மலம் அள்ள
பிணம் அகற்ற
தோலுரிக்க
குப்பை வார
விதிக்கப்பட்ட கூட்டத்தைச்
சேர்ந்தவரை
தேனெடுக்க
மரமேற வைத்தவன் நான்
என மார்தட்டியவரை மகிழ்விக்க
அமெரிக்கக் கறுப்பு ராஜாவுடன்
ஒப்பிட்டுப் பெருமிதம் கொண்ட
காலமுண்டு
மகிழ்ந்தவரும்
மலைத்தேன் திகைத்தேன்
என வியக்க
மரமேறியவர் எடுத்த
கூட்டுத்தேன் பாறைத்தேன்
கொம்புத்தேன் எல்லாம்
தேனடைகளுடன் போய்ச் சேர்ந்தன
கார்ப்பரேட் வங்குகளுக்கு
பொந்துகளுக்கும்

தேனெடுத்தவர்
கையை நக்குவதுதான்
இயற்கையின் நியதி!
கொம்புத்தேனை நினைத்து
சப்புக் கொட்டியவர்கள்
மரமேற முடியாமல்
வெம்பிப் போயிருந்தவர்கள்
போட்டி முதலைகள் –
இவர்களுக்கிடையே
ஒரு யோக்கியரும் இருந்ததை
மறுப்பதற்கில்லை –
வீசிய கற்கள்
கவனமாக விழுந்தன
தேன்கூடுகள் மீதோ
வங்குகள் மீதோ பட்டுவிடாமல்
மண்கூடுகள் மீது

சீறிப் பாய்ந்தன
செங்குளவிகள்
காவிச் சிறகுகளுடன்
கொட்டின கொட்டின
கொட்டித் தீர்த்தன

மரமேறியவர் ஆடைகள் அவிழ்ந்து
அம்மணமாய்
மண்தரையில்
குப்புற விழுந்த பிறகும்
கொட்டுவதை நிறுத்தவில்லை
எப்படியோ
வங்குகளுக்கும் பொந்துகளுக்கும்
ஆபத்தில்லையே
இப்படி முடிந்தது
ஒரு நாள் அரசர் கதை

சேரியும் ஊரும்
தனித்தனியாக
இரண்டுக்கும் தண்ணீர்த் தொட்டி
தனித்தனியாக இருக்கட்டும்
பிறக்கும்போதே தனித்தனியாக
இருந்ததால்
இறக்கும்போதும்
தனித்தனியாக
மயானத்துக்குச் செல்லட்டும்
தடுப்புச் சுவர்களும்
பன்றித் தொழுவம்போல்
எஸ்.சி. ஹாஸ்டல்களும் இருக்கட்டும்
இதெல்லாம் புதிதா
யுகம் யுகமாய் இருந்தவைதானே
என்றோ இறந்த
சைவத் தமிழர்களை
உயிர்ப்பிக்கும் வரை
சேரித் தமிழர்கள்
இன்னும் கொஞ்ச நாள்
காத்திருக்கலாம் அல்லவா

சோறாக்கி உண்ண அரிசி
கிலோவுக்கு ஒரு ரூபாயும்
தின்றதை இறக்க
கழிப்பøறக் கட்டணம்
நான்கு ரூபாயும்
இருக்கும்வரை
செல்பேசியில்
பேசுங்கள் பேசுங்கள்
பேசிக் கொண்டே இருங்கள்
பண்பலையில்
கேளுங்கள் கேளுங்கள்
கேட்டுக் கொண்டே இருங்கள்
மதுக்கடையில்
குடியுங்கள் குடியுங்கள்
குடித்துக் கொண்டே இருங்கள்
தொலைக்காட்சியைப்
பாருங்கள் பாருங்கள்
பார்த்துக் கொண்டே இருங்கள்
பின்னர்
புணருங்கள் புணருங்கள்
புணர்ந்து கொண்டே இருங்கள்

