‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை... தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து...

vidhuthalai rajendranதமிழைத் தீட்டு மொழி என்று கூறி, தமிழ் பேசினாலேயே உடல் முழுதும் குளியல் போட்டு தீட்டுக் கழிக்கும் ‘இவாள்’தான், ‘பெரியாரை - தமிழ் விரோதி’ என்கிறார்கள். புராணக் கதைகளிலும் இராமாயணப் பெருமைகளிலும் பக்தி இலக்கியங் களிலுமே மூழ்கிக் கிடக்கும் தமிழை அறிவியல் மொழியாக்க வேண்டும் என்றார் பெரியார். திருக்குறளுக்காக மாநாடு போட்டு, திருக்குறளை குறைந்த விலையில் கையடக்க நூலாக மக்களிடம் கொண்டு சென்றவர் பெரியார். தமிழ்ப் பாடல்களை அவமதித்து, அதைத் ‘துக்கடா’ என்று, இசை நிகழ்வில் ஒப்புக்காகப் பார்ப்பனர்கள் பாடியபோது, தமிழிசையைப் பாட மறுத்தபோது, அதற்காக இயக்கம் நடத்தியவர் பெரியார். கோயில் களுக்குள்ளே தமிழை வழிபாட்டு மொழியாக்க வேண்டும் என்று போராடியவர் பெரியார். தமிழர் வீட்டுத் திருமணங்கள், நிகழ்வுகள், இல்லத் திறப்புகளில் வடமொழியை நீக்கி, தமிழில்நடத்தும் முறையை மக்களிடம் கொண்டு சென்றது பெரியாரும் பெரியார் இயக்கமும்தான்.

தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது பெரியார். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று கூறியவர் பெரியார். தமிழ் வழிப் பாடத் திட்டத்தை கலைஞர் ஆட்சி அறிமுகம் செய்தபோது அதை அன்று காங்கிரஸ் கட்சியும், பார்ப்பனர்களும் எதிர்த்தபோது தமிழ் வழிக் கல்வியை உறுதியாக ஆதரித்தவர் பெரியார். ஒரு காலத்தில் தமிழில் பாட நூல்கள், அறிவியல் நூல்கள் இல்லாத காலத்தில் ஆங்கிலம் படித்துப் பார்ப்பனர்கள் கல்வியை தங்களின் ஏகபோகமாக வைத்திருந்த காலத்தில் தமிழர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று சமூக நீதிக் கண்ணோட்டத்தில் பெரியார் பேசினார். பிறகு அவரே மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, தமிழ் வழிக் கல்வியை ஆதரித்தார். ஆனால் வேத மதம், சமஸ்கிருதத்தை மட்டுமே தமிழர்களின் பண்பாடுகளில் தெய்வீக மொழியாக  இன்று வரைத் திணித்துக் கொண்டு சமஸ்கிருதத்தில் ஓதும் வேத மந்திரங்களே இறைவனுக்குப் புரியும் என்று தமிழரின் மொழிப் பண்பாட்டை சிதைத்து வருவதும் இந்தக் கூட்டம்தான், பெரியாரை தமிழுக்கு எதிரி என்று தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது.

தமிழ் மன்னர்களை பார்ப்பனீயத்துக்கு அடிபணிய வைத்தவர்கள் பார்ப்பனர்கள். அதனால் மன்னர்களே தங்கள் தமிழ்ப் பெயர்களையே சமஸ்கிருதமாக்கிக் கொண்டார்கள்.

இராஜஇராஜன், இராஜேந்திரன், இராஜாதி இராஜன் குலோத்துங்கன், விக்ரமன், இராஜகேசரி, பரகேசரி - இவை எல்லாம் தமிழ் மன்னர்கள் சூட்டிக் கொண்ட வடமொழிப் பெயர்கள். பார்ப்பனர்கள் அப்படி எல்லாம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி, தமிழை வீழ்த்தினார்கள். இரண்டாம் தர மொழி யாக்கினார்கள்.

