சமீபத்தில் ஒரு வாரஇதழில் உத்தப்புரம் பகுதியில் தலித் மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் நடைபெறுகின்றன. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாக முருகேசன் என்பவர் பேட்டியளித்துள்ளார். இவர் யார் என்றால் உத்தப்புரத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவரை இடிக்கக்கூடாது என மல்லுக்கு நின்றவராவார். ஏன் இப்படி திடீரென இவர் கிளப்பிவிடுகிறார் என பார்ப்பதற்கு முன்பு கடந்த 25.11.2009 அன்று மதுரையின் மாவட்ட ஆட்சியரான ந.மதிவாணன் ஒரு செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பினார். உத்தப்புரம் கிராமத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ரூ.1.12 கோடியிலும், நலத்திட்ட உதவிகள் ரூ.53 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் அந்த அறிக்கையில் கூறியிருந்தார். உத்தப்புரத்தில் கடந்த ஆண்டு ரூ.57.21 லட்சத்தில் 44 பணிகள் முடிக்கப்பட்டும் இந்த நிதியாண்டில் ரூ.55.15 லட்சம் மதிப்பீட்டில் 21 பணிகள் நடைபெற்றும் மொத்தம் ரூ. 1.12 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது என ஆட்சியர் கூறியிருந்தார்.
இப்படி வேலைபார்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதில் கூடுதலாக தலித் மக்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்டதாக முருகேசன் கருதலாம். உத்தப்புரத்தில் அதிகமாக வாழக்கூடிய சுமார் 650-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு எப்படி கூடுதல் நிதி ஒதுக்கலாம் என்ற தொனியில் கூட அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அவரின் கூற்றுப்படி தலித் மக்கள் வாழக்கூடிய பகுதியில் அனைத்து பணிகளும் நடைபெற்று விட்டதா என்ற கேள்வி இயல்பாக எழும். அதற்கும் பதில் காணவேண்டியது காலத்தின் கடப்பாடாகும். சாதியின் பேரால் மனிதர்களைப் பிரித்து மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் எழுப்பப்பட்ட தீண்டாமைச்சுவரால் மனிதகுலம் உலகத்தின் முன்பு தலைகுனிந்த சம்பவம் யாவரும் மறந்திருக்க முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் காரணமாக சுவரின் ஒருபகுதி இடிக்கப்பட்டு வழிதிறக்கப்பட்டது. ஆனாலும், இன்னமும் முழுமையாக அப்பகுதியை தலித் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் உத்தப்புரத்தில் தலித் மக்களுக்கு மட்டுமே சலுகை அளிக்கப்பட்டு வருவதாக கிளப்பி விடப்பட்டு வருகிறது.
உத்தப்புரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை தலித் மக்கள் பகுதியில் கூடி கொசுவை உற்பத்தி செய்து வருகிறது. இந்த சாக்கடைக்கு மூடி போடவேண்டும் என்று தலித் மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், கொசு கடித்து அவர்கள் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோயால் பாதிக்கப்படட்டும் என்ற நல்ல(!) நோக்கத்தோடு தமிழக அரசு இப்பகுதியை கண்டுகொள்ளமால் உள்ளது என்ற குற்றச்சாட்டு அப்பகுதியில் இருந்து கிளம்பியுள்ளதை வசமாக மறந்துவிட்டார்கள். கடும்வெயில், மழை ஆகியவற்றில் இருந்து ஒதுங்கி பேருந்தில் செல்ல ஒரு நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற தலித் மக்களின் கோரிக்கை அங்குள்ள சில பிற்படுத்த மக்கள் மட்டுமின்றி தமிழக அரசால் புறந்தள்ளப்படுகிறது. தலித் மக்களின் நலன்காக்க மார்க்சிஸ்ட் கட்சி அதற்கான முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், உத்தப்புரத்தில் நிழற்குடை அமைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஏனெனில் நிழற்குடை அமைத்தால் அங்கு தலித் மக்கள் அமருவார்கள் என்பதற்காக, நிழற்குடை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் சாதி இந்துக்கள் பக்கம் தமிழக அரசு நிற்பதை அரசு செயலாளரின் கடிதம் புலப்படுத்துகிறது.
