காடுகள், மலைகள், ஆறுகள், கனிமங்கள் என சகல இயற்கை வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம் அரசாங்கங்கள் உபசரித்து தாரை வார்த்து வருகின்றன. புதிய காலணிய கொள்ளை நம் தலைவாசல் வழி பூரண சம்மதத்துடனும் நடந்து வருகிறது. எல்லா வளங்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறன. ஆனால் நாம் இறக்குமதியாகப் பெறுவது விஷக்கழிவுகள், மரபணு திருத்தம் செய்யப்பட்ட விதைகள், பூச்சிக்கொல்லிகள், வழக்கொழிந்த தொழில் நுட்பங்கள். இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் நம் அரசாங்கம் மான்சாண்ட்டோ, டூபாண்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை முழு வீச்சில் செயல்பட அனுமதித்தது. பி.டி.பருத்தி என்று ஒரு ரகம் விதை மட்டும் ஆந்திரா மகாராஷ்டிர நிலப்பரப்பில் இதுவரையிலும் 5,000 விவசாயிகளை விழுங்கி கொழுத்து நிற்கிறது. இந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு குளிர் சாதன அறைகளில் சகல விருந்தோம்பல்களோடு உபசரிப்புகளை விவசாய அமைச்சகம் செய்து வருகிறது. இந்த விதைகள் நம் நாட்டு தட்ப வெப்பம், மண்ணின் தன்மை என பல அடிப்படைகளில் உகந்ததல்ல என்பதை பல ஆய்வுகளும், விவசாயிகளின் சாவுகளும் அறிவித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் மத்திய, மாநில அரசுகளை பொருத்தவரை செவிடன் காதில் ஊதிய சங்காய்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் தினசரி செய்திகளாக சமூக அக்கறை கொண்ட செய்தித் தாள்கள் பதிவு செய்யத் தவறவில்லை. விவசாயம் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்து உலகின் பல நாடுகள் உணவுப் பற்றாக்குறையை போக்கி விட்டதாக புள்ளி விபரங்கள் குவிந்தவண்ணம் உள்ளன. நம் நாட்டிலும் அது போன்ற புள்ளி விபரங்களை அரசு தயாரித்த வண்ணம் உள்ளது. அது ஒருபுறம் இருக்க, மறுபுறம் விவசாயிகள் பட்டியால் சாவதும், கடன்களில் தத்தளித்து பூச்சி மருந்துகளை அருந்துவதும் நடந்து வருகிறது. நாம் ஒவ்வொரு முறை ஒரு கவளம் சோற்றை விழுங்கும் பொழுதும் அதை பயிரிட்ட விவசாயி தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த தற்கொலைச் சாவுகள் ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப் என தனது பட்டியலை நீட்டிக் கொண்டே தமிழகத்தையும் அதில் இணைத்துக் கொண்டது. இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில் இருக்கிறது என்று உலக அளவில் தொடர்ந்து நம் அரசாங்கங்கள் சித்தரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நம் கிராமங்களின் ஓட்டு ஜாபிதாக்களை தூசி தட்டி பிரயோகித்ததைத் தவிர அரசாங்கங்கள் வேறு எதிலும் முனைப்புக் காட்டியதில்லை. வழக்கொழிந்த மற்றும் பரிட்சார்த்தமான தனது தொழில் நுட்பங்களை பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மண்ணில் பரிசோதித்து வருகின்றன. அவர்கள் இங்கு சந்தைப்படுத்திய விதைகளுக்கு நம் மீடியாக்களில் சில ஆண்டுகள் வண்ணவண்ண விளம்பரங்கள் நம்மை கிளுகிளுப்பூட்ட பிரசுரிக்கப்பட்டன. இன்றளவிலும் நம் சமையற்கட்டில் பல தயாரிப்புகள் மரபணு திருத்தம் செய்யப்பட்ட விதைகளால் ஆனது. அதன் விளைவுகள் எதுவும் தெரியாமல் நாம் டி.வியைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது என்னவென்று அறியாது விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்தத் தளங்களில் செயல்படுபவரும் பத்தாயிரக்கணக்கான கிலோமீட்டர் மாட்டு வண்டிகளிலும் நகரப் பேருந்துகளிலும் புழுதி ஏறிய கிராமங்களுக்கு பயணித்தவண்ணம் உள்ளார் பி.சாய்நாத். அவருடைய பயணங்களை இந்தியாவில் உண்மை நிலவர பிரதிகளாக மாற்றிக் கொண்டே இருக்கிறார். விவசாய தற்கொலைச் சாவுகளைப் பற்றி தொடர்ந்து எழுதுபவரும் அந்தக் குடும்பங்களை சந்தித்து கண்கள் கலங்கிய முகத்தோடு அடுத்த கிராமத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்கிறார். அவருடைய பிரதிக்குள் நாம் ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம்.