அது மட்டுமா? தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்கள், கடவுளின் பெயர்கள்  இப்படி எல்லாப் பெயர் களையும் தமிழிலிருந்து நீக்கி, வடமொழியாக்கி யவர்கள் பார்ப்பனர்கள். மயிலாடுதுறையை மாயூர மாக்கினார்கள்; தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுயமரியாதைக்காரர் கிட்டப்பா, விடாமல் பல ஆண்டுகள் போராடி, மாயூரம் என்ற பெயரை மயிலாடுதுறை என்று மீண்டும் தமிழில் மாற்றம் செய்தார். திருமுதுகுன்றம் விருத்தாசலமாயிற்று. மரைக்காடு மறைக்காடாகி, அது திருமறைக் காடாகிப், பின் வேதாரண்யம் என்ற வடமொழிப் பெயரானது. தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோயில்களில் தமிழன் வடித்த சிற்பங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுவதை ‘தீட்டாக்கிய’ பார்ப்பனக் கூட்டம்தான், பெரியாரை தமிழுக்கு எதிரி என்கிறது. தியாகேசர், வைத்தீஸ்வரன், வெங்கடேசுவரன், யோகாம்பாள், அகிலாண்டேசுவரி, புவனேசுவரி, பிரம்மபுரீஸ்வரர், பிரம்ம வித்யா நாயகி, கோகிலேஸ்வரர், சொர்ணபுரீஸ்வரர், சகல புவனேஸ் வரர், அருணாசலேஸ்வரர் என்று கடவுளுக்கும் வடமொழிப் பெயரையே சூட்டினார்கள். கடவுளே இந்தப் பெயர்களை சூட்டிக் கொண்டது என்று கூறுவார்களா? கடவுளை எப்படி இவர்கள் உருவாக்கினார்களோ, அதேபோல் பெயரையும் உருவாக்கினார்கள். கடவுளுக்கும் இங்கே அடையாளங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், தமிழ் அடையாளமோ, தமிழர் அடையாளமோ அல்ல; வேத பார்ப்பனிய அடையாளங்களையே போர்த்திக் கொண்டு நிற்கின்றன.

தமிழர்களின் வாழ்வியல் நிகழ்வுகளிலாவது தமிழை அனுமதித்தார்களா? விவாஹம், கர்ண பூஷணம், கிரகப்பிரவேசம், புஷ்பவதியாதல், கன்னிகாதானம், சஷ்டியப்தப்பூர்த்தி, ஸ்நார்த்தம், தீர்த்த யாத்திரை என்று சமஸ்கிருத மயமாக்கிய கூட்டம், பேச்சு வழக்கிலும் சௌகரியம், nக்ஷமம், ஜலம், ஸ்நானம், யஜமான், புருஷன், உபயோகம், பிரயோஜனம், யோஜனை, விசேஷம், விசுவாசம், நமஸ்காரம், லக்ஷ்ணம், அவலக்ஷ்ணம் என்று வடமொழியைப் புகுத்தியது.

தமிழை - வேதமரபு, தனது சமஸ்கிருதத் திமிரால் அவமதித்ததற்கும், தமிழை சிறுமைப்படுத்தியதற்கும் வரலாற்றில் எத்தனையோ ஆதாரங்களை அடுக்கிக் காட்ட முடியும். அந்த வேத மரபின் தொடர்ச்சிதான் காஞ்சி சங்கராச்சாரி மடம், ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்க மாட்டேன்’ என்று திமிராட்டம் போடுவதும். ‘ஆண்டாளுக்கு’ அவமதிப்பு என்று கூப்பாடு போடும் பார்ப்பனர்கள், ஆண்டாள் பாடிய தமிழை மதித்தார்களா? திருவில்லிபுத்தூரிலாவது தமிழ் வழிபாடு நடக்கிறதா?

