற்பட்டு வருகின்றன.

ஏழை மக்களிடத்தில் கவலையுள்ளவர்கள் இந்த சமயத்தில்அலக்ஷியமாயிருக்கக் கூடாது என்கிற எண்ணத்தின் பேரில் அனேகர் இதற்கேதேனும் வழி செய்து ஏழை மக்களை உண்மை உணரும்படி செய்யவேண்டும் என்கிற ஆசையின் பேரில் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள்.  இம் முயற்சியானது பலர் சேர்ந்து குறிப்பிட்ட கட்டுப்பாடோ, திட்டமோ ஏற்படுத்திக் கொள்ளாமல் தனித்தனியாய்ச் செய்து வருவதால் எதிர்பார்க்கும் பலனை அடையக் கூடுமோவென சந்தேகிக்கக் கூடியதாயிருக்கிறது. இவ்வார ஆரம்பத்தில் ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார், திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ஆர். கே.ஷண்முகஞ் செட்டியார், என். தண்டபாணி பிள்ளை முதலியவர்களோடு சென்னையில் கூடி இரண்டு நாள் யோசித்தும் பல காரணங்களால் தேர்தலுக்கு முன் ஒருவித முடிவுக்கு வர முடியாமல் போய்விட்டது.

ஆனபோதிலும் ராஜீய விஷயத்திலும் சமூக விஷயத்திலும் வகுப்பு விஷயத்திலும் தேர்தல்கள் விஷயத்திலும் “குடி அரசு” தனது அபிப்பிராயத்தை கொஞ்சமும் ஒளிக்காமல் வெளியிட்டுக் கொண்டு வந்திருக்கிறது.  அதே தத்துவங்களை வைத்து சில திட்டங்களைக் கோரி அவற்றை நிறைவேற்றப் பலர் சேர்ந்து கட்டுப்பாடாக வேலை செய்வதற்காக அடுத்த வாரத்தில் ஒரு அறிக்கை வெளியிட வேண்டுமென்கிற ஆவல் கொண்டிருக்கிறோம்.  இவ்வறிக்கையில் பல கனவான்களின் கையொப்பங்களையும் சேர்த்து வெளியிட வேண்டுமென்கிற விருப்பம் கொண்டிருக்கிறபடியால் இத்தத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் கனவான்களை தங்கள் பெயரையும், அவ்வறிக்கையில் சேர்த்துக் கொள்வதற்கு முழு விலாசத்துடன் தங்கள் சம்மதத்தையும் உடனே எழுதியனுப்பும்படி வேண்டிக்கொள்ளுகிறோம்.  தேர்தல் காலம் நெருங்கி விட்டதாலும் நாளுக்கு நாள் நெருக்கடி ஏற்பட்டு வருவதாலும்  அன்பர்கள் அலக்ஷியமாய் இருக்காமல் தயவு செய்து அவசரமாகக் கவனிப்பார்களாக.

- ஈ.வெ.இராமசாமி

(குடி அரசு - தலையங்கம் - 25.07.1926)

Pin It