முன்னேறிய ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற அமைச்சரவையின் முடிவு வெளி வந்தவுடன், கேரள முதல்வர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பினராய் விஜயன் அதை ஆதரித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி, இந்த அறிவிப்பு தேர்தல் மாய்மாலம் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும் இதேபோல் ‘மாய்மாலம்’ என்று கூறினாலும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு தேவை இருக்கிறது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. மண்டல் குழு பரிந்துரை அமுல்படுத்திய காலத்திலிருந்தே இந்தக் கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து வருவதாகவும் தலைமைக் குழு அறிவித்துள்ளது.
கேரள முதல்வர் பினராய் விஜயன், இந்த இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் போது கேரளாவின் மற்றொரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கடுமையாக எதிர்த்துள்ளார். “இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத் திட்டமல்ல; பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு; ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே அதை எதிர்த்து வந்திருக்கிறது” என்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு ஏற்கவில்லை. அவையில் ஓட்டெடுப்பிலும் ஆதரித்தே வாக்களித்திருக்கிறது.