இந்தியாவின் வரலாறு ஆதிக்கச் சமூகத்தினரால் மறைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு வந்தது. ஆய்வு என்ற பெயரால் பொய்யுரைகளையே முடிவுகளாக முன்னி றுத்தினார்கள். தொல்குடிகளான திராவிடர்களின் பண்பாட்டினை ஏற்றுக் கொள்ளவும் தயங்கினர். சிந்து சமவெளி நாகரிகத்தின் காலத்திற்கு முன்பே வேதகால ஆரியர்கள் இருந்தனர் என்று திரும்பத் திரும்பப் பொய்யுரைகளையே கூறி வந்தனர். இந்த ஆதிக்கச் சமூகத்தினர் மொகலாயர் காலமாக இருந்தாலும் கிழக்கிந்தியக் குழுமங்கள் ஆட்சிக் காலத்திலும் அவர்களுக்கு அடிமை வேலை செய்தனர்.

வெளிநாட்டி லிருந்து வரும் ஆய்வாளர்களுக்கு  திராவிடமும் ஆரியமும் இந்தியாவின் இரு கண்கள் என்று கூறினர். இதை நம்பிய ஜெர்மானிய மெக்ஸ் முல்லர் ஆரிய மொழியான சமற்கிருதம்தான் அன்றைய இந்தியத் துணைக் கண்ட பகுதிகளில் கோலோச்சியது என்று குறிப்பிட்டார். ஆரிய சமாஜத்தை உருவாக்கிய தயானந்த சரசுவதி உலகம் தோன்றிய காலத்திலிருந்து தொன்மையான நாகரிகத்தை உருவாக்கியவர்கள் ஆரியர்கள் என்றும், திபெத் வழியாக இந்த நாட்டிற்கு வந்து உயர் பண்பாட்டினை  அளித்தார்கள் என்றும் பொய்யுரையை அளித்தார்.

விநாயகர் சிலையை அரசியலாக்கிய பார்ப்பன பாலகங்காதர திலகர் கிறித்து பிறப்பதற்கு 8000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் திலகரின் கருத்துதான் உண்மையானது என்றார். ஆரியர்கள்  இந்தியாவில் தோன்றியவர்கள் என்றார் சுவாமி விவேகானந்தர். மேலும் இன்றைய ஆப்கானிஸ்தான் இந்தியப் பகுதி யாகவே ஒரு காலத்தில் இருந்தது என்று எடுத்துரைத் தார். வங்கத்தில் காங்கிரசுப் புரட்சியாளரகவே தோன்றி இறுதியில் சாமியாராக பாண்டிச்சேரியில் வலம் வந்து மறைந்த அரபிந்தோ சமஸ்கிருத மொழிக்கும் திராவிட மொழிக்கும் நெருக்கமான உறவு இருந்தது என்று கூறினார். இந்தக் கருத்துகள் எல்லாம் முன்மொழியப் பட்டபோது அறிவியல் போதுமான அளவிற்கு வளர்ச்சி யடையவில்லை.

தற்போது தொல்பொருள் ஆய்வுகளின் வழியாகக் கண்டெடுக்கப்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித உடல்களை, அறிவியல் வழியாக ஆய்வு செய்யும் மரபு கடந்த 20 ஆண்டுகளாகப் புகழப் பெற்று வருகிறது. மானுட இயலில் குறிப்பிடப்படுகிற வேட்டையாடிய மானுட சமூகம் பல ஆயிரம் ஆண்டு களைக் கடந்து நாகரிக சமூகமாக மாறியது என்ற உண்மைகள் இன்றைக்கு அறிவியல் வழியாக உறுதி செய்யப்படுகிறது. மருத்துவ அறிவியல் மேலோங்கி வளர்ந்து வருவதால் மரபணு (gene) எந்த இனத்தி லிருந்து எந்த இடத்திலிருந்து எந்தக் காலத்திலிருந்து புறப்பட்டது என்பதையும் துல்லியமாகக் கணக்கிடும் முறையும் வளர்ந்து விட்டது.

1915இல் தொடங்கி பல வரலாற்று ஆய்வாளர்கள்- குறிப்பாகச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்த சே அய்யங்கார் இந்தியாவினுடைய பண் பாட்டிற்குத் திராவிடம் அளித்த பங்களிப்பைப் பற்றி எழுதினார். அவர் திராவிடர்கள் தனித்த இயல்போடு இப்பகுதியிலேயே பிறந்து வளர்ந்து ஒரு பெரும் நாகரிகத்தை அளித்தார்கள் என்று குறிப்பிட்டார்.

