பார்ப்பனர்களின் நயவஞ்சக ஆதிக்கம் பொங்கித் ததும்பி பூரணமாய்த் தாண்டவம் ஆடப்பெறும் தமிழ் 'சுயராஜ்யா’ பார்ப்பனரல்லாதார் கொடுத்த தமிழ்நாட்டு காங்கிரஸ் பணத்தைக் கொண்டு நடைபெறுகிறதென்பதைப் பலரும் அறிவர். அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடும் படு பாவிகளைப்போல பார்ப்பனரல்லாதாரின் பணத்தாலேயே பிறந்து, பார்ப்பனரல்லாத சந்தாதாரர்களாலேயே வளர்க்கப்பட்ட தமிழ் ‘சுயராஜ்யா’ பார்ப்பனரல்லாதாருக்கே கேடு விளைவித்து வருகிறது. இப்பத்திரிகை பார்ப்பனரல் லாதாரின் க்ஷீனத்தைக் கோரி பார்ப்பனரல்லாதாருடன் போர் புரிந்து வருவதை உலகமறியும்.

சின்னாட்களுக்கு முன் பார்ப்பனரல்லாத கட்சியின் கூட்டம் சென்னை சௌந்தரிய மகாலில் நடைபெற்றது. ‘சுயராஜ்யா’ பத்திரிகை அக்கூட்டத்தில் கூடியிருந்தோர் அனைவரையும் “உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள்” என்று மானங்கெட்டத்தனமாய் பெயரிடுகிறது.ஊரூராய்த் திண்டாடித் தெருவில் நின்று பார்ப்பனரல்லாதார்  வீடுதோறும் அலைந்து திரியும் “உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள்” ‘சுயராஜ்யா’ பத்திரிகை ஆசிரியரின் இனத்தைச் சேர்ந்த பார்ப்பனக் கூட்டமேயன்றி, சௌந்தரிய மகாலில் அன்று குழுமியிருந்த பார்ப்பனரல்லாதவர்களன்று.இதைப்பற்றி ‘திராவிடன்’ கூறியுள்ள முத்து போன்ற  எழுத்துக்களைக் கவனிப்போம்.

“தமிழ் “சுயராஜ்யா” அற்பத்தனமாயும் அயோக்கியத்தனமாயும் எழுதத் துவங்கிவிட்டது மிகவும் வருந்ததக்கதாகும். “உத்தியோக நக்கிப் பொறுக்கிகள்” சௌந்தரிய மகாலில் பெருந்திரளாய்க் கூடியிருந்தவர்களனைவருமாம்.வீடுதோறும் பிறப்புக்கும், கலியாணத்துக்கும், இழவுக்கும் அழையாவிட்டாலும் நாய்போல் வந்து பல்லைக் காட்டி அரையணா, ஒரு அணா பெற்றுப் பொறுக்கித் தின்பவர்கள் பார்ப்பனர்களே  நிருவாகசபை உத்தியோகங்கள்  முதல், கேவலம் செருப்புத் தைத்தல், கும்பகோணம் வேலையில் ஈடுபடல் ஆகிய இழிதொழில்கள் செய்து கால்களை நக்கிப் பொறுக்கித் தின்று வயிறு பிழைப்பவர்கள் பார்ப்பன மாக்களேயன்றி பார்ப்பனரல்லாத மக்களல்ல.”

இதைப்பார்த்த பின்னும்  இவ்வாறு அந்த பார்ப்பனப் பத்திரிகையால் பார்ப்பனரல்லாதாரை ஏழேழு ஜென்மத்திற்கும் மறையாத மாசுடையோராய் இழித்துரையாடப் பெற்ற ‘நக்கிப் பொறுக்கிகள்’ என்ற வார்த்தையைக் கேட்ட பிறகும் - தன் நரம்பிலே பார்ப்பனரல்லாதாரின் சுத்த ரத்தம் ஓடப்பெறும் எவராவது - பார்ப்பனரல்லாதாராய் பிறந்த எந்த ஆண்மையுடையோராவது இனி ‘சுயராஜ்யா’ப் பத்திரிகையை கையில் தொடுவாரா?  கண்ணில் பார்ப்பாரா?  மானம், வெட்கம், ரோஷம், சுயமதிப்பு உடைய எந்த பார்ப்பனரல்லாதாரும் இனி அப்பத்திரிகையைப் பார்க்கவும் தொடவு மாட்டார்களென்றே நம்புகிறோம்

(குடி அரசு - கட்டுரை - 18.07.1926)
Pin It