ராமேஷ்வர் சுரோஷ் அவரின் பெயரை பல பதிவேடுகளில் பிப்ரவரி 9ஆம் தேதி இணைத்துக் கொண்டார். வீதர்பா ஜன் ஆன்தோலன் சமிதியின் மரணப் பதிவேட்டில் அவர் எண் 301. ஜுன் 2ஆம் தேதிக்குப் பிறகு அந்தப் பகுதியில் தற்கொலை செய்து கொண்டவர்களில் இவர் 301வது நபர். முன்னணி மராத்தி நாளிதழ் ‘சக்கல்’ ன் கணக்குப்படி அவருடைய எண் 278. பலப் பட்டியல்களில் அவர் இடம் பிடித்தாலும், இடம் பெறாதப் பட்டியல் ஒன்றுள்ளது. அது அவருடைய கிராமத்திற்கு அருகில் உள்ள யவத்மால் மாவட்ட அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனைப் பதிவேடு.

நாகேஷ்வாதியைப் பொருத்தவரை சுரோஷின் மரணம் கொஞ்சம் அசாதாரணமானது. அவர் தூக்குப் போட்டுக் கொண்டார். பொதுவாக விவசாயிகள் வயல்களில் உபயோகித்து மீதமுள்ள பூச்சிக் கொல்லிகளை குடிப்பது வழக்கம். பூச்சிக் கொல்லிகள் குடித்து தற்கொலை செய்வது என்பது விவசாயம் தொடர்புடை தற்கொலையாக மிகவும் கச்சிதமாக புரிந்து கொள்ளப்படுகிறது. விதர்பாவில் இந்தப் பட்டியல் நாளுக்கு நாள் நீளுகிறது. அது யவத்மாலுக்கும் பொருந்தும். செப்டம்பர் 2005 முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் பிரேத பரிசோதனை மையங்கள் அரசு உத்தரவுப்படி 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. இதன்படி சிறு மையங்கள் கூட மாவட்ட மருத்துவமனைகளின் பணிச்சுமையை பகிர்ந்து கொள்கிறது.

பருத்தியின் தொட்டிலாகக் கருதப்படும் பந்தர்கூடாவிலும் பிரேத பரிசோதனை மையம் உள்ளது. இது மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் மையம். கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு அக்டோபர் 2005 முதல் பிப்ரவரி 2006க்குள் நிகழ்ந்த தற்கொலை சாவுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக வளர்ந்துள்ளது. அந்தப் பகுதிகளில் நிகழ்ந்த சாவுகளில் 75% சாவுகள் இப்படி நிகழ்ந்தவை. 48 சாவுகளில் 36 விவசாயிகளின் தற்கொலையே. யவத்மால் மாவட்டத்தில் இந்த மையத்திற்கு நிகராய் 16 மையங்கள் உள்ளன. விதர்பாவில் கணக்கற்ற மையங்கள் சுறுசுறுப்பாய் செயல்படுகின்றன.

சில ஆண்டுகளாக நம் மனங்கள் கணத்துப் போகும்படி விவசாயத் தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு இந்தத் தற்கொலைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததற்கு காரணம் ஒன்றுள்ளது. அந்த மாதத்தில் தான் பருத்தியின் விலை குவிண்டாலுக்கு ரூ.500க்கும் கீழே குறைந்தது. இதற்கு அர்த்தம் மகாராஷ்டிர விவசாயிகள் மொத்தத்தில் 850 கோடி ரூபாய் இழந்தனர். மகாராஷ்டிர அரசாங்கம் வழக்கம் போல் செய்யும் அறிவிப்பு வராததே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம். அரசு இந்த சூழ்நிலையை பரிசீலித்து உதவப் போவதில்லை என்பது நவம்பரில் ஊர்ஜிதமாகியது. பந்தர்கூடாவிலும் தற்கொலைகளின் எண்ணிக்கை இரு மடங்காகியது. 2003 - 2004ல் 220லிருந்து இந்த ஆண்டு 223 ஆக எண்ணிக்கை கூடியது. இந்த மரண நகரத்தில் உள்ள மருத்துவர், ‘ஏறக்குறைய இதில் எல்லாம் ஏழை குறு விவசாயிகள்’ என்று சாட்சியம் அளிக்கிறார். ‘பூச்சிக் கொல்லி அருந்தியவர்கள், தூக்குப் போட்டுக் கொண்டவர்கள், ஆற்றில் மூழ்கி இறந்தவர்கள் என பல விதங்களில் விவசாயிகள் தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள்’ என்றார். இதுவரை நாம் கடந்தது ஒரு மாவட்டத்தின் முழுமையான விபரம் கூட அல்ல. இது போன்று இன்னும் பல மாவட்டங்கள் இன்னும் விரவிக் கிடக்கிறது.

