கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக, பிரதமர் மோடி மற்றும் அக் கட்சியின் தலைவர் அமித்ஷா துவங்கி அத்தனை பேரும் பொய்யை விதைத்து வருகின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை தருவோம் என்பது, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதி. ஆனால், இப்போது வரை அது நடக்கவில்லை. ஆனால், கர்நாடக தேர்தல் அறிக்கையில் மீண்டும் அதே வாக்குறுதி மீண்டும் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் விவசாயிகள் சுபிட்சமாக இருக்கிறார்கள்; கர்நாடகத்தில் மட்டும்தான் விவசாயிகள் நிலை மோசமாக இருக்கிறது என்று மோடி பிரச்சாரம் செய்திருக்கிறார். ஆனால், இந்தியாவிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகம் நடந்த மாநிலங்கள் என்றால், அது பா.ஜ.க. ஆளும் மகாராஷ்டிரம்தான். அடுத்தடுத்த இடங்களிலும், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய பா.ஜ.க. மாநிலங்கள்தான் இருக்கின்றன. முன்பு, கேரளத்திற்குச் சென்ற போதும் சுகாதாரத்துறையில் நாட்டி லேயே உத்தரப்பிரதேசம்தான் முதலிடத்தில் இருக்கிறது என்று ஆதித்ய நாத்தும், அமித்ஷாவும் பச்சைப் பொய் சொல்லி மாட்டிக் கொண்டார்கள். அந்த வகையில், உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்துவிட்டதாக, கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க.வினர் கதைக் கட்டிவிட்டது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் சட்ட வல்லுநர் ஷோபா கரண்ட்லஜே. இவர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு 2015இல் நடந்த வன்முறை சம்பந்தமாகக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், மதக் கலவரத்தால் இறந்த 23 பா.ஜ.க-வினரின் பெயர் உள்ளிட்ட முழு விவரங்களையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார். இறந்துபோனதாகக் கூறப்பட்ட அந்த 23 பேர்களில் அசோக் பூஜாரி என்பவரும் ஒருவர். இவர், வேலை முடிந்து வீடு திரும்பும்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், காவி நிறத் துண்டை தலையில் கட்டியதற்காக அவரைக் கொலை செய்ததாக கூறியிருந்தார். தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியும், கர்நாடகத்தில் பாஜக-வைச் சேர்ந்த 23 தொண்டர்கள், மதத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு இருப்பதாகவும், சித்த ராமையா அரசு இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஆவேசம் காட்டிப் பேசினார். இது விவாதத்தைக் கிளப்பி விட்டது. ஆனால், மதக்கலவரத்தில் இறந்ததாக கூறப்பட்ட பாஜக தொண்டர் அசோக் பூஜாரி உயிருடன் வந்து பாஜக-வினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

பா.ஜ.க.வினரால் ‘இறப்புச் சான்றிதழ்’ அளிக்கப்பட்ட, அசோக் பூஜாரி உடுப்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ‘உயிருடன்’ இருப்பதை ஆங்கில தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உறுதி செய்துள்ளது. ‘நான் உயிருடன்தான் இருக்கிறேன்’ என்று பூஜாரி கூறும் வாக்குமூலத்தையும் வெளியிட்டுள்ளது. பா.ஜ.க.வினரின் பொய், அதிலும் பிரதமர் மோடியே துணிந்து சொன்ன பொய் அம்பலப்பட்டு இருக்கிறது. அரசி யலில் எந்தளவிற்கு பா.ஜ.க. கீழிறங்கும் என்பதற்கு இது சாட்சியாகவும் மாறியிருக்கிறது. பா.ஜ.க.வின் வெட்கங்கெட்ட தனத்தை ஊடகங்கள் தோலுரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஷோபா கரண்ட்லஜே எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே தாங்கள் பேசியதாகவும், அசோக் பூஜாரி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது நிரூபிக்கப்படாத ஒன்றுதான் என்றும் பா.ஜ.க.வினர் மழுப்பி வருகின்றனர்.

Pin It