மலேசியாவில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் மார்க்ஸ் பங்கேற்ற கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களும் திராவிட எதிர்ப்பாளர்களும் கலகத்தை உருவாக்கி கூட்டங்களை தடுத்து நிறுத்த முயன்றனர். நடந்தது என்ன என்பதை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர் களோடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற திராவிடர் விடுதலைக் கழக இணையதள பொறுப்பாளர் க. விஜய குமார் விளக்கு கிறார்.

உலகத் தமிழ் உணர்வாளர் மாநாட்டை யொட்டி மலேசியா முழுதும் 30க்கும் மேற்பட்ட பரப்புரைக் கூட்டங்களில் தமிழகத்திலிருந்து வந்த பெரியாரிய கருத்துரை யாளர்கள் பங்கேற்றுப் பேசினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் அ.மார்க்ஸ் இருவரும் கோலாலம்பூரை மய்யமாகக் கொண்ட சுற்றுப்புறங்களில் ஒவ்வொரு நாள் மாலையிலும் பேசினர். ஜூன் 26ஆம் தேதி பக்தாங் பெர்சுந்தைபட்டினம், 27- உலுசி யாங்கூர், 28-காப்பர், 29-கிளாங், 30-பெட்டாலிங் ஜெயா, ஜூலை-1 - டிங்களூர் தமிழ்ப் பள்ளி, 2-கோலாலம்பூர், து.சம்பந்தம் மண்டபம் ஆகிய இடங்களில் இந்த கூட்டங்கள் நடந்தன.

malayasia 1 600ஜூன் 26ஆம் தேதி காப்பார் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன், மதிமாறன் இருவரும் பேசினர். கூட்டம் முடிந்த பிறகு மண்டபத்துக்கு வெளியே தோழர் மதிமாறனிடம் திராவிட-பெரியார் எதிர்ப்பாளர்கள் சில கேள்விகளை எழுப்பி தரக்குறைவாகப் பேசினர்.

அடுத்த நாள் கிள்ளாங் கூட்டத்தை நடத்த விடக் கூடாது என்று ஒரு சிலர், ‘வாட்ஸ் அப்’ வழியாக பேசி ஆட்களை திரட்டினர். விடுதலை இராசேந்திரன், மலேசியாவில் 1929இல் பெரியார் வருகை குறித்து எழுந்த எதிர்ப்புகளின் வரலாறுகளை சுட்டிக்காட்டி, ‘திராவிடம்’ என்ற கருத்தாக்கத்தை தமிழர்களின் சமஸ்கிருத பார்ப்பன ஜாதித் திணிப்புக்கு எதிராக தமிழர் சமுதாய ஒற்றுமைக்கும் வலிமைக்கும் பயன்படுத்துகிறோமே தவிர, தென் மாநிலங்களை ஒன்றாக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துக்காக அல்ல என்பதை விளக்கிப் பேசும்போது கலகம் செய்வதற்கே வந்த சிலர், கூச்சல் குழப்பத்தை உருவாக்கினர். “திராவிடர்-பெரியார் என்ற வார்த்தைகளையே உச்சரிக்கக் கூடாது; கூட்டத்தை நடத்த விட மாட்டோம்” என்று அரங்கிற்குள் நுழைந்து கூச்சல் போட்டதோடு பெரியாரையும் இழிவாகப் பேசினர். சுமார் 20 நிமிடங்கள் வரை இது நீடித்தது. விடுதலை இராசேந்திரன் மேடையில் நின்று கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் கூட்ட ஏற்பாட்டாளர்கள், “கூச்சல் போடுவதை நிறுத்தி, உங்கள் கேள்விகளை ஒலி பெருக்கி வழியாகக் கேளுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தனர். ஒலி பெருக்கியை பிடித்த ஒருவர், “கால்டுவெல் என்ற அந்நிய நாட்டு பாதிரி தந்த திராவிடம் என்ற சொல்லை மானமுள்ள தமிழன் ஏற்கலாமா?” என்று கேட்டார். அதற்கு விடுதலை இராசேந்திரன் பதிலளித்தார்.

