திருப்பூர் கால்நடைக் காட்சியானது 2,3 வருஷங்களுக்கு முன்னால் சென்ற சட்டசபைத் தேர்தலின்போது நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு இப்போது இவ்வருஷ சட்டசபை எலெக்ஷன் போதுதான் கூட்டப்பட்டிருக்கிறது. அப்படிக் கூட்டப்பட்ட போதிலும் அதில் நடத்தப்பட்ட சடங்குகள் ஒவ்வொன்றும் சட்டசபை மெம்பர்களின் ஓட்டுப் பிரசாரத்தில் குறி கொண்டே நடத்தப்பட்ட மாதிரியாகவே யிருந்தது. அந்தக் குறியின் வேகத்தில் வழக்கமான ஒழுங்கு முறைகள்கூட சிதறப்பட்டு போனதோடு மக்களுக்கு இயற்கையாய் இருக்கவேண்டிய அபிமானமும் பறந்தோடி விட்டது.

விவசாயம் என்பது மாற்றப்பட்ட இலாக்காக்களில் ஒன்றான அபிவிருத்தி இலாகாவைச் சேர்ந்தது. அதை நிர்வகித்து வருகிறவர் பிராமணரல்லாதார் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீமான் சர்.டி.என். சிவஞானம்பிள்ளை அவர்கள். இப்படி இருக்க கவர்னர் அவர்களைக் கொண்டு கால்நடைக் காட்சியைத் திறக்கச்செய்வதும் ஸ்ரீமான் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர் களைக் கொண்டு பரிசு வழங்கச்செய்வதுமான காரியங்கள் நடத்தப்பட்டிருக்கிறது.

முன் ஒரு சமயம் இதே திருப்பூரில் தாலூகா போர்டு கட்டடத்திற்கு அஸ்திவாரக்கல் நாட்ட ஸ்ரீமான் சி.பி.ராமசாமி அய்யர் அவர்களை திருப்பூர்க்காரர்கள் அழைத்தபோது ஸ்ரீமான் ஐயர் அவர்கள், தாலூகா போர்டு மாற்றப்பட்ட இலாகாவாகிய மந்திரி பனகால் ராஜா அவர்கள் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டதென்றும், தான் அதில் பிரவேசிக்க முடியாதென்றும் சொன்னவர், இதுசமயம் அதே மாதிரி மாற்றப்பட்ட இலாக்காவாகிய ஸ்ரீமான் டி.என்.சிவ ஞானம் பிள்ளை அவர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் இலாக்காவுக்கு எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது விளங்கவில்லை. ஒரு சமயம், மாற்றப்பட்ட இலாகாவில் மந்திரிகளுக்கு அப்போதிருந்த செல்வாக்கு இப்போதில்லாமல் இருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், விவசாயக்கட்சி நடத்திய பிரமுகர் ஸ்ரீமான் வி.சி.வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்கள் இந்த இலாக்கா மந்திரியை அலக்ஷியம் செய்த காரணம் என்னவோ?

