பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே!! தோழர்களே!!! திராவிடர் கழகம் அரசியல் கட்சி அல்ல. சட்டசபைக்குப் போக வேண்டும், பார்லிமெண்டுக்குப் போக வேண்டும். மந்திரியாக வேணடும் என்று பாடுபடக் கூடியது அல்ல. இது சமுதாய சீர்திருத்த இயக்கம். நமது ஜாதி இழிவு, மூட நம்பிக்கைகள், காட்டுமிராண்டித் தன்மைகள் ஆகியவற்றைப் போக்கப் பாடுபடுகின்றது.

எங்கள் வேலை மனித சமுதாயத்தில் இருந்துவரும்படியான குறைபாடுகளை நீக்க வேண்டும். அதற்கு மக்களைப் பகுத்தறிவு உணர்ச்சி உடையவர்களாகச் செய்ய வேண்டும். 2,000 ஆண்டாக மனித சமுதாயத்துக்குத் தொண்டு செய்ய எவருமே தோன்றவேயில்லை. தோன்றினவன் எல்லாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், ஆனந்தாக்கள், அவதார புருஷர்கள் என்று பலர் தோன்றினார்கள் என்றாலும் மக்களை மடமையில் ஆழ்த்தவே பாடுபட்டு வந்து இருக்கின்றனர்.

ஏதோ புத்தர் ஒருவர்தான் தோன்றி பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார். புத்தர் என்றால் புத்தியைக் கொண்டவன். புத்தியைக் கொண்டு எவர் சொன்ன எதையும் நம்பாமல் தன் புத்திக்குச் சரி என்று பட்டதைச் செய்பவன் என்றுதான் பொருள். புத்தருக்குப் பிறகும்கூட சித்தர்கள், ஞானிகள் என்பவர்கள் பலரும் இருந்து இருக்கின்றார்கள். சித்தர் என்றாலும் சித்தத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்லுபவர், நடப்பவர் என்பது பொருள்.

ஞானிகள் என்றால் அறிவை ஆதாரமாகக் கொண்டவர்கள். ஞானம் என்றால் அறிவு என்று தான் பொருள். இப்படி பலர் தோன்றி ஏதோ சில நல்ல கருத்துகளைச் சொல்லிச் சென்று இருந்தாலும்கூட புத்தர்தான் வெளியே வந்து இதற்காகத் தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்திப் பாடுபட்டு இருக்கிறார்.

இந்தப் புத்தர் அறிவு மார்க்கம் காஷ்மீரம் முதல் கன்னியா குமரி வரையிலும் ஒரு காலத்தில் பரவி மக்கள் மத்தியில் நன்கு செல்வாக்குப் பெற்று இருந்தது.

இதனைப் பார்ப்பனர்கள் தந்திரமாக ஒழித்துக் கட்டிவிட்டார்கள். அவருக்குப் பிறகு நாங்கள்தான் முன்வந்து இக்காரியத்திற்காகத் துணிந்து பாடுபட்டு வருகின்றோம்.

தோழர்களே, 30, 40 ஆண்டுகளுக்கு முன்னமேயே குடிஅரசுவில் எழுதி இருக்கின்றேன். உலகத்திலேயே பெரிய மடையன் இந்தக் கடவுளை உண்டாக்கியவன் என்று. இந்தக் கடவுளை நம்மிடையே புகுத்தியது. பயத்தையும், மடமையையும் வளர்க்கவே பயன்பட்டு வருகின்றது.

தோழர்களே, கடவுள் நமக்கு இருக்கின்றது. வெள்ளைக் காரனுக்கும் இருக்கின்றது. இந்த மைக், இந்த லைட் வெள்ளைக்காரன் தானே செய்கின்றான். நாம் ஏன் பண்ணவில்லை? அவனுக்கும் கடவுள், நமக்கும் கடவுள். அவன் கடவுளை வெறும் சம்பிரதாயத்திற்கு மட்டுமே வைத்துக் கொண்டு இருக்கிறான். அவனுடைய லட்சியம் தான் பிரதானம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றான்.

நாம்தான் குழவிக்கல்லைக் கட்டிக்கொண்டு அழுகின்றோம். பத்தாம் பசலிப் பசங்கள் என்றும் கூறுவதுபோல 1,000 - 700 வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டது தேவாரம், திருவாசகம், சித்தர்கள் சொன்னது, முத்தர்கள் சொன்னது என்று கட்டிக் கொண்டு அழுகின்றோம்.

உலக அனுபவம் இல்லாமல் குண்டு சட்டிக்குள்ளேயே புகுந்து கொண்டு நமது நாட்டையும், கடவுளையும், மத, சாஸ்திரம் இவற்றைக் கட்டிக் கொண்டு மாரடிக் கின்றோம். இந்த இருபதாம் நூற்றாண்டில் உலகமே விஞ்ஞான அதிசய அற்புதங் களை எல்லாம் கண்டு எவ்வளவோ மாறுதல்கள் அடைந்தும்கூட நாம்தான் காட்டுமிராண்டிகளாக, மடையர்களாக உள்ளோம்.

நமது கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு நமது வேலை என்ன? நமது பகவான் வேலை என்ன? எந்த அளவு நமக்குச் சக்தி, எந்த அளவு கடவுளுக்குச் சக்தி என்று எவனும் சிந்திப்பதே கிடையாது.

ஏன்? மேல் நாடுகளில் பார்ப்பான் இல்லை. பறையன் இல்லை. இந்த நாட்டில் மட்டும் இருப்பானேன்? இப்படி ஆக்கிய கடவுளையும், மதத்தையும் ஒழிக்க வேண்டாமா? என்று கேட்டு, இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று மக்கள் உணர்கிறார்களே, அன்றுதான் நாமும், நம் நாடும் முன்னேற முடியும் என்று எடுத்துரைத்தார்.

----------------

24.2.1961 அன்று திருப்பாலக்குடியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - "விடுதலை" 13.3.1961
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It