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடந்த 6.11.2009 தேதி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எழுதிய கடித்தில் கூறியிருப்பதாவது: "உத்தப்புரம் பிரச்சனையின் அனைத்துப் பரிமாணமங்களையும் தாங்கள் அறிவீர்கள். அங்கு பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதற்காக நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்துவதற்காக நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, இப்பணியை மேற்கொள்ளப் பரிந்துரை செய்திருந்தேன். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரிடமிருந்துள்ள வந்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. கடந்த 27.10.2009 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெற்ற பேரணியை ஒட்டி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் என்.வரதராஜன் தலைமையிலான குழு ஒன்று தங்களை சந்தித்து, தீண்டாமை ஒழிப்பு குறித்த மாநிலந்தழுவிய பல்வேறு பிரச்சனைகளை உங்களோடு விவாதித்துள்ளனர். அன்றைய தினம், உங்களை சந்தித்த குழுவினர் எழுப்பிய அனைத்துக் கோரிக்கைகளும் மாநில அரசுக்கு உடன்பாடானவையே என்றும், அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றக் கருதியிருப்பதாகவும் தங்கள் தெரிவித்திருந்தது ஆறுதலான விஷயமாக அமைந்தது.
இந்தப் பின்னணியில் , உத்தப்புரத்தில் நிழற்குடை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து நான் அளித்த பரிந்துரையை "அமைதிக்குழு" ஆலோசனையில் சமாதானத்தீர்வு எட்டப்படவில்லை என்றும், "சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படக் காரணமாக அமையும்" என்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி கருத்துத் தெரிவிக்க, அதை ஏற்று இப்பணியை செயல்படுத்த இயலாது என்ற நிலையை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது ஏற்புடைய ஒன்றல்ல என்று தாங்களே ஒப்புக்கொள்வீர்கள் என்று கருதுகிறேன். நிழற்குடை அமையவுள்ள இடம் கோயில் வழிபாட்டுக்கு அப்பால் உள்ளது தான் என்ற உண்மையை உத்தப்புரத்தில் ஒரு சாரார் மறைத்துத் தந்துள்ள தகவலை ஒட்டியே வட்டார வளர்ச்சி அலுவலர் ஏறறிருப்பது சரியான நடைமுறை இல்லை. எனவே, இப்பிரச்சனையில் தாங்கள் தலையிட்டு உத்தப்புரத்தில் நிழற்குடை அமைக்கும் பணியைச் செயல்படுத்திட ஆவன செய்ய வேண்டுகிறேன்" என கடித்தில் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வருக்கு டி.கே.ரங்கராஜன் அனுப்பிய கடித்திற்கு முதல்வரின் செயலாளர் கி.இராஜமாணிக்கம் 9.11.2009 அன்று ஒரு பதில் அனுப்பினார். அதில் கூறிருப்பதாவது: "உத்தப்புரத்தில் நிழற்குடை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை குறித்து தாங்கள் முதமைச்சருக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி விசாரித்தறியச் சொன்னார்கள். இதுபற்றி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்டது. நிழற்குடை அமைத்திட தாங்கள் தேர்வு செய்துள்ள இடம், முத்தலாம்மன் கோயில் சுவற்றை இடித்துவிட்டு அமைக்க வேண்டியிருப்பதாலும், இது மேலும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்திடும் என்பதாலும், பிரச்சனை இல்லாத நல்ல இடம் ஒன்றை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்திருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்த இடத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. நிழற்குடை அமைத்திட வேண்டுமென்ற தங்கள் நல்ல எண்ணம் நிறைவேற மாவட்ட நிர்வாகத்தோடு ஒத்துழைப்பு தரவேண்டுகிறேன்" என அவர் பதில் எழுதியுள்ளார்.
உத்தப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன் கோவிலில் வழிபாட்டு உரிமை தலித்துகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. சுமார் 20 சென்ட் நிலத்தில் கோவிலுக்கு மேற்குப்பகுதியில் ஒரு நிழற்குடை அமைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என சண்டமாருதம் செய்கிறது மதுரை மாவட்ட நிர்வாகம். இக்கோவில் அமைந்துள்ள இடம் என்பது தனியார் இடமல்ல. அரசின் நிலமாகும். இதை அபகரிக்கப் பார்க்கிறது ஒரு கூட்டம். கோவிலுக்கு அப்பால் உள்ள சுவரின் அருகே நிழற்குடை அமைத்தால் அதில் தலித் மக்கள் பேருந்து வரும் வரை காத்திருக்க அமருவார்களே.. அதை எப்படி அனுமதிப்பது என்ற தலித்விரோத குணம் உத்தப்புரத்தில் உள்ள சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த கேடுகெட்ட நினைப்பை ஒதுக்கித் தள்ளி அப்பகுதியில் நிழற்குடை அமைக்க பல ஆண்டுகளாக நிதி ஒதுக்காத தமிழக அரசு, தற்போது மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நிதி ஒதுக்கினால் அதற்கும் முட்டுக்கட்டைப் போடப்பார்க்கிறது.