தொல்பொருள் சான்று, இலக்கியச் சான்று சமற்கிருத மொழியில் எழுதப்பட்ட பழமையான நூல்களில் காணப்பட்ட தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் திராவிடத் தொன்மையைப் பற்றிக் குறிப்பிட்டார். ஆதிச்சநல்லூர் தொல்பொருள் ஆய்வு பல வரலாற்று அறிஞர்களுக்குத் தமிழர்களின் தொன்மையையும் தனித்தன்மையையும் பற்றிய தரவுகளைத் தந்தது. அரிக்கமேடு ஆய்வுகளும் இன்றைய கேரள மாநிலப் பகுதிகளில் எடுக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளும் அண்மையில் கீழடி ஆய்வில் கிடைத்த தரவுகளும் தமிழர்களின் நாகரிகத் தொன்மையை எடுத்தியம்பு கின்றன.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் (1915) வரலாறு மற்றும் அகழ்வாராய்ச்சித் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் கிருஷ்ணசாமி ஐயங்கார்- திராவிடக் கட்டடக்கலை இந்தியாவின் பண்பாட்டிற்குத் தென்னிந்தி யாவின் பங்களிப்பு போன்ற நூல்களை வழங்கியவர். இவரும் திராவிடர்களின் தனித்தன்மையைப் பற்றியும் அவர்களுடைய தனித்துவமான பண்பாடுகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து மும்பை புனித சேவியர் கல்லூரி யில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்த பாதிரியார் ஹென்றி இராஸ், சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிப் பல முன்னோடியான ஆய்வுகளை மேற்கொண்டார்.  சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம்தான் என்று 1922ஆம் ஆண்டிலேயே இராஸ் குறிப்பிட்டார்.

2010இல் என் நினைவு மறைவதற்கு முன்  (Before Memory Fades) என்ற தன் வாழ்க்கை வரலாற்று நூலில் பாலி நாரிமன்  பாதிரியார் இராஸிடம் பயின்ற மாணவர். வரலாற்றுப் பாடத்தை இராஸ் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும்போது சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதற்கான பல தரவுகளை எடுத்துக் காட்டுவார் என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர் இராஸ் சிறப்புச் சொற்பொழிவை  அக்காலக்கட்டத்தில் வழங்கியுள்ளார். திராவிட நாகரிகத்தின் சிறப்புகளைப் பட்டியலிட்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் முதல் பேராசிரியர் கில்பர்ட் சிலேட்டர் 1915இல் பொறுப்பேற்றார்.

பேராசிரியர் சிலேட்டர் தமிழ் மொழியைப் பயின்றார். தமிழ் நாகரிகத்தைப் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டார். இந்தியாவின் பண்பாட்டிற்குத் திராவிடம் அளித்த கூறுகள் (Dravidian Elements in India’s Culture) என்ற நூலை எழுதி னார். இந்நூலினைப் பன்மொழிப் புலவர் க.அப்பாதுரை யார் தமிழிலும் மொழி பெயர்த்துள்ளார். இந்நூலில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. வேட்டையாடும் சமுதாயமாக மற்ற இனத்தவர் இருந்த காலத்தில், திராவிடர்கள் நாகரிக சமுதாயமாக வாழ்ந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் திராவிட நாகரிகத்தின் தொன்மையைத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். திருக்குறளை ஆங்கி லத்தில் மொழிப் பெயர்த்த எலியட்சு திராவிடச் சான்று என்ற நூலையும் எழுதியுள்ளார்.

இவ்வாறாக திராவிடர்களின் தொன்மையையும் அவர்களது வாழ்க்கை நிலையையும் பற்றிய கருத்துகள் தொடர்ந்து இருந்த வண்ணமே உள்ளன. இக்கட்டுரை யாசிரியர் பேராசிரியர் சஞ்சீவியுடன் 1982 ஆண்டு மக்கள் சீனத்திற்குப் பயணம் செய்த போது 40க்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் சீன மொழியில் இருப்பதைப் பேராசிரியர் சஞ்சீவி அட்டவணைப்படுத்தியுள்ளார். சான்றாக, மா என்றால் குதிரை. மல்லி என்றால் மல்லிகைப்பூ என்றே சீன மொழியிலும் குறிப்பிடுகிறார்கள்.

2010இல் சப்பான் பல்கலைக்கழகங்களில ஆய்வுச் சொற்பொழிவுகளை மேற்கொள்ள கட்டுரையாசிரியர் பயணம் செய்த போது பேராசிரியர் பொற்கோ சப்பானிய  தமிழ் மொழிகள் தொடர்பு பற்றிய ஒரு நூலினை எனக்கு அளித்தார். அந்நூலில் சப்பான் மொழியிலும் பல தமிழ் சொற்கள் இருப்பதையும் போகிப் பொங்கல் மாட்டுப் பொங்கல் போன்ற விழாக்கள் அங்கு கொண் டாடப்படுவதையும் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பற்றி அங்குள்ள பொருளாதாரப் பேராசிரி யர்களிடம் பேசிய போது அவர்களும் இக்கருத்தினை ஏற்றுக்கொண்டனர். மேலும் சப்பானியப் பேராசிரி யர்களின் வலியுறுத்திலின்படி ஒரு கண்காட்சியத்திற்குச் சென்ற போது ஏராளமான பழங்காலத் தமிழ்க் கடவுள் களின் சிலைகளையும் சிற்பங்களையும் காண முடிந்தது.