“கால்டுவெல்லுக்கு முன்பே திராவிடம் என்ற சொல் வழக்கில் இருந்திருக்கிறது; மனுதர்மத்திலும் மகாபாரதத்திலும் அந்த சொல் வருகிறது; ‘குமரில பட்டர்’ என்பவர் கால்டுவெல் கூறுவதற்கு முன்பே பயன்படுத்தியிருக்கிறார். பார்ப்பன மொழி நூல் ஆசிரியர்கள் தமிழை இழிவான மொழி என்று பொருள்பட பிளாச்சி மொழி என்று பெயரிட்டு இழிவுபடுத்தினர். சமஸ்கிருதமே இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாய் என்று பார்ப்பனர்கள் கூறி வந்த நிலையில் திராவிட மொழிகளை ஆராய்ந்த கால்டுவெல், திராவிட மொழிக் குடும்பம் வேறு; இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பம் வேறு என்று ஆராய்ந்து  எழுதினார்.

திராவிட மொழிக் குடும்பத் தின் மூலமொழி ‘தமிழ்’ என்பதை ஆய்வு களுடன் நிறுவியதோடு, சமஸ்கிருதம் உதவியின்றி, தமிழ் தனித்து இயங்கும் வளம் பெற்ற மொழி என்று நிறுவினார். அயோத்திதாசப் பண்டிதர் 1892லேயே ‘ஆதி திராவிட ஜனசபை’ என்ற அமைப்பை தொடங்கி தமிழ்மொழியில் பிறந்து தமிழ் மொழியில் வளர்ந்து தமிழ் மொழிக்கு உரியோர் பூர்வீக திராவிட குடிகள் என்றார். தமிழ்கடல் மறைமலை அடிகள் ‘திராவிட சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் பேசியிருக் கிறார். தமிழ்த் தென்றல் திரு.வி.க. 1948இல் கடலூரில் ‘திராவிட நாடு’ படத்தைத் திறந்து வைத்து, “இந்த நாட்டு மக்கள் எல்லாருமே திராவிடர்கள்தான்; நானும் திராவிடன் தான் என்று பேசினார்.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் - திராவிடம் என்பது ‘திருவிடம்’ எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது என்றார். ‘திராவிடர்’ என்பது கால்டுவெல்லுக்கு முன்பும் பின்பும் பயன்பாட்டில் இருந்திருக் கிறது. சமஸ்கிருத பார்ப்பன எதிர்ப்பு என்ற குறியீட்டுச் சொல் என்பதற்கே தமிழர் களோடு திராவிடத்தை நாம் இணைக் கிறோம்” என்று விளக்கமளித்தார்.

“திராவிடத்தை - தெலுங்கர், கன்னடர் பேசாதபோது நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?” என்று இரண்டாவது கேள்வியை கேட்டார். “திராவிட மொழிக் குடும்பத்தின் மூலம் தமிழ் என்பதை அவர்கள் எப்படி ஏற்பார்கள்? அதனால் தான் அவர்கள் பேசவில்லை; அவர்கள் ‘திராவிடத்தை’ புறக்கணிக்கிறார்கள் என்பதிலிருந்தே இது தெலுங்கர், கன்னடர்களுக்கு ஆதரவான கருத்து இல்லை. அதனால்தான் அவர்கள் ஏற்பதும் இல்லை” என்று விடுதலை இராசேந்திரன் விளக்கமளித்தவுடன், மீண்டும் கூச்சல் குழப்பம் உருவாக்கிக் ‘கூட்டத்தை நடத்தவிட மாட்டோம்’ என்றார்கள். எதைப் பேசினாலும் தடுக்கப் போகிறார்கள் என்பது புரிந்தவுடன்,

“இனியும் நான் உரையைத் தொடர விரும்பவில்லை. உங்களில் பலரும் தமிழ்நாட்டுப் பிரச்சினைகளை மலேசியா வின் பிரச்சினையாகப் பார்க்கிறீர்கள். அதே நேரத்தில் உங்களில் பலரும் ‘மலேசிய இந்தியன் காங்கிரஸ்’ கட்சியில் இருக்கிறீர்கள். உங்களின் தமிழர் உணர்வை நான் பாராட்டுகிறேன். அதை நிரூபிக்க ‘மலேசிய இந்தியன் காங்கிரஸ்’ என்ற பெயரை ‘மலேசிய தமிழன் காங்கிரசாக’ மாற்றப் போராடுங்கள்” என்று பேசி உரையை முடித்துக் கொண்டார்.   

தொடர்ந்து பேராசிரியர் மார்க்ஸ் பேச அழைக்கப்பட்டபோது, “கருத்துரிமைக்கு இடமில்லாத அரங்கில் நான் பேச மாட்டேன்; எனது எதிர்ப்பைப் பதிவு செய் வதற்காக நான் பேசப் போவது இல்லை” என்று ஏற்பாட்டாளர்களிடம் கூறி விட்டார்.

