‘பீகாரில் பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போட்டால், கொரானா தடுப்பு ஊசி இலவசம்’ என்கிறது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை. “அது என்ன பீகாருக்கு மட்டும் இலவசம்! மற்ற மாநிலங்கள் என்ன குற்றம் செய்தன? பெரும் தொற்று நோயிலும் ஓட்டு அரசியலா?” என்று கேள்வி கேட்கின்றன எதிர்கட்சிகள்.

கொரானா வைரஸ், உலகம் முழுதும் மனிதர்களிடம் மட்டுமே பரவுகிறது. ஆனால் நமது இராமராஜ்யத்தில் தான் தேர்தல் அறிக்கைகளிலும் கொரானா தொற்றிக் கொண்டுவிட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் இப்போது வராமல் போனதே என்பதற்காக மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். வந்திருக்குமானால் எங்கள் கூட்டணிக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமே கொரானா சிகிச்சை தரப்படும் என்று தேர்தல் அறிக்கை வந்திருக்கும். ‘பூண்டு, வெங்காயம்’ சாப்பிடாத பரம்பரையில் வந்த நிதி அமைச்சர் நிர்மலா கூச்சப்படாமலேயே அறிவித்திருப்பார்.

தடுப்பூசி கண்டுபிடித்து உலக மானுடம் முழுமையும் பாதுகாக்க உலக நாடுகள் கவலை யோடு உழைக்கின்றன. இதோ பாருங்கள்! பிரேசில் நாட்டில் சோதனைக்காக தடுப்பூசி போட்டுக் கொண்ட 28 வயது இளம் மருத்துவர் இறந்தே போய் விட்டாராம். உயிர்ப் பலி நிகழ்ந்தாலும் தடுப்பூசி சோதனைகளை தொடர்வோம் என்கிறது, அந்நாட்டு அரசு. அவர்கள் மக்களை நேசிப்பவர்கள்; நாம் பசுமாட்டை பூஜிப்பவர்கள்!

ஒரு மாநில தேர்தலில் ஓட்டு வாங்க எந்த நாட்டுக்காரனோ கண்டுபிடிக்கப் போகும் தடுப்பூசியை ஓட்டுக்காகப் பேரம் பேசும் ‘ஆன்மிக’ பூமி இது!

தேர்தலில் போட்டி கடுமையாகி பா.ஜ.க. தோற்கும் நிலைக்கு வருமானால், தடுப்பு ஊசியோடு கொரானா வைரசையும் இலவசமாக வழங்குவோம் என்றுகூட அறிவிப்பார்கள். யார் கண்டது?

இனி அடுத்தடுத்து தேர்தல் அறிக்கைகளில் என்ன புரட்சிகள் வரப் போகிறதோ தெரியவில்லை.

• பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் பசு மாட்டின் ‘புண்ணிய தீர்த்தம்’ பாட்டிலில் அடைத்து இலவசமாக வழங்கப்படும்.
• இலவச தரிசனம்; இலவச மொட்டை; இலவச பிரசாதங்கள் வழங்குவது குறித்து சட்ட நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும்.
• சொந்த வீட்டுக்காரர்கள் வாடகை தர வேண்டாம்; வீடுகளுக்குள் குடும்பத்தினர் கலந்து பேசலாம்; வெளியூர் பயணத்துக்கு பேருந்திலோ அல்லது தொடர்வண்டியிலோ அல்லது இரண்டிலுமே போய் வரலாம். ‘பாஸ்போர்ட்’ தேவை இல்லை. நித்யானந்தா வின் கைலாசத்துக்குப் போவதற்கு மட்டும் பாஸ்போர்ட் உண்டு.
• மோடியின் ‘மன்கி பாத்’ பேச்சைக் கேட்பவர்களுக்கு வங்கிக் கணக்கில் பணம் போடப்படும்
என்றுகூட எதிர்காலங்களில் தேர்தல் அறிக்கைகள் வரலாம்.

கடைசியில் கொரானா தடுப்பு ஊசியை ஏதோ ஒரு நாடு கண்டுபிடித்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம்!

அப்போது என்ன சொல்வார்கள் தெரியுமா? இது என்ன அவ்வளவு பெரிய கண்டுபிடிப்பா? இராமாயண, மகாபாரதக் காலத்திலேயே எங்களிடம் இந்த மருந்து இருந்திருக்கிறது.

திருவாளர் அனுமான் அப்படியே தூக்கிச் சென்றானே சஞ்சீவி மலை, அந்த மலையிலிருந்த மூலிகை தான் இப்போது வந்திருக்கிற கொரானா தடுப்பு மருந்து என்று பேச ஆரம்பித்து விடுவார்கள்!

இதற்குப் பெயர்தான் ‘இந்துத்துவா’ அரசியல்.

- கோடங்குடி மாரிமுத்து

Pin It