மற்றொரு வரலாற்று செய்தியை குறிப்பிடலாம். தஞ்சை மாவட்டம் திருவையாறு எனும் ஊரில், அரசு சார்பில் ஒரு சமஸ்கிருதக் கல்லூரி நடந்தது. பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கப் பட்டார்கள். சுயமரியாதை உணர்வுள்ள சர். ஏ.டி.பன்னீர்செல்வம், மாவட்ட வாரியத் தலைவராக இருந்தபோது, சமஸ்கிருதக் கல்லூரியில் தமிழையும் கற்றுத் தர உத்தரவிட்டார். உடனே பார்ப்பனர்கள், சமஸ்கிருதத்துக்கான தனிக் கல்லூரியில் தமிழையும் கற்றுத் தருவதால் புனிதம் போய்விடும்; ஆச்சாரம் கெட்டுப் போகும் என்று அலறினார்கள். தமிழ்ப் படிக்க வந்த பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு விடுதியில் தனி இடத்தில் சாப்பாடு போட்டார்கள். மாவட்ட நிர்வாகம் (வாரியம்) அதை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. அப்போது ‘டிஸ்டரிக் போர்டு’ என்ற மாவட்ட வாரியத்தின் தலைவராக இருந்த நாடிமுத்து (பிள்ளை), துணைத் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி (வாண்டையார்), 1941ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி விடுதியில் பார்ப்பன மாணவரும் பார்ப்பனரல்லாதார் மாணவரும் ஒரே இடத்தில்தான் ஒன்றாகத்தான் சாப்பிட வேண்டும் என்று நிர்வாக சபையில் தீர்மானமே நிறைவேற்றினார்கள். அன்றைக்கு பார்ப்பனரல்லாத சமுதாயத்தின் தலைவர்கள், பார்ப்பனக் கொடுமைகளுக்கு எதிராக எப்படி உறுதியுடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்பனர்களுக்கு அவர்களின் ‘வேத மரபு’களுக்கு துணை  போவோர் புரிந்து கொள்ள வேண்டும். தீர்மானமே நிறைவேற்றியதற்குப் பிறகு இனி விடுதியில் சாப்பிடக் கூடாது என்று பார்ப்பனர்கள் தடைபோட்டு, ‘அக்கிரகார’ வீடுகளில் அப்போது சமஸ்கிருதம் படித்த 45 பார்ப்பனர் மாணவர்களுக்கும் சாப்பாடு போட்டார்கள்.

நாட்டில் பெரும் பேரழிவு நடக்கப் போகிறது என்றும்,  வேதம் படிக்கும் ‘பிராமண’ மாணவர்களை ‘தமிழ்’ படிக்கும் ‘சூத்திரர்’களுடன் ஒன்றாகப் பந்தியில் உட்கார வைத்துவிட்டார்கள் என்றும், நாடு முழுதும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டார்கள். 1941ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சமஸ்கிருதக் கல்லூரியில் சமபந்தியைக் கண்டித்து மயிலாப்பூரில் பொதுக் கூட்டம் நடத்தியது ‘பிராமணர்கள்’ கூட்டம். மிகப் பெரும் செல்வாக்குள்ள புள்ளிகளான ‘ரைட் ஆனரபில்’ சீனிவாச சாஸ்திரி, சர். சி.பி. சிவகாமி அய்யர் (இவரது பெயரில் இப்பொழுதும் மயிலாப் பூரில் ஒரு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது), டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் போன்ற பார்ப்பனர்கள், இந்தக் கூட்டத்தில் தங்கள் வைதிக பார்ப்பன வெறியைக் கொட்டித் தீர்த்தார்கள். வெட்கக் கேடு என்னவென்றால், ‘சூத்திர’த் தமிழர்களான திவான் பகதூர் வி. மாசிலாமணிப் பிள்ளை, எம். பாலசுப்பிரமணி முதலியார், எம். இராஜமன்னார் செட்டியார், வையாபுரிப் பிள்ளை போன்ற ‘சூத்திர’ சைவர்களும், “வேதம் படிக்கும் ‘பிராமணர்’களுடன் தமிழ் படிக்கும் ‘சூத்திரனை’ எப்படி ஒன்றாகச் சாப்பிட வைக்கலாம்? இது அடுக்காது” என்று பேசினார்கள்.

ஆக, அந்தக் காலத்திலேயே எச். ராஜாக்களும் இருந்திருக்கிறார்கள்.  தமிழிசை, பொன் இராதா கிருஷ்ணனும் இருந்திருக்கிறார்கள். ‘சங்கராச்சாரி ஸ்வாமிகள் தியானத்திலிருக்கும்போது தமிழ் வாழ்த்துப் பாடலைக் கவனிக்காமல் விட்டுவிட்டார். இதைப்போய் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்’ என்று மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் இன்று கேட்பது, அந்தக் காலத்தின் ‘சைவ சூத்திரர்களின்’ அதே குரல் தானே?