இதுபோன்ற எண்ணற்ற ஆய்வுகள் தொடர்கின்ற நிலையில், தற்போது அரியானா மாநிலத்தின் ராகிகர்கி இடத்தில் 1375 ஏக்கர் நிலப்பரப்பில் நடத்தப்பட்ட ஓர் அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் வெளி வந்துள்ளன. அறிவியல் தொழில்நுட்ப இயல், மருத்துவ இயல் இணைந்து அங்கு எடுக்கப்பட்ட உடல்களில் உள்ள மரபணுகள் (gene) மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.  இந்த ஆய்வு நடந்த பகுதி மொகஞ்சதாரோ நிலப்பரப்பைவிட அதிகமானதாகும். ராகிகர்கியில் கிடைத்த மனித மரபணுவின் தொன்மைப்படி மனிதர்கள் கிறித்து பிறப்பதற்கு 8000 ஆண்டுகளுக்கு முன்பே தொல்குடி யினர் இங்கு வாழ்ந்துள்ளார்கள். இந்தத் தொல்குடி யினர் நாகரிகமும் அவர்களது பண்பாடும் தென்னிந்திய திராவிட மக்களின் மரபு வழியாக வந்துள்ளது என்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ராகிகர்கியில் வாழ்ந்த மக்களின் மரபணுக்களில் ஈரான் நாட்டின் விவசாயிகளின் மர பணுக்கள் சிறிதளவு கலப்பும் உள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

தென்னிந்தியத் தொல்குடி மக்களின் மரபணுக்களுக்கும் ராகிகர்கியில் வாழ்ந்த மக்களுக்கும் ஒற்றுமைகள் இருப்பதால் சிந்து சமவெளி மக்கள் பேசியது திராவிட மொழியே என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் அவுட் லுக் ஆகஸ்ட் 2018 இதழிலும், இந்தியா டுடே செப்டம்பர் 2018 இதழிலும் விரிவாக வெளி வந்துள்ளன. இந்தக் கட்டுரைகளைப் பற்றிய உரையாடல்கள் எந்தத் தமிழ் ஒளி அச்சு ஊடகத்திலும் இடம் பெறவில்லை. இதற்கான முதன் மையான காரணம் ஏற்கெனவே வெளிவந்த ஆய்வு களை ஒப்பிடுகையில் இது உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வாகும். இந்த ஆய்வால் இதுவரை கூறப்பட்டு வந்த ஆரியர்கள் வருகை பற்றியும் அவர்கள் தொன்மையானவர்கள் என்று கூறப்பட்டதையும் வேதகால ஆரியர்கள் இருந்தார்கள் என்றும் வேதம் தொன்மையானது என்றும் கூறப்பட்ட அனைத்துக் கருத்துகளும் கண்ணாடி உடைந்தது போன்று சிதறியுள்ளன. குறிப்பாக இந்தியாடுடே இதழில் (பக்.26) இக்கட்டுரையில் முதன்மைக் கருத்துகளை அட்டவணைப்படுத்தியுள்ளார்கள்.

இது வரை, ஆரியம் உயர்ந்தது, இந்துத்துவா அதனடிப்படையில் உருவானது என்ற கருத்துகள் தகர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு தென்னிந்திய அரசியலுக்குக் கிடைத்த புதிய வரவாகும். வடநாட்டில் இந்துத்துவக் கொள்கைக்குக் கிடைத்த மரண அடியாகும் என்று இக்கட்டுரை கூறுகிறது.

இந்தப் புதிய அறிவியல் ஆய்வின் வெளிப்பாடு திராவிடத்தின் தொன்மையைத் திராவிட மொழிகளின் சிறப்பைத் தனித்தன்மையைச் சான்று பகர்வதோடு திராவிட மக்கள்தான் மண்ணின் மைந்தர்கள் என்ற உண்மையை உலகிற்குப் பறை சாற்றுகிறது. இந்த உயரிய ஆய்வின் முடிவுகளைத் தமிழ் இயக்கங்களும் திராவிட இயக்கங்களும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். வந்தேறிகளின் வரலாற்றுப் பொய்களை முறியடிக்க வேண்டும். ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் களப் பணியாளர்களும் எழுத்தாளர்களும் மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழர்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.

Pin It