கோயிலில் தலித்துகள் சாமிகும்பிட நாங்கள் ஒன்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அமைதிக்குழுக் கூட்டத்தில் பேசும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப்பிரதிநிதிகள், அதை நடைமுறைப்படுத்துவதில்லை. இப்படி பேசுபவர்கள் அதை எழுத்துப்பூர்வமாக எழுதித்தர தயாரா என்றால் தயாரில்லை என்கிறார்கள். தீண்டாமையெல்லாம் நாங்கள் கடைபிடிக்கவில்லை என சொல்லிக்கொண்டே தலித் மக்களை ஒடுக்க நினைக்கும் உத்தப்புரம் சாதி ஆதிக்கதினரின் நடிப்புகள் எம்.ஜி.ஆரின் இரட்டைவேடப் படங்களைத் தோற்கடித்துவிடும். நிழற்குடை அமைத்தால் பலபிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என அரசின் சார்பில் சொல்லப்படுகிறது. கடந்த 1989-ஆம் ஆண்டில் இருந்து அரசியல் சாசனம் வழங்கிய உரிமையை நிலைநாட்ட முயன்ற தலித் மக்கள் போடப்பட்ட வழக்குகளும், கைது நடவடிக்கைகளும் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நிழற்குடை அமைப்பதற்கு முன்பே உத்தப்புரத்தைச் சேர்ந்த சுமார் 500 தலித் மக்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதே! அன்றாடக்கூலி வேலைசெய்து பிழைப்பை நடத்தும் மக்கள் மீது இவ்வளவு மூர்க்கமாக அரசே வழக்குகளைப் போட்டு அலைக்கழிக்க வைப்பதை என்னவென்று கூறுவது?
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கி இந்த ஆண்டின் துவக்கம் வரை தலித் மக்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது மதுரை மாவட்டத்தில் உள்ள உத்தப்புரமாக தான் இருக்க முடியும். தமிழக காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வருக்கு இவ்விஷயம் தெரியுமா எனத்தெரியவில்லை. உத்தப்புரம் உத்தமபுரமாக மாற்றப்படும் என அவர் அறிக்கை விட்டு காமெடி செய்வதோடு அவ்வூரைக் கண்டுகொள்ளவில்லையோ என்ற கேள்வியை தலித் மக்கள் இன்னமும் கேட்டுக்கொண்டிக்கிறார்கள். பிள்ளைமார் சமுதாய சங்கக்கட்டிடத்தில் இயங்கி வரும் காவல்நிலையத்தை மாற்ற வேண்டும் என பலமுறை கூப்பாடு போட்டும் அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் உத்தப்புரத்தில் அரசு அமைத்துக் கொடுத்த பொதுப்பாதையை தலித் மக்கள் தடையின்றி பயன்படுத்துவதற்கும், முத்தாலம்மன் கோயில் வளாகத்தில் நிழற்குடை அமைத்து தருவதுடன், ஊருக்குள் ஓடும் சாக்கடையை திருப்பி விடுவதுடன், ஊருக்குப் பொதுவான இடத்தில் புறக்காவல்நிலையத்தை கட்டிடத்தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தும் தலித் மக்களின் குரல்களை வழக்குகள் மூலம் நொறுக்கி விட அரசு நினைக்கிறது.
அடிக்க. அடிக்க நிமிர்ந்தெழுவது பந்தின் குணம் மட்டுமல்ல. தலித்துகளின் குணமும் தான். வாக்குவேட்டைக்காக தலித் பகுதிகளில் அந்தசாதியைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற, அமைச்சர்களை அனுப்பி வைக்கும் போது சூத்திர ஆட்சி, மூத்திரஆட்சி என்று புருடா விடுபவர்களை தலித் மக்கள் அடையாளம் காணவேண்டியது அவசியமாகும். தலித் மக்களின் விடுதலை இல்லாமல் சமூகவிடுதலையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்.
- ப.கவிதா குமார்