இந்த சமபந்தி ஜாதி வெறியை எதிர்த்து அன்று களத்தில் போராடியது பெரியாரும், அவர் நடத்திய விடுதலை பத்திரிகையும்தான் என்ற வரலாற்றை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ‘விடுதலை’ நாளேடு, இந்த ஜாதித் திமிரை எதிர்த்துப் போர்ச் சங்கு ஊதியது, சென்னை பிராட்வேயில் இருந்த கோகலே அரங்கில். ‘தஞ்சை ஜில்லா போர்டு’ தீர்மானத்தை ஆதரித்து, பெரியார் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் சுப்பராயன் முதலமைச்சசராக இருந்து நடத்திய நீதிக்கட்சி ஆதரவு அமைச்சரவையில் பத்திரப் பதிவு அமைச்சராக இருந்து, முதன்முதலாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற பார்ப்பனல்லாதாருக்கு இடப் பகிர்வு முறையை அமுல்படுத்திய எஸ்.முத்தையா முதலியார்தான். பெரியார் கூட்டிய கூட்டத்தின் தலைவர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி போன்ற நகரங்களிலும், இதேபோல் பெரியார் கூட்டங்களை நடத்தினார். அப்போது கூட்டங்களில் பேசிய பெரியாரின் கருத்து எப்படி இருந்தது தெரியுமா? இந்து மதப் பிடியிலிருந்தும் இந்தியாவின் பிடியிலிருந்தும் நமது மக்களை விடுதலை செய்ய இந்தப் பிரச்சினைகள் எனக்கு மிகவும் பயன்படும் என்று தான் பேசினார்.

வேடிக்கை என்னவென்றால், எந்த ‘ஜில்லா போர்டு’, சமபந்தி தான் நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டதோ, அதே ஜில்லா போர்டு, காஞ்சி சந்திரசேகரேந்திர சரசுவதி தஞ்சைக்கு வந்தபோது அவரது ‘பாத பூஜை’க்கு ஏற்பாடு செய்து நிதி ஒதுக்கியது. வேதம் படிக்கும் ‘பிராமணர்கள்’ தமிழ் படிக்கும் ‘சூத்திரர்’களோடு சேர்ந்து உணவருந்தும் உத்தரவுப் பற்றி கேள்விபட்ட சங்கராச்சாரி கொதித்தெழுந்தார். வேதம் படித்த பார்ப்பனர்களுக்கு தனியாக சாப்பாடு போட பார்ப்பனர்களிடம் நிதி திரட்டினார் சங்கராச்சாரி. இப்படிப் பல பார்ப்பனியத் தடைகளைத் தகர்த்துத்தான் நமது சமுதாயம் மேலே வந்தது.

பார்ப்பனர்களை எதிர்த்தால், வேத மதத்தின் கொடுமைகளைச் சுட்டிக் காட்டினால், உடனே ‘இந்திய விரோதிகள்’, ‘தேச விரோதிகள்’, ‘ஆன்டி இந்தியன்’, இவர்களை நாட்டில் வாழவே அனுமதிக்கக் கூடாது என்று அதிகாரத் திமிரில் பார்ப்பனர்கள் பேசி வருகிறார்கள். ஊடகங்களிலும் ஆணவத் திமிரை வெளிப்படுத்தும் உடல் மொழிகளோடு பேசுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், பார்ப்பனர்களின் பரம்பரைதான் பிரிட்டிஷ் ஆட்சியில் ‘பிராமணர்’களுக்கு மட்டும் சமஸ்கிருத கல்லூரிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மனுபோட்டவர்கள்.  பிரிட்டிஷ் ஆட்சியும் முதலில் காசியில் ஒரு சமஸ்கிருதக் கல்லூரியையும், அடுத்து கல்கத்தாவில் ஒரு சமஸ்கிருதக் கல்லூரியையும் தொடங்கும் முயற்சிகளில் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு முதலில் யாரிடமிருந்து வந்தது தெரியுமா? இந்து மதத்துக்குள்ளே ‘உடன்கட்டை’ போன்ற கொடுமைகளை எதிர்த்துப் போராடிய பார்ப்பன சீர்திருத்தவாதி இராஜாராம் மோகன்ராயிடமிருந்து தான் வந்தது.

“சமஸ்கிருதக் கல்வியானது இந்தியாவை என்றென்றும் இருளில் ஆழ்த்திவிடும். இந்தியக் குடிமக்களின் முன்னேற்றத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அக்கறை இருக்குமானால் கணிதம், இயற்கைத் தத்துவம், வேதியல், உடற்கூறு ஆகிய பயனுள்ள அறிவியலைக் கற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும்”

என்று கவர்னர் ஜெனரலுக்கு அவர் கடிதம் எழுதினார்.

(தொடரும்)

Pin It