விடிந்ததும்
இன்னும் சக்தியிருந்தால்
ஊரக வளர்ச்சியைத்
துரிதப்படுத்துங்கள்
உழைப்பையும்
உழைப்பின் பலனைத் துய்க்கும்
உரிமையை மறந்து
எல்லாவற்றையுமே
கருணைத் தொகையாகக் கருதி
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி
இனி பத்து சதவீதமாம்

இந்த மண்ணில்
சபிக்கப்பட்ட மாந்தர்களே
உங்கள் கண்கள் கட்டப்படுவதை
செவிகள் அடைக்கப்படுவதை
வாய்கள் தைக்கப்படுவதை
முகங்கள் இழக்கப்படுவதை
உங்களையே நீங்கள்
தொலைத்து வருவதை
எதுவரை தொடர்வீர்கள்

ஊருக்குள் மந்திரியாக
உலாவுவதைவிட
சேரிக்குள் ராஜாவாக
இருப்பதே நன்று

ஒரு ஜோதிப் பாடல்

sabarimalai_560

அக்பரின் அரண்மனையில்
தான்சேன் தீபக் ராகத்தில் பாடியதால்
தாமாகவே எரியத் தொடங்கினவாம் விளக்குகள்

அய்தீகமோ பவுதீகமோ
சரஸ்வதியை நாக்கில் கொண்ட
எத்தனை வித்துவான்களும் கத்துவான்களும்
மியூசிக் அகதமியிலோ
தியாகய்யர் பந்தலிலோ கூடியமர்ந்து
தர்பாரியோ முகாரியோ பந்துவராளியோ
எதிலே இசைத்தாலும்
பொத்தானை அழுத்தினால்தான்
விளக்குகள் எரியும் விசிறிகள் சுழலும்

அரிகர நமச்சிவாய என
கன்னத்திலும் காதிலும் அடித்துக்கொள்ள
திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவது
மனிதக் கரங்களேயன்றி
வானத்திலிருந்து இறங்கி வரும்
சண்முக வேலாயுதனின் சூலாயுதம் அல்ல
என்பதைப் பக்தர்களும் அறிவர்
திருவண்ணாமலை தரிசனத்தை
நேரில் பெறாதவர்களுக்கு
இருக்கவே இருக்கிறது
டண் டணா டண் –
பகுத்தறிவுப் பகலவனின் "வாரிசுகள்'
வழங்கும் செயற்கை "சன்'

கும்பமேளாவிற்கும்
கும்பகோணத்திற்கும்
இளைத்ததா நான் என்கிறது
மார்க்சிஸ்ட் பூமி
இந்துத்துவாவுக்கு மட்டுமல்ல
இடதுசாரிகளுக்கும் பல முகங்கள்
ராமன் பிறந்ததும்
மண்ணில் தவழ்ந்ததும்
சிறுநீர் கழித்ததும்
இதோ இந்த இடத்தில்தான்
என நேரில் கண்ட சாட்சிகள் போல்
அலகாபாத் நீதிபதிகள் அடித்துச் சொன்னால்
அது பகுத்தறிவுக்கு விரோதம்
மதச்சார்பின்மைக்கு இழுக்கு

கல்லையும் முள்ளையும்
மெத்தையாய்க் கருதி
காடுகள் கடந்து
பம்பையாற்றை மலத்தால் நிரப்புவோர்
மகாபலி மண்ணில்
மிதிபட்டுச் செத்தபின்
மகரஜோதியென
மாயவித்தை காட்டுவது யார் என
மலையாள நீதிபதிகள் கேட்டால்
சோதிடருக்கோ விஞ்ஞானிக்கோ
இடமில்லை
கொடுமுடி ஏறும் இருமுடிக்காரர்களின்
நம்பிக்கையில் எங்களுக்கும் நம்பிக்கை
எனச் சூடான பதில் வரும்

அச்சுதா
அமரரேறே
ஆயர்தம் கொழுந்தே
எச்சுவை தரினும் வேண்டேன்
பதவிச் சுவை தவிர!

எஸ்.வி.ராஜதுரை

Pin It