மொத்த எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்ல ஜன் ஆந்தோளன் சமிதியைச் சேர்ந்த கிஷோர் திவாரி நம்மைத் தெளிவுபடுத்துகிறார். ‘மிகவும் பட்டவர்த்தனமாக உள்ளது. அரசாங்கம் தன் ஊக்கத் தொகையை முன்பே அறிவிக்காவிட்டால் இந்த நிகழ்வுகளை தடுக்க இயலாது’. அவர்களின் பதிவேட்டில் சுரோஷ் ரத்தசாட்சியாய் எண் 301 ஆய். அவரைத் தொடர்ந்து 6 பேர் தற்சமயம் இணைந்துள்ளனர். பதிவேடு 307ல் விவசாயிகளை விழுங்க தன் கரங்களை நீட்டிக் காத்து கிடக்கிறது. இந்த எண்ணிக்கைப் பதிவேடு பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் சாவுகளை மட்டுமே கணக்குகளில் எடுத்துக் கொள்கிறது. விரக்தி கொள்ளும் எண்ணிக்கை. ஏப்ரல் 2005ல் அரசுப் பதிவேடுகளில் எண்ணிக்கை 315.

புதுக்கணக்குத் துவக்க நாளில் அரசு தன் மரண பதிவேட்டை மஞ்சள் தடவித் துவக்குகிறது. ஆனால் ஜன் ஆந்தோளன் சமிதி தனது எண்ணிக்கையை ஜுன் 2ல் தான் துவக்குகிறது. இது விவசாயம் முழு வீச்சில் துவங்கும் பருவம். சக்கல் என்ற மராட்டி நாளிதழ் தன் பத்திரிகையில் பிரசுரமாகும் எண்ணிக்கைகளை மட்டுமே கணக்கு வைக்கிறது. ஆந்தோளன் இந்தக் கணக்கெடுப்பை கடந்த 3 ஆண்டுகளாக பதிந்து பாதுகாத்து வருகிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் அரசாங்கம் தனது தற்கொலை சாவுகள் குறித்த எண்ணிக்கையை மாற்றி மாற்றி குழப்பத்துடன் அறிவிக்கிறது. 140லிருந்து 1041 வரை அந்த எண்ணிக்கை ஏறு முகத்தில் உள்ளது.

2001ல் அரசாங்கக் கணக்குப்படி யவத்மாலில் மட்டும் 309 தற்கொலைகள் இந்த எண்ணிக்கை மிக சுளுவாக 400ஐ தொடலாம். நிர்மூலமான குடும்பங்களின் 10% கூட நிவாரணத்தைப் பெறவில்லை.

அக்டோபர் மாதத்தில் மட்டும் 20 தற்கொலைகள். இந்த எண்ணிக்கை நம்மை பதைபதைக்க வைக்கிறது. நவம்பரில் 52, டிசம்பரில் 72, ஜனவரியில் 68, பிப்ரவரியின் எண்ணிக்கை முழுதாய் இன்னும் கிடைக்கவில்லை. இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் குறையும் என மனம் கொஞ்சம் ஆறுதல் அடைந்தாலும், பருத்தி பொருளியல் தகர்ந்து வீழ்ச்சி நோக்கி செல்வது ஆரோக்கியமானதாக இல்லை. புதிய தரவுகள் வரத்துவங்கி உள்ளன. இந்திரா காந்தி வளர்ச்சி ஆய்வு மையத்தின் ஆய்வுகள் சமீபத்தில் வெளிவந்தது. யவத்மால், வாஸிம், வார்தா என மூன்று மாவட்டங்களைக் களமாகக் கொண்டது இந்த ஆய்வு. விவசாயிகளின் வேதனை, மன உளைச்சல் ஆகியவற்றை ஆய்வுப் பொருளாகக் கொண்டு மாணவர்கள் களத்தில் இறங்கினர். மகாராஷ்டிர மாநிலத்தின் தற்கொலைப் போக்குகள் குறித்தும் பரவலான ஆய்வில் ஈடுபட்டது அந்த குழு. அந்த ஆய்வில் மிகவும் அதிர்ச்சிக் குள்ளாக்கும் தகவல் அந்த மாநிலத்தின் தற்கொலைச் சாவு விகிதம் பற்றியது. இந்த விகிதம் ஏறுமுகத்தில் உள்ளது. அதாவது ஒரு லட்சம் ஜனத்தொகைக்கு எத்தனை தற்கொலைகள் நிகழ்கின்றன என்பது விகிதத்தின் அடிப்படை.