ஒருசமயம், தானும் ஸ்ரீமான் டி.எ.இராமலிங்கம் செட்டியார் அவர்களும், ஆர். கே. ஷண்முகஞ்செட்டியார் அவர்களும் பிராமணரல்லாதார் கட்சியை விட்டு சட்டசபை எலெக்ஷனை உத்தேசித்து இப்போது புதிதாய் பிராமணர் கட்சியான சுயராஜ்யக்கட்சியில் சேர்ந்து விட்டதால் அக்கட்சிக்கு ஒரு ரகசிய சூத்திரராயிருக்கும் பிராமண மந்திரியான சி.பி. ராமசாமி அய்யர் அவர்களுக்கு கௌரவம் கொடுத்து அவர்களால் தங்களுக்கு எலெக்ஷனில் வெற்றி உண்டாக விளம்பரம் செய்யச்சொன்னார்கள் போலும். அதை உத்தேசித்தே ஸ்ரீமான் சி.பி.அய்யர் அவர்களும் தனது பிரசங்கத்தில் ஓட்டர்கள் கவனித்து இவர்களுக்கே ஓட்டு செய்யத்தக்க வண்ணம் “மேல் பவானி திட்டமானது இப்போது சென்னை சட்டசபையிலுள்ள உங்கள் பிரதிநிதிகளான ஸ்ரீமான்கள் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர், டி.எ.இராமலிங்கம் செட்டியார், சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்கார் ஆகிய இவர்களால் வற்புறுத்தப்பட்டதின் பேரில் மேட்டூர் திட்டம் கவனிக்கப்பட்டதாகவும், மறுபடியும்  மூன்று பிரதிநிதிகளும் நிர்பந்தித்தால் காரியம் நடக்குமென்றும்” சொல்லுகிறார். இதன் அர்த்தம் என்ன? அடுத்த தேர்தலுக்கு மறுபடியும் இந்த மூன்று கனவான்களுக்கே ஓட்டு செய்யுங்கள், உங்கள் பூமிக்கு வாய்க்கால் வரும் என்று சொல்லுவதுதானே அல்லாமல் வேறென்ன?

சீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் என்கிற பிராமணரவர்கள் இந்த மூன்று பேருக்கே ஓட்டு கொடுங்கள், கள்ளு உலகத்தை விட்டே ஓடிவிடும் என்கிறார். சீமான் எஸ். சீனிவாசய்யங்கார் என்கிற பிராமணரவர்கள் இந்த மூன்று பேருக்கே ஓட்டு செய்யுங்கள் சுயராஜ்யம் வந்துவிடும் என்கிறார். சீமான் சத்தியமூர்த்தி என்கிற பிராமணரவர்கள் இந்த மூன்று பேருக்கே ஓட்டு செய்யுங்கள் பனகால் ராஜா கம்பெனியை பாப்பராக்கிவிடலாம் என்கிறார்.

சீமான் ஏ. ரங்கசாமிஅய்யங்கார் என்கிற பிராமணரவர்கள் இந்த மூன்று பேருக்கே ஓட்டு செய்யுங்கள் முட்டுக்கட்டை போடலாம் என்கிறார். சர்.சி.பி. ராமசாமிஅய்யர் என்கிற பிராமணரவர்களோ இந்த மூன்று பேருக்கே ஓட்டு செய்யுங்கள் உங்கள் பூமிக்கு தண்ணீர் பாய்ச்சலாம் என்கிறார். இத்தனை பிராமணர்கள் இம்மூவரும் சட்டசபைக்கு வரவேண்டுமென்று பாடுபடுவதின் நோக்கமென்ன? எப்படியாவது பிராமணரல்லாதார் கட்டுப்பாட்டை உடைத்து, தங்கள் பின்னால் தங்கள் சொற்படி ஆடும் பிராமணரல்லாதாரைக் கூடுமானவரை சட்டசபைக்கும் இழுத்து எப்படியாவது பிராமணரல்லாதார் இயக்கத்தை அடியோடு துலைத்து பிராமணாதிக்கத்தை நிலை நிறுத்து வதற்கல்லாமல் வேறென்ன? அப்படிக்கில்லையென்றால் சீமான் சி.ராஜகோ பாலாச்சாரியார் ஓட்டுப் பிரசாரத்துக்கு வரக்காரணமென்ன? சர்.சி.பி.அய்யர் இந்த மூன்று பேரால் திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டது, இந்த மூன்று பேரும் வலியுறுத்தினால் தண்ணீர் வரும் என்று சொல்லக் காரணமென்ன? இந்த மூன்றில் இரண்டு பேருக்கும் தங்கள் சமூகம் எக்கேடு கெட்டாலும் தங்களுக்கு அக்கறையில்லை. எப்படியாவது தங்களுக்கு சட்டசபை மெம்பரானால் போதும் என்கிற நிலையில் “என் மகன் செத்தாலும் மருமகள் தாலியறுத்தால் போதும்” என்கிற மாதிரி பிராமணர்கள் பின்னால் திரிகின்றார்கள்.