ஏற்பாட்டாளர்களின் வலியுறுத்தலுக்குப் பிறகு மேடை ஏறிய பேராசிரியர் மார்க்ஸ், “தமிழ்நாட்டில் பெருமளவு மதிக்கப்படக் கூடியவர் விடுதலை இராசேந்திரன். அவரை பேச விடாமல் அவமதித்து விட்டீர்கள். தடை செய்யப்பட்ட பொதுவுடைமை கட்சியிலிருந்ததற்காக இந்த மலேசிய மண்ணிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் எனது தந்தை. எனக்கும் இந்த மண்ணுக்கும் உறவு உண்டு. திராவிடம்-பெரியார் என்ற சொற்களை கருத்தாக்கத்தை நீக்கிவிட்டு மொழியையோ, இனத்தையோ பேச முடியாது. உலகம் முழுதும் உள்ள ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ள செய்தி இது. எனவே நான் பெரியாரையும் திராவிடத்தையும் தான் பேசுவேன். குழப்பத்தை உருவாக்குவதோ நிபந்தனைகள் விதிப்பதோ முறையல்ல” என்று கூறியவுடன், மீண்டும் கலகக் கும்பல், ‘மார்க்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்; கூட்டத்தை நிறுத்து’ என்று மேடை மீது ஏறி கூச்சல் போட்டது. 30 நிமிடம் கூச்சல், வசைமொழிகளுக்குப் பிறகு கூட்டம் நிறுத்தப்பட்டது.

அடுத்த நாள் பெட்டாலின் ஜெயா பகுதியில் மலேசிய திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சைத் தொடங்கி 30 நிமிடம் கடந்த பிறகு, அதே கும்பல் கூச்சல் குழப்பத்தை உருவாக்கியது. விடுதலை இராசேந்திரன் எதையும் பொருட் படுத்தாமல் தனது உரையை ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். கூட்டத்தை நிறுத்த முடியாமல் போனதில் ஏமாற்ற மடைந்தவர்கள், தொடர்ந்து பேராசிரியர் மார்க்ஸ் பேசுவதைத் தடுக்க திட்டமிட்டு கூச்சல் போட்டனர். ஏற்பாட்டாளர்கள் காவல் துறைக்கு தகவல் தரவே காவல் துறையினர் விரைந்து வந்து குழப்பக் காரர்களை அப்புறப்படுத்தி, தமிழ்ப் பள்ளியில் இருந்த அரங்குக்குள் கூட்டத்தை நடத்த ஆலோசனை வழங்கினர். பின்னர் அரங்குக்கு மாற்றப்பட்டு, அங்கு பேராசிரியர் மார்க்ஸ் உரையாற்றினார். மாநாட்டு செய்திகளை இருட்டடித்த மலேசிய நாளேடுகள், எதிர்ப்பு செய்திகளை பரபரப்பாக வெளியிடத் தொடங்கின, மாநாட்டு செய்திகள் மலேசியா முழுதும் பரவின. ‘முகநூல், வாட்ஸ் அப்’களில் செய்திகளும் வேகமாகப் பரவின. ஒரு தமிழ் நாளேட்டில் விவேகானந்தன் என்பவர் மாநாட்டில் முன் வைத்த கருத்துகளை மறுத்து நீண்ட கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையின் கருத்துகளை மறுத்து பதில் கட்டுரை அதே ஏட்டுக்கு எழுதி அனுப்பி வைக்கப்பட்டது.

விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் மார்க்ஸ் எதிர்ப்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் என்ற பொய்ச் செய்தி வெளியிட்ட ‘மலேசிய நண்பன்’ அலுவல கத்துக்கு விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் மார்க்ஸ், மதிமாறன், இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று அந்த ஏடு வெளியிட்ட செய்தியை மறுத்து என்ன நடந்தது என்பதை நேரில் விளக்கினர். அடுத்த நாள் அந்த ஏடு அந்த மறுப்பை கருத்துரையாளர்களின் படங்களுடன் வெளியிட்டது.

பெரியார் - திராவிடர் இயக்கத்தை எதிர்த்து மக்களைக் குழப்பிட வந்தவர்களுக்கு உரிய பதிலடியைத் தந்ததோடு மலேசியா முழுதும் விவாதப் புயலைக் கிளப்பிவிட்டிருக்கிறது உலகத் தமிழ் உணர்வாளர் மாநாடு.