மகாராஷ்டிரத்தில் ஆண் விவசாயிகளின் தற்கொலை விகிதம் 1995ல் 17, 2004ல் 53 இது இந்தப் பகுதிக்கான விகிதம் என்றால் மாநிலத்தில் மொத்த விகிதம் 20 - 21ல் நிலைகொள்கிறது. பெண்களின் தற்கொலை விகிதமும் கவலை கொள்ளத்தக்கதாக உள்ளது. விவசாயிகளுக்கு இது வாழ்வில் பேரிடி. மாநிலத்தின் மொத்த விகிதம் அதிகரிக்கும் அளவுக்கு அங்கு விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். 2001ல் மொத்த இந்தியாவிற்கான ஆண்கள் தற்கொலை விகிதம் 14.6 என்றால் மகாராஷ்டிராவில் அது 20.6 என மிஞ்சி நிற்கிறது.

மகாராஷ்டிரத்தில் ஆண்கள் விகிதம் 53 என்பது மொத்த நாட்டின் விகிதத்தை விட நான்கு மடங்கு அமராவதியைப் போன்று கோரத்தின் பிடியில் சிக்கியுள்ள மாவட்டத்தில் அது 140 ஆக இருக்கிறது. இது நாட்டின் விகிதத்தை விட 10 மடங்கு அதிகம். விதர்பா விவசாயிகள் மரணத்தின் விளிம்பில் நம்பிக்கைகள் வறண்டு கண்கள் பூத்துக் கிடக்கிறார்கள்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது 111 விவசாயத் தற்கொலைகள். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு 50 வயதிற்கும் குறைவானவர்களே. 60%திற்கு மேற்பட்டவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர்கள். ஐவரில் இருவர் மெட்ரிக்குலேசனில் 10ஆம் வகுப்பு வரைப் படித்தவர்கள். இவர்களுக்கு இந்த சூழல் புதிதுமல்ல, இவர்கள் உலகம் அறியாதவர்களுமல்ல. ஐந்தில் நான்கு பேர் பூச்சிக் கொல்லியை குடித்து சாவைத் தழுவியவர்கள். தற்சமயம் தற்கொலை தனது திசைவழியை நெல் விவசாயம் செய்யப்படும் பகுதிகள் நோக்கி மாற்றியுள்ளது. எண்ணிக்கைகள் பெரிதாக இல்லாவிடினும் இது எச்சரிக்கையாக உணர போதுமானதே.

நெல் விளைச்சல் பகுதியில் கோந்தியா, பாந்திரா, கிழக்கு சந்திரப்பூர் ஆகிய பகுதிகளின் எண்ணிக்கை ஏற்கனவே 24. அரசாங்க கையிருப்பில் நிவாரணப் பணிகளுக்கென ஒதுக்கப்பட்டு இருப்பில் உள்ள ரூ.1075 கோடியில் ஒரு நயாபைசாக்கூட இதுவரை நிவாரணமாக வழங்கப்படவில்லை. மும்பையில் இருப்பவர்களுக்கு இதுபற்றியெல்லாம் எப்படித் தெரியும். தற்கொலைகள் எண்ணிக்கை 300ஐக் கடந்து விட்டது. பம்பாய் பங்குச் சந்தை குறியீட்டு எண் (சென்செக்ஸ்) 10000ஐ கடந்து விட்டது.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் விதைகளை பல பெரிய கடைகளின் மூலம் விநியோகிக்கிறார்கள் அரசாங்கமும் அதற்கு ஒத்தாசை செய்கிறது. விதைகள் விதைக்கப்பட்டன, பலவிதமான நோய்கள் செடிகளைத் தாக்கிய வண்ணம் உள்ளன. விதைகளின் வண்ண உறைகளில் காணப்பட்ட பச்சை பசேர் செடிகளைக் காணவில்லை. மகசூலையும் காணவில்லை. கடைக்கும் தோட்டதுக்குமாக அழைகிறான் விவசாயி. தொடர்ந்து பல பூச்சிக் கொல்லிகளை பரிந்துரைக்கிறான் கடைக்காரன். எந்தப் பலனும் இல்லாது செடிகள் கருகி மடிய செடிகளின் ஊடாக மிச்சம் பூச்சிமருந்தை அருந்திவிட்டு பாலம் பாலமாய் விரிவுவிட்ட நிலத்தில் கண்கள் ரவுத்திரத்தோடு வானத்தை வெறித்துப் பார்த்தவாறு மூர்ச்சையாகக் கிடக்கிறான் விவசாயி. அவனைச் சுற்றி நெஞ்சில் அடித்தவாறு குடும்பம் நிற்கதியாய்க் கதற தங்கள் பைகளில் கொள்ளை லாபத்தோடு கடைக்காரனும் பன்னாட்டு முதலாளியம்.

நன்றி : தி ஹிந்து - விதர்பா தற்கொலைகள்
-
அ. முத்துக்கிருஷ்ணன்

Pin It