தங்களுக்கு, தங்கள் இனத்தாரிடம் ஏதாவது ஓட்டு வேண்டுமென்றிருந்தால் அப்போது மாத்திரம் நானும் வேளாள குலம் நீங்களும் வேளாள குலம் வேளாளர் ஓட்டு வேளாளர் அல்லாதாருக்கு போகலாமா? ஜாதி அபிமானம் வேண்டாமா? என்று உபதேசம் செய்து ஓட்டு கேட்பதும், தாங்கள் வேறு ஒருவருக்கு ஏதாவது செய்யத்தகுந்த சந்தர்ப்பம் இருக்கும் போது அந்த ஜாதியை மறந்துவிட்டு வேறு ஒருவருக்கு, அதுவும் தங்களை சூத்திரன், தாசி மகன், அடிமை என்று சொல்லும் பிராமண வகுப்புக்கு, அதுவும் சர்க்கார் ஊழியருக்கு அதை உபயோகிப்பதுமாயிருந்தால் குலாபிமானத்தின் பேரில் ஒருவரைப் போய் ஓட்டுக் கேட்க இவர்களுக்கு யோக்கியதை ஏது? சீமான் டி.என்.சிவஞானம் பிள்ளை அவர்கள் நல்ல கொழுத்த வேளாளர்; சீமான்கள் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டரும், டி.எ.இராமலிங்கஞ் செட்டியாரும் வேளாளர்கள். அவருக்கு இவர்கள் என்ன பெருமை தந்தார்கள்?

அல்லாமலும் எலெக்ஷன் சமயம் பார்த்து கண்காக்ஷி எதற்கு கூட்ட வேண்டும். இதனால் எவ்வளவு செலவு. வந்த அதிகாரிகள் பொதுஜனங்கள் பணத்தில் வந்திருக்கிறார்கள். அங்கு வந்த பதினாயிரக்கணக்கான பொது ஜனங்களும் எவ்வளவு பணத்தை சிலவு செய்து கொண்டு வந்திருக்க வேண்டும்? எவ்வளவு பேர் இதன் பயனாக சூதாட்டத்தில் நஷ்டமடைந்திருக்க வேண்டும்? இதனால் யாருக்கு என்ன லாபம்? சர்.சி.பி.அய்யர் வந்து சீமான்கள் சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார், வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர், டி.எ.இராமலிங்கஞ் செட்டியார் ஆகிய இவர்களுக்கு ஓட்டு கொடுங்கள் என்று ஜாடையாய் (அதுவும் பிராமண நன்மையை உத்தேசித்து) சிபார்சு செய்வதற்கு பொது ஜனங்கள் பணத்தில் இவ்வளவு ஆடம்பரம் செய்யப்பட்டது என்றால் இதன் உண்மையறிந்த யாருக்குத்தான் மனம் வேதனை உண்டாகாது?

நம்நாட்டு பாமர ஜனங்கள் இதை அறியாமல் எவ்வளவு பேர் எவ்வளவு பணம் சிலவு செய்துகொண்டு வந்து வேடிக்கைப் பார்த்துப் போனார்கள்? தெருக்கூத்துக்கும் கால்நடைக் காக்ஷிக்கும் என்ன வித்தியாசம்? கூத்தாடியும் ஜனங்களுக்கு ஒரு நல்ல படிப்பு ஏற்படக் கூத்தாடுவதாய் சொல்லுகிறான், கண்காக்ஷியும் ஜனங்களுக்கு விவசாய ஞானம் ஏற்படுத்துவதற்கு என்று சொல்லுகிறார்கள். இரண்டின் உள்கருத்தும் சுயநலம் அல்லாமல் வேறு என்ன?

(குடி அரசு - கட்டுரை - 06.06.1926)

(சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது)
Pin It